அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 13, 2009

பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! - பகுதி 1 - காகம் திட்டி மாடு சாகாது!

இக்கட்டுரை பல நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும் சில அவசிய தேவை கருதியும் பதிவர்களிடத்தில் ஒரு வலுவான நட்பு உருவாக வேண்டும் என்ற ஆதங்கத்திலும் இதைக் குறிப்பிடுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
பதிவர்கள் பலவிதம் - அவரவர் தன்மைக்கும் தகுதிக்கும் ஏற்ப பதிவுகளை அவர்கள் தமது இஷ்டத்திற்கு எழுதி வருகிறார்கள். இது அவர்களின் உரிமை - இதில் தவறோ குறையோ இருந்தால் சகித்துக்கொண்டு தமக்கு எது விருப்பமோ அதை பின்பற்றவோ அல்லது எதில் நாட்டமில்லையோ அதை தவிர்ப்பதும் அவரவர் கடமையாகிறது. இதில் ஒருவரைப் பற்றி ஒருவர் குறைசொல்லி விமர்சிப்பதும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பதும் தரக்குறைவாக பதிவுகளை இடுவதும் தவிர்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஈழத்தில் அப்படிச் சொல்லுவதில் ஒரு தவறும் கிடையாது. நான் சிறு வயதில் படித்த புத்தகப் பாடல் -

ஈழம் எங்கள் நாடடா
இன்பமான வீடடா
நீல நீளக் கடலிலே
நிமிர்ந்து நிற்கும் தீவடா!

இப்பாடலை இப்போதைக்கு இப்படி மாற்றம் செய்து பாடலாம்!
ஈழம் எங்கள் நாடடா
துன்பமான காடடா
நீல நீளக் கடலிலே குனிந்து நிற்கும் தீவடா!
மனித உரிமை மீறலில் நிமிர்ந்து நிற்கும் தீவடா!

ஒரு காலத்தில் ஏன் இப்போதும் கூட இலங்கையைப் பற்றிப் பெருமையாகச் சொல்லக் கூடிய விடயங்கள் சில உண்டு.

அதாவது

உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.
ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு.
உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கறுவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் இலங்கையிலேயே அமைக்கப்பட்டது.
கிரிகட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.

ஆனால் இன்று மனிதப் படுகொலைகளுக்கப் பெயர்பெற்ற நாடாகவும் என் நாடு திகழ்கிறது. நாம் ஒருவரும் பிறந்த நாட்டையும் பிறந்த ஊரையும் எந்த நாட்டில் அகதியாக வாழ்ந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றாலும் இந்த தகவல்களை மாற்ற முடியாது! இது மறுப்பதற்கோ மறைப்பதற்கோ உரிய விடயமல்ல. சரி விடயத்திற்கு வருகிறேன்!

பதிவர்களில் ஈழத்தில் இப்போதும் இருப்பவர்கள் அடக்கித்தான் தமது செய்திகளை எழுகிறார்கள் - தெரிவிக்கிறார்கள்! ஏனெனில் அவர்கள் அடக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள் என்பதே உண்மை! இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழும் ஈழத்தவர்கள் சற்று வெளிப்படையாகவே உரத்த தொனியில் தமது கருத்துக்களை இடுகிறார்கள் - நானுட்பட! ஆனால் இலங்கையில் என்ன நடந்தது! நடந்து கொண்டிருக்கிறது என்ற விடயங்களை முற்றாக அறியாமல் சில வெளிநாட்டுத் தமிழர்கள் குறிப்பாக இந்தியாவில் வாழ்பவர்கள்(ஒரு சிலரைத் தவிர்க்கலாம்) தமது மனம் போன போக்கில் பல விடயங்களைத் தெரிவித்து வருவதும் வீணான சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் தான் மனக் கவலை அளிக்கிறது! இதை நான் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றேன். தயவுசெய்து என்னை மன்னிக்கவும். ஆனால் ஒரு பழமொழி இருக்கிறது – காகம் திட்டி மாடு சாகாது!

இன்று பலரும் பலவிதமாக பலரையும் குறைவாகப் பேசியும் - திட்டியும் தாக்கியும் வருவது தெரிந்ததே! நானும் இதற்கு விதிவிலக்கல்ல! பதிவுலகில் இருப்பவர்கள் தம்மை எழுத்தாளர்கள் - பதிவர்கள் என்று சொல்பவர்கள்(இதில் பிரபல பதிவர் என்று தம்மைத் தாமே சொல்பவர்களும் இருக்கிறார்கள்) நான் ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை உண்மையை மட்டும் - நான் நேரடியாகத் தெரிந்து பட்டு அனுபவங்களை – மேலும் அறிந்தவற்றை பத்திரிகையில் எழுதப்பட்டவற்றை – வரலாற்றை எழுதுகிறேன் - மீண்டும் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் - நான் எக்கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிப்பவன் என்ற காரணத்தால் இன்று இக்கருத்தை மிகவும் இயலாத ஒரு வெறுப்பு உணர்வோடு எழுதுகிறேன்.
எவருக்கும் கருத்துச் சொல்லும் உரிமையும் - எழுதும் உரிமையும் இருக்கிறது - இது ஜனநாயகப் பண்பாடு – நடைமுறை! பொதுவாக தமிழகத்தில் தமக்குள் வேறுபாடுகளையுடைய பல கட்சிகள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் நிலை அங்கு இருக்கிறது!

என் நாட்டில் அந்த நிலை தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் தற்போது இல்லை என்றே சொல்லலாம்! தமக்கு எதிரான கருத்து – கொள்கையுடையவர்களை மேலுலகம் அனுப்பும் வழக்கம் எம்மிடத்தில் எம்மினத்தில் இருக்கிறது! எமது விடுதலைப் போராட்ட வரலாறு இன்று இவ்வளவு சின்னாபின்னாமாகியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இதில் குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் சிங்கள இனத்தில் தற்போது அரசியற் கட்சியாக 3ஆவது பெரும்பான்மையாக உள்ள ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி கடந்த 20 வருட காலத்திற்கு முன்னர் பயங்கர அமைப்பாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது!
தனி மனித சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது! யாரும் தமது கருத்தை வெளிப்படையாக சுதந்திரமாக வெளியிடவேண்டும். உதாரணமாக தனக்குப் பிடித்தவர்களையும் தான் அங்கம் வகிக்கும் இயக்கமோ அல்லது கட்சியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களையோ தலைவர்களையோ அல்லது சக தோழர்களையோ உறுப்பினர்களையோ போற்றியும் - தமக்கு எதிரான கருத்து கொள்கையுடைய ஏனையோரை விமர்சித்தும் எழுத பேச கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது! ஆனால் இது எமது நாட்டிற்குப் பொருத்தமற்றதாக இருக்கிறது.
அரசு தம்மை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் எதிரணியினர் ஏன் பொதுமக்களையும் கைது செய்கிறது! விசாரணை செய்கிறது! சில வேளைகளில் கொலையும் செய்கிறது!
அரசுதான் அப்படியானால் கட்சிகள் - இயக்கங்கள் கூட இதில் முன்னுக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்தச் சுதந்திரம் - நடமாடும் சுதந்திரம் - பகிரங்கமாக எந்த இடத்திலும் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரம் அனைத்தையும் நாம் எதிர்பார்த்திருக்கிறோம் - எமது சொந்த நாட்டில். இங்கு சுவிற்சர்லாந்தில் இது தாராளமாக அளவுக்கு அதிகமாக இருக்கிறது. மற்றவரை அவரது உரிமைகளைப் பாதிக்காதவரை - இடையூறு செய்யாமல் இருக்கும்வரை! இதனால் இங்கு வாழ எனக்கு ஓரளவு பிடிக்கிறது! காரணம் இவர்கள் தாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கிறார்கள்!(பெரும்பாலானோர் - ஒரு சிலர் எதிராக இருக்கத்தான் செய்வார்கள்)

ஆனால் என் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

No comments: