அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 13, 2009

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 3

2 வருடங்களும் 5 மாதங்களும் கடந்த நிலையில் நான் எழுதும் சில தரவுகளில் நேர மாற்றங்கள் அல்லது எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் சாராம்சத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்பதை முதலிலேயே குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொருநாளும் காலையில் 9.00 மணியிலிருந்து மதியம் 11.00 மணி வரையும் மாலையில் 2.30 மணியிலிருந்து 5.00 மணிவரையும் எம்மை வெளியே செல்ல அனுமதிப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியத்தின் பின் தமது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குப் போய் தங்கி ஞாயிறு மாலை 5.00 மணிக்கு முன் அங்கு வரவேண்டும் என்பதும் ஒரு கட்டுப்பாடு. இதன் அர்த்தம் ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். நாங்கள் எப்படி வாழ்ந்திருந்தாலும் இந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு அமைவாக எம்மைப் பழக்கப்படுத்தவே இந்த நடைமுறை இருந்தது என எனது அறிவுக்குத் தெரிகிறது.

வெளியே செல்லும்போது எமது அடையாளத்தை உறுதிப்படுத்தவே புகைப்படம் எடுக்கப்பட்டு ஒரு ஏ4 பேப்பரில் அதை ஒட்டி சில விபரகள் தற்காலிகமாகத் தரப்படும். அதை முகாமிலிருந்த வெளியே செல்லும்போது தருவார்கள் - உள்ளே சென்றவுடன் மீண்டும் வரவேற்பு நிலையத்தில் அதை ஒப்படைத்துவிட்டுத்தான் செல்லவேண்டும். ஒவ்வொரு தடவையும் வெளியே போய் உள்ளே வரும்போதும் உடற்சோதனையும் - பொருட்சோதனையும் நடைபெறும். வெளியே இருந்து உள்வருபவர்கள் குடிப்பதற்கு மாத்திரம் ஏதேனும் பானங்களை எடுத்தவர அனுமதி உண்டு. சாப்பாட்டுப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. குடிவகைகளுக்கு இல்லா விட்டாலும் சிலர் கொக்கோ கோலாவிற்குள் ஏதேனும் குடிவகையைக் கலந்து கொண்டுவருவது சாதாரண விடயமே. காவற் கடமையில் ஈடுபடுவோர் போத்தல்களைத் திறந்து பார்ப்பது இல்லை.
குறைந்தது ஒரு மாத காலத்திற்கு ஒருவர் அங்கு இருந்தே ஆகவேண்டும். விசா பெற்று வந்த எனக்கு புதன்கிழமை விசாரணை ஒன்று நடைபெற்றது. ஒரு மொழிபெயர்ப்பாளரும் தட்டெழுத்தாளர் விசாரணை செய்பவர் என 3 பேர் இருந்தார்கள். நான் கொண்டுவந்த சகல பொருட்களும் என் முன்னால் கொண்டுவரப்பட்டன. விசாரணை அவரவரின் பிரச்சனை பற்றியதாகவே இருக்க வேண்டும். அடுத்தவர் பிரச்சனையோ அல்லது நாட்டின் பிரச்சனை பற்றியோ அவசியமில்லை. உனக்கு என்ன நடந்தது? இதுதான் அவர்களின் தொடர்ச்சியான கேள்விகள். எதற்காக நாட்டில் இருக்க முடியவில்லை? ஒவ்வொரு நாளும் பலருக்கு ஒரே தடவையில் விசாரணைகள் நடைபெறும். அந்தந்த மொழி பேசுபவர்களுக்கு அந்தந்த மொழியாற்றல் மிகுந்த அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் வந்து பரிவர்த்தனை செய்வார்கள். நான் வந்திருந்த சமயத்தில் இலங்கையர்கள் 10பேர்வரை ஒரு வயதுபோன கணவன் மனைவி இவர்களும் இருந்தோம். வயதுபோனவர்கள் என்றாலும் கண்ணாடி துடைத்தல், துப்பரவு செய்தல் போன்ற வேலைகள் அடிக்கடி கொடுக்கப்படும்.
எம்மோடு இருந்தவர்களின் சோகக் கதைகளைக் கேட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும் - நாட்டில் அரச படையினரின் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் - வெள்ளைவான் கடத்தல் - மாற்று இயக்கப் பிரச்சனை என கதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். நானிருந்த சமயத்தில் நான் ஒருவன்தான் சட்டரீதியாக வந்து சேர்ந்தவன். எங்களுடன் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக்ஈ எரித்திரியா, கோமாலியா, தாய்லாந்து, தென்ஆபிரிக்கா, கொசோவா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பல அகதிகள் அங்கு குடியிருந்தோம்.
பயண முகர்களினால் வந்தவர்கள் தமக்கு ஏற்பட்ட மிகவும் துக்ககரமான சம்பவங்களைக் கேட்கும்போது எவ்வளவுதான் செலவு செய்து வந்தும் சிலதடவைகள் அவர்கள் குடிக்கவும் சாப்பிடவும் பட்ட துன்பங்களில் தம்மை மறந்து கண்கலங்கம்போது என்ன செய்வதென ஒருவருக்கும் தெரிவதில்லை. பனிகளிலும் - காடுகளிலும் நடந்து இருந்த பொருட்களை விற்று தெரியாத இடங்களில் தெரியாத மொழிபேசுபவர்களுடன் பட்டபாடுகள் சொல்லி மாளாது. எனது நண்பன் ஒருவன் 3 உள்ளாடைகள் - 3 முழுக்காற்சட்டைகள் - 4 சேட்டுக்கள் போட்டு மீதி அனைத்தையும் பிரயாண முகவரிடம் கொடுத்துவிட்டு வந்த செய்திகேட்டு ஒருபுறம் சிரிப்பு - இன்னொருபுறம் முகவர்களின் பறிமுதல் - கொள்ளை இவற்றை எண்ணி ஆத்திரமும் வேதனையும் தான் அடைய முடியும். கொண்டுவரும் கைத்தொலைபேசிகளையும் இவர்கள் பறித்துவிடுவார்களாம்.எல்லா முகவர்களையும் நான் சொல்லவில்லை. ஒரு சிலர் இப்படி! இதற்கிடையில் புதிதாக வருபவர்கள் - இருந்தவர்கள் போவதுமாக காலம் ஒவ்வொரு நாளும் மெதுவாக நகரும். எப்போது இந்த இடத்தைவிட்டு வெளியே போவது என்பதுதான் எமது வேண்டுதல் எனக்கு இரு வாரங்களில் வெளியே செல்ல அனுமதி கிடைத்தது.
இதற்கிடையில் சனி - ஞாயிறு தினங்களில் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் நண்பர்கள் யாருமில்லாத நண்பர்களுக்காக தமது உறவினர்களுடன் வரும்போது சாப்பாடு கட்டிக்கொண்டுவந்து புகையிரத நிலையத்தில் அனைவரும் இருந்து சாப்பிடுவதும் மறக்க முடியாது. எனது தம்பியின் நண்பனின் அண்ணன் எனக்காக ஒரு கிழமைநாள் தனது குடும்பத்தவர்களுடன் வந்து சாப்பாடும் கொண்டுவந்து தந்ததுடன் போகும்போது 100 சுவிஸ்பிராங் தந்துவிட்டுச் சென்றதும் மறக்க முடியாது.

No comments: