அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 5, 2009

சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்! - வீ. ஆனந்தசங்கரி தலைவர்-த.வி.கூ


05-08-2009

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
இலங்கை ஜனாதிபதி
அலரி மாளிகை
கொழும்பு

மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே!

சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்


ஒரு சிறு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் அரச கூட்டணி வேட்பாளர்களுக்கு வாய்ப்பாக ஜனநாயக கோட்பாடுகள் மிகவெட்கப்படக் கூடிய முறையில் மீறப்படுவதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். மந்திரி சபை உறுப்பினர்கள் பலர் வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து தம்மை மிக மலிவாக்கிக் கொண்டனர். நீங்கள் நாட்டின் தலைவராக இருக்கும் இவ்வேளையில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது மிக்க வேதனைக்குரியதாகும். இத்தகைய செயல்கள் ஒருபோதும் மக்களால் பாராட்டப்படமாட்டாது. மொத்தத்தில் பெருமைமிக்க கடந்த காலத்தை கொண்ட ஓர் அரசுக்கு அபகீர்த்தியையே கொண்டு வரும். மிகப் பலம் கொண்ட அரசின் வேட்பாளர்களுடன் போட்டியிட்டு தோற்பதால் நான் எதையும் இழந்துவிடப் போவதில்லை. நாடுதான் என்னை இழக்கப் போகிறது.

ஏறக்குறைய தடுப்புக் காவலில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில குடும்பங்களை பல மாதங்களாக அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட அற்ற நிலையில் வைத்திருந்துவிட்டு வடபகுதி அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரிலேயே விடுவிக்க எடுத்த நடவடிக்கை என்னை குழப்புகிறது. நீங்கள் ஏனையவர்களையும் ஒரே நேரத்தில் விடுவிக்க தவறுவீர்களேயானால் உங்களின் நடவடிக்கை எதிர்பார்ப்பதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தும்.

தேர்தல் சம்பந்தமாக நான் உங்களிடம் ஒரேயொரு விடயத்தை மட்டுமே கேட்கிறேன். ஒரு சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துமாறு கட்டளையிடுங்கள். ஏனெனில் வாக்களிப்பு அட்டைகளை முறையற்ற வகையிலும் பணத்துக்காகவும் பெருமளவில் வாங்கப்படுகிறது. இது ஆள்மாறாட்டத்துக்கான செயலாகும். அதில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் களத்தில் உள்ளார்.

எனக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் உங்கள் நற்பெயரை காப்பாற்ற வேண்டுமென்பதே!

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

No comments: