எனது சுயசரிதை என்ற இத்தலைப்பிலான தொடரை கடந்த June 12ல் எழுதிய கட்டுரையின்படி எனக்குத் தெரிந்த – என் நினைவுகளுக்கு தற்போது வரும் சில தகவல்களைக் கொண்டு எழுத முற்படுகிறேன். நான் உயிருடன் இருக்கும்போது என் அனுபங்களைச் சொல்வதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது! காரணம் அகதி என்ற ஒரு பெயருடன் சொந்த நாட்டைவிட்டு - பெற்ற தாயைப் பிரிந்து - கூடப் பிறந்த சகோதரர்களைப் பிரிந்து - தொட்டுத் தாலிகட்டிய மனைவியைப் பிரிந்து - பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து - உற்ற சொந்தங்கள் - உறவுகளைப் பிரிந்து - நல்ல நண்பர் கூட்டத்தைப் பிரிந்து - உயிருக்குயிரான என் ஊர் கோவிலையும் சரி ஏனைய கோவில்கள் வழிபாட்டுத் தலங்களையும் - பற்றற்றுப் பணிபுரிந்த என் கட்சியையும் - விட்டுவிட்டு இங்கு ஒரு திறந்த வெளிச் சிறச்சாலையில் வாழும் எனக்கு - இப்போது நினைவுக்கு வருவது இசைஞானி உயர்திரு இளையராஜா அவர்களின் ஒரு பாடல்!
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?
அட எந்நாடு சென்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ்போல் இனித்திடுமா?"
என்னுடைய ஆசை என்னாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே!
இதை என்னை இதுவரை வழிநடத்திய - காப்பாற்றிய இறைவன் செய்வான் என்ற திடமான நம்பிக்கை எனக்கிருக்கிறது.
மற்றவர்மீது கொண்ட அன்புதான் இக்கட்டுரையை எழுத தூண்டுகிறது. காரணம் நாட்டில் எமது மக்கள் படும் மிகமோசமான அவலவாழ்வு என்னை எத்தனையோ கட்டுரைகளை எழுத வைத்தாலும் என்னால் சரீர ரீதியில் அல்லது தூள்தூளாகிப் போயிருக்கும் அம்மக்களின் கனத்த இதயங்களுக்கு சற்று முடிந்த ஆறுதல்வார்த்தைகூறக்கூட அருகிலுள்ளா நிலையில் - விரக்தி நிலையில் இப்போதே நாட்டுக்குத் திரும்பலாமா என்ற உணர்வுடன் எழுதவேண்டிய அவசியம் கருதியே இதைத் தொடர்கின்றேன்.
ஏனென்றால் நான் என் வாழ்க்கையில் எனது 12வயதில் 1977 இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு ஓரிரவு எனது தந்தையாரின் காணி அபிவிருத்தி அலுவலகக் கந்தோரிலும் (அனுராதபுரத்தில்) அதன்பின்னர் 3 நாட்கள் அனுராதபுரம் கச்சேரியில் இருந்த நாட்கள் - 1987இல் இந்திய அமைதி காக்கும்படையுடன் விடுதலைப் புலிகள் யுத்தத்தைப் பிரகடனப்படுத்திய 10.10.1987 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பின்னர் எனது வீட்டுக்கு 17.10.1987 சென்றதும் இந்த ஒரு வாரம் நான் பட்டபாடு மற்றும் அதன்பின்னர் நடந்தவை - அதன்பின் எனது தாயார் மற்றும் தம்பி 1990 - 1995 காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த இச்சம்பவங்களின் அனுபவம் எனக்கு அதிகமுண்டு. இவைபற்றி பின்னர் விலாவாரியாக குறிப்பிடுவேன். அரசியல் என்பது ஒருமிகச் சிறந்த மக்கள் சேவை - பொதுப் பணி என்ற ரீதியில் நான் உதவி செய்வதைப் பற்றி ஏற்கனவே எனது June 12 திகதிப் பதிவில் முதற்பந்தியிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
சிறுவயதிலேயே தமிழின்பால் - சமயத்தின்பால் ஈடுபாடுடைய எனக்கு சில மறக்க முடியாத நினைவுகள் இப்போது என்மனக்கண்முன்னே வந்து உடனேயே பதிவிடு என்று சொல்வதுபோல ஒரு பிரமை தோன்றுவதால் எழுதுவதற்கு முற்படுகிறேன். கால நேரங்கள் முன்னுக்குப் பின் வந்தாலும் நடந்தவைகளை அப்படியே எழுதுவது என் எண்ணம்.
எனது இவ்வலைத்தளத்தின் மூன்றாவது பதிவில் 7.7.2008இல் எழுதிய நன்றே நினைமின் நமன் இல்லை என்பதில் நான் 1985இல் குறிப்பிட்ட எனது உயிர் எனது உடலை விட்டுப்பிரிய முன்னர் இக்கொள்கைகளை ஏற்கக்கூடிய ஒரு மனிதனைக் காண்பேன் - கண்டுகொள்வேன் என்பது எனது திடமான சங்கற்பம் என்பதற்கு அமைய - முகம்கண்டதும் - காணாததுமான நிறைய உற்றஉயிர்நண்பர்களை நான் இந்த கிருத்தியப் பதிவிட்டதன் பிறகு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறேன். நேரடியாகச் சந்திக்காவிட்டாலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் செய்தியிலும் தொடர்பு கொண்டவண்ணம் இருக்கிறேன்.
இப்பதிவை ஏற்படுத்தித் தந்த தம்பி நிர்ஷனை நான் ஒரு போதும் மறக்க முடியாது! அவரது ஒன்றுவிட்ட அண்ணர் சிவா. பாஸ்கரராவ் அவர்கள்தான் நான் கண்ட முதல் என்னைப் போன்ற கொள்கையுடையவர். இரத்தினபுரியில் காவத்தையில் என்னைவிட 5 வயதில் இளையவரான அவரைத் தொடர்பு பட வைத்தவர் அவரது தம்பி சிறீதரராவ். நான் தொடர் சமயச் சொற்பொழிவுக்காக நிர்ஷனின் புதிய மலையகப் பதிவில் இடப்பட்ட கடைசிக்கட்டுரையில் (03.05.2009 அவரால் வீரகேசரியில் எழுதப்பட்டதில்) குறிப்பிட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு 1991 ஜனவரியில் சென்றேன். இந்த தொடர் சொற்பொழிவை ஏற்பாடுசெய்தவர் காலியிலுள்ள சின்னத்தம்பி அண்ணன். காலி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் 1990 சிவராத்திரிக்கு கொழும்பு விவேகானந்தா இந்து இளைஞர் மன்றம் - களுத்துறை இந்து இளைஞர் மன்றப் பிரதிநிதிகளோடு நிகழ்ச்சிகளை நடத்தச் சென்றோம். அந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து நடத்த ஒருசந்தர்ப்பம் எனக்கு அன்று கிடைத்தது. மாணவர்கள் மத்தியில் முதலில் சொற்பொழிவாற்றியபிறகு ஏனைய நிகழ்வுகளுக்குப்பின் வருகைதந்திருந்த மாணவர்களுக்கிடையில் போட்டியொன்றை ஏற்பாடுசெய்திருந்தேன். இவர்களில் மாத்தறையில் இருந்து வந்த 2 மாணவ மாணவியர் முதலிரு பரிசுகளைப் பெற்றார்கள். நானும் ஏதாவது நிகழ்வுகளுக்குப் போவதாயின் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை, திருத்தொண்டர் புராணம், சைவபோதம், ஆறுமுகநாவலர் சைவவினாவிடை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, நன்னெறி, நல்வழி, திருக்குறள் போன்ற நூல்களைக் கொண்டு சென்று வழங்குவது வழக்கம். இந்த நிகழ்வுகள் நடைபெற்றபோதே அருகிலுள்ள காலிச் சிவன்கோவிலிலும் பேச வருமாறு அழைத்து அங்கு சென்றும் சொற்பொழிவாற்றி வந்தேன்.அப்போது தொடர்பை ஏற்படுத்தியவர்தான் சின்னத்தம்பி அண்ணன்.
(இவர் தான் சின்னத்தம்பி அண்ணன் அருகில் அவரது மனைவி) இவர் இரத்தினபுரியிலுள்ள இறக்குவானைப் பகுதியைச் சேர்ந்தவர். என்னுடன் அடிக்கடி தொடர்புகொண்டபோது தமது பகுதிக்கும் வரும்படிஅழைத்தே 1991இல் அங்குள்ள 5அல்லது 6 இடங்களில் எனது தொடர்சொற்பொழிவை நடத்தினேன். இறக்குவானையிலுள்ள தமிழ் மகாவித்தியாலயத்திலும் ஒரு பேச்சை நடத்தினேன். முதலில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் எனது பேச்சு நடைபெற்றது. அதன்பிற்பாடு சிறிய சிறிய கிராமங்களிலும் மாதம்பை எனப்படும் நிர்ஷனின் வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கும் சென்று பேசினேன். ஒரு சிறிய வானில் அம்மன் கோவில் அறங்காவலர் சபைத் தலைவர் வைரவன் Transport உரிமையாளர் அமரராகிய பெருமாள் ஐயா என்னை சில இளைஞர்களுடன் கூட்டிப்போவார். இவர்கள் கொண்டுவரும் மாவிலை தோரணங்களைக் கட்டி கோவில் மணி அடிக்க ஊரார் ஒன்று கூடுவர். ஒலிபெருக்கியைக் கட்டி சில பக்திப் பாடல்கள் போட மக்கள் மேலும் கூடுவர். ஏற்கனவே தோட்ட அதிகாரிகளிடம் இந்நிகழ்வுகளைப்பற்றிச் சொல்வதால் விசேட விடுமுறை வழங்கப்படும். அம்மக்கள் மிகவும் எளிமையான வாழ்வு வாழும் அன்பான இதயம் மிக்கவர்கள். இன்றும் 10அடி 10 அடி(ஒரு குறிப்புக்குச் சொல்கிறேன்) நீள அகலம் கொண்ட லயன்களில் தமது வாழ்க்கையை நடத்துபவர்கள். என்மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர்களில் இவர்களுக்குத் தனியான ஓரிடம் இருக்கிறது. இந்த நிகழ்வுகள் முடிந்த பின்னர் நான் கொழும்புக்குத் திரும்பிய பிறகு எனக்கு சிறீதரராவ் அவர்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தார். தமது பகுதிக்கும் வருமாறு ஒரு கண்டிப்பும் நிறைந்திருந்த அந்தக் கடிதத்துக்குப் பதில் போட்டேன்.
( மீதி பின்னர் பகுதி 2 ஆகத் தொடரும்)
Sunday, June 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment