அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 5, 2009

பிரசுரிக்கப்படாத அமிர்தலிங்கம் நினைவுப் பணிக் கழகத்தின் 2004 தேர்தலின்போது வெளியிடப்பட்ட அறிக்கை!

பத்திரிகைச் செய்தி

தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை ஸ்தாபித்த அன்று ஆற்றிய உரையின் 2 முக்கிய பகுதிகள் பின்வருமாறு.

1. இலங்கைவாழ் தமிழ்ப் பேசும்மக்களின் எல்லாப் பிரிவினருள்ளும் தமிழ் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. ஆவர்கள் இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மாத்திரமன்றி அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்துவாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக் கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கைவாழ் தமிழ் இனத்துக்காகத் தொண்டுசெய்யும் பொறுப்பு பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது.

2. தமிழ்ப் பொதுமக்கள் என்றுமே தமது இலக்கினின்றும் பிறழவில்லை. வருங்காலத்திலும் அவர்கள் தமது இலக்கினின்றும் தவற மாட்டார்கள் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இன்று தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த கொள்கையின் அடிப்படையில் தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்றார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் ஒன்றுபட்ட சமஷ்டி அடிப்படையின் கீழ், பாஷாவாரி முறைப்படி, தனித்தியங்கும் அதிகாரம் படைத்த தமிழ்ப் பிரதேசத்தை அமைத்து, தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நோக்கமாகும்.

அந்நிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பால் இழந்த தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையை மீட்டு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழ விடுதலையைக் காணல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாகும்.

தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளின் ஆ என்ற பிரிவு இலங்கை தமிழ்ப் பேசும் மக்களிடையே நிலவும் எல்லா வகையான சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அக்கிரமங்களையும் விசேடமாகத் தீண்டாமையினையும் எந்த வடிவத்தில் அவை இருந்தாலும் அவைகளை நீக்கி அவர்களை ஒற்றுமைப்படுத்திப் புதிய சமுதாயத்தை உருவாக்க ஆவன செய்தல் என்பதும்,

மேலும் கூட்டணியின் அடிப்படைக் கொள்கைகளின் 6வதுபிரிவு அடிப்படைச் சனநாயக உரிமைகளைப் பாதுகாத்துத் தொழிலின் கௌரவத்தை ஏற்று மனிதனை மனிதன் சுரண்டாத, சோஷலிச திட்டமிடலின் அடிப்படையில் ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்குதல் என்பதும், குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

மேற்குறிப்பிட்ட 2 அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணான ஒரு கட்டாய நிலையில் குடாநாட்டில் இத் தேர்தலை எதிர்நோக்குவதால் எமது மக்கள் தமது வாக்குகளை எப்படி, யாருக்கு அளிக்கவேண்டும் என்ற ஒரு கருத்தை நாம் எமது கழகத்தின் சார்பாக வழங்க வேண்டிய கட்டாயத்தில் இவ்வறிக்கையை சமர்ப்பிக்கின்றோம்.

மகாத்மா காந்தியின் அகிம்சா வழியில் ஈழத்தில் தனது அரசியலை நடத்தி எம்மையெல்லாம் நேரிய ஒரு பாதையில் வழிநடத்திய தந்தை செல்வா தனது இறுதிக்காலத்தில் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தந்தை செல்வா ஒருபோதும் ஒரு எறும்புக்குக்கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற புனிதமான அகிம்சை என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்த தனது சமயத்தின்மீது பற்றுக் கொண்ட ஒரு தீர்க்கதரிசி. எனவே தான் கிறீஸ்தவராக இருந்தும் பெரும்பான்மையான இந்துக்களின் ஆதரவையும் பெற்று பெருந்தலைவராக திகழ்ந்தார்.

அகிம்சை, உண்மை, சத்தியம் என்பவற்றின் இலட்சிய புருஷராகிய தந்தை செல்வாவின் நாமத்தை உச்சரிக்கத் தகுதியற்றவர்கள் இன்று தமிழரசுக்கட்சிச் சின்னத்தில் போட்டியிடுவதை அறிந்தோ என்னவோ தந்தை தமிழர்களைக் கடவுள்தான் காக்கவேண்டும் என்று கூறியிருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

தந்தையை பதவிக்கு ஆசைப்பட்டவர்- அதனால் அவர் கட்சிமாறியவர் என்று கூறிய காங்கிரஸ்காரர்கள், தர்மரையும், ஆலாலையும் சுட்டுக்கொன்ற ரெலோக்காரர்கள், அப்பாவிப் பிள்ளைகளை தமது இயக்கத்துக்கு பலோத்காரமாகச் சேர்த்து பின்னர் புலிகளிடம் பலிகொடுத்த பிள்ளைபிடிகாரர்கள்(ஈபிஆர்எல்எப் - சுரேஸ்அணியினர்),இவர்கள் தான் தந்தையின் புனிதமான சின்னத்தில் போட்டியிடும் கனவான்கள். இதில் பல்கலைக்கழக மாணவர் தலைவர் கஜேந்திரன் - பொது நு}லகத்தைத் திறக்கவிடாது மக்களின் மன்னிக்கவும் மாணவர்களின் அறிவைச் சீரழித்த செம்மல் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு எப்படியெல்லாம் திருகுதாளம் போடுகின்றார்கள். கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான் ஜீப் என்று சுவரெல்லாம் எழுதி கேவலப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களையும் அழித்து - அவர்களது வாகனங்களையும் கடத்தி புரட்சி செய்த வீரர்கள் இன்று அவர்களது சின்னத்தில் மானமிழந்து மரியாதைகெட்டு பெயர்கொடுத்து இருக்கின்றார்கள்.

எந்த உயிருக்கும் தீங்குவிளைவிக்க மனதாலும் எண்ணத் தெரியாத தந்தை செல்வா அவர்களை - அவரது இலட்சியத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள் இன்று தத்துவம் பேசுவதுதான் வேதனையைத் தருகின்றது.

1. பேசுவார்த்தை சரிவராது என சித்தாந்தம் பேசியதை மறக்கலாமா?
2. சாத்வீகம் சரிவராது என்று கூறியது மட்டுமல்ல – உண்ணாவிரதம் இருந்தவர்களை அவமதித்து இருக்கும் இடத்தில் நீரூற்றி இருக்கவிடாமல் செய்து – சாப்பாட்டை அவர்களுக்கு பலோத்காரமாக ஊட்டி தாமும் உண்டு - இறுதியில் கூட்டம் நடைபெற்ற வேளையில் குண்டையும் வெடிக்கச் செய்ததையெல்லாம் எம்மவர்கள் மறந்தாலும் - வண்ணை வீரமாகாளி மறப்பாளா? மன்னிப்பாளா?
3. அதுமட்டுமல்ல இன்று பல்கலைக்கழக மாணவர்கள் பெரிதும் போற்றும் வீரர்கள்தான் - அன்று உண்ணாவிரதம் இருந்த பல்கலை மாணவன் விஜிதரனைக் கடத்திச் சென்று கொன்றதை எத்தனைபேர் அறிவார்கள்?
4. நல்லுர் வீதியில் எத்தனை பிணங்களைக் கொண்டுவந்து வைத்து அழகுகாட்டினார்கள். இரவிரவாக எத்தனைபேர் ஆரியகுளம்வரை வரிசையில் நின்று விடுப்புப் பார்த்தார்கள்.

தந்தையின் வழியில் அவரது காலத்திலேயே தமிழரசுக் கட்சித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களை விமர்சித்த பெருமைக்குரியவர்கள் உயிருடனிருந்தபோது அவரது 60ஆவது பிறந்த தினத்தை அவரது பிறந்த ஊரான பண்ணாகத்திலும், புகுந்த ஊரான மூளாயிலும் கொண்டாடவிடாது குழப்பியவர்கள், அவருடன் பேசவேண்டும் என்றுகூறி அவரது இடத்துக்கு விருந்தினராக வந்து தேனீர் அருந்தி அவரைச்சுட்டுக்கொன்ற நன்றியுணர்வற்றவர்கள், அவரது மறைவுக்கு துக்கம் அனுட்டிக்கவும் விடாதவர்கள், அவரது அழகான நினைவுச்சினத்தை கிளிநொச்சியில் இருந்த இடம் தெரியாமல் அழித்துத்துடைத்தவர்கள், அவரது 75வது பிறந்த நாளுக்கு தடைவிதித்தது மட்டுமல்ல அந்த விழாவுக்குச் சென்றவர்களைத் துரோகிகள் என்று கனகலிங்கத்தைக் கொண்டு அறிக்கைவிடச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை யாரும் மறக்கவும் மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். ஒரு மனிதனை உயிருடன் இருக்கும் போதும் சரி, இறந்த பின்னரும் சரி து}ற்றும் ஒரு கும்பலுக்கு சிந்தனாசக்தியையுடைய மக்கள் எப்படி வாக்களிக்க முடியும்.

இதை அறியாமல் அல்லது அறிந்தும் எதையும் குறிப்பிட்டுச்சொல்ல திராணியற்றவராக திரு. மாவை. சேனாதிராசா அவர்கள் அமரர் அமிர்தலிங்கத்தின் பெயரை தனது தேர்தல் விளம்பரத்துக்குப் பயன்படுத்துவதை எமது கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தந்தை செல்வாவின் படத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் பயன்படுத்துவதை விமர்சித்த இவருக்கு தந்தை செல்வாவுக்கு மூதறிஞர் பட்டம் வழங்கிய விழாவில் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் தந்தைக்குப் பொன்னாடை போர்த்தி தமிழ் மக்கள் சார்பாக கௌரவம் செய்தது தெரியாமல் போய் விட்டதா? தந்தையுடன் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் யாழ். குடாநாடு மாத்திரமன்றி வடக்குகிழக்கில் பாதயாத்திரை செய்ததையும் அறிவாரா? தந்தையுடன் பாராளுமன்றத்தில் இறுதிவரை இருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் அறிவாரா? குதர்க்கம் பேசாமல் உண்மையாக நீதியாக ஜனநாயக முறைப்படி மாவையவர்கள் இனிமேலாவது நடக்கவேண்டும் என்று எமது கழகம் அவரை வேண்டுகிறது.

உண்மையாகவும் நீதியாகவும் செயற்படும் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியையும், அதனை வழிநடத்திய தலைவர்களையும் நினைவுகூர்ந்து தொடர்ந்தும் விசுவாசமாக செயற்பட்டுவரும் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் பணிதொடர, அவரது சுயேட்சைக்குழுவுக்கு ஆதரவளித்து தர்மத்தையும், தமிழரின் நன்றயுணர்வு எனும் பண்பாட்டையும் காக்குமாறு குடாநாட்டில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களையும் பணிவாக வேண்டுகின்றோம்.

நாம் ஆறறிவுடையவர்கள். எமது புத்தி எந்தமட்டு என்பதை நாம் தான் உணரவேண்டுமேயன்றி இன்னொருவர் கூறி புரியவேண்டும் என்ற கட்டளை கிடையாது.

உங்களின் வாக்கினை சுயேட்சைக் குழு – 1 இன்பூட்டுச் சின்னத்துக்கு வழங்குவதுடன் விருப்பு வாக்கினை அதன் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் இலக்கமான 4ற்கு மேலும், ஏனைய நீங்கள் விரும்பிய இருவருடைய இலக்கத்திற்கும் வழங்கி நீதியை நிலைநிறுத்தும்வண்ணம் மீண்டும் பணிவுடன் வேண்டுகின்றோம்.

நன்றி.


அமிர்தலிங்கம் நினைவுப் பணிக் கழகம்.
March 2004

No comments: