அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, June 30, 2009

உதயன் பத்திரிகைக்கு மிரட்டல்! - பாதுகாப்புப் படையினரின் காவலுடன் பத்திரிகை விநியோகம்!

நாடுகடந்த நிலையில் நான் விரும்பிப் பார்க்கும் யாழ் உதயன் பத்திரிகையை நேற்றும் இன்றும் பார்க்க முடியாத காரணத்தால் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டேன். BBCயில் அதன் உரிமையானர் திரு. சரவணபவன் அவர்கள் அளித்த பேட்டியைத் தொடர்ந்துதான் எனக்கு முழுவிபரமும் தெரிந்தது!

தகவலுக்காக அவர்களின் அறிக்கையையும் இணைக்கின்றேன்!

யாழ்ப்பாணத்தில் "உதயன்" பத்திரிகையை இயங்க அனுமதிப்பதில்லை என தெரிவித்து, "உதயன்"பணியாளர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரம் ஒன்று "நாட்டைக்காக்கும் தமிழ்க் கூட்டமைப்பு"என்ற அமைப்பின் பெயரினால் யாழ் நகரில் உள்ள சில பத்திரிகை முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

24 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடு ஒன்றுக்கு, யாழ்ப்பாணத்தில் மிக முக்கிய தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கையில், இப்படி அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தேர்தல் சட்டமீறல் நடவடிக்கை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பயங்கரவாதத்தை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசுமுன்னெடுத் திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள சூழலில் நீண்டகாலம் இயங்கும் ஒரு பத்திரிகையை அச்சுறுத்தி சட்டவிரோத நடவடிக்கை மூலம் செயலிழக்கச் செய்யும் எத்தனத்தில் ஈடுபடத்தக்க அளவுக்கு ஒரு கட்டமைப்பு குடாநாட்டில் செயற்படுகின்றதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் பலவும் அதிருப்தியும், விசனமும் தெரிவித்திருக்கின்றன.

இந்த விடயம் குறித்து அரசின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.
பல சர்வதேச நாடுகளின் தூதரகங் களும் இரஜதந்திர மட்டத்தில் இவ்விடயம் குறித்து கேட்டறிந்து விசாரித்து வருகின்றன.

உதயனை முடக்குவதற்கு சில சக்திகள் எடுக்கும் இந்த முயற்சியும் அது தொடர்பான நடவடிக்கைகளும் தமிழர் தாயக பிரதேசங்களை முற்றாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அங்கு சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளதாக அரசுவிடுத்த அறிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் அரசியல் கட்சிகள் விசனம் தெரிவித்திருக்கின்றன.

இந்த அச்சுறுத்தல், பற்றிய தகவல் கிடைத்ததும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்று "உதயன்"அலுவலகத்துக்கு நேரில் விஜயம் செய்தனர். எந்த அசம்பாவிதங்களுக்குத் தாம் இடமளிக்கமாட்டோம் என "உதயன்"நிர்வாகத்திடம் உறுதி தெரிவித்த அவர்கள், இவ்விடயத்தை ஒட்டி அரச உயர் மட்டத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரியப்படுத்தினர்.

No comments: