அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 20, 2009

காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் (தொடர் விளையாட்டு)

காதல் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சம்பந்தரின் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்ற தேவாரம் தான்! சிறிய வயதிலிருந்து எனக்குப் பிடித்தமான(காதல்) மிகவும் அழகானவர் - படமாயினும் சரி கடவுளாயினும் சரி - பிள்ளையார்தான்!
இப்போதும் வயிற்றில் 2 தலையணைகளை வைத்துக் கட்டிவிட்டு பெரியதொரு பெற்சீற்றால் வயிற்றை மறைத்தக் கொண்டு பிள்ளையார் வாறார் பிள்ளையார் வாறார் என்று சொல்லி ஆடிப் பாடுவது என் இயற்கையான குணம். பிள்ளையாரின் ஆட்டத்தைப் பார்த்துச் சந்திரன் சிரித்தானாம் - சின்னக் குழந்தைகளின் அழுகையை நிற்பாட்ட - பிள்ளைகள் சிரிப்பதற்காக நான் போட்டு ஆடும் ஒரு விளையாட்டு.
மேலும் எனது தந்தையார் அரச ஊழியராக கடமையாற்றியதன் காரணத்தால் அடிக்கடி நாம் வெளியூர்களில் வாசம் செய்திருக்கிறோம். மாங்குளத்தில் அனுராதபுரத்தில் என குடும்பத்தினருடன் வாழ்ந்தபோதும் எனக்கு மாங்குளம் மாவடிப் பிள்ளையாரும் அனுராதபுரம் விவேனாந்த சபைக் கட்டிடம் அமைந்த இடத்திலிருந்த பிள்ளையார் கோவிலும் மறக்க முடியாத நினைவுகளாக இன்றும் இருக்கிறது. 1977 கலவரங்களின் பிறகு தெல்லிப்பழையில் வாழ்ந்தபோது வீட்டுக்கு அருகிலேயே காசிப்பிள்ளையார்.சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் தங்கியருந்தபோது MLA Hostel வளாகத்திலுள்ள அரச மரத்தடிப் பிள்ளையார். இப்படி நான் போகுமிடமெல்லாம் நான் காதலித்த பிள்ளையாரும் இருந்துகொண்டார்.


இனி காதலைப்பற்றிய என் உண்மையான கருத்து!

நாம் சகோதரர்கள் 4பேரும் வீட்டில் ஆண்கள். இதில் நான் மூத்தவன். பெண்களே இல்லாத என் குடும்பத்தில் பார்க்கும் பெண்களனைவரையும் சகோதரிகளாகவே மதித்துப் பழகியிருக்கிறேன். பாடசாலையில் கல்வி கற்ற நாட்களிலிருந்து திருமணம் முடிக்கும் வரை யாரையும் காதலித்ததில்லை.(நம்ப வேண்டியது உங்கள் கடமை)

காதல் திருமணத்தில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருக்கவில்லை. காரணம் எனது அம்மாவும் அப்பாவும் காதலித்துத்தான் திருமணம் புரிந்தார்கள். இதிலும் ஒருதடவை எனது தாயார் வீட்டுக்கத் தெரியாமல் தனது 18 வயதில் தனியாக எனது அப்பாவைத் தேடி புகையிரத மூலம் கொழும்பு சென்றபோது யாரோ எனது தாத்தாவுக்குத் தெரிந்தவர்கள் அம்மாவை புகையிரதத்தில் கண்டு அழைத்துச் சென்று தகவலனுப்பி பின்னர் தாத்தா சம்மமதத்துடன் மிகவும் எளிமையாக எனது தாயாரின் திருமணம் எங்கள் வீட்டிலேயே நடைபெற்றது. காதலித்த பின்னர் கல்யாணமாகிப் பிள்ளைகள் பெற்றதன் பிறகு எனது தம்பி இரத்தப் புற்றுநோயினால் தன் 7ஆவது வயதில் மரணமடைந்தபின் - குடும்ப வருமானம் போதாமையினாலும் - கலவரங்களின் பின்னரும் வீட்டில் ஒரே பிரச்சனைதான்.


மற்றயது எனது மாமனார் ஒருவர் காதலித்தது ஒரு சிங்களப் பெண்மணியை - அவர்களிடத்திலும் பிரச்சனை இருந்திருக்கிறது.

மற்றது ஒன்றுவிட்ட எனது அண்ணன் கதை - இவர்கள் காதலித்து ஒரு பிள்ளை பெற்ற பின்னர் தற்போது பிரிவினையில்!

இவை மாத்திரமல்ல - நாட்டின் பிரச்சனைகள் மற்றும் அழியும் எம் நாட்டின் அவல வாழ்க்கையில் - காதல் என்னைப் பாதிக்கவில்லை என்று சொல்லலாம்.

இதில் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சமயப் பணிகளுக்காக 1990களில் நான் ஒரு இடத்திற்குச் சென்ற வேளையின்பின் (இடத்தையும் பெயர்களையும் குறிப்பிட விரும்பவில்லை) சில சமய சந்தேகங்களுக்காக என்னுடன் கடிதத்தில் தொடர்பு கொண்ட ஒரு மாணவியினுடைய காதலன் தவறாக என்மீது குற்றம் சாட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததையும் இதைக் கேள்விப்பட்ட அந்த மாணவி பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளாது விட்டதும் உண்மை. பள்ளிப்படிப்பை முடித்தபின் ஊரிலுள்ள பலருக்கு சமயமும் தமிழ், கணிதம் போன்ற பாடங்களும் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறேன். அப்படிப் பயின்றவர்களில் என்னுடைய மனைவியும் ஒருவர். சிலர் இப்போதும் கேட்பதுண்டு -நீங்கள் அப்போதே காதலித்தவரா? என்று. ஆனால் என் பதில் ஒரு போதும் இல்லை என்பதே!

இப்போது திருமணத்தின் பின் நான் காதலிப்பது என் மனைவியையும் பிள்ளைகளையும் மாத்திரமே!.



அழகு என்றால் இயற்கையை மிஞ்சி எதையும் சொல்ல முடியாது! ஏற்கனவே காதலில் குறிப்பிட்டதுபோல அழகிலும் பிள்ளையார் தான் என்னை முதலில் கவர்ந்தவர். அதன்பிறகு அழகுக்குரிய அனைத்தையும் அடக்கலாம். பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பார்க்கும் எல்லா வடிவமும் எனக்கு அழகாகவே தெரிகிறது.



கடவுள் என்றால் கடந்து உள்ளும் புறமுமாய் இருப்பவர் - மேலான ஒரு சக்தி - பரம்பொருள் - அருவ உருவங்களுக்கு அப்பாற்பட்டவர் - எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் நாம் உருவம் கொடுத்து வழிபடுகிறோம். இயற்கையின் அனைத்திலும் அவரது ஆற்றல் வெளிப்படுகிறது! இதிலும் நான் ஒரு திருமந்திரத்தின் பாடலைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை


பணம் -


இதுபற்றிய எனது கருத்து -

பணம் இருக்கும் மனிதனிடம் குணமிருப்பதில்லை
குணமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை

பணமென்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்

இன்றைக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் பணம் பத்தும் செய்யும் என்பதுபோல வாழ்க்கைக்கு முக்கியமானதொன்றாக இருக்கிறது.
எனக்கும் இந்தப் பணத்துக்கும் பெரிய போராட்டமே நடக்கிறது! இன்றைக்கு 20ஆந்திகதி ஆனால் கையில் ஒரு சதமும் இல்லை! இதுதான் என்னுடைய நிலை! யாரிடம்?.......

விளையாட்டிற்கு அழைத்த மருதமூரானுக்கு நன்றிகள்.

1 comment:

யோ வொய்ஸ் (யோகா) said...

தொடர் பதிவு எழுதியதற்கு வாழ்த்துக்கள். உங்களது தொலைபேசி அழைப்பு வரும் போது நான் தூங்கி விட்டேன். அதற்கு மன்னிக்கவும். மேலும் குறுஞ்செய்தி மற்றும் பதிவில் வாழ்த்தியதற்கும் நன்றிகள்..