அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, September 9, 2009

என் வாழ்க்கையில் யாழ்தேவி!

வாழ்க்கை என்பதே ஒரு பெரிய பயணம். இதில் நாம் எமது தேவைக்கு ஏற்றவாறு பல பயணங்களையும் மேற்கொள்வோம். இந்தப் பயணங்களுக்கு நாம் உபயோகப்படுத்தும் மார்க்கங்களும் பலவாறானதாக அமையும்.

பொதுவாக பயணம் அனுப்ப வாறன் என்று முந்தைய நாட்களில் எம்மவர்கள் வழியனுப்ப வருவது ஒன்றில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு! அல்லது பலாலி விமான நிலையத்திற்கு! புகையிரதம் என்றதுமே நினைவுக்கு வருவது எமக்கு யாழ்தேவி தான்!

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை செல்லும் இப்புகையிரதத்தில் பலநூறு தடவைக்கு மேல் பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு!

வெளியூர்களில் அரசாங்க எழுதுவிளைஞராக இருந்த எனது தந்தையுடன் வருடத்தில் வரும் அத்தனை விடுமுறைக்கும் அவருடன் சென்று தங்குவது வழமை. மாங்குளம், றாகம, கொழும்பு போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். 1975 தொடக்கம் அப்பா அனுராதபுரத்தில் வேலை செய்தபோது நாம் குடும்பமாகவே அங்கு தங்கியிருந்தோம். 1977 கலவரத்தடன் யாழ் சென்றோம். அதன்பின் தந்தையார் கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் கச்சேரியிலும் வேலைசெய்தபோது அடிக்கடி கிளிநொச்சிக்கு புகையிரதத்திலும் - போக்குவரத்து வண்டியிலும் சென்று வருவேன். எனக்கு புகையிரதப் பயணம் என்றால் மிகவும் ஆசை! குடும்பத்தவர்களுடன் போனால் எனது படிக்கட்டுப் பயணம் தடையாகி விடும். தனியாகச் சென்றால் ஒரே குஷிதான்!

பாடசாலை விடுமுறை தினத்துக்குப் பின்னர் தமிழ்ப் பாடத்தில் ஒரு கடிதம் அல்லது கட்டுரை எழுதச் சொன்னால் நான் இரயில் பயணத்தைக் குறிப்பிட மறந்ததே இல்லை.

கொடிகாமத்திலிருந்த சித்தப்பா வீட்டிற்குப் போவதென்றாலும் யாழ்தேவிதான். கொழும்பிலிருந்து அதிகாலை 5.55க்கு வவுனியாவுக்கு அடிக்கடி யாழ்தேவியில் சென்றது ஞாபகம். ஒரு தடவை கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை எனக்கு கிடைத்த இருக்கையையும் யாருக்கோ கொடுத்துவிட்டு நின்றபடி பயணித்ததும் மறக்க முடியாது. இந்திய இராணுவம் இருந்தபோது 1990 ஜனவரியில் கடைசியாகப் புறப்பட்ட யாழ்தேவி ரயிலில் நான் பயணித்த அனுபவம் மறக்க முடியாது. எனது தம்பியையும் அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட யாழ்தேவி மாங்குளத்தில் ஒரு மணி நேரம் தாமதமானது. காரணத்தைக் கேட்டபோது புகையிரதப் பாதை குண்டினால் தகர்க்கப்பட்டுத் திருத்தவேலை நடப்பதாகவும் அது நிறைவேறிய பின்பே பயணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. ஏதோ கடவுள் செயலால் கொழும்பக்கு வழமையாக வந்து சேரும் நேரத்திலும்பார்க்க 2மணிநேரம் தாமதமாக வந்து உருப்படியாகச் சேர்ந்தோம்.

யாழ்தேவியைப் பற்றிச் சொல்லும்போது அதில் வடை பனங்கிழங்கு கொய்யாப்பழம் சோளன் இளநீர் கச்சான் கடலை விற்போரையும் - கன்ரீனையும் மறக்க முடியாது.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களுக்கு யாழ்தேவி புகையிரதம் ஒரு பெரிய வரப்பிரசாதம். இதில் பயணித்த அனுபவம் ஒருநாளும் மறக்க முடியாது. பல நண்பர்கள் அறிமுகமாகியதும் இந்த யாழ்தேவி மூலம்தான் என்றாலும் அதில் தவறிருக்க முடியாது. பல சிங்கள முஸ்லிம் நண்பர்கள் அறிமுகமாகியதும் இந்த யாழ்தேவி பயணத்திலேயே!பலரை அழைத்துச் செல்லவும் யாழ்தேவி வரும்வரை காத்திருப்பதும் ஒரு மறக்க முடியாத அனுபவமே!

2 comments:

யோ வாய்ஸ் (யோகா) said...

உங்களது பால்ய காலத்தை சொல்லியிருக்கிறீர்கள்

மருதமூரான். said...

//// எனக்கு புகையிரதப் பயணம் என்றால் மிகவும் ஆசை! குடும்பத்தவர்களுடன் போனால் எனது படிக்கட்டுப் பயணம் தடையாகி விடும்.தனியாகச் சென்றால் ஒரே குஷிதான்!////

தங்க முகுந்தன்….
எங்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவேயில்லை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.