அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 13, 2009

பத்திரிகைகள் நடுநிலை நின்று மக்களின் நல்வாழ்வுக்கு பணியாற்ற வேண்டுவதுடன் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்

யாழ் மாநகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8.4.99 அன்று வீரகேசரியல் வெளியான மாநகரசபை சம்பந்தமான செய்திக்கு எனது பதில் அறிக்கை இன்றுவரை பிரசுரிக்காத காரணத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

பதில் அறிக்கை

பாதுகாப்புக் கருதி கூட்டம் நடைபெறும் இடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் யாழ். மாநகர சபையின் அவலநிலை என்ற தலைப்பில் 8.4.99 வெளியான வீரகேசரியின் 2ஆம்பக்கச் செய்திக்கு சில நியாயமான மாற்றுக் கருத்துக்கள் இருப்பதால் - அதனைத் தெரிவிப்பதற்காகவே இக்குறிப்பை எழுதுகின்றேன். வேறு யாராவது கட்டுரை எழுதியிருப்பின் இந்தச் செய்திக்கு முக்கியத்துவமிருக்கின்றதோ இல்லையோ – ஒரு பத்திரிகை நிருபர் சில விடயங்களை மறைத்துக் கூறுவது நடுநிலைப் பத்திரிகை என்று கூறப்படும் வீரகேசரிக்கு களங்கத்தையே ஏற்படுத்தும். நடுநிலையும் - நியாயமும் இல்லாதபடியால்தான் என்னவோ இப்பத்திரிகை ஆசிரியர்கள் பிரிந்து சென்றார்கள் என்ற கருத்தும் வலுப்பெற்றுவிடும். எம்மைப் பொறுத்தவரையில் நாம் சிலவிடயங்களில் பாரம்பரியம் என்று சொல்லப்படும் தலைமுறைப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்பவர்கள். வாழ்க்கையில் எல்லா விடயங்களிலும் ஒன்றையே எடுத்தக் கொள்பவர்கள். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகள் தமது விற்பனையில் வளர்ச்சி கண்டிருந்தன. ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும், பொது நூல் நிலையமும், 1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் பின் எரிக்கப்பட்டதை மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற நூலில் ஆசிரியர் நீலவண்ணன் வீரகேசரியையும் தினபதியையும் பெரும்பகுதிகளில் மேற்கோள்காட்டி எழுதியுள்ளதைக் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

பொதுநூல் நிலையம் எரிக்கப்பட்ட பின்பு 1985ஆம் ஆண்டுப் பகுதியில் யாழ் மாநகர சபைக் கட்டடம் சிறிது சிறிது சேதமடைந்திருப்பினும் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டது எமது இளைஞர் அமைப்புக்களால் என்ற உண்மையை மறைத்துவிட்டு குட்டிப்பாராளுமன்றம் போல மாநகரசபை இயங்கியதென்றும் இன்று அவசரமாக அந்தரங்கமாக கூட்டங்கள் நடைபெற்று முடிகின்றன என்றும் நிருபர் கவலைப்படுவது வேதனையைத் தருகிறது. எமது பிரச்சனைகளைப் பகிரங்கப்படுத்துவதால் உண்மையும் நேர்மையும் முதன்மைகொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டால் தவறுகள் எமக்கிடையில் இருப்பதும் அதனால் மேலும் எமக்குள் பிளவுகள் ஏற்படுவதும் சாதாரணமாகிவிடும். இப்போதும் ஒன்றும் பெரிதாக ஒற்றுமையென்றில்லை.

50ஆவது பொன்விழாவைக் கொண்டாடுவதற்கு ஒரு நிரந்தரக் கட்டிடமில்லாத நிலையில் இருந்த இந்து விடுதிக் கட்டிடத்தையும் இழந்துவிட்ட நிலையில் மாநகர சபை தமிழ் மக்களைப் போலவே அகதியாக இருக்கிறது.

சுதந்திரமாகக் கூட்டம் நடத்தவும் கலகலப்பாகவும் இருக்கக் கூடிய நிலையில் யாழ்மக்கள் இன்றில்லை என்பதை ஏன் நிருபர் உணரவில்லையென்று சந்தேகம் எழுகிறது. நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கூட்டங்களை நடத்திச் சென்றாலும் யாழ் நிலையைத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே யாழ் நிலைமைகளை அறியாமல் கருத்துத் தெரிவிக்கும் நிருபர் முதலாவது மாநகர சபைக் கூட்டத்தில் (அதாவது கடந்த 1998 தேர்தலின் பின் நடந்த) எத்தனை பேர் கலந்துகொண்டார்கள் என அறியாமல் இரு முதல்வர்களை இழந்தபின் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய உறுப்பினர்களுடன் கூட்டங்களை நடத்தி முடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல் முதல் நடைபெற்ற மாநகரசபைக் கூட்டத்தில் முதல்வருட்பட பன்னிரண்டு உறுப்பினர்களே சத்தியப் பிரமாணஞ்செய்து பதவியெடுத்தனர். அதன்பின் 17.05.98 ஞாயிறன்று முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட பின் முதல்வராக திரு. பொன் சிவபாலன் பதவியேற்ற இரண்டாவது மாநகரசபையின் பொதுக் கூட்டத்தில் 16 உறுப்பினர்கள் பங்குபற்றினர்(29.06.98). அதன்பின் 27.07.98இல் 17 உறுப்பினர்களும், 4.8.98இல் 18 உறுப்பினர்களும் பங்கு கொண்டனர். 11.9.98 அன்று இந்து விடுதிக் கட்டிடக் குண்டுவெடிப்பின் பின் நடைபெற்ற (15.9.98) கூட்டம் பாதுகாப்புக் காரணங்களுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் நடைபெற்றது. அதன்பின் 16.12.98இல் 17 உறுப்பினர்களுடனும், 1.1.99இல் 14 உறுப்பினர்களுடனும், 30.3.99ல் 13 உறுப்பினர்களுடனும் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. தற்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியில் 2 வெற்றிடங்களும் புளொட்டில் ஆரம்பத்திலிருந்து நிரப்பப்படாத இரண்டு வெற்றிடங்களுமாக 4 வெற்றிடங்களுள்ளன. யாழ் தேர்தல் அலுவலகம் இன்றுவரை பொன் சிவபாலனின் மறைவையொட்டி வெற்றிடமுள்ள விபரத்தையோ வெற்றிடமான உறுப்பினரின் இடத்துக்கு ஒருவரை நியமிக்கும்படியோ தெரிவிக்கவில்லை.

கைவிரல்கள் 10. சிலவேளைகளில் 11, 12 ஆகவுமிருக்கலாம். இந்நிலையில் கைவிரல் விட்டு எண்ணக்கூடியதென்ற சொற்தொடர் கட்டுரைக்குப் பொருத்தமற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைதி ஏற்பட்டுள்ளது மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற விதண்டாவாதங்களும் வீண் சர்ச்சைகளையே ஏற்படுத்தும்.

உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்புத்தரவிரும்பினால் பொலிசார் ஈடுபடுத்தப்படவேண்டும். உறுப்பினர்களின் சிபார்சுப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்து – ஆயுதம் வழங்குவதுடன் சம்பளமும் கொடுப்பது அரசின் இயலாமையைக் காட்டுவதுடன் ஏற்கனவே சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களின் வாழ்வில் மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.(இதை 19.2.99 தங்கள் பத்திரிகையில் நான் தெரிவித்திருந்தேன்)

இந்து விடுதிக் கட்டிடத்தை நாம் இழந்தபின்னர் எமது முதல்வரும் 4 மாநகரசபை ஊழியர்களும் சில படை அதிகாரிகளும் கொல்லப்பட்ட பின்னர் முழுநேரமும் பாதுகாப்புள்ள கூட்டணிக் காரியாலயத்தில் கடந்த 3 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதிக் கூட்டம் ஈபிஆர்எல்எப் காரியாலயத்தில் நடைபெற்றது. அடிக்கடி மாற்றப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன் ஒன்றை நினைவுபடுத்தவும் விரும்புகின்றேன். திரும்பத் திரும்பு பொதுச்சொத்துக்களை இழக்க நாம் தயாரில்லை. அதுவும் எம்மவர்கள் - எமது மக்களைத் துன்புறுத்துவதும், எமது பாரம்பரிய பிரதேசங்களில் எமது சொத்துக்கள் அழிப்பதையும் நாம் வன்மையாக எதிர்ப்பதுடன் இவற்றை மக்களுக்காகப் போராடுகின்றோம் என்று கூறுபவர்கள் சற்றுச் சிந்திக்கவும் வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இறுதியாக பத்திரிகைகள் நடுநிலை நின்று மக்களின் நல்வாழ்வுக்கு பணியாற்ற வேண்டுவதுடன் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் பணிவாக வேண்டி எனது குறிப்பை நிறைவு செய்ய முன்பு முக்கியமான ஒரு விடயம் யாதெனில் மாநகர சபை ஊழியர்கள் இந்து விடுதிக் குண்டுவெடிப்பின் பின் மரணமடைந்ததைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் எவரும் (சுருக்கெழுத்தாளர் கூட) கூட்டங்களில் பங்குகொள்வதில்லை. ஆணையாளர் மாத்திரமே பங்குபற்றி வருகிறார். மேலும் மாநகர சபை உறுப்பினர்கள் - ஊழியர்கள் மத்தியிலும் ஒரு பிணைப்பில்லாத நிலை உண்டு என்பதையும் கூறி நிறைவு செய்கின்றேன்.

தங்க. முகுந்தன்.
யாழ். மாநகர சபை உறுப்பினர்.

No comments: