அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, June 7, 2009

தமிழ் மக்களைத் தண்ணீருக்கும் உணவுக்கும் பிச்சை கேட்குமளவுக்கு சிங்கள இராணுவத்திடம் வரிசையில் நிறுத்திய கொடுமையும் போதும் - TNA MPக்களுக்கு கடிதம்

இந்தக்கடிதத்தை எனது பதிவில் இடவேண்டும் என்று இன்று தோன்றியதால் இடுகையிலிடுகிறேன்.

ஓம்
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை – யோகர் சுவாமிகள்
Thanga Mukunthan
Luzernerstrasse 19,
6415 – Arth,
Switzerland,

Tel - + 41 76 293 62 95
Email – tulfmukunthan@yahoo.com

22.05.2009

கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் பா.உ அவர்களுக்கு
கௌரவ மாவை. சேனாதிராசா பா. உ அவர்களுக்கு
கௌரவ க. துரைரட்ணசிங்கம் பா.உ அவர்களுக்கு

தற்போது உயிருடன் இருக்கும் முன்னைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆகிய உங்கள் மூவருக்கும் முதலில் எனது தாழ்மையான வணக்கம்.

எனது மனிதாபிமான – உரிமையுடனான - தந்தை செல்வாவின் கொள்கையைக் கொண்டவன் என்ற ரீதியில், விடுக்கும் - ஒரு பணிவான வேண்டுகோள்!

தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லி கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அநீதி போதும்.

தந்தை செல்வா ஒருபோதும் ஒரு உயிருக்கும் தீங்கே நினைக்காத - மகாத்மா காந்தியினுடைய அகிம்கையைக் கைக்கொண்டு – அரசாங்கத்தை நம்பாவிடினும் பேச்சுவார்த்தை என்ற போது அதில் உள்ளார்த்த அக்கறையுடன் கலந்து கொண்டவர் - ஆனால் நீங்கள் அந்தக் கொள்கையை உதாசீனப் படுத்தியுள்ளீர்கள். இது தவறு என்று நான் கருதுகிறேன்.

ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லி தமிழ் மக்களை சொந்த இடங்களை விட்டுத் துரத்திய துரோகமும் போதும்.
தமிழ் மக்களைத் தண்ணீருக்கும் உணவுக்கும் பிச்சை கேட்குமளவுக்கு சிங்கள இராணுவத்திடம் வரிசையில் நிறுத்திய கொடுமையும் போதும்.


சிங்கள இராணுவத்தினரின் கொடுமைகளை அறிந்தும் வன்முறைக்குத் துணைபோய் இன்று எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நீங்கள் இருப்பதும் எனக்குத் தெரியும்!

தற்போதைய உங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் குத்துப் பாடுகளும் தெரியும்!
உங்களுக்குள்ளேயே எத்தனைபேருக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்பதும் தெரியும் இந்தியாவை வெறுப்பவர்களையும் தெரியும்.

இன்று இவ்வளவு உயிர்களையும் - அது விடுதலைப் புலிகளாகட்டும் - அப்பாவிப் பொதுமக்களாகட்டும் கொன்று அழித்த பழியில் உங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது - இதை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை – உங்கள் மனச்சாட்சி சொல்லும் என்று நினைக்கின்றேன்.


உங்களுக்கு கடந்த 30.11.2003இல் நடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நான் கத்தியது ஞாபகமிருக்கிறதா?

தந்தை செல்வாவின் அகிம்சைக் கட்சியிலிருந்து கொண்டு விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க முடியாது – கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் எம்மால் ஆதரவு அளிக்க முடியாது – வேண்டுமானால் புலிகளின் பதிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து இவற்றைச் செய்யுங்கள் என்று சொல்லியது!

அன்று எமது கூட்டத்தில் உங்களோடு ஏகப் பிரதிநிதிகள் புலிகளுக்குக் குரல் கொடுத்த ஜோசப் பரராஜசிங்கம் – இரவிராஜ் - சிவமகாராஜா - சந்திரநேரு எவரும் இன்று உயிருடன் இல்லை. இவர்கள் கொல்லப்பட்ட பழியிலும் உங்களுக்குப் பங்குண்டு.

தந்தை செல்வாவின் பெயரை உச்சரிக்க நீங்கள் தகுதியற்றவர்கள். உங்களைப் போன்றோரின் போக்குகளை அறிந்துதான் என்னவோ பெரியவர் தந்தை செல்வா அவர்கள் தீர்க்கதரிசனமாக தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ என்று நான் நினைக்கிறேன்.

தயவுசெய்து மக்களைக் காப்பாற்ற முடியாத நீங்கள் உடனடியாக உங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு பேசாமல் இருங்கள். மக்களைப் பலியாக்காதீர்கள். இதுவே எனது பணிவான வேண்டுகோள்.

முன்பு செயலாளர் நாயகம் திரு. இரா சம்பந்தன் அவர்களுக்கு 3 கடிதங்கள் எனது கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணி) சம்பந்தமாக எழுதியிருந்ததையும் சுட்டிக் காட்டுவதுடன் - இலங்கை அரசுதான் இதுவரை காலமும் ஒப்பந்தங்களை மீறிய நிலையில் நாமும் எனது கட்சியில் 22.10.2001 திகதியட்ட 4 கட்சிகளின் ஊடகங்களுக்கான அறிக்கையை உதாசீனப்படுத்தி – தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் பூதவுடல் எரிந்துமுடிய முன்னரே முகமாலையூடாக வன்னிக்குச் சென்று பாராளுமன்ற அறிவித்தல் பெயர்ப்பட்டியலில் திரு. முத்துலிங்கத்தின் பெயரை புலிகளைக் கொண்டு நீக்கிய துரோகமும் -

திரும்பவும் எமது கட்சியில் ஒருபோதும் ஏற்கப்படாத ஏகப் பிரதிநிதித்துவத்துக்காக தலைவர் திரு. ஆனந்தசங்கரி மீது வீண் பழிசுமத்திய கிழக்கு மாகாணத் தீர்மானங்களும் - யாழ்ப்பாணத்தில் சிலபேர் கலந்து கொண்டமையும்

போன்ற விடயங்களை இப்போது ஞாபகப்படுத்துவதன் காரணம் - துரோகிகளின் பட்டியலில் நீங்களும் உள்ளடக்கப்படுகிறீர்கள் என்பதே!

இறுதியாக எனது 27.11.2003 திகதியிட்ட கடிதத்தின் 4ஆம் பக்கத்தில்

10ஆவதாகக் குறிப்பிட்ட கட்சியின் அங்கத்தவர் பட்டியல் பிறிதொரு அமைப்புக்கு அமைப்பு நிர்வாகச் செயலாளரால் கொடுக்கப்பட்டதை தாங்கள் அறிவீர்களா? என்றும்,

11ஆவதாக 10ஆவது விடயத்தில் குறிப்பிட்டதுபோல மத்தியகுழு உறுப்பினர் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமிடத்து அதற்கான முழப்பொறுப்பையும் தாங்களோ அல்லது அமைப்பு நிர்வாகச் செயலாளரோ ஏற்றுக் கொள்வீர்களா? என்றும்

குறிப்பிட்டதை நினைவுபடுத்தி நான் இன்றும் தந்தை செல்வாவின் அகிம்சையைக் கைக் கொண்டிருப்பதாலேயே 12.06.2006ல் சூடுபட்ட நிலையிலும் உயிருடன் இருப்பதை நினைவுபடுத்தி நான் வணங்கும் தெய்வம் என்னைக் கைவிடவில்லை என்று கூறுவதுடன் - அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்ற பழமொழியை நினைவுபடுத்தி – நீங்கள் மனச்சாட்சியுடன் மக்கள் பணிபுரிய வேண்டும் - அதைச் செய்வீர்கள் என எதிர்பார்த்து இதை முடிக்கிறேன்.

என்றும் தந்தை செல்வாவின் நினைவுகளோடு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினன்
தங்க. முகுந்தன்.

குறிப்பு – செல்வா ஈட்டிய செல்வம் - இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு நூலைப் படிக்கும்போது(முதற் பதிப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி 13.09.1987 – மறுபதிப்பு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை 26.08.2007) திரு. சம்பந்தன் அவர்களை எண்ணி நான் பெருமைப்படுவதுண்டு – அதில் படுகொலை தொடர்கிறது – குண்டு வீச்சு என்ற தலையங்கத்தின் கீழ் இரண்டாவது பந்தியில்

நாம் சந்தித்து உரையாடியபோது திரு. ராஜீவ் காந்தி கேட்டுக்கொண்டபடி மார்ச்மாதம் 5ந்திகதி, 1985 மே 1-ல் இருந்து 1986 பெப்ரவரி 28 வரை தொடர்ச்சியாக எமது மக்கள் மீது சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதல்கள், படுகொலைக்காளான மக்களின் விபரங்கள் ஆகியவற்றைத் தொகுத்து 105 பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கொடுத்தோம். இவ்வறிக்கை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று நிறைவேற்றியவர் திரு. சம்பந்தன் அவர்களே! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு இந்தியப் பிரதிநிதி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டுவதற்கு உதவியாகவே இந்த அறிக்கையைப் பெற்றனர், இந்தியப் பிரதிநிதியும் வெளிப்படையாக இலங்கையின் மீது குற்றஞ் சாட்டிப் பேசினார்.
என்றுள்ளது.

இன்றும் இதையிட்டு ஒரு புறத்தில் பெருமைப்படும் நான் - இன்னொரு புறத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேதனையும் வெட்கமும் அடைகிறேன்.
இன்னுமொரு சம்பவத்தையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் 1997 காலப்பகுதியில் எனக்கு அரசியல் குருவான அமரர் தங்கத்துரை இறந்த(படுகொலை செய்யப்பட்ட) பின்னர் சந்திரிகா அரசினால் முன்வைக்கப் படவிருந்த தீர்வுத்திட்டம் சம்பந்தமாக எமது கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நான் நடந்து கொண்ட விதத்தையும் நீங்கள் அதற்கு ஒத்தப்போன காரணத்தையும் சுட்டிக்காட்டுவது பொருத்தம். மேலதிகமாக விளக்கம் அளிக்கவேண்டிய அவசியமிருக்காது என நினைக்கின்றேன்.

பிரதி – நான் என்னுடைய கட்சியின் தலைவராக இருக்கும் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு இதை அனுப்ப வேண்டும். ஆனாலும் அதற்கு முன்னர் உங்களிடம் (திரு. துரைரட்ணசிங்கம் அவர்களுக்கு தொலைபேசியில்) சொல்லியதற்கு இணங்க அவருக்கு இதை அனுப்பவில்லை. உங்கள் மூவருக்கு மட்டுமே இந்தக் கோரிக்கையை வைக்கின்றேன். உங்கள் பதில் கிடைத்ததும் நான் அவருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன். பத்திரிகையில் வெளிப்படுத்தி எனக்கு நான் விளம்பரம் செய்பவனுமல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் அவலத்தைப் போக்க ஏதாவது உடனடியாகச் செய்யுங்கள். இன்று 22 வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரும் வருகின்றார். எமது மக்களுக்கு முடிந்ததைச் செய்யுங்கள். இதுதான் எனது பணிவான வேண்டுகோள்.

No comments: