அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, November 23, 2009

பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா அவர்களின் பிறந்த நாள் இன்று!


23 November 1926 இல் பிறந்த பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா அவர்களின் 83ஆவது பிறந்த நாள் இன்று!

குரு பரம்பரைமீது நம்பிக்கை கொண்ட எமது சமய பாரம்பரியத்தில் எமது அஞ்ஞானத்தை அகற்றும் அனைத்து வழிகாட்டிகளையும் மனப்பூர்வமாக ஏற்பது எனது கொள்கை!

பெரியபுராணத்தில் அதீத அன்புடையவன் நான்! மக்களுக்கான சேவையையும் இதிலிருந்துதான் என்னால் உணரமுடிந்தது!சிறு மரம் ஒன்றை முதலில் வளர்க்க வேலி போடுவதுபோல உலக வாழ்வியலுக்கு சமய வாழ்வு அவசியம் என்பதற்கு நான் உதாரணத்திற்கு இதை குறிப்பிடுகிறேன். தன்னை அறிந்தால் - ஏனையவரை தன்னைப்போல பார்க்கும் மனோ பக்குவம் உண்டாகும்!

5.1.1988இல் சென்னைக்கு நான் முதல்முதல் போன சமயத்தில் சேப்பாக்கம் அரச விருந்தினர் விடுதியிலிருந்து அங்கு தங்கியிருந்த ஒரு வரட காலத்திலும் அதன்பின் மண்ணடியில் அங்கப்ப நாயக்கன் தெருவில் அடுத்து வசித்த 7மாத காலப்பகுதியிலும் வாரத்தில் ஒவ்வொரு வியாழனும் ஞாயிறும் மாலையில் (சந்தியா கால வேளையில்)மயிலாப்பூரிலுள்ள சுந்தரம் - சென்னையின் பிரஷாந்தி நிலையமான இவ்விடத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் மனதுக்கு மிகவும் ரம்யமான அந்தப் பஜனையின் அமிர்தம் அதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பகவானுடைய படங்களில் நான் பெரிதும் விரும்புவது இந்த கையை இப்படி எமக்குக் காட்டுவதுதான்! இதில் பல சொல்லாமல் சொல்லும் விசயங்கள் இருக்கின்றன! புரிந்தவர்கள் தெரியட்டும்!

யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராயிருந்த காலத்தில் அதுவும் சபரிமலை விரதம் அனுட்டிக்கும் காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் காலியிலுள்ள மாநர சபை மண்டபத்தில் நடைபெறும் சாயிபாபா பஜனைக்கு தவறாமல் கலந்து சிறப்பிப்பது வழக்கம். தற்போதுகூட அங்குள்ள அடியார்களோடு பேசிவிட்டுத்தான் இப்பதிவை எழுத ஆரம்பித்தேன். மக்களை ஒன்றுபட இவ்வைபவம் ஈழத்தில் அவசியமாகிறது. இன்று சிங்களப் பாடசாலைச் சிறுவர் பலர் இந்நிகழ்வில் சிவசின்னங்கள் அணிந்து பங்குபற்றியதாக அறிய முடிந்தது!
இங்கு சுவிற்சர்லாந்திலும் தமிழர்களாகிய நாமும் - சுவிஸ் நாட்டவரும் இன்று மாலையில் நடைபெறும் ஆனந்தமான பஜனையில் ஒன்றாக பாடல்கள் பாடுவது வேறு!

அல்லல்படும் - அலைபாயும் மனதுக்கு இன்று ஒரு அமைதியான பசுமையான நாள்!


No comments: