அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 13, 2009

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 5

எனக்கு சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதியான Schwyz (சுவிற்ஸ்) என்ற இடத்தில் வாழுவதற்கு அனுமதி கிடைத்தது. நாட்டின் பொதுப் பெயர் Schweiz -சுவைற்ஸ் என்று உச்சரிப்பார்கள். எனது பொருட்களை சரிபார்த்துப் பெற்றுக் கொண்டு (கைத் தொலைபேசியின் சிம் மாத்திரம் தரவில்லை)முகாமைவிட்டு வெளியேறினேன். புறப்படும்போதே போகுமிடத்திற்கு வரைபடமும் ஒரு நாள் முழுவதும் சுவிசுக்குள் பாவிக்கத்தக்க ரயில் ரிக்கற்றும் தருவார்கள். இந்த ரிக்கற்றில் ரயில் பஸ் மற்றும் கப்பல்களில் பயணம் செய்ய அனுமதி உண்டு. புகையிரத மூலம் சூரிச் சென்று அதன்பின் வேறு ரயில் மாறி எனது பயணத்தை ஆரம்பித்தேன். மாற்றலாகி செல்லும் விபரம் முதல்நாளிரவு விளம்பரப் பலகையில் போடப்படும். அதிகாலை 6.00 மணிக்கு காவலர்கள் வந்து எனது பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதாவது நான் உபயோகித்த பெற்சீற், தலையணை, அதன் உறை, போர்வை மற்றும் எனது அலுமாரித் திறப்பு இவற்றை சரிபார்த்துப் பெற்றுக் கொள்வார்கள். இத்தாலி நோக்கிச் செல்லும் ரயிலில் சுமார் 50 நிமிடப் பயணத்தின் பின்னர் Schwyz என்ற புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். மாறிவரும் மாநிலத்தின் தலைநகரம் இது. மாநிலத்தின் பெயரும் இதுதான். அங்கிருந்து 1ம் இலக்க பஸ்ஸில் ஏறி Schwyz Post என்ற இடத்தைச் சென்றடைந்தேன்.இதுதான் மத்திய பேரூந்து நிலையம் - தபாற் கந்தோர் - பொலிஸ் மற்றும் தேவாலயம் - கல்லூரி - நூல்நிலையம் - வங்கிகள் என்று அனைத்துமே இருக்குமிடம். அங்கிருந்து குறிப்பிட்ட பதியுமிடத்திற்கு வந்து - தந்த கடிதத்தைக் கொடுக்கவும், எனக்கு அடையாள அட்டையுடன் இன்னுமொரு முகாமிற்கான கடிதத்தைத் தந்து அதற்குப் போகும் வழியையும் சொல்லிவிட்டார்கள். நான் பின்னர் அதே இடத்தில் வந்து Brunnen என்ற இடத்திற்கு 2ஆம் இலக்க பஸ்ஸில் சென்று பின் 4ஆம் இலக்க பஸ்ஸில் Morschach என்ற இடத்தை அடைந்தேன். பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் என்னுடன் பிரயாணம் செய்த 2 ஈராக் நாட்டினர் என்ன புதிதாக வருகிறீரா என்று கேட்கவும் நானும் ஓமென ஆங்கிலத்தில் மறுமொழி சொல்ல அங்குதான் போக வேண்டும் என்று எதிர்ப்புறத்திலிருந்த மலையைக் காட்டினார்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன ஆனந்தம்! மகிழ்ச்சி! கொழும்பிலிருந்த சமயத்தில் சனி ஞாயிறு என்றால் இரத்தினபுரி - கண்டி - நுவரெலியா என ஓடும் எனக்கு கடவுளாகப் பார்த்து மலையில் வாழ வழியமைத்துத் தந்திருக்கிறானே என்று மனதார நன்றி சொல்லியபடி இயற்கையை ரசித்துக்கொண்டு மலையேறினேன். நான் அங்கு சென்றபோது மதியம் 2 மணியாகிவிட்டது. வரவேற்புப் பகுதியில் நின்றிருந்த அலுவலரிடம் கொண்டுவந்த கடிதத்தைக் கொடுக்கவும் என்னை அழைத்துச் சென்று எனது தங்கும் அறையைக் காட்டி இலக்கம் 13- உரிய பொருட்களை என்னிடம் ஒப்படைத்தார். தனியாகச் சமைத்துச் சாப்பிடத் தேவையான சகல பாத்திரங்களும் - அன்றாடத் தேவைக்கான (பழைய முகாமில் தந்ததுபோல) துவாய், பெற்சீற், தலையணை, போர்வை மற்றும் அலுமாரித் திறப்பு போன்ற அனைத்தையும் தந்துவிட்டு கீழே அழைத்தச் சென்று சமையலறையையும் அங்குள்ள அலுமாரி - குளிர்சாதனப் பெட்டி அவற்றிற்கான திறப்புக்களையும் தந்தார். அதன்பின் சற்றுநேரம் பொறுக்கும்படி சொல்லி என்னை வரவேற்புப் பகுதியின் இருக்கையில் அமருமாறு சொன்னார். நானும் காத்திருந்தேன். அந்த முகாம் கரிதாஸ் Caritas நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறது. இதன் பொறுப்பாளர் அன்று இல்லாதபடியால் அவருக்கு அடுத்த நிலையிலிருந்கும் டொச் படிப்பிக்கும் ஆசிரியர் வந்து எனக்கு குறிப்பிட்ட ஒரு வாரத்திற்க்குத் தேவையான உணவுப் பணத்தை தந்துவிட்டுச் சென்றார். அன்று வெள்ளிக்கிழமையாதலால் நான் வழமைபோல எனது பேர்னிலுள்ள நண்பரின் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன். அதற்கான படிவமொன்றைப் பூர்த்தி செய்தபின் அவர்களின் அனுமதியோடு நான் பேர்னுக்குப் புறப்பட்டேன்.

No comments: