அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, May 7, 2009

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள் TULF PLOTE EPRLF(Pathmanaba) கோரிக்கை

05.05.2009
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.

02. உணவு

அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.

03 முதியோர்களை விடுவித்தல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும் 60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. நோயாளிகள்

பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்

05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்

வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

06. அரச ஊழியர்கள்

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.

07. அரசாங்க அதிபர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.


08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்

பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.

09. தொலைபேசி இணைப்புக்கள்

தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

10. உறவினர்களின் சந்திப்பு

முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.

கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. ஊனமுற்றோர், அனாதை குழந்தைகள், முதியோர், சித்த சுயாதீனமற்றோர்.

ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

13. விதவைகள்

விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும் புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

14. பிரேத அறை

முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும் துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள் உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்

புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால் கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி



வீ.ஆனந்தசங்கரி தலைவர்-த.வி.கூ
த.சித்தார்த்தன் புளொட்
தி.ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

No comments: