அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, June 15, 2009

நீதி நியாயத்திற்கான குரலின் தலைவர் - திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் (இன்று 15.06.2009 அவரது 77வது பிறந்த தினம்)

இன்று தனது 77வயதில் காலடி பதிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் உயர்திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் சில வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடுவதுடன் எனது இப்பதிவில் சில புகைப்படங்களையும் ஒருதொகுப்பாக வெளியிடுவதில் நான் மனநிறைவடைகிறேன். ஒரு புரட்சி மூலம் தான் பிரதிநிதித்துவப்படுத்திய கிளிநொச்சித் தொகுதியை தனி மாவட்டமாக்க பல போராட்டங்களை நடத்திய அவரது பெரும்பணி வரலாற்றில் மறைக்கவோ மறுக்கவோ முடியாத ஒரு தனிப்பெரும் சாதனை! இன்று அம்மாவட்ட மக்களுக்காக மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழினத்துக்காகவும் அவரது தனித்த குரல் ஓங்கி ஒலித்த வண்ணமிருப்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
அவர் அடிக்கடி சொல்லுவார் - கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள ஒவ்வொரு குக்கிராமங்களிலும் என் காலடி பட்டுத்தான் இருக்கும் என்று. 2002 வைகாசி 5இல் மறைந்த தலைவர் மு. சிவசிதம்பரம் ஐயாவுடைய பூதவுடலை நாம் கிளிநொச்சிக்குக் கொண்டுபோயிருந்த போது அவரைக் கட்டிப்பிடித்து உரிமையோடு பழகிய அனைத்து மக்களையும் இப்பொழுது நான் எண்ணிப் பார்க்கின்றேன். 1970 தொடக்கம் 1983ல் தனது பாராளுமன்றப் பதவியைத் துறக்கும் வரை அந்தப்பெரிய தொகுதியிலும் - மாவட்டத்திலும் அவர் ஆற்றிய பணிகளை அதிபர்களும் ஆசிரியர்களும் ஏன் அரச அலுவலர்களும் எமது அலுவலகத்திற்கு வரும்போது பேசிய விடயங்களிலிருந்து எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. தனது முழு மாவட்டத்தைப் பற்றிப் பூரணமாக அறிந்த அவர் சிறிது காலத்திற்கு முன்னர் அரச தரப்பினருடன் பிரச்சனைப்படவும் - அகதிகளின் எண்ணிக்கை குறித்து மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டிய கணக்குகளும்- அவரது வன்னிப்பரப்பின் ஆழ்ந்த மனவுறுதியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தின. ஆசிரியராக - கரைச்சி கிராம சபைத் தலைவராக – கிளிநொச்சி நகரசபைத் தலைவராக பின்னர் கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இப்படி படிப்படியாக அரசியலில் அவரது முன்னேற்றம் பல சாதனைகளைக் கொண்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவரது தலைவர் என்ற பொறுப்பிலிருந்து அவரை அகற்ற பெரும்பாடுபட்ட அவரது அரசியல் சகாக்கள் இன்று அதோ கதியில் இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது பாவமாகத்தான் இருக்கிறது. நான் யாரையும் மனம் நோகப் பண்ண வேண்டும் என்பதற்காக இதை எழுதவில்லை. உண்மையை எழுதுகிறேன்.


எமது கட்சியைப் பிரித்து உடைத்து எப்போது தலைவர் ஆனந்தசங்கரி அவர்களுடைய மனதை நோகடித்தார்களோ! அதற்குப்பின் சில நாட்களிலேயே அவர்களால் யார் ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்டார்களோ - அவர்களுக்கிடையிலும் பிளவு ஏற்பட்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இந்த முதுமொழி இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.


இதற்கு அத்தாட்சியாக அவரால் எழுதப்பட்ட 30.05.2003 கடிதம் ஒன்றில் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்கு அதிமுக்கியம் கொடுத்து தனது இயக்கத்தை நிர்வகிக்கும் தம்பி பிரபாகரன் வேறொரு கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவாரா? அல்லது இது இடையில் உள்ளவர்களின் திருவிளையாட்டா? ஏன்ற எண்ணம் எனது உள்ளத்தை நெருடுகின்றது என்பதை முதலில் சொல்லிவைக்க விரும்புகிறேன் என்று கோடிட்டு குறிப்பிட்டதை நினைவு படுத்துவது இன்றைக்குப் பொருத்தமாயில்லாவிட்டாலும் தேவை கருதி குறிப்பிடுகிறேன்.



தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியை கொள்கை அற்றவர்கள் தேர்தல் என்ற ஒன்றிற்காக தலைவராக இருந்தவரை மிரட்டிப் பறித்த அந்தப் பாவம் வாக்களித்த மக்கள் எல்லோருக்கும் இன்று தண்டனையைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலின் போது ஒரு தலைவர் - இப்போது வேறொருவர். தந்தை செல்வா அரசாங்கங்களை நம்பாவிட்டாலும் பேச்சுக்கு அழைக்கும்போதெல்லாம் தன் நிலை தவறாது செல்பவர்.




தமிழரசுக் கட்சியைப் புனருத்தாரணம் செய்தவர்கள் தந்தையைப் பற்றி அறியாமல் உறுப்பினர்களைச் சேர்த்ததுதான் இன்றைய நிலைக்கு மூலகாரணம். மனச் சாட்சி என்று ஒன்றிருந்தால் அப்படி இருப்பவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது சிறப்பைத் தரும். கொள்கையற்ற அரசியலுடைய இவர்கள் எப்படி தமிழ்மக்கள் முன்பு செல்வார்கள்? இவர்களைத் தமிழ் மக்கள் மன்னிப்பார்களா? என்ற கேள்வி எம்மத்தியில் எழவும் செய்கிறது.

அரசியல் அறிவற்றவர்களுக்கு அரசியலும் சொல்லிக் கொடுக்காது அவர்களது ஆட்டத்திற்கு தாளமிட்டவர்கள் - எடுபிடிகளாக செயற்பட்டவர்கள் இன்று தமக்குத் தமக்கென ஒரு கருத்தை சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது யாரிடம் என்னத்தைச் சொல்வதெனத் தெரியவில்லை. இதெல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்தோ என்னவோ தமிழர்களைக் கடவுள் தான் காக்க வேண்டும் என்று சொன்னார் போலும். அரச அமைச்சர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் இவர்கள் போனால் மக்கள் தாக்குவார்கள் என்று! அது சத்தியமான உண்மையாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். கொழும்பிலே இருந்தபடி அதுவும் பாதுகாப்போடு – பாராளுமன்றத்தில் போய் ஏதோ வாய்க்கு வந்த செய்திகளையெல்லாம் சொல்லி வீர வசனம் பேசிய இவர்கள் இப்போது எதுவும் செய்யமுடியாத கையறு நிலையிலேயே உள்ளனர். – வாக்களித்த மக்களோ வீடிழந்து – உண்ண உணவின்றி – அருந்த நீரின்றி – வெளியேற அனுமதியின்றி அகதியாக ஊர்விட்டு ஊர்ஓடி மேலிருந்து வரும் வானத் தாக்குதல்களுக்காய் குழி தோண்டித் தோண்டியே தம்மை நோகடித்தார்கள். இன்று கம்பி வேலிகளுக்கு அப்பால் சாப்பாடு வருமா? என்று வரிசையில் காத்து நிற்கிறார்கள்!
எப்போது நிம்மதியாக சொந்த வீட்டிற்குப் போவோம் என்று அங்கலாய்த்துக் காத்திருக்கிறார்கள்!

யாராவது வருவார்களா எமக்காக ஏதாவது செய்வார்களா என்று காத்திருக்கும் இந்த அப்பாவி மக்களையும் பலர் வந்தார்கள் பார்த்தார்கள் ஏதோ சொன்னார்கள் போனார்கள் என்று நாட்கள் ஓடுகின்றன. காத்திருக்கிறார்கள்! இவர்களுக்காக அன்றாடம் ஒலித்துக் கொண்டிருக்கிறது எமது தலைவர் ஆனந்தசங்கரி அவர்களுடைய குரல் - அவரது பணிகள் செம்மைபெற்று மக்கள் தத்தம் சொந்தப் பிரதேசங்களில் விரைவில் திரும்பி சுதந்திரமான வாழ்வு வாழ இன்றைய நாளில் மக்கள் பணிசெய்யும் அவரை வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்.

தங்க. முகுந்தன்












மேலேயுள்ள படத்தை தந்துதவிய வின்சன்ட் ஜெயனுக்கு எனது நன்றிகள்.


























No comments: