அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, September 11, 2009

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 1

கடந்த 2 நாட்கள் அதாவது இன்றும் நேற்றும் சற்று தலைவலி காரணமாக இடுகை எதையும் எழுத முடியவில்லை. இன்றைய நாளில் ஒரு பதிவினை இடவேண்டும் என்பதற்காக அவசரமாக இந்த பதிவை தற்போது முற்பதிவாக இணைத்துள்ளேன். எங்களுக்கு ஓய்வுநேரம் மிகவும் குறைவு. அதிகாலை 5.00 மணிக்கு எழும்பினால் இரவு 11.00 மணிவரை ஒரே வேலை தான். இந்தப் பதிவில் சில முக்கிய தகவல்களையும் எழுதி இணைக்க வேண்டியிருப்பதால் இன்னும் ஒரு 5மணிநேரம் பொறுமை காக்க வேண்டும். காரணம் இப்போது எனக்கு ஒரு வகுப்பு - அதை முடித்துவிட்டுத்தான் இந்தத் தொடரை எழுத முடியும். எனவே கொஞ்சம் பொறுத்திருக்கவும்.
பொதுவாக பலருக்கு பிரச்சனைகள் காரணமாக என்ன செய்வது - எப்படி அணுகுவது என்று தெரியாமலிருக்கிறது! அதாவது நான் குறிப்பிடுவது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட சாதாரண ஒரு பிரஜையோ அல்லது ஏதேனும் அமைப்புக்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களோ தமக்கு தமது சொந்த நாட்டில் இருப்பதற்கு பிரச்சனை - அச்சுறுத்தல் என்று சொல்லி அதற்கான தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கின்ற போது மனிதாபிமானமாக வெளிநாடுகளில் வழங்கப்படும் அகதி அந்தஸ்து பற்றியும் - இங்குள்ள சட்டதிட்டங்கள் நடைமுறைகள் பற்றியும் சில விபரங்களைத் தருவதும் எனது ஒரு கட்டாய பணியாகிறது.
-------

சொந்த நாட்டிலிருந்து தனது உயிருக்கு ஆபத்து அல்லது அச்சுறுத்தல் உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பித்தால் சில நாடுகள் மட்டும் அரசியல் தஞ்சம் கொடுக்கும். எங்கள் நாட்டைப் பொறுத்த வரையில் தற்போது சுவிற்சர்லாந்தும் அவுஸ்திரேலியாவும் மாத்திரம் அந்த மனிதாபிமானப் பணியை செய்கின்றன. நான் வைத்தியசாலையில் இருந்தபோது எல்லா நாடுகளுக்கும் ஒரு விண்ணப்பத்தை அனுப்பியிருந்தேன். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் சொந்த நாட்டிலிருந்து ஒருவர் இப்படி அரசியல் தஞ்சம் கோர முடியாது என நிராகரித்துவிட்டன.

சுவிற்சர்லாந்தம் அவுஸ்திரேலியாவும் மாத்திரம் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டன. சுவிற்சர்லாந்து தூதரகம் முதலில் என்னுடைய பிரச்சனைகள் குறித்த எல்லா விபரங்களையும் தமக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டது. நான் அனுப்பிவைத்த பின் என்னை நேர்முக விசாரணைக்கு அழைத்து பின் சகல விபரங்களையும் தனது நாட்டுக்கு அனுப்பி அங்கிருந்து மறுமொழி வரும்வரை காத்திருக்கச் சொன்னது. அவுஸதிரேலியா தூதரகம் பல பக்கங்கள் கொண்ட ஒரு விண்ணப்பப்படிவத்தை அனுப்பியிருந்தது. இதில் பல சிக்கல்கள் இருந்தபடியால் நான் சுவிற்சர்லாந்தின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்ததுடன் - சுவிஸில் வதியும் ஒருவரிடம் அங்கும் ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்து அவர்மூலமும் எனது விண்ணப்பத்தை விரைவில் ஏற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டிருந்தேன். எனக்கு முதற் கடிதம் வந்து சுமார் 5 மாதங்களின் பின்னர்தான் நேர்முக விசாரணை நடைபெற்றது. அதன்பின் சகல விபரங்களும் பேர்னுக்கு(Bern) அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்பட்ட சமயத்தில் நான் ஒழுங்கு செய்திருந்த சட்டத்தரணி ஒரு நாள் எனக்கு ஒரு தொலை நகல் மூலம் சுவிசுக்கு போக அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்தார். இது 4 மாத காலங்களின் பின் நடந்தது. எனது விசாரணை முழுவதும் முடியவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் சுவிசில் இடம்பெறும் என்றும் சொல்லி எனக்கு 3 மாத Tourist Visa கிடைக்கப் பெற்றது. விசாவைக் கையில் தரும்போது துதாரகத்தில் பணியாற்றும் ஒரு தமிழ் அலுவலர் இந்த நாடு போல அந்த நாடு இல்லை - மிகவும் சட்டம் ஒழுங்கு நிறைந்த நாடு - கவனமாக சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்ளவும் என்று சொல்லியே எனது கடவுச்சீட்டை என்னிடம் கையளித்தார்.

விமானத்தில் புறப்பட்டு வந்து இறங்கியபோதே விமான நியைல வாசலில் எனது பெயர் பொறித்த அட்டையை வைத்திருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியிடம் நானே சென்றேன். வழமையான வரவேற்புடன் என்னை அழைத்தச் சென்று எனது பிரயாணப் பொதிகளை எடுத்துக் கொண்டு சகல சுங்க சோதனைகள் மற்றும் குடிவரவு நடைமுறைகளை முடித்து வெளியேறிய சமயத்தில் விமான நிலையத்தின் வெளியே இன்னுமொருவர் குடும்ப சகிதம் என்னுடைய பெயர் பொறித்த அட்டையை வைத்திருந்தார். முன்பின் காணாத ஒருவராக இருந்தபடியால் நான் நீங்கள் யாரெனக் கேட்டபோது - தான் இன்னார் எனவும் தனக்கு இன்றைய விமானத்தில் வருவதாக சட்டத்தரணி சொன்னதாகவும் அதனால் உம்மை அழைத்தப் போக வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதன்பின் அந்தப் பெண்மணியடம் தாம் என்னை அழைத்துச் சென்று அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு என்னை தாம் கொண்டுவந்து விடுவதாகவும் சொன்னார்கள். அந்தப் பெண்மணியும் என்னிடம் சொல்லி விடைபெற்றுச் செல்ல நானும் சூரிச் விமான நிலையத்திலிருந்து பேர்னுக்கு காரில்போய் அவர்கள் வீட்டில் அன்று தங்கினேன்.நான் கொழும்பிலிருந்து வந்தது ஒரு வியாழக் கிழமை. வெள்ளி தொடக்கம் ஞாயிறு வரை அவர்களுடன் நின்று சுவிசின் தலைநகரான பேர்ன் மாநரைச் சுற்றிப் பார்த்தேன். திங்கட்கிழமை காலை ஜெனீவாவுக்கு காரில் சென்று பின் அங்கிருந்து மதியம் 2 மணிபோல் குரொய்ஸ்லிங்கன் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட அகதிகள் பதியும் நிலையத்திற்கு கொண்டுசென்று விட்டனர்.

மீதி பின் பகுதி 2ஆகத் தொடரும்.

1 comment:

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள் நன்றாக இருக்கிறது