அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, August 1, 2009

எம் மக்கள் படும் துன்பம் போக்கிட நீ வந்தருள்வாய்! - மூளாய்ப் பிள்ளையாரிடம் வேண்டுகோள்!


காக்கை உருவெடுத்து காவிரியை ஓடவைத்தாய்
குள்ளச் சிறுவனாய் குறுமுனிக்கு அருள் சுரந்தாய்
கூக்குரல்போட்டுக் கதறிடும் எம்மூரவர்க்கு
கூத்தாடி மைந்தனே! குமரனின் அண்ணா! காட்டுன் கருணையை!
மூளாயூரில் வந்தமர்ந்த சித்தி விநாயகனே!
மூலமாய் இருப்பவரே! முன்வந்து காட்டிடுவாய்!
தம்பியும் நீயும் தரணியிலே ஓரூரில்
தனித்தேர் தன்னில் வீதியுலா வருவீர்கள்!
உன்னைப் பேர்த்தெடுத்த உன்னங்கி தான் கவர்ந்தார்
உள்ளமுருக வேண்டுகிறோம் உன்னடியார் நாங்களெல்லாம்!
இலங்கை இராணுவமும் இந்திய இராணுவமும்
இலக்காக அழித்தொழிக்க அடித்த ஷெல் எதுவும்
எம்மூரில் தாக்காது - எவரையும் அழிக்காது
எமைக் காத்த தெய்வம் நீ! ஏன் ஐயா இந்த மௌனம்?
ஆடிமாதம் பிறந்தாலே அரண்டிடுவார் தமிழரெல்லாம்!
ஓடிஓடி தாம் ஒழித்து உயிர் தப்ப வாழும் வாழ்க்கை
கம்பிவேலி தன்னுள் இன்று கதறுகின்றார் மக்களெல்லாம்
கல்லினுள்ளே இருந்தெமக்கு கருணைபுரி நற் தெய்வம்!
ஊர்விட்டு நாடுவிட்டு வேறு உலகில் இருப்பவன் நான்
ஊனின்றி உறக்கமின்றி உன்னையே துதிக்கின்றேன்!
காட்டிடுவாய் கயவரை, காலமெல்லாம் தாம் செய்த
காருண்யமில்லா களவுதனைக் கண்டிப்பாய்!
காவலாக வந்திங்கு கலி நீக்க கருணைபுரி
காதலின் மிகுதியாலே கதறுகிறேன் காப்பாற்று!
வலக்காலில் துளைத்திட்ட ஷெல்த்துண்டும்
வலக் கையில் ஏறிய அம்பு போன்ற குச்சியும்
என்நெஞ்சில் பாய்ந்த புலிகளின் குண்டினாலும்
எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் செய்தவன்நீ
என்னைக் காக்கும் தெய்வம் நீ என்னுயிரில் உறைபவன் நீ
எம்மூரார் படும் துன்பம் போக்கிட நீ வந்தருள்வாய்!

No comments: