அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 19, 2009

பிரசித்திபெற்ற யாழ்ப்பாண நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா இன்று!

நாட்டைவிட்டு வெகு தூரத்தில் இருந்தாலும் நல்லூர் அலங்காரக் கந்தனின் 25 நாள் திருவிழாக் காலத்தை எளிதில் மறக்க முடியாது! மகோற்சவ காலங்களில் நாம் யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தொண்டராகவும் பின்னர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் தொண்டராகவும் பணியாற்றிய காலகட்டங்களை சுலபமாக மறந்தவிட முடியாது! எம்முடல் இன்று இங்கிருந்தாலும் ஆன்மா அங்குதான் சுழன்று கொண்டிருக்கிறது!

இம்முறையும் திருவிழாக் காலங்களில் அடிக்கடி பலருடன் தொடர்பு கொண்டபடி அங்கு நடைபெறும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் தெரிந்து ஆன்மீக அனுபூதி கிடைத்தவண்ணமே இருக்கிறது! இன்று நடைபெறும் தேர்த் திருவிழாவை இங்கிருந்தபடியே மனமுருகித் தொழுது எம்மினத்தின் இடர் களைந்து - மக்களின் கௌரவமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த அனைவரும் பிரார்த்திப்போமாக!
இன்றைய நன்னாளில் தேரடிச் செல்லப்பரின் சீடர் சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடலில் குறிப்பிட்ட நல்லூரான் கிருபை வேண்டும் என்ற பாடல்கள் இரண்டையும் பதிவிலிட்டு எம்மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.

நல்லூரான் கிருபை வேண்டும் - 1

நல்லூரான் கிருபை வேண்டும் - வேறென்ன வேண்டும்
நம்மைப் பிரியானென நம்பிட வேண்டும் - (நல்லூரான்)

எல்லாரிடத்தும் அவன் இருப்பதைக் காணவேண்டும்
கொல்லாமை கள்ளாமை கோபத்தை நீக்க வேண்டும் - (நல்லூரான்)

சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருக்க வேண்டும்
அல்லும் பகலுமவன் அடியிணையே தொழவேண்டும் - (நல்லூரான்)

உல்லாசமாக உலகிற் றிரிய வேண்டும்
ஓம் சிவாய நமவென ஓதிக் கொள்ள வேண்டும் - (நல்லூரான்)

பல்லோர் புகழ் நல்லூர்ச் செல்லப்பன் பாதத்தை
பக்தியாய்க் கும்பிட்டுப் பாடிட வேண்டும் - (நல்லாரான்)

சொல்லும் யோகசுவாமி தோத்திரப் பாடலை
எல்லோரும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும் - (நல்லூரான்)


நல்லூரான் கிருபை வேண்டும் - 2

இராகம் - சுருட்டி தாளம் ஆதி

பல்லவி

நல்லூரான் கிருபை வேண்டும் - நாம் எந்நாளும்
பாட வேண்டும் - வேறென்ன வேண்டும் - (நல்லூரான்)

அநுபல்லவி

சொல்லும் பொருளுமற்றுச் சும்மா விருக்கவேண்டும்
தூய குருவின் பாதம் துணையாகக் கொள்ள வேண்டும் - (நல்லூரான்)

சரணங்கள்

அல்லும் பகலுஞ் சிவ நாமத்தைச் சொல்லவேண்டும்
ஆசை மூன்றையும் அடியோடு கொல்லவேண்டும்
கண்டு கண்டு மனங் குளிர்ந்திட வேண்டும்
காமக் குரோத மோகத்தைத் தீர்க்க வேண்டும் - (நல்லூரான்)

பொறிவழி போய் மனம் அலையாமை வேண்டும்
பூரண மான நிட்டையும் வேண்டும்
எல்லா ரிடத்துமன்பு செலுத்த வேண்டும்
எழில்பெறுஞ் சுழுமுனை வழிச்செல்ல வேண்டும். - (நல்லூரான்)

No comments: