அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 27, 2009

இன்று ஆனி மகம் - மாணிக்கவாசக சுவாமிகள் குருபூசை!

இன்று காலையில் எனது மனைவி தொலைபேசியில் எமது 8 வருடங்கள் நிறைவடையும் திருமண நாளை நினைவுபடுத்தியதுடன் (நான் பிறந்த நட்சத்திரமும் மகம்) இன்று மாணிக்கவாசகர் குருபூசையையும் நினைவு படுத்தினார். உடனே ஏதாவது எனது பதிவில் இடவேண்டும் என்ற அவாவில் தேடலில் சென்று பிரதியெடுத்து தகவலுக்காகத் தருகிறேன்!

சற்று நேரத்துக்கு முன்னர் எனது தாயார் தொடர்பு கொண்டு இன்று குருபூசையில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்று பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்! அத்துடன் பிரசித்திபெற்ற வழக்கம்பரை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது என்ற தகவலையும் தந்தார். நாடுகடந்த நிலையில் இந் நிகழ்வுகளை இங்கிருந்தபடியே எண்ணியபடி இருக்கும் நிலை எனக்கு!

இன்று மாலையில் மாத இறுதிப் பஜனைக்காக Zürich முருகன் கோவிலுக்குப் போகவேண்டும். மாதாமாதம் வரும் இறுதிச் சனிக்கிழமைகளில் ஐயப்பன் பூசை வெகுவிமரிசையாக இக்கோவிலில் நடைபெறுவதும் இதில் தவறாமல் கலந்துகொள்வதும் எனது வழக்கம்.

நன்றி -http://www.tamilnation.org/sathyam/east/thiruvasagam/tvasagam0.htm

மாணிக்கவாசகரின் திருவாசகம் - ஒரு அறிமுகம் - Dr.S.Jayabarathi for Project Madurai

"திருவாசகம் வேறு, சிவன் வேறு", என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு, பூசையில் வைத்து வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். "திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது பழைய வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், "அழுதால் உன்னைப் பெறலாமே!"
மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். .."
--------------------------------------------------------------------------------

தமிழ் வேதம்

இந்துக்கள் தங்களின் ஆதாரநூல்களாக நான்கு வேதங்களைக்கொள்வார்கள். வேதங்கள் அனைத்துமே வேத மொழியில் அமைந்துள்ளன. இவற்றிற்கு ஈடாகத் தமிழர்கள் தங்களின் தாய்மொழியில் திருமுறைகளையும் திவ்யப்பிரபந்தங்களையும் வைத்திருக்கிறார்கள். இவற்றையே "திராவிடவேதம்" என்றோ "தமிழ்மறைகள்" என்றோ கூறுவார்கள். சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சைவர்கள் சைவத் திருமுறைகளைத்தாம் தமிழ்வேதமெனக் கூறுவர்.

திருமுறை

"திருமுறை" எனப்படுபவை சிவனை வழுத்தும் பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள், தத்துவதரிசனங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள் ஆகும். திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் இருக்கின்றன. இவற்றையே பன்னிரு திருமுறைகள் என்று அழைப்பார்கள். முதல் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் இருக்கின்றன.

மாணிக்கவாசகர்
இறைவனை வழுத்தும் நூல்களில் பக்தனின் ஆன்மீக அனுபவத்தைச் சொற்களாகப் பிழிந்தெடுத்து, கசிந்துருகிப் பேசுபவை உலகில் மிகமிகச்சில நூல்களே உள்ளன. அவ்வாறு காணப்படும் சில நூல்களில் ஒன்றென இடம்பெறும் சிறப்புபெற்றது, திருவாசகம்.

இதைப்பாடியவர் மாணிக்கவாசகர். அவரை மணிவாசகர் என்றும் அழைப்பர். இப்பெயர் இவருக்கு இறைவனால் இடப்பட்டதாகும்.

வரலாறு

இவர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு. சொந்த ஊர், மதுரையின் வடகிழக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் இருக்கும் "தென்பறம்புநாட்டுத் திருவாதவூர்". சம்புபாதாசிருதர், சிவஞானவதி என்பவர்களின் புதல்வர். இவருடைய பெயர் திருவாதவூரார். இதுதான் இவருடைய இயற்பெயரா அல்லது சொந்த ஊரை ஒட்டி ஏற்பட்ட காரணப்பெயரா என்பது தெரியவில்லை.

காலம்

இவருடைய காலத்தைக்கூட அறுதியாகக்கூற இயலவில்லை. அறுபத்துமுன்று நாயன்மார்களின் வரிசையில் இவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் இவர் பாடப்பெறவில்லை. ஆகவே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய சுந்தரருக்குக் காலத்தால் பிற்பட்டவராக இருக்கலாம். நம்பியாண்டார் நம்பியால் வகுக்கப் பட்ட திருமுறை வரிசையில் இவரது நூல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த நம்பியின் காலத்துக்கும் முற்பட்டவர். அரிகேசரி அல்லது அரிமர்த்தனன் என்னும் பாண்டியமன்னனின் காலத்தவர்.

பாண்டிய அமைச்சர்

இவர் இளமையிலேயே ஒரு மாபெரும் மேதையாகத் திகழ்ந்தவர். ஆகவே மதுரைப்பாண்டியமன்னன், இவரை அழைத்துவந்து தன்னுடைய மந்திரியாக வைத்டுக் கொண்டான்.தென்னவன் பிரமராயன் என்னும் உயரிய விருதொன்றைத்தந்து பெருமைப் படுத்தினான்.

ஆன்மீக நாட்டம்

அரசனுக்குக் அமைச்சராக இருந்தாலும் அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். தக்கதொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது.

குதிரைக் கொள்முதல்

ஒரு நாள், தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரžக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் செய்த வாணிபத்தில் அரபு, பாரžகக் குதிரைகள் முதன்மை பெற்றன.

ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த "திருப்பெருந்துறை" என்னும் ஊரை அடைந்தார். அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, "சிவ சிவ" என்ற ஒலி கேட்டது. ஒலியை நோக்கிச் சென்றார்.

தடுத்தாட்கொள்ளல்


அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு "மாணிக்கவாசகன்" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோயிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார்.

வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் செலவிட்டுவிட்டார்.

குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லி யனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.

நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

மாணிக்கவாசகரின் வருத்தத்தைத் தீர்ப்பதற்காக சொக்கேசப்பெருமான், காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் "சொக்கராவுத்தரெ"ன்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரைவணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின.

மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான்.

வைகையில் வெள்ளம்: பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல்

அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அவ்வமயம் பிட்டுவாணிச்சியான வந்தியின் கூலியாளாகத் தானே வந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டு, அந்த அடி எல்லாவுயிர்களின்மேலும் விழுமாறு வழங்கி, தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.

சைவத்தொண்டு

மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் "சிவபுராணம்", "திருச்சதகம்" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரைபுரிந்து திருவண்ணாமலையில் "திருவெம்பாவை", "திருவம்மானை" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார்.

அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, "திருச்சாழல்" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் "அச்சோப்பதிகம்" போன்ற சிலவற்றைப்பாடினார்.

பாவையும் கோவையும்

ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவறை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், "பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்டுக் கொண்டான்.

ஈசன் எழுதிய ஏடு

மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், "இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான்.

வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர்.
அவனே அதற்கு அர்த்தம்

மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, "அந்நூலின் பொருள் இவனே!", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் கலந்து, கரைந்து, மறைந்தார்.

நூற்சிறப்பு- திருவாசகம்

திருவாசகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை; அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் "திருக்கடைக்காப்புப்பகுதியில், "இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து" என்று கையெழுத்திட்டு அருளிய நூல்; அந்நூலின் பொருளைத் தில்லை மூவாயிரவர் கேட்டபோது, நூலின் பொருள், திருச்சிற்றம்பலத்து இறைவனே என்று மாணிக்கவாசகரால் சுட்டிக்காட்டப் பட்ட பெருமையுடைய நூல்.

"திருவாசகம் வேறு, சிவன் வேறு", என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு, பூசையில் வைத்து வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும்.

"திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது பழைய வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், "அழுதால் உன்னைப் பெறலாமே!"

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார்.

இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல்நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை.

இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் தான்.

திருவெம்பாவை:

திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. "தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.

மக்கள்பாடாண்பாடல்(folk-songs):

திருவாசகத்தில் மற்ற பழம்நூல்களில் காணப்படாத ஒரு தனிச்சிறப்பு காணப்படுகிறது. அக்காலத்தில் வழங்கப்பட்ட folk-songs எனப்படும் "மக்கள் பாடாண் பாடல்"களை இறைவனை வழுத்திப் பாடுவதற்காக மாணிக்கவாசகர் பயன்படுத்தி யிருக்கிறார். அந்தப் பாடாண்பாடல் வகைகளில் மாணிக்கவாசகர் தேர்ந்தெடுத்திருப்பது, இளம்பெண்கள், சில விளையாட்டுக்களை விளையாடும்போது பாடும் விளையாட்டுப் பாடல்களைத்தான்.

இளம்பெண்கள் விளையாடிக் கொண்டே இறைவனின் பெருமையைப் பாடுவது; பாடலிலேயே இறைவனைப் பற்றிக் கேள்வி கேட்டு, அதற்குப் பதிலும் இறுப்பது; வஞ்சப் புகழ்ச்சியாகக் கிண்டல் செய்வது; அதற்கும் பாடலிலேயே பதில் அல்லது சமாதானம் தருவது; இவை போன்ற விதத்தில் அப்பாடல்களை மாணிக்கவாசகர் அமைத்துள்ளார்.

உளவியல் அணுகுமுறை:

இவ்வேடிக்கை விளையாட்டுப் பாடல்களில் ஒரு பெரிய மனோதத்துவ அணுகுமுறையே அடங்கியிருக்கிறது.

இளம்பெண்கள் அப்பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு, விளையாடும் போதுகூட பாடிக்கொண்டே விளையாடுகையில், அந்த சமய மரபு, உண்மைகள், கோட்பாடுகள், கதைகள் ஆகியவை அப்பெண்களின் உள்ளங்களில் மிக ஆழமாகப் பதிந்துவிடும். பின்னர் அந்தப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தை நடத்தும்போது அவர்களிடம் ஆழப் பதிந்துள்ள சைவ உணர்வு, ஒவ்வொரு சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் பிரதிபலிக்கும். அது குடும்பத்தில் உள்ள கணவன், பிள்ளைகள், மருமக்கள், வேலையாட்கள் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இச்சிறந்த மனோவியல் அணுகுமுறையை மாணிக்கவாசகர் மிகவும் வெற்றி கரமாகவும் லாகவமாகவும் கையாண்டுள்ளார்.

அவ்வாறு இயற்றிய மகளிர் விளையாட்டுப்பாடல்கள் திருஅம்மானை, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள்நோக்கம், திருப்பொன்னூசல் முதலியவை. திருப்பொற்சுண்ணம் என்பது கோயிலில் சிவபெருமானுக்காகப் பெண்கள் வாசனைப்பொடி இடிக்கும்போது பாடும்பாடல். குயிலையும், தும்பியையும், அன்னையையும் முன்னிலை வைத்துப் பாடுபவை குயில் பத்து, திருக்கோத்தும்பி, அன்னைப்பத்து ஆகியவை.

நால்வகை மார்க்கங்கள்:

சைவ சமயத்தில் இறைவனை நேசிப்பதில் நான்கு வகைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. "சற்புத்திர மார்க்கம் " என்பது இறைவனைத் தந்தையாக நேசிப்பது. "தாசமார்க்கம்" என்பது இறைவனுடைய அடிமையாக இருந்து வழிபடுவது. "சகமார்க்கம்" என்பது இறைவனைத் தோழனாக நேசிப்பது. "நாயகநாயகி மார்க்கம்" என்பது இறைவனையே காதலனாக நேசிப்பது.

நாயகி பாவம்:

இதில் மாணிக்கவாசகர் நாயகி பாவத்தையே தேர்ந்தெடுத்துள்ளார். திருக்கோவையார், திருவெம்பாவை, மகளிர் விளையாட்டுப் பாடல்கள், குயில்பத்து, அன்னைப்பத்து, திருக்கோத்தும்பி முதலிய பல பாடல்களில் இதுவே வெளிப்படும்.

சிவாகம சைவ சித்தாந்த நெறி:

இந்து சமயத்திற்கு வேத நெறி பொது நெறியாக விளங்கினாலும், சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது ஆகம நெறியே. மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் சைவ சித்தாந்தியென்பது புலனாகிறது. சிவபுராணத்தின் திறப்பு அடிகளிலேயே அவர் "கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க," என்று ஆகமத்தைச் சிறப்பித்து விடுகிறார்.

சிவபுராணம்:

சைவ சமயத்து நூல்கள் எத்தனையோ இருந்தாலும்கூட, முழுமுதற்பொருளான சிவனை வழுத்தி, "நமசிவாய வாஅழ்க" என்ற அறைகூவலுடன் ஆரம்பிப்பது, சிவபுராணம் தான். மந்திரங்களின் அடிப்படையாக சைவர்கள் கொள்ளக்கூடிய பஞ்சாக்கர மந்திரமான "நமசிவாய" மந்திரத்துக்கே முதலிடம் கொடுக்கிறா மணிவாசகர்ர். வேதங்களின் நடுநாயகமான யஜுர்வேதத்தின், நடு அனூவாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர சூக்தத்தின், நடுநாயகமாக அமைந்திருக்கும் "நமசிவய" என்னும் மந்திரத்துடன் சிவபுராணம் ஆரம்பிப்பதால் அது ஸ்ரீ ருத்ரத்துக்கு இணையாக ஓதப்படுகிறது.

"என் சிந்தையுள் எப்போதும் சிவன் நிலை பெற்றிருக்கிறான்; அவனுடைய பேரருளினால், அவனை வழுத்தவேண்டும் என்ற உந்துதலும் உணர்வும் ஏற்பட்டது; அதனால் அவனுடைய திருவடிகளை வணங்கி, உள்ளம் மகிழ, இந்த சிவபுராணம் என்னும் பழம்புகழ்ப் பாடலை, முன்வினைகள் அனைத்துமே முற்றிலும் ஒழிந்துபோகுமாறு நான் சொல்லுவேன்", என்று சிவபுராணத்தை எழுத நேரிட்டதைச் சொல்கிறார்.

"சொல்லுவதற்கு எட்டாத சிவபெருமானின் புகழைச்சொல்லி, திருவடியின் கீழே பணிந்து அருளப்பட்டது இப்பாடல்; இதன் பொருளை உணர்ந்து சொல்பவர்கள், சிவபுரம் செல்வார்கள்; சிவபெருமான் திருவடிகளில் வீற்றிருப்பார்கள்; அவர்களைப் பலரும் பணிந்து வணங்குவார்கள்," என்று ஈசனை உணரவேண்டிய ஞானயோகநிலையைக் கூறி, பலனையும் கூறுகிறார்.

பாடலின் சாராம்சம்:

"உலகம் தோன்றி இயங்கும் காரண நாயகனாகிய சிவன், நமசிவாய மந்திரமாக விளங்குகிறான்; என் நெஞ்சத்தாமரையில் நீங்காமல் எழுந்தருளியிருக்கிறான். அவ்வாறு உள்நின்று உதவுவதோடு, வெளியேயும் ஆசிரியத் திருக்கோலம் பூண்டு தடுத்தாட் கொண்டான்; அவன் ஆகமங்களின் பொருளாயும் விளங்குபவன்; புல் முதல் மனிதர் வரையுள்ள உடல்களை உயிர்கள் பெற்றுப் பிறந்து, ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அறிவினால் வளர்ச்சியடைகின்றன; இப்படிப் பல பிறப்புகளிலும் பிறந்துழன்று தூய்மை அடைந்த நல்லுயிர்களுக்கு, இறைவன் திருவடிப்பேறு நல்கி ஆட்கொண்டு அருள்கிறான்; பல வகைப்பட்ட பேதங்களின் காரணத்தால் அவன் அறியப்படமாட்டான்; அப்படிப்பட்ட அந்த பரம்பொருள், உயிர்களின் நலன் கருதி, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களையும் இயற்றுகிறான்; அதன்மூலம் உயிர்களின் அறியாமையை அகற்றித் தூய்மை செய்து, பேரின்பம் தந்து, பிறவியை நீக்குகிறான்; தாயிற் சிறந்த தயாவாகிய தத்துவனாகிய ஈசன், எல்லாமாய் அல்லவுமாய் நிற்கும் இயல்புடையவன்; தில்லைக்கூத்தனும் தென்பாண்டிநாட்டானும் ஆகிய இவ்விறைவனின் திருவடிகளை நெஞ்சம் நெக்குருகிப் பணிந்தேத்திப் பரவிய இத்திருப்பாட்டின் பொருளுணர்ந்து சொல்லும் மெய்யடியார்கள், பலரும் போற்றச் சிவனடிக்கீழ் இருக்கும் பேரானந்தப் பெருவாழ்வைப் பெறுவார்கள்."

கீர்த்தித்திருவகவல்:

இது திருவாசகத்தில் இரண்டாவதாகக் காணப்படும் பாடல். இதற்கு "சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமை" என்றும் பெயர். 146 அடிகளைக்கொண்டது. தில்லை மூதூரில் ஐந்தொழில் திருக்கூத்து இயற்றுகிறான் சிவன்; இவ்வுலகில் உள்ள உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய் அவனுடைய அருட்குணங்கள் விளங்கவேண்டும்; அதற்காக இவ்வுலகில் அன்பிற் சிறந்த அடியார்களுக்காக இறைவன் நிகழ்த்திய அற்புதநிகழ்ச்சிகளாகிய திருவிளையாடல்களைத் திருவகவலில் சிறப்பித்துச் சொல்கிறார்.

திருவண்டப்பகுதி:

இறைவனின் தூலசூக்குமத்தன்மையை இது கூறுகிறது.நம்முடைய சூரிய குடும்பமிருக்கும் பால்வெளி(Milky Way) என்பதை காலக்ஸ’(Galaxy) என்று கூறுவர். இதனை அண்டம் என்று நம் வானியல் அறிஞர் கூறுவர். இதன் குறுக்களவு பல ஒளியாண்டுகள் கொண்ட பார்செக்குகள் தூரம்.இந்த மாதிரி பல கோடி அண்டங்கள் சேர்ந்து ஒரு கூட்டமாக விளங்குகின்றன. அதனை galactic cluster என்று சொல்வர். நாம் சார்ந்திருப்பது local group எனப்படும்.

இவற்றின் அளவு மிகமிகப் பெரிது. இதை நம் முன்னோர்கள் பஹ’ரண்டம், பேரண்டம் என்று அழைத்தனர். இந்த மாதிரி பேரண்டங்களும் பல கோடி உள்ளன. பல கோடி பேரண்டம் கொண்டது பிரம்மாண்டம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ கோடி பிரம்மாண்டங்கள் உள்ளன. "அனேக கோடி பிரம்மாண்ட ஜனனி" என்று அம்பிகையை லலிதா சகஸ்ரநாமம் கூறும். இதுவரை கணக்கிடப்பட்ட galaxies நூறுகோடிக்கும் மேற்பட்டவை என்று radio-astronomy மூலம் கணக்கிட்டிருக்கிறார்கள். வெகுவெகு தொலைவில் உள்ளன! இனி திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில் இதைப்பற்றி என்ன சொல்கிறார் மாணிக்கவாசகர் என்று பார்ப்போம்.

"அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம்
அளப்பருந்தன்மை! வளப்பெரும் காட்சி!
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்,
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன!
இல்நுழை கதிரின் நுண்ணணுப் புரையச்
சிறியனவாகப் பெரியோன் தெரியின்....."

அண்டம் என்னும் பேருலகத் தொகுப்பின் பகுதியுள்ளது; அதன் உருண்டை வடிவின் தன்மை விளக்கமும், அவற்றின் அளக்கமுடியாத தன்மையும், வளமான பெரிய காட்சியும், ஒன்றுக்கொன்று தொடர்ந்து விளங்கும் எழிலும், சொல்லப்போகும்போது அவை அதற்கெல்லாம் அடங்கமாட்டாமல் நூற்றொரு கோடிக்கும் அதிகமாக விரிந்து செல்கின்றன; அவ்வளவு பெரியவை; எண்ணிக்கையற்றவை!

ஆனால் ஆராயும்போது, இவ்வளவு பெரிய அளவும் எண்ணிக்கையும் உடைய இவை அனைத்துமே இறைவனுடன் ஒப்பிடுகையில், மிகச் சிறியனவாகத் தோன்றுகின்றனவே! எவ்வளவு சிறியவை? ஒரு சிறு துவாரத்தின் வழியாக வீட்டுக்குள் நுழையும் சூரியனின் கதிரில் பறந்து மிதந்து தெரியும் நெருங்கிய அணுக்களின் கூட்டத்தைப்போல மிக மிகச் சிறியன!

அந்த அளவிற்கு அவை சிறியனவாகத் தோன்றும் வண்ணம் அவன் அளவில் மிக மிகப் பெரியோன்! பாருங்கள்!
இதெல்லாம் எப்படி மாணிக்கவாசகருக்குத் தெரிந்தது? ஞானதிருஷ்டியா?

போற்றித்திருவகவல்:

இந்நூல் தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. இது அர்ச்சனைப்பாடல் அமைப்பில் வேத மந்திரங்களின் சந்தஸ’ல் உள்ள பாடல். சிவபூஜையின்போது மலர் அர்ச்சனைக்குப் பயன்படும். பெரிய தத்துவங்களை உள்ளடக்கியது: மிக எளிய வாக்கியங்களைக் கொண்டது. பாடலின் ஆரம்பத்தில் செகத்தின் உற்பத்தியும் மனிதனின் உற்பத்தியும் கூறப்படுகின்றன. கருவின் தோற்றம், கருவின் வளர்ச்சி, பிறப்பு, வளர்ச்சி, அதன்போது ஏற்படும் பலவற்றிலிருந்து தப்பிப்பிழைத்து பெரியவராகுதல்; அப்போது வாழ்வில் ஏற்படும் பல ஏற்றத்தாழ்வுகள், துன்பங்கள், குழப்பங்கள், பல அயல் மதங்களின் தாக்கங்கள், உலகமாயை போன்ற அனைத்திலிருந்தும் தப்பி, மற்றோர் தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், இறைவனே குருவடிவாகி வந்து தடுத்தாண்டு கொண்டு, அருளிக் கொண்டு இருக்கும் தாயேயாகி வளர்த்த இறைவனைப் "போற்றி" என்றேத்தி இறைவனின் பெருமைகளையும் பெயர்களையும் ஒவ்வொரு அடியிலும் சொல்லிச் சொல்லி, "போற்றி! போற்றி!" என்று போற்றுகிறார். இந்தப்பாடலில்தான் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்ற அந்த புகழ்மிக்க அடி வருகின்றது.

திருச்சதகம்:

நூறு பாடல்களால் ஆகியது இந்நூல். மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்துமசுத்தி, கைம்மாறு கொடுத்தல், அனுபோகசுத்தி, காருண்யத்திரங்கல், ஆனந்ததழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்த அதீதம் ஆகிய பத்துதலைப்புகளில் ஒவ்வொன்றிலும் பத்துப்பாடல்களைக் கொண்டிருக்கிறது. இது அந்தாதியாக அமைந்திருக்கிறபடியால், இதனை பதிற்றுப்பத்து அந்தாதி என்று கூறுவர்.

முதற்பாட்டு "மெய்தான் அரும்பி", என்று ஆரம்பிக்கிறது. நூறாவது பாட்டு "மெய்யர் மெய்யனே", என்று மெய்யிலேயே முடிகிறது. மாணிக்கவாசகருக்கு இறைவனே குருவடிவாகி வந்து ஞானோபதேசம் தந்த எல்லையற்ற பேரன்பினைப் புலப்படுத்துவது திருச்சதகம். இதன் கண் உள்ள கோட்பாட்டினை பக்தி வைராக்கிய விசித்திரமென்பார்கள். இறைவன்மீதுள்ள பேரன்புக்குக்குறுக்கீடாக உள்ள

பற்றுக்களையெல்லாம் நீக்குவது பக்தி வைராக்கியம். மனோவாக்குகாயத்தால் இறைவனை வழிபாடு செய்யவேண்டும் என்பார்கள். அதைத்தான் திருச்சதகத்தின் முதற்பாடலில் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

பூரணம்:

இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வேதங்கள், திருவாசகம் ஆகியவற்றில் எது சிறப்பு வாய்ந்தது? வேதத்தைப் படிக்கும்போது உணர்ச்சி ஏதும் ஏற்படமாட்டாது; ஆனால் திருவாசகம் படிக்கும்போது கருங்கல் மனமும் கரைந்து உகும்; தொடுமணற் கேணியை விட கண்கள் அதிகமாக நீர் சுரந்து பாய்ச்சும்; மெய்யின் மயிர் சிலிர்க்கும்; உடல்விதிவிதிர்ப்பெய்தி படிப்பவர் அன்பராவார் என்று துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கூறுகிறார்.

"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!"

- வடலூர் ராமலிங்க அடிகளார்

அன்புடன், ஜெயபாரதி

திருவாசகம் - சிவபுராணம்
திருப்பெருந்துறையில் அருளியது


திருச்சிற்றம்பலம்

தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாந்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

1 comment:

GNANAM said...

ஐயா வண்ணக்கம்! தங்களுடைய வலைத்தளம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அதற்கு என்னுடைய நன்றிகள். எனக்கு சிவபுராணம் நமசிவய வாழ்க நாதன் தால் வாழ்க என்ற முழு பாடல் தேவை தங்களுக்கு கிடைத்தால் கொடுக்கவும். gnanaprakasam.ice@rediffmail.com

நன்றியுடன் அ.ப. ஞானப்பிரகாசம்