Saturday, May 16, 2009
பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும் - TULF
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும்
விடுதலைப் புலிகள் ஒன்றரை இலட்சம் மக்களை பயணக் கைதிகளாக தடுத்து வைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் சூனியப் பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் தருகிறது. அவர்கள் தற்போது அனுபவிக்கும் நரக வேதனையை அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பட்ட துன்பங்களிலும் பார்க்க மிகக் கூடுதலானதாகும். அவர்களுக்குக் கிடைக்கும் உணவு அவர்களுடைய தேவைகளுக்கு போதுமானதல்ல. அந்த நிலை குறைந்தளவு உணவுப் பண்டம் வருவதாலா அல்லது விடுதலைப் புலிகள் தம் பங்கை முன்கூட்டியே எடுத்து விடுவதாலா, இல்லாமல் இரண்டும் காரணமாக இருக்கலாம். அதன் பயனாக தாய்மாரும், வயோதிபர்களும் போதிய சத்துணவின்றி வாடுகின்றனர். இந் நாட்களில் நீண்ட வரிசையில் தம் பங்கு கஞ்சிக்காக காத்து நிற்கின்றனர். தாய்ப்பால் ஊட்டும் சக்தி இழந்த தாய்மார்கள் தம் பிள்ளைகளுக்கு புட்டி பாலுக்காக பல நாட்களாக காத்திருக்கின்றனர். பயத்துடனும், பீதியுடனும் வாழும் மக்கள் கூடுதலான நேரத்தை பங்கருக்குள்ளேயே செலவிடுகின்றனர்.
இக் கொடுமைக்கு மேலாக வெசாக் பண்டிகைக்கு மறுதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்த செல் தாக்குதல் மறுநாள் காலை 7.00 மணிக்கு அதாவது இன்று முடிவுக்கு வந்தது. இன்று மாலை 5.00 மணி வரை 378 சடலங்களுடன் 1122 படுகாயமுற்றோரும் காணப்பட்டனர். பல குடும்பங்கள் முற்றாக தம் பங்கருக்குள்ளே முடக்கப்பட்டு விட்டனர் எனவும் அறிய வருகிறது. படுகாயமுற்ற பலர் வைத்திய சேவை எதுவுமின்றி கவனிப்பாரற்று மடிந்தும் உள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 378 மட்டும்தானா? அல்லது விடுதலைப் புலிகள் தவிர்த்து வேறு சில ஊடகங்கள் கூறுவது போல் ஆயிரக்கணக்கானோரா என்பதல்ல பிரச்சினை. ஒரு நாளில் மிகக் கூடிய மரணங்கள் ஏற்பட்டது யுத்தம் ஆரம்பமானதின் பின்பு இந் நிகழ்வில்தான். விடுதபை; புலிகளை ஒழிக்க உதவிய மக்களின் எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றமாக முடிந்தது. அத்துடன் பாதுகாப்பாக இடம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர்கள் நன்றாக கவனிக்கப்படுவார்கள் என்றும் அரசு கொடுத்த உத்தரவாதத்தை நம்பிய சர்வதேச சமூகத்துக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
முள்ளிவாய்க்கால் நிலைமை நாளுக்குநாள் கட்டுமீறி வருகின்றது. நாளுக்குநாள் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வந்து இன்று அது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. தயவு செய்து உடனடியாக செல் அடிப்பதையும், துப்பாக்கிச் சூட்டையும் நிறுத்துமாறு பணிக்கவும். விடுதலைப் புலிகளை யாராலும் கட்டுப்படுத்த முடிhயாது ஆனால் உங்கள் படையை நிறுத்தி வைக்க உங்களால் முடியும்.
விடுதலைப் புலிகள் தற்போது முற்று முழுதாக பொது மக்களுடன் கலந்துள்ளமையால் அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பல பொது மக்களை கொல்வதோடு அதேவேளை பலர் காயமடையவும் செய்யும். கவனயீனமாக நடப்பதால் விடுதலைப் புலிகள் எதையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் அரசு இழக்க பல உண்டு, அரசின் நாணயம் உட்பட. நான் மீண்டும் தங்களுக்கு வலியுறுத்தி கூறுவது யாதெனில் அவர்கள் மக்களோடு கலந்துள்ளமையால் தங்களுக்குள்ள ஒரே வழி விடுதலை புலிகளை தாக்குவதை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் உதவியோ அன்றி நீங்கள் விரும்பும் வேறு யாரின் உதவியோ பெற்று அகப்பட்டுள்ள மக்களை விடுவிக்கும் வரை காலத்தை கடத்துவதே. ஐ.நா சபையின் உதவியை நாடுவதில் எவ்விதத்திலும் தப்பு கிடையாது.
வன்னி மக்கள் மீது நான் அக்கறை காட்டுவதால் என்னை தப்பாக எண்ணக்கூடாது. நான் நன்கு தெரிந்து என் மீது அதிக பாசம் கொண்டுள்ள மக்கள் அநேகர் இறந்தும், கடுமையாக காயமடைந்தும் தம் கால், கைகளை இழந்தும் உள்ளனர். நான் உங்களுக்கு 10-04-2009 இல் எழுதிய ஓர் கடிதத்தின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்.
யுத்தத்தின் கடைசி கட்டத்தில் புலிகள் அப்பாவி பொது மக்களுடன் கலந்து நின்று அவர்களை மனித கேடயமாக பாவிப்பதால் ஆபத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது……. நாம் விடுதலைப் புலிகளை யுத்தக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு இயங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது ஆனால் அரச படைகளால் அது முடியும். நாளுக்கு நாள் நிலைமை பயங்கரமானதாகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் தலையீடு மேலும் தாமதிக்கலாகாது. ஒரு நாள் உண்மைநிலை உலகறியும் காலம் வரும் போது முழு உலகும் அரசையும் மக்களையும் கண்டித்து நிற்கும். சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் இதுவரை கூறி வந்ததுபோல் எமது முழு அக்கறையும் மக்கள் மீதே.
பி.கு:- பெருந்தொகையான காயமுற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையால் வைத்தியர்களால் அனைவருக்கும் வைத்தியம் பார்க்க முடியவில்லை. பல காயமுற்றவர்களுக்கு 24 மணித்தியாலங்களாக எதுவித சேவையும் வழங்கப்படவில்லை. வைத்தியசாலை ஊழியர்களில் அரைவாசியினரின் வீடுகளும் தாக்கப்பட்டமையால் கடமைக்கு வரவில்லை.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment