அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, May 7, 2009

ஈழத் தமிழர் இன்னல் - பகுதி 1

பொது நல நாடுகளின் பாராளுமன்றச் சங்கத்தின் தமிழ்நாட்டுக்கிளையினரால் அன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் உயர்திரு. க. இராசாராம் அவர்களின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் 19.08.1983ல் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமும் இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை.

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சட்டமன்றப் பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. ராஜாராம் அவர்களே, சுதந்திரப் போராட்ட காலம் தொடக்கம் தமிழகத்தில் சிறப்புமிக்கத் தலைவராக விளங்கி வருகின்ற சட்டமன்ற மேலவைத் தலைவர் திரு. ம.பொ.சி அவர்களே, இங்கே வருகை தந்து இருக்கின்ற சட்டமன்ற பேரவை, மேலவை உறுப்பினர்களே, அமைச்சர் பெருமக்களே, இலங்கையிலிருந்த வருகை தந்திருக்கின்ற என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நவரத்தினம் அவர்களே, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன் அவர்களே, இங்கே திரளாக வருகை தந்திருக்கின்ற பெரிNயுhர்களே, தாய்மார்களே, என் அருமை தம்பி தங்கைகளே,

தமிழ் இனத்தினுடைய வரலாற்றில் எத்தனையோ துன்பங்களை நாம் கண்டு இருக்கின்றோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருசந்தர்ப்பத்தில் கூறினார்கள் - கடல் நீர் உர்ப்பாக இருப்பதற்குக் காரணம் கடல் கடந்த தமிழன் வடித்த கண்ணீர் தான் என்று கூறினார்.

இன்று இந்தக் கண்ணீர் கடலிலே தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே அவர்கள் நிலை மாத்திரமல்ல அவர்கள் வாழ்வு வளமாக நாம் எப்படி செயற்பட வேண்டும் என்பதையும் உங்கள் மத்தியிலே எடுத்துக் கூற நான் இங்கு வருகை தந்திருக்கிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்திலே பொது நல நாடுகளின் பாராளுமன்றச் சங்க தமிழ்நாட்டுக்கிளையினர் இந்த சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்து, அறிஞர் பெருமக்கள் மத்தியில் வெறும் உணர்ச்சிப் பெருக்காக அல்ல, ஆழ்ந்த சிந்தனைக்குரிய சில கருத்துக்களைக் கூறுகின்ற வாய்ப்புக் கிடைத்தமைக்காக நான் இந்த தமிழ்க் கிளையினுடைய தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் எல்லோருக்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.

நண்பர்களே, சென்ற சனிக்கிழமை இரவு சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கினேன். எப்படி வந்தேன் என்ற வரலாறே ஈழத் தமிழர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் அறியச் செய்யும். யுhழ்ப்பாணத்திலிருந்து ஒரு மோட்டார் வண்டியிலே வவுனியாவிலே உள்ள இன்னொரு மோட்டார் வண்டியிலே வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் எம்மைப் பாதுகாக்கக்கூடிய நண்பர்களும் உடன்வர மேற்கு இலங்கையின் ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் சென்று அங்கிருந்து வேறு ஒரு பாதுகாவலருடைய வண்டியில் நான் மாறு வேடத்தில் ஏறிவந்து கொழும்பு சென்று யாருக்கும் தெரியாமல் அங்கு தங்கி விமான நிலையத்திற்கு நேரே சென்று விமான நிலையத்தில் பிரயாணிகள் தங்கும் இடத்தில் நான் இருக்கும் போதுதான் இலங்கை அரசினுடைய இராணுவ மேலதிகாரி ஒருவர் வந்து நீஙஇகள் சிறப்பு விருந்தினர் இருக்கைக்கு வருவீர்கள் என்றல்லவா நினைத்தோம் ஏன் இங்கு வந்து சேர்ந்தீர்கள்? என்று கேட்டார். நான் கூறினேன் நான் உங்கள் யாருக்கும் அறிவிக்கவில்லை. உங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை நான் என்னுடைய பாட்டில் போக நீஙஇகள் வந்து இங்கே வரவேற்கத் தேவையில்லை என்று கூறி அனுப்பிவிட்டு நேராக விமானத்திற்குச் சென்று இங்கே வந்;தேன்.

இலங்கை நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் நான் நிற்கின்றேன். அந்த நாட்டின் தலைநகரிலே மாறுவேடத்திலே நுழைய வேண்டியவனாக இருக்கிறேன். விமானத்திலே திருட்டுத் தனமாக தீரடன் நுழைவதுபோல நுழைந்து என்னுடைய விமானச்சீட்டைக் கூட என்னுடைய தந்தையின் பெயரிலே வெற்று பிரயாணம் செய்கின்ற நிலையிலே இருக்கிறேன் என்றால் நாங்கள் எத்துணை நெருக்கடிக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறியக் கூடியதாக இருக்கும்.

நான் இங்கு வந்து இறங்கியவுடன் என்னை சந்தித்த பத்திரிகையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் இரண்டு நாள் தமிழ்நாட்டில் தங்கி இங்குள்ள தலைவர்கள் பெரியார்களை எல்லாம் பார்த்து அவர்களுடைய ஆலோசனைகளை எல்லாம் பெற்றுத்தான் டெல்லிக்கு செல்லவேண்டும் கருதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அன்றிரவே நான் புறப்பட்டுச் சென்று அடுத்த நாளே பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப் பார்க்கவேண்டுமென்று டெல்லியிலிருந்த அறிவிப்பு வந்திருக்கிறது என்ற காரணத்தினால் நான் ஒருசில தலைவர்களை மாத்திரம் அவசரம் அவசரமாக இரவோடு இரவாகப் பார்த்து பேசிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைக்கூட சிலர் தப்பாக தவறாக நாம் தமிழகத்து தலைவர்களைப் பார்க்காமல் போய்விட்டேன் என்று கூறினார்கள்.

தமிழகம் இத்தனை கிளர்ச்சியை நடத்தியதே மத்திய அரசு எமக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நிலையில் மத்திய அரசு அழைக்கும்போது உங்களுடைய குரல் அங்கே அவர்கள் செவியிலே ஏறி அவர்கள் எம்மை அழைக்கும்போது நாம் அங்கு செல்வதா? இங்கே நிற்பதா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும். எனவே எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்க முற்படுபவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் எமது இன்னல் மிகுந்த நேரத்தில் காரியப் பொறுப்பை சுமந்து இருக்கிற நான் எதை எப்படி செய்யவேண்டுமென்று ஆலோசித்தேன். நான் உங்களுடைய சட்டமன்ற பேரவைத் தலைவருடன் ஆலோசித்தேன். தமிழக முதலமைச்சருடனும் ஏனைய அமைச்சர்களுடனும் ஆலோசித்தேன். திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முரசொலி மாறன் முதலியோரை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்தேன். இன்னும் அன்றிரவே என்னைப் பார்க்க வந்த குமரிஅனந்தன் போன்ற தலைவர்களுடன் ஆலோசித்து விட்டுத்தான் நான் டெல்லிக்குச் சென்றேனே தவிர தமிழகத்தைப் புறக்கணித்து மதிக்காமல் நான் சென்றதாக யாரும் கூறினால் நிச்சயமாக தமிழ்நாட்டு பெருமக்கள் அதை நம்ப மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

நண்பர்களே, சட்டபேரவைத் தலைவர் அவர்கள் தன்னுடைய விரிவான உரையிலே இலங்கையில் தமிழ் மக்களுடைய சமீபகால சோக வரலாற்றை ஓரளவுக்கு உங்களுக்கு எடுத்துக் கூறி விளக்கினார்கள். இன்று சிங்கள சரித்திராசிரியர்கள் சிலரும் அரசியல்வாதிகள் பலரும் ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்கள் இடைக்காலத்திலே வந்தேறு குடிகளாக அங்கே சென்றவர்கள் என்று கூறுகிறார்கள். வேறு சிலர் ஆங்கில ஆட்சிக் காலத்திலே அங்கு தேயிலை இரப்பர் தோட்டங்களிலே வேலைசெய்யத்தான் சென்றவர்கள் என்று ஒரு தவறான படத்தை உலகின் முன்னாலே வைக்க முயற்சி செய்கிறார்கள். (தொடரும்)

No comments: