அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, June 21, 2009

கட்டுரைகள் எழுதும்போது பிரிக்கும் வழியை முன்னெடுக்காது, ஒற்றுமைப்படுத்தும் வழியில் எழுதினால் சிலவேளை பிரிந்து நிற்பவர்கள் கூட ஒன்றுபட முடியும்!

இக்கடிதம் தந்தை செல்வாவினுடைய சிலை திறப்பு நடைபெற்ற பின் வெளியான வீரகேசரி வாரவெளியீட்டுச் செய்திக்கு எழுதிய பதில் கட்டுரை. 10 வருடங்களாகியும் இதுவரை வெளியிடவில்லை. இன்றும் பத்திரிகைகள் குழப்புகின்ற செய்திகளைத் தான் எழுதி சிண்டுமுடிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றன என்பதும் கவலையைத் தருகிறது. நியாயமாக நீதியாக எழுதி அல்லல்படும் அநாதரவாக இருக்கும் மக்களுக்கு தம்மால் செய்யமுடிந்ததைச் செய்யத் தக்கதாக கட்டுரைகள் செய்திகள் வெளிவர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உண்மைகளை - நடப்பவைகளை எழுதுங்கள் - கட்டுரை என்கிறபோது நல்லவழியில் சிந்தித்து எழுதுங்கள் - என்பதே எனது பணிவான கருத்து!


ஆசிரியர்
வீரகேசரி வார வெளியீடு
கொழும்பு 14.

அன்புடையீர்,
தங்களின் 02.05.1999 வீரகேசரி வார வெளியீட்டில் 6ஆம் பக்கத்தில் வெளியான தந்தை செல்வாவின் வழி செல்ல இன்று யார் உள்ளனர்? என்ற தலைப்பிலான கட்டுரையில் அதை எழுதிய ஆர். தயாபரன் அவர்கள் உண்மைக்கு மாறான தகவல்கள் சிலவற்றைத் தெரிவித்தள்ளார். உண்மையான கருத்துக்கள் வீரகேசரியில் வரவேண்டுமென்ற அபிமானத்தால் இதனை எழுதுகிறேன். தயவுசெய்து பிரசுரிக்க வேண்டுகிறேன்.

26.04.99 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான வைபவத்தில் மாநகரசபையின் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான நானும் கலந்து கொண்டதை ஏனோ திரு. ஆர். தயாபரன் அவர்கள் குறிப்பிட மறுத்துவிட்டார்.மேலும் நிகழ்ச்சியின்போது தமிழ் வாழ்த்தினையும், ஈழத்தமிழ் தேசிய கீதத்தையும் (பரமஹம்சதாசன் இயற்றிய இப்பாடல் அமரர் கு. வன்னியசிங்கம் அவர்கள் காலத்திலிருந்து அவரது தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய கீதசபையால் தெரிவுசெய்யப்பட்டபாடல்) இசைத்தவன் என்ற வகையிலும் அன்றைய முழுநிகழ்ச்சிகளின்போதும் இருந்தவன் என்ற வகையிலும் பொய்யான தகவலைத் தந்தமைக்கு மனம்வருந்தியே இதைக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.

தந்தை செல்வாவினுடைய நினைவுநாளில் அவரது அரசியல் ஞானத்தை – அவரது எளிய வாழ்க்கை முறையை – தமிழ் தேசிய இனத்தின் அன்றைய போராட்ட(சாத்வீக) நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே பேச்சுக்கள் பெரும்பாலும் அமைந்திருந்தது. மேலும் இந்நிகழ்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக தந்தை செல்வா நூற்றாண்டுத் தேசிய அவையினால்மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் - சகல கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் ரெலோவைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே பங்குபற்றினர்.

தன்னிகரில்லாத் தலைவன் ஒருவனை நினைவு கூரவும், கௌரவிக்கவும், அவரை அடியொற்றிப் பின்வளர்ந்தவர்கள் யாராயிருப்பினும் அழைப்பு இல்லாமலேயே வந்திருக்கலாம். அழைப்பு அனுப்பியும் வராதிருந்தமைக்கு காரணம் எமக்குத் தெரியாது. மேலும் புளொட் அமைப்பின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர்(அரசியல்) திரு. கிருபைராசா அவர்கள் அன்றையதினம் கொழும்பில் இருந்ததையும் நினைவுபடுத்தவேண்டும்.

தமிழீழத் தீர்மானத்திலிருந்த எவரும் (கூட்டணி உட்பட) இன்றுவரை விலகிச் செல்லவில்லை என்பதுடன் அரசு அதற்கீடான மாற்றுத் திட்டத்தை முன்வைத்தால் அதை கூட்டணி பரிசீலித்து பின் தமிழ் மக்களின் அனுமதிக்குஅவர்கள் முன் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தீர்மானமும் இன்றுவரை மாற்றப்படவில்லை. மாற்றவும் முடியாது. இந்நிலையில் கடந்த 1997 – 1998 ஆம் ஆண்டு தந்தை செல்வா நூற்றாண்டுத் தேசிய அவையின் முடிவுக்கு இணங்க சிலை ஒன்றை நிறுவ எடுத்த முடிவும் தாமதமாக நிறைவேறியமைக்கம் - நடைபெறவிருக்கும் தேர்தலுக்கம் முடிச்சுப் போடுவதுதான் மிகவும் வேதனையைத் தருகிறது.

குறிப்பிட்ட நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரேயொரு பத்திரிகையான உதயன் நகரில் நேற்று நடந்த உணர்வுபூர்வ நிகழ்வில் தந்தையின் சிலை திறப்பு என்று வெளியிட்ட செய்தியையும் குறிப்பிடுவது பொருத்தமானது.

குறை கண்டுபிடிக்கும் ஒரே நோக்குடன் செய்திகள் வெளிவருவது நடுநிலைப் பத்திரிகையான வீரகேசரிக்கு அழகல்ல.
பல இடர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோதும் தமிழ்மக்களின் இன்னல்களைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் இன்று ஈடுபடுவதாக தெரியவில்லை என்பதும் முழுக்க முழுக்க கூட்டணியைக் குற்றம் சுமத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டது. கட்டுரைகள் எழுதும்போது பிரிக்கும் வழியை முன்னெடுக்காது,ஒற்றுமைப்படுத்தும் வழியில் எழுதினால் சிலவேளை பிரிந்து நிற்பவர்கள் கூட ஒன்றுபட முடியும். தந்தை செல்வாவின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வருவோர் முதலில் தந்தைiயை அறிந்திருக்கவேண்டும். வீணே பெயரைச் சொல்வதால் மட்டும் அவரது இலட்சியம் ஈடேறாது. துமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா வழியில்தான் என்றும் இயங்கி வருகிறது. தோடர்ந்தும் அவர் வழியிலேயே செல்லம் என்பதை ஆர். தயாபரன் உட்பட தவறாகக் கருதுவோர்கள் இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

துரையப்பா விளையாட்டரங்குப் புதைகுழிகள் சம்பந்தமான தகவல்களைத் தெரிவிக்கப்படக்கூடிய சாத்தியமான நிலை அன்றில்லை. காரணம் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்ட விடயம் - தற்போது ஆய்விலும் விசாரணையிலும் இருக்கும்போது அதுபற்றி அறிவுள்ள ஒருவன் கருத்துக் கூறமுடியாது என்பதே எனது கருத்தாகும். மேலும் சிலை திறப்புக்கு மாவை சேனாதிராசா படியில் ஏறியபோது கம்பி கீழே விழுந்தது என்ற செய்தி பிழையானது. ஏந்தக் கம்பியும் விழவில்லை. அது முழுமையாகச் செய்யப்பட்ட ஒரு படிக்கட்டு.

மேலும் காற்றினால் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த கொட்டகை இருக்கும் கம்பிகள் காற்றின் வேகத்தினால் கீழே விழுந்து ஒருவருக்கு மட்டுமே மேல் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவராகவே எழுந்துவந்தபோது நாமே அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தபோது கூடவே சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் உதவியாளர் சென்றபோதும் அவரை வைத்தியசாலையில் தங்கவேண்டும் என்று கூறியமையால் திரும்ப அவர் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து தனது துவிச்சக்கரவண்டியில் வீடு சென்று மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றார். இதனை அறியாது குண்டு வெடித்ததா? ஏன்றெல்லாம் பொய்யான தகவல் தெரிவித்து குண்டுவெடிப்புக்கள் இன்னும் ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கமிருக்கும் இந்நபர்களைக் கருத்தில்வைத்தோ என்னவோ தந்தையவர்கள் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிச் சென்றார்: ஏதோ கடவுளின் கிருபையால் நிகழ்வும் மிகச் சிறப்பாக மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது.

தங்க. முகுந்தன்.
யாழ் மாநகர சபை உறுப்பினரும்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்.






நன்றி - தமிழ் நெற்(மேலேயுள்ள 3 படங்கள்)

No comments: