அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, June 9, 2009

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை யுனிசெப் 2006 விருது வழங்கிய போது வெளியிட்ட பத்திரிகைச் செய்தி

ஓம்
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை - யோகர் சுவாமிகள்

தங்க. முகுந்தன் (அகில இலங்கை சமாதான நீதிவான்)
Thanga. Mukunthan JP
முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் - த.வி.கூ
Ex.Member, Jaffna Municipal Council – TULF
No. 30/1B, Alwis Place,
Colombo – 3,
14.11.2006.

Tel – 0776-317648
email – tulfmukunthan@yahoo.com

பத்திரிகைச் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அலுவல்களுக்குப் பொறுப்பான அமைப்பு (யுனிசெப்) 2006 ம் ஆண்டுக்கான சகிப்புத்தன்மைக்கும் அஹிம்சைக்குமான மதன்ஜீத்சிங் உயர்விருதை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு எதிர்வரும் 16ஆந்திகதி பாரிஸ் மாநகரில் வழங்கி கொளரவிப்பதையிட்டு நாம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் என்ற வகையில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றோம்.
பதவிக்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை சமாதான இலக்கை குழப்பவும் நாங்கள் விரும்பவில்லை இது கடந்த 21.05.2001ல் வெளியான வீரகேசரி பத்திரிகைச் செய்தி (பக்கம் - 10). இச்செய்தியில் அமைச்சர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு அரசியலில் இருந்திருந்தால் நாங்கள் எப்போதோ எத்தனையோ பதவிகளை வகித்திருப்போம். ஆனால் தந்தை செல்வா போன்ற எமது தலைவர்கள் காட்டியசீரிய இலட்சியப் பாதையில் செல்வதாலேயே பதவி ஆசை அற்றவர்களாக மக்களுக்குச் சேவை செய்து வருகின்றோம் - என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரி யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்ற யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சரோஜினி யோகேஸ்வரனின் மூன்றாவது ஆண்டு நினைவு தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார் என்றுள்ளது.

பொறுமைக்கு அதாவது சகிப்புத் தன்மைக்கு அவருக்கு நிகர் எவருமே இல்லை. தன்னுடன் கூட இருந்த தனது சகபாடிகளாலும், தன்னால் - தனது தலைமையின் கீழ் வழிகாட்டப்பட்டவர்களாலும் நிறையவே துரோகத்துக்கு உள்ளானார். பல தமிழ் ஊடகங்களாலும் விமர்சிக்கப்பட்டார். அப்பட்டமான பொய்களைக் கூறி அவரது அரசியலுக்கு களங்கம் கற்பிக்க படாதபாடுபடுத்தினர்.



சிறுவயதிலே நாம் கற்ற ஒளவையின் ஆத்திசூடியில் அறம்செய விரும்பு ஆறுவது சினம் - கூடிப் பிரியேல் - கொள்ளை விரும்பேல் - சேரிடம் அறிந்து சேர் - நேர் பட ஒழுகு - எனவும், உலக நீதியில் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் - கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம் - சேராத இடந்தனிலே சேர வேண்டாம் எனவும், கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்று திருவள்ளுவர் திருக்குறளின் 260ஆவது பாடலும், கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவமே - தன்னைப் போலச் சகலமும் ஓம்புக விண்ணைப் போல வியாபகமாகுக கண்ணைப் போலக் காக்க அறத்தை என்றும் நற்சிந்தனையில் யாழ்ப்பாணத்து யோகர்சுவாமிகளும், மேலும் கொன்னைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிவெண்பா, நீதிநெறி விளக்கம், அறநெறிச் சாரம் போன்ற நீதி நூல்களில் அகிம்சையை - அன்பை - கொல்லாமை பற்றிக் கூறப்படுகிறது.

இலங்கை அரசு பல ஒப்பந்தங்களை எழுதி அதை நிராகரித்த வரலாறு இருக்கத்தக்கதாக நான்கு தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு எழுதி ஒப்பமிட்ட 2001ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் ஒப்பந்தம் - அதில் ஒப்பமிட்டவர்களாலேயே உதாசீனப்படுத்தப்பட்டது ஒரு வரலாற்றுத் துரோகமாகும். அப்படியான நிலையின் பின் ஒரு சிலருடைய நிர்ப்பந்தத்தினால் எமது த.வி.கூ கட்சியின் கொள்கைக்கு முரணான ஒரு கருத்தை வேண்டுமென்றே திணிப்பதற்கு எமது கட்சிக்கிளைகள் தீர்மானம் எடுத்து அதை நடைமுறைப்படுத்த கூட்டம் கூட்டப்பட்டு அதன்பின் நடைபெற்ற விடயங்கள் பிரச்சனைகள் அனைத்தும் பகிரங்கமாக அரங்கேறியது தெரிந்ததே.

இதற்கு முன்னரே பல நியாயமற்ற நடவடிக்கைகள் பலரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக

1. 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் உயர்திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு உறுப்பினராக பதிவியேற்க இலங்கைக்கு வர முன்னரே (அதிகூடிய காலம் பாராளுமன்ற உறுப்பினர்களாயிருந்த திரு. மு. சிவசிதம்பரம் அவர்களும், திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களும் இருக்கத்தக்கதாக) அவசரமாகக்கூடி புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற தலைப்பில் பேச எழுந்து தம்மை அறிமுகம் செய்துகொண்டபின்னர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்த மறைந்த எமது கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் திடீரென பாராளுமன்றக் குழுத் தலைவராக திரு. இரா. சம்பந்தன் அவர்களை பிரேரித்தபோது எவருமே எந்த மாற்றுக் கருத்தையும் தெரிவிக்காதமையால், அன்று அமைதியாக இருந்த திரு. ஆனந்தசங்கரி அவர்களுடைய சகிப்புத்தன்மையை,

2. 2001ல் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 2002 அமர்வுக் கூட்டத்தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது அதை தடுத்தமையை குறித்து எதுவும் தெரிவிக்காது அமைதி காத்தமையை,

3. பாங்கொக் சமாதான முதற்கட்ட பேச்சுக்கள் முடிந்த பின்னர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வெறும் எடுபிடிகளாக விமர்சித்தபொழுது,

4. திருத்தியமைக்கப்பட்ட யாழ் பொது நூலகத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏகோபித்து அவரைக்கொண்டு திறந்துவைக்க இருந்த சமயத்தில் அதை தடுத்து நிறுத்தியதை,

நாம் மறந்திருந்தாலும் அல்லத எம்மவர்கள் சிலர் இவற்றால் ஒருபுறம் குதூகலித்திருந்தாலும்,

நீதி உண்மை தருமம் என்பது தனது நிலையில் காலம் கடந்து ஒரு கௌரவத்தை அளிக்க முன்வந்திருக்கிறது.

கட்சிக்குள் நடந்த பல விடயங்கள் அம்பலத்துக்கு வராதபோதும் காலத்தின் தேவை கருதி சிலவிடயங்களை இன்று நான் கூறியாக வேண்டிய நிலையில் உள்ளேன். உயர்திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் மரணத்திற்குக் காரணம் - அவரை கூட்டமைப்பு உறுப்பினர்கள் முக்கியமாக கூட்டணி உறுப்பினர்கள் (திரு. ஆனந்தசங்கரி தவிர) - உதாசீனப் படுத்தியமையே! தள்ளாத நிலையில் பாராளுமன்றம் செல்ல கொழும்பு வந்து தங்கியிருந்த அவருக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பில் அல்லது வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் உரிய இடம் வழங்கப் படவில்லை - ஒரு சில அரசியல் ராஜதந்திரிகள் அவரது ஆற்றல், அனுபவம் காரணமாக அவரது இல்லம்தேடிவந்து சந்தித்துச் சென்றனர் - மனவேதனைக்கு இதுவும் ஒரு காரணம்.

மற்றயது தானில்லாத வேளைகளில் சங்கரி தனித்து விடுவார் என்று தீர்க்கதரிசனமாகவே எண்ணி இக்கருத்தை தன்னுடன் கூட இருந்தவர்களுக்கு (எமக்கும் எமது கட்சியின் உண்மையான விசுவாசிகளுக்கும்) அடிக்கடி கூறிவந்தார். சில வேளைகளில் தன்னை பாராளுமன்றக் குழுத் தலைவராக நியமிப்பார்கள் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம். இவை அவருக்கு மனவேதனையை உண்டுபண்ணியிருக்கலாம்.

ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணி 1994ல் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய சமயம் அன்று பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டிய தருணத்தில் திரு. அ. தங்கத்துரை அவர்களை அவமானம் செய்த நிகழ்வும் நியாயமற்று நடந்தவை.

மறைந்த தலைவர்களைப் பற்றி அபாண்டமாக பழி போடுகின்றேன் என்று யாரும் கருதினால், அன்று கூட இருந்த கலாநிதி நீலன் இல்லை. திரு. தங்கத்துரை இல்லை. ஆனால் திருவாளர்கள் சம்பந்தன், சேனாதிராசா அவர்களையும், ஏனைய முன்னாள் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விசாரித்தால் உண்மை தெரியும். ஆனால் அவர்களும் உண்மையைக் கூறுவார்களோ தெரியாது - நானறியேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியில் இருந்த எவரும் பெறாத இந்த உலக அங்கீகாரத்தை உயர்திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் பெறுவதற்கு அவரது துணிச்சலும் ஒரு முக்கியமான காரணம். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல பல வெளி மாவட்டங்களில் எம்மவர்களாலேயே எம்மவர்கள் கொல்லப்பட்ட வேளைகளில் துணிந்து எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களது இறுதி நிகழ்வில் பங்குகொண்ட பெருமையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நானறிந்த வரையில் அமரர்கள் அ.அமிர்தலிங்கம், வெ.யோகேஸ்வரன், அ.தங்கத்துரை, சரோஜினி யோகேஸ்வரன், சி. நமசிவாயம், பொன் சிவபாலன், கலாநிதி நீலன் திருச்செல்வம், பொன் மதிமுகராசா, நிமலன் சௌந்தரநாயகம் ஆகியோரது இறுதி நிகழ்வில் தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி அக்கறைப்படாது கலந்து கொண்டார்.

மஹாத்மா காந்தி கூறிய

1. ஒழுக்கமில்லாத அறிவாற்றல்(கல்வி)

2. மனிதாபிமானமில்லாத அறிpவியல்

3. உழைப்பில்லாத செல்வம்

4. நேர்மையில்லாத வணிகம்

5. கொள்கையில்லாத அரசியல்

6. மனச்சாட்சியில்லாத இன்பம்

7. தியாகமில்லாத வழிபாடு

என்ற ஏழு சமூகக் கேடுகளில் கொள்கைப்பற்றுடன் வாழ்ந்தமைக்கு இந்த விருது வழங்கப்படுகிறதாக நாம் கணிக்கலாம். இன்று அவரது இந்த விருதை விமர்சிக்கும் எம்மவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். கொல்லும் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழங்கும் மாமனிதர் பட்டத்தை விட - பயங்கரவாதம் எந்த உருவத்தில் வெளிப்பட்டாலும் அறவே எதிர்த்து தடுக்க வேண்டும் என உலக அரங்கில் பொதுப் பணி அதுவும் மனிதாபிமானப் பணி புரியும் ஒரு உயர் நிறுவனம் வழங்கும் போது சத்தியம், அஹிம்சை, பொறுமைக்காக அவர் அந்த விருதைப் பெறுவதற்கு உரித்துடையவராகிறார். விமர்சிப்பவர்கள் புரிய வேண்டும் அவர் இதை கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் எப்போது ஐக்கிய நாடுகள் சபை அழைத்து செல்லாமல் இருந்தாரோ அன்றைய சம்பவத்தால் - அவர்கள் இவரை அவதானித்தார்கள் - அதனால் அளிக்கிறார்கள் உயரிய அதிவிருது. இதையும் குறை சொல்பவர்கள் மனிதர்கள் அல்ல.

இன்று இந்த விருதைப் பெறும் உயர்திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து - நிறைவான(முழுமையான) அரசியல் பணியை ஆற்ற எல்லாம்வல்ல இறைவன் கிருபை செய்ய வேண்டும் எனப் பிரார்த்தித்து அவரை வயதில் குறைந்தவனாயிருந்தாலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டவன் என்ற வகையில் - மனதார வாழ்த்தி மகிழ்வெய்துகின்றேன். இந்த நாளுக்காக என்னை உயிர்வாழ வைத்த ஆண்டவனையும் உள்ளமுருக நன்றியோடு துதிக்கின்றேன்.

என்றும் காந்தீயவழியிலுள்ள,

தங்க. முகுந்தன்.

1 comment:

Unknown said...

அன்புடன் முகுந்தனுக்கு,

சுயசரிதை வாசித்தேன், ஏற்கனவே தெரிந்தவை தான், ஆயுத கலாசாரத்தால் இன்று துயரம் தோய்ந்த வாழ்வே மக்களுக்குச் சொந்தமாகி விட்டது.

சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம் என்பதற்கிணங்க உயிர் இருந்தால் எப்போதும் சந்திக்கலாம், நிறையவே பேச வேண்டியுள்ளது.