அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 8, 2009

பாடும் பணியே பணியாய் அருள்வாய்! -


கந்தரனுபூதிப் பாடலில் வரும் அடியை முதற் தலைப்பிட்டு இக்கட்டுரையை வரைகிறேன். சிறு வயதிலிருந்தே என்னை பாடவும் பேசவும் வழிகாட்டியவர் எனது அம்மாவின் அப்பா! அவரை நாம் அப்பு என்று மிகவும் அன்போடு அழைப்போம். என்னை மாலை நேரங்களில் நல்ல கதைகளை உரக்க வாசிக்கச் சொல்லி தானும் கேட்டு கதைகளை விளங்கப் படுத்தியவர் எனது அப்பு மறைந்த முத்துக்குட்டி வல்லிபுரம் அவர்கள். பண்டாரவளையில் வல்லிபுரம் அன் சன்ஸ என்ற ஒரு வியாபார நிறுவனத்தை நடத்திய அவர் தனது இறுதிக் காலங்களில் அதைத் தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு ஊரிலேயே தங்கியிருந்தார். அவர்தான் என்னை மூளாய் பிள்ளையாரிடம் தினமும் கூட்டிப்போவார். அவரோடு போய் தினமும் வழிபாடுசெய்ததாலும் என்னவோ - தினமும் கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இது அவரில்லாத சமயத்திலும் மாங்குளம், அனுராதபுரம், கொழும்பு, இந்தியா என்று தற்போது சுவிசிலும் தொடர்ந்தபடி இருக்கிறது. இங்கு என்ன ஒவ்வொரு நாளும் கோவிலுக்குப் போவதற்கு எமது இடத்தில் கோவில் இல்லை. அதனால் முடிந்தபோது போய்வருவதுண்டு. இங்கு பிரயாணத்திற்குத்தான் அதிக செலவு. அதனால் மாதத்தில் முதல்வரும் ஞாயிற்றுக்கிழமையும் கடைசியில் வரும் சனிக்கிழமையும் சூரிச்சிலுள்ள அட்லிஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தவறாமல் சென்று நடைபெறும் கோவிந்த நாம சங்கீரத்தனத்திலும் - ஐயப்பசுவாமி பஜனையிலும் பாடி என் ஆத்ம திருப்தியை நிறைவேற்றுவது வழக்கம். நேற்று முன்தினம் 6.9.2009 ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கோவிலுக்குப் போகவேண்டிய சூழ்நிலை - காரணம் முருகன் கோவிலில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குமரன் நூலகத்தினர் நவராத்திரியை முன்னிட்டு சில போட்டிகளை இங்குள்ள சைவச் சிறார்களுக்கு நடத்தினார்கள். இதில் தேவாரப் போட்டியில் மத்தியஸதம் செய்வதற்கு என்னை அழைத்திருந்தார்கள். நானும் அதை முடித்து பஜனயையும் முடித்து திரும்பினேன்.கடந்த வருடம் நடைபெற்ற குமரன் நூலகத்தினரின் வாணிவழாவில் பட்டிமன்றம் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டவன் என்ற வகையிலும் நான் இங்கும் எமது நாட்டில் செய்ததைப்போல செய்ய சில வாய்ப்புக்கள் இருப்பதை உண்மையோடு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். எதிர்வரும் 26.9.2009 ஞாயிறும் இங்கு வாணி வழா நடைபெற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

நான் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லாரியில் 10ம் வகுப்புப் படிக்கும்போது கீரிமலை சிவநெறிக் கழகத்தின் கதாப்பிரசங்கப் போட்டிகளுக்கு பாடசாலையின் சங்கீத ஆசிரியர்களான செல்வி. நாகம்மா கதிர்காமர் அவர்களும் திரு. திலகேஸவரன் அவர்களும் என்னை தயார்படுத்தினார்கள். இதைவிட நான் வசித்த வீட்டிற்கருகில் இருந்த காசிப்பிள்ளையார் கோவில் ஐயா சிவஸ்ரீ சி. கணேசலிங்கக் குருக்கள் ஐயா அவர்களும் என்னை தயார்படுத்தினார். அங்கு பாலர் ஞானோதய சபையில் நான் சமயபாடம் முதலில் கற்றும் பின்னர் கற்பித்தும் வந்ததை நான் ஒருபோதும் மறக்கமுடியாது. ஒரு தடவை நடைபெற்ற பாலர் ஞானோதய சபையின் ஆண்டுவிழாவில் என்னுடைய கதாப்பிரசங்க நிகழ்ச்சியை நடத்தி இதைப் பதிவு செய்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அந்த பிரசங்கத்தை இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் ஒலிபரப்பியதையும் மறக்க முடியாது. இந்நிகழ்வுக்கு மிருதங்கத்தை அன்றைய சபை மாணவரும் இன்று பிரபல வித்துவானாக விளங்கும் திரு. வை. வேனிலான் அவர்கள் வாசித்தார். வயலினை மறைந்த ஆசிரியர் சிவஸ்ரீ வெங்கடேச சர்மா ஐயா அவர்கள் வாசித்தார். இந்த நிகழ்வின் புகைப்படத்தைத் தந்துதவிய வேனிலானுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

இலங்கையின் பலபாகங்களிலும் பாடியும் - பேசியும் வாழ்ந்த வாழ்க்கை இங்கும் தொடருவதை எண்ணும்போது மனம் பெருமிதமடைகிறது!

2 comments:

Anonymous said...

nice

i like it

தேவதாசன் dilshaad said...

வாழ்த்துக்கள்! அப்போ நீங்களும் பாடகரா? தொடருங்கள்