அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, May 19, 2009

நேரந்தாழ்த்தாது உடனடியாக LTTEயின் தலைவர் நேரடியாகத் தோன்றித் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்!

வதந்திகள் - அரசாங்கச் செய்திகள் இவற்றின் குழப்பத்தை நீக்கவும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பேசும் மக்களின் கலக்க நிலையைப் போக்கவும் நேரந்தாழ்த்தாது உடனடியாக LTTEயின் தலைவர் நேரடியாகத் தோன்றித் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்! அரசியலில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மனிதத்தின் பெயரால் எனது தனிப்பட்ட கருத்து இதுவாகும்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் எம்மை - நான் சார்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை - ஒரு பிசாசைப் பார்ப்பதுபோல - அல்லது ஒரு எதிரியைப் பார்ப்பதுபோலத்தான் கருதினார்கள் - இன்றும் கருதுகிறார்கள். - தந்தை செல்வா வழியில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் துரோகிகள் என்று குறைசொல்லி - அனைவரையும் தீர்த்துக்கட்டினார்கள். கொள்கை அடிப்படையில் இன்றும் நாம் மக்களுக்காகவே செயற்பட்டு வருகின்றோம். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு முழுமையான அரசியல் தெரிந்தவர்களற்ற நிலையில் இருப்பது வேறு. நான் தேவையற்ற விடயங்களை இந்த செய்தியில் சேர்க்க விரும்பவில்லை.
எந்த உயிரையும் கொல்லும் உரிமை எவருக்கும் இல்லை என்ற எனது கோட்பாட்டின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அது எவராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே எனது 14.05.2009 திகதி இடுகையில் சொல்லியபடி ஈழத் தமிழரைக் காப்பாற்ற - சதாமை எப்படி அமெரிக்கா கைது பண்ணியதோ அதே போல மகிந்த ராஜபக்க்ஷவையும் கைது பண்ணுவதே ஒரேவழி! என்ற செய்திக்கு அமைவாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். போரினால் பாதிக்கப்ட்ட மக்கள் அனைவரிடமும் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீதியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவே எனது மனிதாபிமான பகிரங்க வேண்டுகோளாகும்.

No comments: