02.05.2009
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
“எம் உயிரை காப்பாற்றுங்கள்” என வன்னியிலிருந்து எழும்
இடம் பெயர்ந்தோரின் குரல்
வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்த மக்களை காப்பாற்றுங்கள் என 01-05-2009 இல் என்னால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக மேலும் அறியத் தருவது யாதெனில், கனரக ஆயுதங்களை உபயோகிக்கக் கூடாதெனவும், துப்பாக்கியால் ஒரு பொது மகனுடைய உயிர்தன்னும் பறிக்க அனுமதிக்கக் கூடாதெனவும் தாங்கள் இராணுவத்தினருக்கு கொடுத்துள்ள அறிவுரை பாராட்டுக்குரியதாகும். இலங்கை இராணுவத்தினர் தற்போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஓர் அமைப்பாகும். போரிடுபவர்களாக அவர்கள் ஏன் எதற்காக என்ற கேள்வியை எழுப்பாது கட்டளைக்கேற்ப செயற்பட்டு மரணிக்க வேண்டியவர்களே. மறுபுறம் அவர்கள் காயப்பட்டவர்களுக்கும் பலம் குன்றியவர்களுக்கும் மனிதாபிமான சேவைகளை செய்யும் வேறு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஐந்து வயது பிள்ளை ஒன்றை காணாது தவித்த ஓர் தாயின் பிள்ளையை தேடி கண்டுபிடித்து அப் பிள்ளை அணிந்திருந்த அத்தனை நகைகளுடனும் அதன் தாயிடம் சேர்த்த ஓர் நல்ல போர் வீரனை காண்கிறோம். பெருமளவில் வெளியேறிய மக்களின் துயர் துடைத்த போதே அவர்கள் மக்களின் நல்லெண்ணத்தை பெற்றார்கள். அவர்களில் பெண்கள், குழந்தைகளையும், நோயாளிகளையும், முதியோர்களையும் அக்கறையுடனும், மிக்க அன்புடனும் அனுசரித்து நடந்துள்ளனர். அவர்களின் பலதரப்பட்ட செயற்பாடுகளும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவையாகும்.
விடுதலைப் புலிகள் அரச படையினர் போன்று கட்டுப்பாட்டுடன் செயற்படுபவர்கள் அல்ல என்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். அவர்கள் யுத்த விதிமுறைகளுக்கு அமைவாக நடப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. இப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாலும் பொதுமக்களுடன் அவர்கள் பெருமளவில் கலந்து செயற்பட பெரும் வாய்ப்பிருப்பதாலும் பொது மக்களை பெருமளவில் பாதிக்காது விடுதலைப் புலிகளை இராணுவத்தால் தாக்க முடியாது. இன்றைய நிலையில் விடுதலைப் புலிகளை தாக்குவார்களேயானால் பெருமளவு பொது மக்கள் இறக்;கவும், காயமடையவதற்கும் பெரும் வாய்ப்புண்டு. 27-04-2009 தொடக்கம் 01-05-2009 மாலை 4.00 மணிவரை 170 அப்பாவிகள் கொல்லப்பட்டும் 951 பேர் காயமடைந்.தும் உள்ளனர். அவர்களில் 181 பேர் சிறு பிள்ளைகளாவர். ஓவ்வொரு தினமும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை விபரம் என்னிடம் உண்டு. இந்த எண்ணிக்கை ஆஸ்பத்திரிக்கு அனுமதி பெற்று இறந்த, காயமடைந்தவர்கள் சம்பந்தமானதே. வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்பு இறந்தவர்களின் எண்ணிக்கை இதில் அடங்காது. அத்தகையவர்கள் துவாயினால் சுற்றப்பட்டு புதைக்கப்படுகின்றனர்.
ஜனாதிபதி அவர்களே! இக் கொலைகளுக்கு யார் பொறுப்பாளிகள் என்பதல்ல பிரச்சினை. தாங்கள் விரும்புவது போல் துப்பாக்கியால் யாரும் உயிர் துறக்கக் கூடாது. மிகச் சிறிய அளவு பாதிப்போடு போரை நடத்தியவர்கள் என எடுத்த நற்பெயரை அவர்களே தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது. விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை வெளியில் பாதுகாப்பாக கொண்டு வர வேண்டுமானால் தங்களுக்குள்ள ஒரே வழி ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஸ்தாபனம் உள்ளே சென்று விடுதலைப் புலிகளோடு பேசி மக்களை பாதுகாப்பாக வெளியேறவும், அவர்கள் தமது ஆயுதங்களுடன் அரச படைகளிடம் சரணடைய சம்மதிக்க வைப்பதுவுமே. மக்களின் குறைகளை எடுத்துக்கூற வேண்டிய கடமை எனக்கும், ஓர் உயிர் தன்னும் இழக்கப்படக் கூடாது மக்களை பாதுகாப்பாக வெளியில் கொண்டுவர வேண்டியது உங்களின் கடமையுயாகும்.
பி.கு-
நான் இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் வேளை இன்று பகல் 12.00 மணிக்கு வந்த நம்பத்தகுந்த செய்திகளின் படி 07 செல்கள் காலை 9.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இடையில் தாக்குலுக்கு உள்ளான முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் 64 பேர் உயிரிழந்தும் மூன்று ஊழியர்கள் உட்பட 87 பேர் காயமடைந்தும் உள்னர். தயவு செய்து உடனடியாக, இலங்கை பிரஜைகள் என்ற காரணத்தால் இத்தகைய ஆபத்துக்களையெல்லாம் எதிர்கொண்டு தவிக்கும் அப்பாவி மக்களை வெளியில் கொண்டுவர வேண்டிய ஏற்பாடுகளை செய்யவும், வெசாக் வாரமாகிய இவ் வாரம் இத்தகைய சம்பவங்கள் சர்வதேச சமூகத்துக்கு எம் நாட்டை பிழையாக பிரதிபலித்துக் காட்டும்
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
Thursday, May 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment