அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, August 1, 2009

09.09.2003 இல் இரா. சம்பந்தனுக்கு நானெழுதிய முதற்கடிதம்.

தங்க. முகுந்தன்
30/1B, Alwis Place,
Colombo – 3,
09.09.2003.

கௌரவ. இரா. சம்பந்தன் பா.உ
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

அன்புடையீர்,
வணக்கம்.

புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென்று ஏற்றுக் கொள்வதில் மறுபேச்சுக்கு இடமில்லை – எந்தக் கனவானும் மறக்க முடியாது என்கிறார் சம்பந்தன் என்று இன்றைய தினக்குரலில் முதற்பக்கச் செய்தி கூறுகிறது. தாங்களா? இவ்வாறு கூறினீர்கள் என்று ஆச்சரியப்பட்டேன்! முன்னாட்களில் எமது தலைவர்களில் பலரின் அழிவுக்குக் காரணமானவர்களிடம். இன்று அவர்கள் கூட்டணியை உதாசீனப்படுத்திய நிலையில் - இடைக்கால நிர்வாகம் பற்றி கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளிடம் பேசியபின் எம்முடன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேசாதபோது – அவர்களிடம் நல்லபெயர் வாங்கிவிட ஆசைப்பட்ட நிலையில் - தாங்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்ததை நான் முன்னரே எதிர்பார்த்திருந்து காத்திருந்ததுதான் காரணம். எப்போ நீங்கள் உங்களின் வாயால் இந்த ஏகப்பிரதிநிதித்துவக் கதையைத் தொடங்குவீர்கள் என்றுதான் இதுவரை எதிர்பார்த்திருந்தேன். ஏனெனில் ஏகப்பிரதிநிதித்துவத்தின் அர்த்தம் தெரியாமல் எல்லாரும் இருப்பது வேறு. தங்களுக்குக் கூட இது தெரியாமல் போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த 2, 3மாதங்களில் நீங்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் முன்னக்குப்பின் முரண்பாடாக நடந்துகொண்ட மாறுபாடான விதம் - பலர் உங்களைப் பற்றிக் கூறியிருந்தாலும் - கட்சிமீது தாங்கள் கொண்டிருந்த பற்றற்ற தன்மையை இப்பொழுதுதான் என்னால் உணர முடிகிறது.

ஏற்கனவே ஒருதடவை 2000ஆம் ஆண்டளவில் என நினைக்கின்றேன் - நான் அன்றைய சந்திரிகா அரசின் தீர்வுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபொழுது தங்களின் கருத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தபொழுதும் அன்றைய நிகழ்விலும் - அந்தச் சந்தர்ப்பத்திலும் உங்களின் கருத்துக்கு கலாநிதி நீலன் திருச்செல்வம் தவிர்ந்த ஏனையவர்கள் ஆதரவளிக்கவில்லை என்பதுடன் அன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று யாரோ சிலரது எடுபிடிகளாக செயற்பட்டதுபோலவே. இன்று தாங்களும் மனச்சாட்சியில்லாதவகையில் நடந்து கொள்வதாக எம்மைப்போன்ற சிலர் உணரக் கூடியதாக இருக்கின்றது.

தங்கள் மீது நம்பிக்கையில்லாத நிலையில் தாங்கள் இந்தக் கட்சியில் தொடர்தும் இருந்தால் - எமது மறைந்த தன்னலமற்ற தியாகங்களைச் செய்த தலைவர்கள் மீது எமக்கு வாக்களித்த மக்கள் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை சிதறடிக்கும் என நான் அஞ்சுகின்றேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருகாலமும் எவரையும் நம்ப மாட்டார்கள். தங்களில் பலரையே நம்பாதவர்கள் மீது நாம் நம்பிக்கைகொள்வது முட்டாள்தனமானதெனவே நான் எண்ணுகின்றேன். மேலும் அவர்கள் மக்களுக்காகப் போராடுகிறோம் என்றுகூறி மக்களையே வதைப்பதும் எவரும் அறியாததல்ல. ஏற்கனவே தமிழீழ மீட்பு நிதி என்று சாதாரண மக்களிடம் 2 பவுண் பெற்றவர்கள் தற்பொழுது திரும்ப அதனைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது மட்டுமல்ல – யாழ்ப்பாணத்தில் அப்பாவி வர்த்தகர்களிடமிருந்து இன்றம் பெருந்தொகையான பணத்தை அறவிடுவதும் இதனால் பலர் தமது வியாபார நிலையங்களை விற்றுவிட்டு கொழும்புக்கு வருவதும் சாதாரணமான விடயங்களாகிவிட்டது.

புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் நாம் சில விடயங்களில் அவர்களிடம் சில விளக்கங்களை முதலில் கேட்டுவிட்டு – அவர்களுக்கு ஆதரவை வழங்குவதையோ அல்லது அவர்களுடன் இணைவதைப் பற்றியோ யோசிக்கலாம் என்பது எனது கருத்து. அதற்கு முன்னதாக நாம் ஒரு ஜனநாயகக் கட்சியினர் என்பதுடன் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டு அதன்மீது நம்பிக்கையுடையவர்கள் என்பதுடன் எவரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதை தெளிவாக, திடமாக கூறுவதற்கு அஞ்சத் தேவையில்லை என்பதும் அடிப்படையுரிமைகளை எவர்எவர் எவரிடம் வேண்டி நின்றாலும் அவரவர்க்கு அந்த உரிமைகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு அதை உறுதிப்படுத்த வேண்டும். இதில் தங்களின் நிலைப்பாட்டை நான் அறிய விரும்புகிறேன்.

கடந்த 55 வருடகால அரசியல் வரலாற்றில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட ஏனைய இயக்கங்கள் கட்சிகள் என்ற வரலாற்றின் அடிப்படையில் எமது கட்சிக்குள்ள முக்கியத்துவத்தை எவரும் மறுக்க முடியாது. தாங்களும் இதில் பெரும்பங்கை வகித்திருப்பதையும் நாம் மறந்துவிடவில்லை. எனினும் தங்களின் தற்போதைய நடவடிக்கைகள்தான் இக்கடிதத்தை எழுதத் தூண்டியது.

சில விடயங்களை தங்களின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

1. விடுதலைப் புலிகள் கூட்டணியினர் 1984ஆம் ஆண்டில் நடத்திய நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி உண்ணாவிரதத்தை குழப்பியமை. இதன்பின்னர் பல்கலைக் கழக மாணவர்களின் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களைக் கடத்திச் சென்று – விஜிதரனைக் கொலை செய்தமை.

2. இப்படி உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்திய பின்னர் நல்லூர் வீதியில் திலீபனும், அன்னைபூபதியும் விடுதலைப் புலிகளுக்காக உயிர் நீத்தார்கள் எனக் கூறப்படினும் எனது மனச் சாட்சி இப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாது மறுக்கிறது.

3. 1985ல் திம்புவில் நடந்த பேச்சுக்களில் பங்குபற்றியவண்ணமே பேச்சுவார்த்தைகளை ஏளனஞ்செய்து தமது வில்லிசை நிகழ்ச்சியிலும் தெருக் கூத்திலும் பிரச்சாரம் பண்ணி வந்தமை.

4. எமது தலைவர்களை ஆயுதம் தரித்தவர்கள் பலர் (விடுதலைப்புலிகளுட்பட) கொன்றொழித்தபோதிலும் அவர்களைப் பெரும்பான்மையிடம் காட்டிக் கொடுக்காது பாதுகாத்துவந்ததையும் மறந்து, எம்மை - கூட்டணியை முற்றாக ஒழிக்க கங்கணம் கட்டும் முயற்சி தொடரும் வேளையிலும் தாங்கள் இன்றும் பாராமுகமாய் இருப்பது வருத்தத்திற்குரியது. வேதனையைத் தருகிறது.

எனவே தான்

இக்கட்சிக் காரியாலயத்தில் கடந்த 12 வருடங்களுக்குமேல் பணியாற்றியவன் என்ற வகையிலும்,
கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்ற வகையிலும்,மக்கள் மத்தியில் அவர்களது கருத்துக்களை அறிந்தவன் என்ற வகையிலும்,
எனது மனச்சாட்சிப்படியும் தங்களிடம் பணிவாக வேண்டுவது யாதெனில் எம்முடைய தனித்துவத்தை எவருக்கும் விட்டுக் கொடுக்காது இயங்க வேண்டும் என்பதுடன் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்ய வேண்டும் என நடக்காது எமது உறுதியான நிலையிலிருந்து தழும்பலாகாது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் தாங்கள் நடந்துகொண்ட முறை எனக்கு முற்றாகவே மனவேதனையை அளித்தது என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

1. அமரர் தங்கத்துரை அவர்கள் பா.உ உறுப்பினராயிருந்த வேளையில் தாங்கள் எமது கட்சிக் காரியாலயத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு வருகைதந்தபோதும் எம்மீது நம்பிக்கையற்ற நிலையில் தேனீர் அருந்துவதைத் தவிர்த்து வந்துள்ளீர்கள்.2. அமரர் அமிர்தலிங்கத்தின் மறைவுக்கு கொழும்புக்கு உடன்வராமல் திருகோணமலைக்கு இந்திய விமான மூலம் வந்ததும் இன்று விடுதலைப்புலிகள்தான் நன்றியை மறந்திருந்தாலும் தாங்களும் இவற்றை மறந்து செயற்படுவதுதான் வேதனையை அளிக்கிறது.
3. கட்சியின் நிதிநிலைமை பற்றியோ அல்லது கட்சிக் காரியாலயப் பணிகளைப் பற்றியோ கூடுதலான அக்கறைகாட்டுவதில்லை.
4. 1989க்குப் பின் தேசியப்பட்டியல் மூலம் கிடைத்துவந்த அத்தனை வசதிகளையும் தாங்கள் தற்பொழுது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ள கௌரவ. துரைரட்ணசிங்கம் அவர்கள் மூலம் தடுத்துள்ளமையை சுட்டிக்காட்ட வேண்டும்.
5. கடந்தமுறை யாழ் விஜயத்தின்போது துர்க்காபுரத்தில் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி முன்பாக கௌரவ. ரவிராஜ் அவர்கள் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு கருத்தை தாங்கள் நீண்டநேரம் எமது கடைசியாக நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் தெரிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சியது.

தாங்கள் எனது கடிதத்தைப் படித்து பதில் தருவீர்கள் என நம்புகிறேன். எனது இக்கடிதம் எமது கட்சியின் வளர்ச்சிக்கும் அதனைக்கட்டிக்காத்த தலைவர்களுக்கும் எமது கட்சியில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கும் மதிப்பளித்த நிலையில் உள்ளத்தூய்மையுடன் எழுதப்பட்டது என்பதைத் தெரிவித்து நிறைவுசெய்கின்றேன்.

உண்மையுள்ள,
தங்க. முகுந்தன்.(ஒப்பம்)

4 comments:

Unknown said...

தொலைந்த ஞாபகங்களை மீட்கின்றீர்கள் முகுந்தன், அத்துடன் என்னையும் இதில் இழுத்து விட்டீர்கள், உண்மையை உரத்துப் பேசத் தயங்கக் கூடாது.

நான் எனது பதிவுகளில் புலிகளின் தவறுகளை என்றும் சுட்டிக் காட்டத் தவறியதில்லை, ஆனால் புலிகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட உங்களைப் போன்ற பலர் மௌனம் சாதித்து வந்தனர், இருப்பினும் புலிகளின் அழிவுக்குப் பின் முகுந்தன் ஓங்கிக் குரல் கொடுக்க வந்தது ஜனநாயகத்தின் மீதான பற்றுதலே என்றால் அதில் மிகையில்லை.

இருப்பினும் உள்ளே நீங்கள் தனியனாக இருந்து நடத்திய போராட்டங்கள் வெளியே தெரியாதவை, இவற்றை நீங்கள் பதிவு செய்தமை காலத்தின் கண்ணாடியாகும். சம்பந்தன், மாவை போன்றோரின் பொய்முகங்களை தமிழ் உலகம் அறியட்டும், ஏனோ சங்கரியின் திருகுதாளங்கள் உங்களுக்குத் தெரியாமல் போய் விட்டது. உங்களது கடிதத்தில் ரவிராஜ்ஜை கௌரவ எனும் அடைமொழிக்குள் புகுத்தியமை ஏற்புடையதாகத் தெரியவில்லை, உங்களுடன் நட்பாகப் பழகினார் என்பதனால் அப்படி விழித்தீர்களோ நானறியேன், ரவிராஜ் புலிகளுக்காக வக்காளத்து வாங்கிய சம்பவங்கள் எண்ணற்றவை.

//புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் நாம் சில விடயங்களில் அவர்களிடம் சில விளக்கங்களை முதலில் கேட்டு விட்டு, அவர்களுக்கு ஆதரவை வழங்குவதையோ அல்லது அவர்களுடன் இணைவதைப் பற்றியோ யோசிக்கலாம் என்பது எனது கருத்து. அதற்கு முன்னதாக நாம் ஒரு ஜனநாயகக் கட்சியினர் என்பதுடன் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டு அதன்மீது நம்பிக்கையுடையவர்கள் என்பதுடன் எவரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை//

உங்களின் கருத்தை நான் மதிக்கின்றேன், ஆனால் உங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்களா என்பது கேள்விக்குறியே!

தலைவனையும், பிற தொண்டர்களையும் சுட்டுக் கொண்ட பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்து நீங்கள் தான் உண்மையான ஈழத்து மைந்தர்கள் என உரத்துக் கூறி கை கோர்த்துக் கொண்டவர்கள் உங்கள் கட்சியினரே!

தங்க முகுந்தன் said...

என்ன ஈழவரே! என் மீதும் தாக்குதலோ?
புலிகளின் அழிவுக்கப் பின் முகுந்தன் ஓங்கிக் குரல் கொடுக்க வந்தது ஜனநாயகத்தின் மீதான பற்றுதலே என்றால் அதில் மிகையில்லை.
இது தவறு நான் புலிகளுடன் பல தடவைகள் நேருக்கு நேராக மோதியவன் - கருத்துக்களால்! ஆரம்ப நாட்களிலிருந்த எனது சுயசரிதையை எழுதும்போது நீங்கள் காணலாம்.

எமது இளைஞர்கள் - பொடியன்கள் என்று சொல்லி ஏமாந்தது உண்மைதான் - காலங்கடந்த ஞானம்தான்!
ஆனால் நான் சிறு வயதிலிருந்தே கொல்லாமை பெரிதென்று எனது 20வயதுகளில் யோகர் சுவாமியினுடைய சீடரின் ஆச்சிரமத்தின் தொடர்பைப் பெற்ற பின் அதிக நாட்டம் கொண்டேன். ஏன் அதற்கு முதலில் இருந்தே நான் எனது 11ஆவது வயதில் 6ஆம் தரத்தில் அனுராதபுரத்தில் வாழும்போதே கௌதம புத்தருடைய போதனையை பெரிதும் விரும்பியவன். இன்றைக்கு அரசு கொலையாட்டம் போட்டாலும் அந்த மகான்மீது தனியான மதிப்பை வைத்திருப்பவன் அதிகம் எழுத விரும்பவில்லை! பின்னர் தொடர்கிறேன்!

Unknown said...

அன்பான முகுந்தனுக்கு,
உங்கள் மீது தாக்குதல் செய்யும் நோக்கில் எனது பின்னூட்டம் அமையவில்லை, உண்மைகளைப் பதிவு செய்யும் போது பக்கச்சார்பு இருக்கக்கூடாது என்பதே எனது நோக்கம்.

ரவிராஜ், சங்கரி போன்றோரின் கோர முகங்களையும் பதிவு செய்யுங்கள்.

ஜோதிஜி said...

சுய சரிதையை அவஸ்யம் தொடராக இலங்கையில் உள்ள நடந்த நிகழ்வுகளை எதிர்பார்க்கின்றேன்.