அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, June 16, 2009

நியாயமான ரீதியில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டுமானால் முஸ்லீம்களை முதலில் குடியமர்த்துவதே - முதற்பணி!

நியாயமான ரீதியில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டிய கட்டாயக் கடமை இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லீம்களை குடியமர்த்துவதே! அதன்பின்னரே ஏனைய மீள்குடியேற்றங்கள்! யார் இதனை ஏற்கப் போகின்றார்கள்?

நான் நியாயமாகச் சிந்திப்பவன். எமது கட்சியின் பெருந்தலைவர் அமரர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்திலும்சரி - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டிலும் சரி சொன்ன வாக்கிறகு அமையவே எனது இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன். 1990களில் துரத்தப்பட்ட யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான முஸ்லிம் அப்பாவிப் பொதுமக்களையும் ஏனைய வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களையும் மீளக் குடியமர்த்துவதன் மூலமே தமிழினத்திற்கு ஏற்பட்ட பாவமும் பழியும் நீங்கும் - அதன் பின்னரே ஏகப் பிரதிநிதிகளின் குடிமக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இதனை நான் பல நாட்களாகவே தெரிவித்துவருகின்றேன். தெரிந்தோ தெரியாமலோ – விரும்பியோ விரும்பாமலோ நாம் இத்தனை நாட்களாகச் செய்த பாவத்தின் சுமைகளை பூரணமாகத் துடைத்தெறிய வேண்டுமாயிருந்தால் இந்த நியாயமான கோரிக்கையைச் செயற்படுத்துவதன் மூலம்தான் ஒரு இயல்பான சு10ழலை உருவாக்கமுடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்பெற்றவுடனேயே திரு. இமாம் அவர்களுக்கும் இதுபற்றிய ஒரு கடிதத்தை நான் எழுதியிருந்ததையும் அவருடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியவன் என்ற வகையிலும் இதைத் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது.

காத்தான்குடியில் தொழுகையிலிருந்தபோதும் - மக்காவிலிருந்து திரும்பிவந்த யாத்திரிகள் மீதும் தாக்கதல்களை மேற்கொண்டு கொன்றொழித்தமையை நான் வன்மையாகக் கண்டித்து வெளியிட்ட பத்திரிகைச் செய்திகளை ஏனோ நம்தமிழ்ப் பத்திரிகைகள் பிரசுரிக்காமல் மறைத்தன. காலத்தின் தேவைகருதி எனது பதிவிலுள்ள அவற்றை மீண்டும் இப்பதிவில் சேர்க்க விரும்புகிறேன். ஒருசில கட்டுரையாளர்கள் இன்று வீணான குற்றச் சாட்டுக்களை அப்பாவித் தமிழ்மக்கள்மீது சுமத்துவது அநாகரீகமான செயலாகும். தமிழ் மக்கள் சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில்தான் இப்போதும் இருக்கிறார்கள். அரச அச்சுறுத்தல்கள் ஒருபுறம் - ஆயுதம் தரித்த நம்மவர்களின் கெடுபிடிகள் மறுபுறமென அவர்களின் நிலை மத்தளத்தின் நிலையைவிட மோசமானது. மத்தளமாவது இருபக்கம் தான் தட்டமுடியும். ஆனால் தமிழ்மக்கள் மீது பலமுனைகளில் தட்டுதல்கள் - குட்டுதல்கள் - சுரண்டுதல்கள் போன்ற பலவகையான கொடுமைகள் இன்றும் சு10ழ்ந்துள்ள நிலையில் - அவர்களால் பேசக் கூடத் திராணியற்ற நிலையில் தம்மை முதலில் ஆசுவாசப் படுத்திய பின்னர் அவர்கள் தம் நிலை குறித்து விளக்கமளிப்பார்கள் என்ற நம்பிக்கை – அவர்களில் ஒருவன் என்ற நிலையில் இருக்கும் என்னால் திடமாக குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

குட்டக்குட்ட குனிகிறவனும் மடையன் - குட்டுகிறவனும் மடையன் என்ற பழமொழியை நினைவுபடுத்தி இக்குறிப்பை முடிக்கின்றேன்.

-------------

கலியுகத்தில் அன்பும் சமாதானமும் நிலைக்குமா?

கலியுகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா? என்ற வினா இன்று அனைவரது சிந்தனையிலும் உதிக்கும் ஒரு எண்ணமாக இருப்பினும் - சாத்தியப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டள்ளது.

எதிரில் வருபவனைச் சந்தேகிக்கும் இன்றைய சூழ்நிலையில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் சமாதானத்தை விரும்புபவர்களா? என்றால் அதற்கு சரியான விடை பெற முடியாது. காரணம் விலங்கினத்தைக் காட்டிலும் மனிதன் கீழ்நிலையில் இருப்பதே.

கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் சரி, இலங்கையில் சரி, பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டு வருவதை நாம் காணத் தக்கதாக இருக்கிறது. ஒன்றுபட்டிருந்த சமூகங்கள் பிளவுபடுகின்றன. சாதாரண குடிசையிலிருந்து வளர்ந்த நாடுகள் வரை உலகம் முழுவதும் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் சுதந்திரமடைந்த பின்னர் தமிழர் சிங்களவர் பிரச்சனைதான் தோன்றியது. அதன் பின்னர் இன்று தமிழர்கள் ஒற்றமையின்றி - முஸ்லிம்கள் - யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டக்களப்புத் தமிழர்கள் மலைநாட்டுத் தமிழர்கள் என்று பலவகையில் பிரிந்து பட்டு நிற்கிறார்கள்.

அரசியல் நெறி மிகவும் புனிதமான மக்கள் சேவை என்பதை மகாத்மா காந்தி காட்டியுள்ளார். எனினும் எமது நாட்டில் பெரும்பான்மை அரசியற்கட்சிகளின் குறுகிய எண்ணமும் மக்களை சமநோக்காக எண்ணாது விட்ட செயலும் இன்று இந்நாட்டில் பூதாகரமாக வளர்ந்துவிட்ட பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணமெனலாம். ஒன்றுபட்டிருந்த தமிழர்களும் முஸ்லிம்களும் இன்ற தனித்து இயங்க விரும்புவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையின் பின் மலையகத் தமிழர்கள் - வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் விரிசல் காணப்படுகிறது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது சொத்துக்களனைத்தையும் விட்டுவிட்டு அகதிகளாக நாட்டின் இதரபிரதேசங்களில் மிகவும் மோசமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆணவம் இவ்வனைத்துக்கும் காரணம் என்றால் பிழையில்லை. படித்துப் பட்டம் பெற்று வசதிபடைத்த தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்கள் அன்று தோட்டக்காட்டான் கள்ளத்தோணி மோட்டுச் சிங்களவன் என்றெல்லாம் பேசி ஏளனம் செய்ததை மறந்தவிடக் கூடாது.

தன் வினை தன்னைச் சுடும் என்ற பட்டினத்தாரின் வாக்குப் பொய்த்தாவிடும்? பூமியிலிருந்து மேலே எறியும் பந்து எப்படி மீண்டும் தரையை அடைகிறதோ அதேபோல வசைபாடி மற்றவர் மனதைப் புண்படுத்தியவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

குறிப்பாக 1983ம் ஆண்டுக்குப் பின்னர் தலைதூக்கத் தொடங்கிய தமிழர் இயக்கங்கள் ஒற்றுமையின்மையை மேலும் வலுப்படுத்த ஏதுவாக அமைந்தன. ஒன்று பிரிந்து இரண்டாகி அது மூன்றாகி பின் அவை தமக்குள் பலவாகி எண்ணற்றவையாக இருக்கின்றன.

உயிர்களைப் படைத்தவனிருக்கத் தக்கதாக பறிப்பதற்குப் பலர் போராடுகின்றார்கள். சிங்கள அரசாங்கத்தின் படைகளாக இருந்தாலும் சரி, தமிழ் இயக்கங்களாக இருந்தாலும் சரி அனைத்துமே தர்மத்தை நீதியை அன்பை சமாதானத்தை இல்லாமல் செய்தன. கௌதம புத்தரின் அகிம்சையைக் கைக்கொள்ள வேண்டிய அரசு அப்பாவி மக்களை அழித்து அவர்களின் உடைமைகளை நாசப்படுத்தியது. அன்பை அடிப்படையாகக் கொண்ட சமயங்களின் போதனை முறைகளை மீறி அனைவருமே பாவச்செயல்களைப் புரிந்தது ஒன்றே இன்று இந்நாட்டில் அப்பாவித் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கொல்லப்பட ஏதுவாக அமைந்தன.

இவை நிறுத்தப்பட்டு சமாதான எண்ணமும் அன்பும் ஒற்றுமையும் கொண்ட ஒரு சமூகத்தை எவ்வாறு தோற்றுவிக்கலாம் என்ற முயற்சியை நாம் அனைவரும் எமது குறிக்கோளாக எடுத்து தன்னலமற்றுப் பணிபுரிந்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும்.

இதைத்தான் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் தமது நற்சிந்தனைப் பாடல்களில் தெரிவித்துள்ளார்.

தன்னைப் போல சகலமும் ஓம்புக
விண்ணைப் பொல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை என்று கூறுகிறார்.

இதனையே கவியோகி சுத்தானந்த பாரதியாரும்

தான் தான் திருந்தச் சமூகந் திருந்தும்
மாந்தரைத் திருத்துமுன் மனதைத் திருத்து எனவும்

உலகைப் படைத்தோன் உலகைத் திருத்துவான்
பலவாறுன்னைப் பார்த்துத் திருத்து எனவும் செப்பியுள்ளார்.

ஆன்றோர் எமக்கருளிய நெறி – மிகமிகப் பயனுள்ளது. ஆணவச் செருக்கால் அழிந்து கொண்டு இருக்கிறோம்.

உண்மை அன்பால் உலகை வென்று ஒற்றுமை ஏற்பட உறுதி கொள்வோம்.

மூளாய் முகுந்தன்.

----------

பௌத்த தர்மம் என்ன சொல்கிறது? அல்லது மனிதாபிமானம் எங்கே?

(இக்கட்டுரை பத்திரிகைச் செய்தியாக 01.08.1990ல் எழுதப்பட்டது. 18 வருடங்களின் பின்னும் இன்று நடக்கும் பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும் - யாரும் அப்பாவிப் பொதுமக்களைப் பற்றியோ அல்லது அவர்களது உடைமைகளைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரியவில்லை.)

பௌத்த சமயம் புத்தபெருமான் என்று மார்தட்டும் எமது இலங்கை அரசுக்கு இந்திய துணைப்பிரதமர் அவர்கள் பௌத்த தர்மத்தை – தத்துவத்தை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து இலங்தையைப் பிறப்பிடமாகவும் தாய்நாடாகவும் கொண்ட நாம் வெட்கமடைகின்றோம். பிணி - மூப்பு - சாக்காடு என்ற 3 காரணங்களினால் தனது அரண்மனை வாழ்க்கையையும் இல்லறத்தையும் துறந்து அன்பையும் தருமத்தையும் அகிம்சையையும் போதித்தார்.
எமது நாட்டில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பிரச்சனை சிறிய அளவில் உருவாக்கப்பட்டு தற்போது பூதாகரமான நிலையில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியதோடு தொடர்ந்தும் அழிவுகளைக் கண்டும் காணாததுபோல இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக இச்செய்தியைத் தெரிவிக்கினறோம்.
இம்சையைக் கண்டும் அதை எதிர்க்க முடியாதிருக்கும் மனித சமூகத்தின் மத்தியில் எத்தனை சமூக சமய அமைப்புக்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் பொது அமைப்பாக இருப்பதன் காரணத்தை நாம் வினவுகின்றோம்.
சமயங்கள் யாவும் உயிர்களிடத்தில் அன்பை வளர்க்கும் பொருட்டே அடிப்படையில் போதனை செய்கின்றன. அகிம்சைக்கு உதாரணபுருஷராகிய அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை நாம் உற்று நோக்க வேண்டும். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடிய அம் மகாத்மாவை எப்பொழுது ஒரு இந்து சுட்டுக்கொலை செய்தானோ அன்றே இந்துக்களுக்கான பழி ஏற்பட்டு எமது நாட்டிலும் அது தொடர வழிவகை செய்கின்றது. தமிழ் முஸ்லீம்களுக்கிடையே ஒற்றுமை நிலவிய எமது தேசத்தில் இன்று இந்த உறவு கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் போராளி இயக்கங்கள் செய்த மனிதாபிமானமற்ற கொலைகளே. எந்த உயிரையும் கொலை செய்வதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை.
எமது நாட்டில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து நாம் உள்ளுக்குள்ளே குமுறியபடி இருந்தோம். இன்று பொறுத்திருக்க முடியாது எமது எதிர்ப்பைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
1949ம் ஆண்டு மலையக மக்களுடைய குடியுரிமை பறித்தமை 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தமை அதனைத்தொடர்ந்து வந்த சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப்போராட்டம் 1972ல் தரப்படுத்தல் போன்றவை ஆட்சியாளர்களின் தவறான சிந்தனையாலும் போக்காலும் ஏற்படுத்தப்பட்டது எனலாம்.
இவை அனைத்தும் ஒருவகையில் இனப்பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாக அமையும். 1977ன் பின் நாடளாவிய ரீதியில் இனப்பிரச்சனை ஆரம்பமாகியது. ஏராளமான மக்கள் குறிப்பாக தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். உயிருடன் எரிக்கப்பட்டார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள்.
1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூல்நிலையம் ஏராளமான கடைகள் வீடுகள் போன்றவை அரச படைகளின் உதவியோடு காட்டுமிராண்டித்தனமானவர்களால் எரிக்கப்பட்டன. கொலைகளும் கொள்ளைகளும் தாராளமாக இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் முதன்முதல் பாரிய அளவில் அரச படைகளால் தாக்கப்பட்டதைத்தொடர்ந்து மீண்டும் இன்றுவரை தொடர்ச்சியாக அரச படைகளினாலும் 1985க்குப் பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்களினாலும் மக்கள் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வந்தார்கள். வருகிறார்கள்.
ஒன்றுபட்டிருந்த சமூகம் இன்று சின்னாபின்னமாகி ஒற்றுமையின்றி அல்லல்படுவதை எண்ணி ஏங்குவதைத்தவிர ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாமிருக்கின்றோம்.
1983, 1984ம் ஆண்டுகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களை வன்மையாகத் தாக்கித் திரிந்தவர்கள் இன்றுவரை பேசிய பேச்சுவார்த்தைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கள் மத்தியில் எத்தனை கட்சிகள் இயக்கங்கள் இன்று இருந்தும் மக்களைக் காக்க எவரும் யுத்தத்தை நிறுத்தும்படி கேட்கவில்லை. தாம் தாம் சுயலாபம் தேடுவதிலேயே காலத்தை ஓட்டுகின்றார்கள்.
யுத்தம் நடைபெறும்பொழுது எத்தனையோ விதிமுறைகள் இருந்தும் அனைத்தையும் மீறிய நிலையில் சண்டை புரிகின்றார்கள். கண்டது உயிரழிவும் உடமை இழப்புக்களுமே அன்றி வேறெதுவும் இல்லை. தாம்தாம் சண்டை செய்தாலும் பரவாயில்லை. அப்பாவிப் பொதுமக்கள் பெரியோர் மதகுருமார்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் கொல்லப்படுவது வேதனைக்குரியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுமாகும்.

தமிழர்களை அரசபடைகள் வல்வெட்டித்துறை அரியாலை குமுதினிப்படகு போன்றவற்றில் கொலை செய்தபோதும் வெலிக்கடைச் சிறைகளில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டபோதும் இவற்றால் கொதித்தெழுந்த எமது உணர்வுகள் இன்று எம்மவர்களாலேயே நடைபெறும் கொலைகளின்போது மௌனமாக்கப்படுவதுகண்டு வேதனையும் வெட்கமும் அடைகின்றோம். காரணம் எம்மிடையே காணப்படும் சுயநலம்.
அப்பாவி முஸ்லிம் மக்கள் தமிழர் போராட்டங்களில் முழுமூச்சாக ஈடுபட்டவர்கள் இன்று யாத்திரை சென்று மீண்டபோது அவர்களில் சிலரும், அவர்களுடைய உறவினர்களும் கொடுமையான முறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டமை குறித்து நாம் எமது பூரணமான கடும் எதிர்ப்பை இன்று தெரிவிக்கின்றோம். சிங்களப் பொதுமக்களைக் கொலை செய்தமை யுத்தம் செய்ய முடியாத பலவீனத்தையே காட்டுகிறது. இதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
1974ல் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வருகைதந்தவர்களில் இன்று இலங்கைக்கு விஜயம் செய்த தமிழறிஞர் பெரும்புலவர் பேராசிரியர் டாக்டர் சீ. நயினா முகம்மது அவர்களையும் வேறு சில சிங்கள அறிஞர்களையும் இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட ஆவலாயுள்ளோம். காரணம் இன்று பிடித்த முயலுக்கு மூன்று கால் எனப்பேசும் சிலர் - வரலாறு தெரியாதவர்கள் - அறிய வேண்டும் என்பதற்காக. 10ம் திகதி ஜனவரி மாதம் 1974ம் ஆண்டு யாழ் முற்ற வெளிமைதானத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் நயினா முகம்மது அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஏற்பட்ட குழப்பத்தில் 9 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதையும் அன்று இச்செயலை மேற்கொண்ட அரச படையின் அட்டூழியத்தையும் கண்ணால் கண்ட ஒரு சாட்சியாக இருக்கும் பேராசிரியரின் இன்றைய வருகையின்போது அன்று ஒன்றுபட்டிருந்து தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையையும் இன்றைய பதட்டநிலையையும் எண்ணி நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அன்று மாநாட்டிற்கு வருவதை எதிர்த்த சிங்கள அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கள அறிஞர்களும் ஒரு சிலர் வந்து கலந்து கொண்டதையும் பலர் அறியமாட்டார்கள். இவை எமக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். குறிப்பாக 1987ல் பௌத்த சமயத் தலைவர்களுடன் யாழ் விஜயம் செய்த அமரர் விஜயகுமாரணதுங்க அவர்களுடன் விடுதலைப் புலிகள் நடந்துகொண்ட விதங்கள் இவற்றை நாம் பார்க்கும்பொழுது சந்தர்ப்பவாதம் எனப்படும் பதத்தை இவர்களுக்கும் வழங்கலாம் என்றே நாம் கருத இடமுண்டு.
சகலமக்களும் இன்றைய இக்கால கட்டத்தை மிகவும் நிதானமாக அவதானித்து உற்றுநோக்குவதோடு முன்னைய வரலாறுகளையும் அறிந்து ஒப்பிட்டு மதிப்பீடு செய்யவேண்டும்.
அரசாங்கங்களைப் பொறுத்தவரை இன்று ஜனாதிபதியின் கருத்துப்படி 2000ம் ஆண்டுகளின் பின்னரும் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் எனக்கூறியுள்ளார். யூஎன்பி அரசாங்கத்தினால் கடந்த 13 வருடங்கள் அல்லல்பட்ட வாழ்க்கை மேற்கொண்ட அரசின் நடவடிக்கைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய இனப்பிரச்சனையை அன்றே பண்டா செல்வா ஒப்பந்தம் மூலம் தீர்க்க முன்வந்தபோது இதே யுஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐனாதிபதி திரு. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு பண்டாரநாயக்கா இலங்கையைப் பிரித்துக் கொடுத்துவிட்டார் என்றுகூறி கண்டிக்குப் பாதயாத்திரை செய்ததையும் நினைவுபடுத்த வேண்டும்.
இன்று இதே அரசு இளைஞர்களின் விரக்தி நிலைகுறித்து ஆராய ஒரு விசேட ஆணைக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரும் தற்போதைய யுத்தத்தைத் தீவிரப்படுத்துவது ஏன் என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
எமது முக்கியமான பணிவான வேண்டுகோள் சண்டை நிறுத்தப்படவேண்டும். மக்கள் கொல்லப்படுவதும் உடமைகள் அழிக்கப்படுவதும் நிறுத்தப்படவேண்டும்.
வறுமையால் பட்டினியால் வாடும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அழிக்கப்பட்ட உடமைகளின் பெறுமானத்திற்கு அமைய நிவாரணம் வழங்கப்படவேண்டும். காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். மரணமடைந்தவர்களின் விபரங்களை உடனடியாக அவரவர் குடும்பத்தினருக்கு அல்லது உறவினருக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேற்தரப்பட்ட செய்தியை மனிதாபிமானம் கொண்ட முறையிலும் சகல சமூகங்களையும் சேர்ந்தவர்களோடு இனஒற்றுமை இன்றைய அரசியல் நிலைப்பாடு என்பன பற்றிய கருத்தரங்குகளில் பலரது அபிப்பிராயத்தையும் அறிந்தவர்கள் என்ற முறையிலும் வெளியிடுவதில் ஓரளவு அமைதி அடைகின்றோம்.
வணக்கம்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கான இளைஞர்குழு உறுப்பினரும்
இந்து சமய ஒற்றுமைப்பேரவை அமைப்பாளரும்

-----
07.08.1990

கடந்த சில நாட்களாக அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக சிங்கள-முஸ்லீம் இன மக்கள் மிகவும் மோசமான முறையில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டமை குறித்த மிகவும் வேதனை அடைகின்றோம். எந்தத்தவறை அரச சிங்களப் படைகள் அன்று தமிழினத்திற்கு செய்தனவோ அதே செயலை மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், விடுதலைக்காக போராடும் வீரர்கள் என்றும், தமிழர்கள்;தான் புலிகள் - புலிகள் தான் தமிழர்கள் என்று தம்மை தாமே கூறிடும் புலிகள் இன்று இப்படி கீழ்த்தரமாகச் செய்வதன் காரணம் ஏன் எனத்தெரியவில்லை.
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டங்களில் கூடிய பங்கேற்ற முஸ்லீம் மக்களின் உயிர்களைப்பறிக்க கங்கணம் கட்டிய புலிகளுக்கு விடுதலைவரலாறு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வரலாறு தெரிந்த அறிஞர்கள் பலர் முஸ்லீம் மக்களாக இருப்பதும், இன்றும் இவர்கள் இப்படியான குரோத மனப்பாங்கை வளர்த்தாலும், தமிழ் மக்களோடு கூடியே வாழவேண்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லீம் சகோதரர்களையும் எம்மால் பகைத்துக் கொள்ளமுடியாது. அந்த எண்ணமும் எம்மத்தியில் எழாது. ஒற்றுமையே பலம் என்று இளவயதில் நாம் படித்த பள்ளிப்பாடங்கள் என்றும் எம் நெஞ்சில் நீங்காது இருக்கின்றது. அதாவது பாடசாலைக்குபோனவர்களுக்கு புரியும்.
மக்காவிற்கு யாத்திரை சென்று மீண்ட முஸ்லீம் யாத்திரிகர்களையும் அவர்களது உறவினர்களையும் கொன்று ஒழித்தவர்கள், தற்பொழுது பள்ளிவாசலுக்குள் நுழைந்து பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவாகள் மீது துப்பாக்கிபிரயோகம் செய்ய வைத்த மிருகத்தனத்திலும் கொடிய அரக்கச் செயலுக்கு எந்தவிதமான மன்னிப்பும் கிடையவே கிடையாது. மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்காது மரணதண்டனை வழங்கும் புலிகளுக்கு மக்கள் இனிமேலும் ஆதரவு அளிக்கமுடியாது மக்களில் பலரும் இன்று வெளிப்படையாகவே திட்டுகின்றார்கள். மட்டக்களப்பு அகதிகளில் பலர் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள் - இராணுவத்தினர் தாக்குவதற்கு மூலகாரணம் புலிகள் தான் என்று. மிருகங்களைக் கூட இன்று சர்க்கஸில் பழக்கி எடுத்து மிகவும் செல்லமாக வளக்கப்பட்ட அவை அன்பின் அடிமையாகி பயிற்றப்படுகின்றது. சிலவேளைகளில் எப்படி நடந்து கொள்வேண்டும் என்று பயிற்சியும் கொடுக்கப்படுகின்றது. ஆனால் ஆறாவது அறிவைப்பெற்ற மிக உன்னதமான நிலையில் இருக்கவேண்டிய மனிதன் தன்னைப்போல் மன்னுயிரை நேசிக்கவேண்டிய நிலையில் மற்றவர்களை அழித்து தான் மட்டும் வாழ மனப்பால் குடிக்கின்றான். நீதி என்ற நிலை உள்ள மட்டும் எவரும் கீழ்த்தரமான எண்ணங்களால் முன்னுக்கு வரமுடியாது: தேரினை முல்லைச் செடிக்குத் தந்த பாரி வள்ளலும் கன்றின் உயிருக்காக தன் ஒரே வாரிசை தேர்ச்சில்லில் விட்டு நசித்துக்கொன்ற மனுநீதிச்சோழ மன்னனும் புறாவின் உயிருக்காக தன்னுடைய தொடைச் சதையினை அளித்த சிபிச்சக்கரவர்த்தியும் எமது சிந்தனைகளில் வாழ்க்கையில் வாழ்ந்துவரும்போது புல்லர்களின் செயல்கள் யாவும் பூமியில் நிலைக்க முடியாது.

முஸ்லீம் சமுதாயத்தினருக்கு எமது பணிவான வேண்டுகோள் விடுதலைப்புலிகள் போல இருக்காது மனிதாபிமானம்கொண்ட நீங்கள் மக்கள் நலம்பேண புலிகளுக்கு எதிராகவுள்ள தமிழ்மக்களையும் உங்களுடன் இணைந்து நீதிக்காக குரல் எழுப்ப முன்வரவேண்டும். முஸ்லீம்களை மட்டுமல்ல தமிழ் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் அறிஞர்கள் தலைவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சரியான நீதி வழங்கப்படவில்லை. இவையனைத்தையும் முஸ்லீம் சகோதரர்கள் உணர்ந்து நீண்ட காலம் அன்பில் இணைந்த நாம் இன்று கொடியவர்கள் சிலரால் பிரிக்கப்படவேண்டிய அவர்களுடைய எண்ணத்திற்கு செவிசாய்க்காது ஒற்றுமையாக இந்த சிறிய நாட்டில் அமைதியாக வாழ வேண்டிய ஒழுங்குகளை நாம் கூடி ஆராய்ந்து செயற்படவேண்டும் என சகல முஸ்லீம் சமய சமூக அமைப்புக்களுக்கு பணிவாக வேண்டி கொல்லப்பட்ட முஸ்லீம் சகோதரர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த வேதனையை தெரிவிப்பதோடு கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுவதோடு கொலை செய்வதையும் உடமைகள் நாசமாக்கப்படுவதையும் நிறுத்தும்படி தொடர்ந்து கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதோடு இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் அரசினுடைய இயலாமையையும் கண்டனம் செய்து இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றோம்.

மனிதன் வாழவே சமயங்கள் வழிகாட்டுகின்றன. அந்த சமயங்களின் பெயரால் சண்டைகள் இருக்குமானால் சமயமே தேவையற்றது.

என்றும் ஒற்றுமைக்காக
இந்து சமய ஒற்றுமைப் பேரவை அமைப்பாளர்

No comments: