அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 26, 2009

காணாமற்போன யாழ் பொது நூலக நினைவுக்கல் - மறைந்த தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் மீள நினைவுகூரப் படுகிறார் - இன்றைய உதயனில் செய்தி!

இன்றைய(26.08.2009) உதயன் 2ஆம் பக்கச் செய்தியில் இந்த விடயம் வெளிவந்துள்ளது. மறைக்கப்படும் வரலாறுகளில் இதுவும் ஒரு முக்கிய செய்தி. எனது பதிவுக்காகவும் - சில விடயங்களுக்காகவும் உதயன் செய்தியை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.

அமரர் அமிர்தலிங்கத்தினால் பொது நூலகத்தில் திரை நீக்கப்ட்ட நினைவுக்கல்லை மீளப் பொருத்துவதற்கு புதிய சபை முன்வரவேண்டும். யாழ் மாநகர சபையின் புதிய நிர்வாகத்திடம் முன்னாள் ஆணையாளர் சிவஞானம் வேண்டுகோள்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர். அ. அமிர்தலிங்கத்தினால் யாழ் பொது நூலகம் 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி மீளவும் திறந்து வைக்கப்பட்டது. அந்த வைபவத்தின் ஞாபகச் சின்னமாக ஒரு நினைவுக்கல்லும் பொருத்தப்பட்டு அமரர் அமிர்தலிங்கத்தினால் திரை நீக்கம் செய்யப்பட்டது. எனினும் தற்போது அந்த நினைவுக்கல் அந்த இடத்தில் காணப்படவில்லை. எனவே அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு காலத்துத் தமிழினத் தலைவனுடைய வரலாற்று நிகழ்வு தொடர்பானது என்பதால், தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள மாநகர சபை நிர்வாகம் அதனை மீளப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அமிர்தலிங்கத்தின் பிறந்த தினமான இன்றைய (ஓகஸ்ட் 26) நாளில் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானம்.

இதுதொடர்பாக அவர் யாழ் மாநகர ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு:
01.06.1981ஆம் திகதி நள்ளிரவில் சட்டத்தின் பாதுகாவலர்களாலேயே எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை மீள்வித்து இயங்க வைப்பதில் அப்போதிருந்த சபையும் நிர்வாகமும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பொதுநூலக வரைபடத்தின்படி மேற்குப்புறப் பகுதியை புதிதாக அமைக்கவென மாநகர முதல்வரால் 07.02.1982 ஆம் திகதி அத்திபாரம் இடப்பட்டது. இதற்கான நினைவுக்கல் அப்படியே பொருத்தப்பட்ட இடத்திலேயே உள்ளது.
01.06.1983ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட சபையின் பொறுப்புக்களையும் நிறைவேற்றிய எம்மால் இக்கட்டிட வேலைகள் தொடரப்பட்டு 04.06.1984ஆம் திகதி முன்னாள் காங்கேசன்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான அ. அமிர்தலிங்கத்தினால் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. அந்த வைபவத்தின் ஞாபகச் சின்னமாக ஒரு நினைவுக்கல்லும் கட்டடத்தில் பொருத்தப்பட்டு அமரர் அமிர்தலிங்கம் அவர்களாலேயே திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

எனினும் அத்திபாரம் நாட்டிய நினைவுக்கல் அப்படியே இருக்கையில் 04.06.1984இல் நடைபெற்ற திறப்புவிழா நினைவுக்கல் இது பொருத்தப்பட்டிருந்த இடத்தில் காணப்படவில்லை. இது எமக்குக் குறிப்பாகவும் யாழ்ப்பாண மக்களுக்குப் பொதுவாகவும் மிகவும் வேதனையளிக்கும் விடயமாகவே கருதலாம்.

அமரர் அமிர்தலிங்கத்தைக் கொண்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை திறப்பிக்க அப்போதைய மாநகர ஆணையாளராக இருந்த நான் எடுத்த முடிவு எமக்குத் தனிப்பட்ட முறையில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.

அமரர் அமிர்தலிங்கத்தினால் இந்த நூலகத்தைத் திறந்து வைப்பதை அரசாங்கம் அறவே விரும்பவில்லை என்பதற்கு மேலாக அதை மிகவும் ஆணித்தரமாக எதிர்த்தமை தெளிவாகும். அரசு என்னிடம் கேட்ட ஒருகேள்வி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லாதவரை எவ்வாறு அழைக்கலாம் என்பதாகும். இவற்றிற்கு மத்தியிலும் அமரர் அமிர்தலிங்கத்தை நாம் இந்த வைபவத்திற்கு தெரிவுசெய்வதில் பல காரணங்கள் இருந்தன. முதலில் யாழ்ப்பாண பொதுநூலகத்தை திறந்து வைக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டியதில்லை. அவர் யாழ்ப்பாண மக்களின் அங்கீகாரம் பெற்றவராக இருந்தாலே போதும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் அவருக்கு அந்த அங்கீகாரம் உண்டு. இது அரசுக்குச் சொல்லப்பட்டது.

தமிழ் இனத்தின் தன்மான தமிழ் தேசிய உணர்வுகளையும் அபிலாஷைகளையும் தெளிவாகவும் தைரியமாகவும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எடுத்துக்கூறும் தன்னிகரில்லாத் தலைவனாக அமரர் அமிர்தலிங்கம் விளங்கினார். ஜெயவர்த்தனபுரத்தில் புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டபோது எதிர்க்கட்சித்தலைவர் என்ற ரீதீயில் அவர் ஆற்றிய உரை அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளில் உன்னதமான ஒன்று.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலவைர் பதவி என்பது அமரர் அமிர்தலிங்கத்திற்கு முன்பும் இல்லை பின்பும் கிடைக்கப்போவதே இல்லையென்பது எமது யதார்த்தமான கருத்தாக இருந்தது. எனவே அவ்வாறான வரலாற்று ரீதியாக பதவி வகித்த அமரர் அமிர்தலிங்கத்தின் பெயர் யாழ்ப்பாணத்தில் ஏதாவது ஒரு இடத்திலாவது பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டுமென நான் கருதினேன்.

1977 முதல் 1979 நடுப்பகுதிவரை நான் ஆணையாளராகவும் விசேட ஆணையாளராகவும் இருந்த காலத்தில் பூர்த்தியாக்கப்பட்ட நவீன சந்தை இணர்டாம் கட்ட கட்டடத்தை தெரிவுசெய்யப்பட்ட சபை பதவியிலிருந்தபோது 1979இல் அமரர் அமிர்தலிங்கத்தைக் கொண்டு திறந்துவைப்பிக்க முயன்றேன். ஆனால் அது கைகூடவில்லை.

ஆகவே தான் ஐந்த வருடம் கழித்து மீண்டும் ஒருசந்தர்ப்பம் கிடைத்தபோது முன்னாள் காங்கேசன்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி முதல்வருமாகிய அ. அமிர்தலிங்கம் மூலம் யாழ்ப்பாண பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அவ்வாறே நினைவுக் கல்லும் எழுதப்பட்டது.

04.06.1984இல் திறந்தவைக்கப்பட்ட பொதுநூலகம் மீண்டும் 10.05.1985இல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதால் பாவனை கைவிடப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து மறைக்கப்பட்டுள்ளமை தெளிவு. கருத்துவேறுபாடுகள் எதுவாயினும் வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளே! ஆவை மறைக்கப்படக்கூடாதவை. அதற்குப் பின்னர் இலங்கை அரசு நாம் நினைவுச் சின்னமாகப் பேண எண்ணிய தென்பகுதி கீழ்த் தளத்தையும் சேர்த்து திருத்தி அமைத்தபோது 04.06.1984ஆம் திகதிய நூலக திறப்பு நிகழ்வின் நினைவுக் கல்லை பொருத்தாது விட்டது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட செயலா என்பது தெரியவில்லை.

நான் மீண்டும் ஆணையாளராகக் கடமையாற்றிய 2005 2006 காலப்பகுதியில் இந்த நினைவுக் கல்லை நானே பொருத்துவித்திருக்கலாம். ஆனால் அதில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பதால் ஒரு தெரிவுசெய்யப்பட்ட சபை மூலம் இதை செய்விப்பதால் அமரர் அமிர்தலிங்கத்தின் தமிழ்த்தேசிய உணர்வுகளின்பால் மக்கள் வைத்திருக்கும் கௌரவத்தையும் மதிப்பையும் மீள உறுதிப்படுத்தலாம் என்பதாலுமே நான் அவ்வாறு செய்யவில்லை.

இப்பொழுது அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்த நாளான ஓகஸ்ட் இருபத்தாறாம் திகதி அவரது நினைவாக இந்த வேண்டுகோளை தங்கள் மூலமாக புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மாநகர சபையிடம் முன் வைத்திருக்கின்றேன்.

இது ஒரு காலத்து தமிழினத் தலைவனுடைய வரலாற்று நிகழ்வு தொடர்பானது என்பதால் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஏகமனதாக குறிப்பிட்ட நினைவுக்கல்லை வெற்றிடமாக உள்ள அதே இடத்தில் பொருத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன் - என்றுள்ளது.

1 comment:

Admin said...

வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களை தொகுக்கும் சொந்தங்கள் http://sonthankal.blogspot.com வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

உங்களைப் போன்ற வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கை தமிழ் வலைப்பதிவர்களின் விபரங்களை அறியத்தரவும்.