எனது இந்தக் கட்டுரையை மேடை என்ற பதிவில் பதிவிட்ட நிர்ஷனுக்கு இந்த நேரத்தில் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தனது மேடை என்ற வலைப் பதிவில் என்னைப் பற்றி அவர் குறிப்பிட்ட பதிவையும் இங்கு கீழே சேர்த்திருக்கிறேன்.
ஓம்
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை – யோகர் சுவாமிகள்
துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச்செல்வி, திருவாசகக் கொண்டல், பண்டிதை, செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள் அம்பிகையின் பாதாரவிந்தங்களை இறுகப்பற்றிப் பிறவாத பேரின்பமுத்தியடைந்தார் என்ற செய்தியறிந்து தாயினைப் பிரிந்த கன்றினைப்போல சொல்லமுடியாதளவு பிரிவுத்துயர் கொண்டேன்.
நல்லூர் சிவயோக சுவாமிகள் கூறிய
எப்பவோ முடிந்த காரியம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை
நாமறியோம்
என்ற நான்கு மகாவாக்கியங்களின் பொருளை உணர்ந்து – நமக்குள் நாமே எம்மைத் தேற்றி அன்னாருடைய பூதவுடலுக்கு அஞ்சலி செய்ய முடியாது கடல் கடந்து சுவிற்சலாந்து தேசத்தில் வாழும்நிலையில் எம்மனக்கண்முன்னே புன்முறுவல் பூத்த அம்மையாருடைய புகழுடம்புக்கு நான் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அடியேன் கடந்த 30 வருடங்களுக்கு மேற்பட்டகாலம் அம்மையாருடன் தொடர்பு கொண்டிருந்ததை இந்தநேரத்தில் மீட்டுப் பார்த்து-அதனை வெளிப்படுத்த வேண்டியவனாக இருக்கின்றேன்.
1977ம் ஆண்டு கடைசிக் காலங்களில் நாம் தெல்லிப்பழை ஸ்ரீ காசிவிநாயகர் ஆலயத்திற்குப் பக்கத்தில் குடிவந்த காலங்களில் காசிப்பிள்ளையாரிடமும் துர்க்காதேவியம்பாளிடமும் தினமும் சென்று வழிபட்டு வருவதுடன் ஆலயத் தொண்டுகளிலும் ஈடுபட்டுவந்தேன். துர்க்கையம்பாள் ஆலயத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையிலும் அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை விசேட பூசைகளுக்காக பல தொண்டுகள் செய்துவந்தோம். அம்மையாரை நாம் எல்லாரும் ரீச்சர் என்றே பாசமாக அன்புபாராட்டி அழைத்து வந்தோம். ஆலயத்தை மிகவும் உன்னத நிலைக்கு இன்று கொண்டுவந்த அவரது அயராத உழைப்பை - அன்னை அம்பிகையிடம் தன்னை அர்ப்பணித்த பாங்கை எடுத்துரைக்கச் சொல்லால் முடியாது. இராச கோபுரம் – சித்திரத்தேர் - தீர்த்தத்தடாகம் அன்னதான மடம் கல்யாண மண்டபம் மட்டுமல்ல அம்பிகையின் அழகிய திருவுருவச் சிலை வார்ப்பு, இன்று கணீரென ஒலித்துக் கொண்டிருக்கும் கண்டாமணி வார்ப்பு – சைவ சித்தாந்த திருமுறை மாநாடு – சண்டிமகாஹோமம் என்பவற்றைத் திறம்பட நடாத்தி முடித்ததும் ஹரிதாஸ்கிரி சுவாமிகள், திருமுருக கிருபானந்தவாரியார் ஆகியோரைத் தரிசிக்கும் பேறு எமக்குக் கிடைத்ததும் அன்னையுடைய அளப்பரிய அடக்கமான சேவையினால் என்றால் மிகையாகாது.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வீ. தர்மலிங்கம்; அவர்கள் தனியாக ஆலயத்திற்கு வருகைதந்துவிட்டு வீடு செல்லும்போது(அவர் நிர்வாக சபையில் இருந்தாரா என்பதை நான் சரியாக தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி அவர் அங்கு வருவதைக் கண்டிருக்கின்றேன்) நான் அவரது வாகனத்தில் கோவிலிலிருந்து மில்க்வைற் அதிபர் சிவதர்மவள்ளல் மறைந்த க. கனகராசா அவர்களிடம் போவது வழக்கம். அவரும் அவரது துணைவியாரும் அடிக்கடி ஆலயத்திற்கு வந்துபோவதுண்டு.
எனது பெரிய தந்தையார் மறைந்த அ. அமிர்தலிங்கம் அவர்களும் குடும்பத்துடன் ஆலய வழிபாடு செய்யப் போகும்போது நானும் போவதுண்டு. ஆலயத்தில் வசந்தமண்டபத்திலும் தெற்குவாசலிலும் அடிக்கடி தேவாரம் பாடும்பணி எனக்குக் கிடைப்பதுண்டு. செவ்வாய்க்கிழமை மாலையில் வசந்த மண்டப பூசைகளின் பின்னர் தினமும் ரீச்சருடைய அருளுரை இடம்பெறும். அரனையும் அறத்தையும் வலியுறுத்தும் அப்பேச்சுக்கள் மன அழுக்குகளை நீக்கப் பெரிதும் உதவின. அதன்பின் சிலவேளைகளில் ரீச்சர் என்னைத் தேவாரம்பாடும்படி சொல்லிவிட்டு வேறு அவசிய தேவைகளுக்காக அலுவலகத்திற்குச் சென்றுவிடுவதுண்டு.
ஆலயத்தின் தேவைகளுக்காக கொழும்பிலிருக்கும் அடியார்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள நாமிருந்த அலுவலகத்திற்கு வருகைதந்து நீண்ட நேரம் காத்திருந்து அனைவருடனும் தொலைபேசியில் பேசி தனது பணிகளைச் செம்மையாகச் செய்த பெருந்தகை அவர். ஏனெனில் அன்றைய நிலையில் தொலைபேசி ஆலயத்திற்கு அண்மையில் எமது காரியாலயத்தில் மாத்திரம் இருந்தது.
மகாஜனாவின் உனை நீ அறி என்ற கல்லூரி வாசகமும், காசிப்பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள் மறைந்த கணேசலிங்கக்குருக்கள்ஐயா, ம. சி. சிதம்பரப்பிள்ளை, ஆசிரியர் விநாயகரத்தினம், ஆசிரியை கலாதேவி போன்றோரது தொடர்பும்; நான் சமயப் பணியில் ஈடுபட பெரிதும் உதவின. குறிப்பாக கீரிமலைச் சிவநெறிக் கழகம் நடத்திய கதாப்பிரசங்கப் போட்டிகளுக்காக என்னைத் தயார்படுத்திய பெருமை இப்பெரியார்களுக்கே உண்டு. ரீச்சர் காசிப் பிள்ளையார் கோவிற் பணிகளிலும் பாலர் ஞானோதய சபையுடனும் பெரிதும் தொடர்புபட்டிருந்தார்.
1985ல் எமது மூளாய் இந்து இளைஞர் மன்றத் திறப்புவிழாவுக்கு ரீச்சர் வருகைதந்தது மட்டுமல்ல பலதடவைகள் எமது பிள்ளையார் கோவிலுக்கும் வந்து சொற்பொழிவாற்றி எமக்கு நல்லறிவும் தெளிவும் தந்தார்.
சுன்னாகம் திருமகள் அச்சகத்தைப் பொறுப்பெடுத்து பெரிய புராண வசனச் சுருக்கத்தை மறுபிரசுரம் செய்த பெருமை ரீச்சருக்குண்டு.
ஆலயத்தின் நகைகளும் பெறுமதிமிக்க பொருட்களும் கொள்ளையிடப்பட்டபோதும்;, வசந்த மண்டபத்திற்கு அருகிலுள்ள களஞ்சிய அறை படையினரின் எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த பொழுதும், மனவுறுதியுடன் எல்லாம் அவளே பார்த்துக் கொள்வாள் என்று எமக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய மனதிடத்தை நினைவிற்கொள்ளவேண்டும். களவுபோன நகைகள் மீள வந்ததே அம்பாளின் அனுக்கிரகம் என்பதை விட ரீச்சரின் அருள்வாக்கு என்றால் மிகையாகாது. ஏனெனில் அம்பாள் வேறு ரீச்சர் வேறாக என்னால் கருத முடியவில்லை. காரணம் ஏற்கனவே சொன்னதுபோல தன்னை அறிந்தால் அது நீயாகிறாய் என்னும் தத்வமஸி என்ற உண்மை புலப்படும்.
நாட்டின் அனர்த்தங்களினால் நாம் இடம்பெயர்ந்து கொழும்பிலிருந்தபோது அங்கு வருகைதரும்போதும் நாம் அம்மையாரைச் சந்தித்து வந்ததுண்டு(திரு. எஸ். கே. பொன்னம்பலம் அவர்கள் வீட்டில்). ரீச்சருடைய பிறந்த நாள் ஒன்றுக்கு கொழும்பிலிருந்து கூட்டணித்தலைவர் மு. சிவசிதம்பரம்;, அ. தங்கத்துரை, வீ. ஆனந்தசங்கரி, மாவை. சேனாதிராசா ஆகியோருடன் நானும் ஒரு வாழ்த்துக் கடிதம் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தோம். அதற்கு நன்றி தெரிவித்து ரீச்சர் பதிற் கடிதம் எழுதியிருந்தார். கடிதமோ, பணமோ எது வரினும் அவர்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தார். (இதனை மிகவும் அழகாக ரீச்சருடைய இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட நீதிபதி. ஆர் ரி. விக்னராஜா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.)
1997ல் யாழ் மாநகர சபைத் தேர்தல் பணிகளுக்காக யாழ் வந்த சமயம் அம்மையாரைத் தரிசிக்க ஆலயத்துக்கு வந்தவேளையில் என்னை அந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியதற்கு அமைய நான் தேர்தலில் போட்டியிடாது அவரது கட்டளைக்கு அடிபணிந்து நடந்துகொண்டேன். அதன்பின் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் அகாலமரணத்தின்பின்னர் மாநகர சபையை நடாத்த எவருமில்லாதபோது நாம் மறைந்த முதல்வர் சிவபாலன் மற்றும் இரவிராஜ் அவர்களுடன் சேர்ந்து போய் சந்தித்தபோது நான் உறுப்பினராக வரவிருப்பதை அவருக்கும் தெரிவித்து அவரது ஒப்புதலுடன் மாநகர சபை உறுப்பினரானேன். எனது திருமணத்தை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நடத்த தீர்மானித்தபோது அன்றைய நாளில் வேறோரு திருமணம் நடக்க இருந்தபடியால் நல்லூர் துர்க்காமணிமண்டபத்தில் நடத்த ஒழுங்குசெய்து தந்ததுடன் எனது திருமணநாளன்று முழுநேரமும் நல்லூரில் வந்து நின்று எம்மை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தியதை எப்படி என் வாழ்நாளில் மறக்கமுடியும். எமது கட்சித் தலைவர்கள் வீ. ஆனந்தசங்கரி, இரா. சம்பந்தன்;, ந. இரவிராஜ் ஆகியோருடனும் துர்க்காபுரம்போய் அம்மையாரைச் சந்தித்ததையும் இவ்விடத்தில் நினைவுபடுத்துவது நல்லது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் தெல்லிப்பழை ப.நோ. கூ. சுங்கத் தலைவருமான சிவமகாராசா அவர்களும் ஆலயத்துடனும் ரீச்சருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமை
யாவரும் அறிந்ததே.
தழிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மறைந்த தந்தை செல்வா, ஜீ. ஜீ பொன்னம்பலம் ஆகியோர் மீதும் பெரும்மதிப்ப வைத்திருந்த ரீச்சர் அவர்கள் மறைந்த குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவாக வெளியிடப்பட்ட நினைவு நூலிலும், எனது பெரியதந்தையார் மறைந்த அ. அமிர்தலிங்கம் அவர்களுடைய நினைவு மலரிலும் தனது செய்தியை தெரிவித்திருப்பதையும் நான் குறிப்பிடவேண்டும்.
கடந்த ஞாயிறு 15.06.2008 காலையில் அதாவது அவர் உயிர்பிரிந்த நாளில் நானும் இலண்டனில் வசிக்கும் எனது பெரிய தாயாரும் (திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்) ரீச்சரைப்பற்றிப் பேசியிருந்தோம். தனக்கு சிவத்திரு. சிவபாலன் அவர்கள் கோவில் பிரசாதம் அனுப்பியிருந்ததாகவும் அதில் ரீச்சருடைய உடல்நிலை பற்றி எழுதப்பட்ட கடிதத்தில் தம்பி முகுந்தனுக்கும் அறிவிக்கவும் அவர்தான் எம்மை உங்களுக்கு அறிமுகம் செய்தார் என்றும் குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தா. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 30வருடங்களாக சிவத்திரு. சிவபாலன் அவர்களையும் ரீச்சரைச்சந்தித்த காலத்திலிருந்தே தெரியும். நாமனைவரும் ஒரு குடும்பமாக – ஆத்மீகத்தில் - அன்பில் - தொண்டில் மானசீகமான பக்தித் தொடர்பில் பிணைக்கப்பட்டிருந்தோம். அம்மையார் ஈழநாட்டின் நாவலருக்கு அடுத்த ஆறாம் சமயகுரவராகப் போற்றப்பட வேண்டிய பெருமைக்குரியவர். அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் வரும் பெண்ணடியார்கள் மூவரையொத்த பெரும்பணியாற்றியவர். நமது நாட்டில் மாத்திரமல்ல பல வெளிநாடுகளுக்கும் சென்று தமிழ்ப்பணியும் சமயப்பணியும் புரிந்த பெருமைக்குரியவர். அனைவருடனும் எளிமையாகவும், புன்முறுவல் பூத்தமுகமுடையவராய் அன்பொழுகப் பேசி அனைவரது நெஞ்சங்களிலும் என்றும் நீங்காமல் உறைகின்ற பெருமையுடையவர். செல்லும் அனைவருக்கும் போதும் போதும் என வயிறாரச் சோறு போட்ட பெருமையுமுடையவர்.
அன்னாரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவுக்கு எம்முடன் பாசத்தில் பிணைந்திருந்தார். அவரது பணிகளைப்பற்றி பலரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தான் எங்கே வேறு இடங்களுக்குச் சென்றால் தனது பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகளை தவிக்க விட்டுவிடுவோமோ என்ற ஆதங்கமும் பொறுப்பும் கொண்டிருந்த ரீச்சர் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் நல்லூர் மணிமண்டபத்திற்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வேளி நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொண்டு தனது கடமையைச் செவ்வனேசெய்தார். செஞ்சொற் செல்வர் சிவத்திரு. ஆறுதிருமுருகன் அவர்களைத் தமக்குப்பின் - தனது பொறுப்பை ஒப்படைத்தார் என்று நான் கூறுவதில் பெருமையடைகின்றேன். ஏனெனில் இதுகூட ஒரு குருபரம்பரையையொத்த பணியென நான் கருதுகின்றேன். முற்றிலும் மாறுபட்ட - வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும் எம் இனத்தின் கண்ணெனத் திகழ்ந்தவர் ரீச்சர் அவர்கள். ஓவ்வோர் செவ்வாய்க்கிழமையும் ஆலய வழிபாட்டில் தமிழ்ப் பண்பாட்டையும், வாழ்வில் எளிமையையும் கடைப்பிடிக்க அவர் கூறும் அறிவுரைகள் - ஏனைய ஆலயங்களுக்கு ஒரு முன்மாதிரி.
எமக்கெல்லாம் உறுதுணையாக வழிகாட்டியாக இருந்த அம்மையாரைப் பிரிந்து இன்று தவிக்கும் துர்க்காபுர மகளிர் இல்லச் சிறுமியருக்கும், (அவர்களது சோகத்தை நாம் ஒருபோதும் தேற்றமுடியாது. வீரகேசரி இணையத்தளத்தில் வெளியான புகைப்படங்களைப் பார்க்கையில் கண்ணீர் மல்கினேன். எமக்கு ரீச்சரின் செய்திகளை விரிவாகத் தந்த வீரகேசரி மற்றும் தினக்குரல், உதயன், தமிழ்நெற், லங்காசிறி, ஈரஅனல் போன்ற இணையத்தளச் செய்தி நிறுவனங்களுக்கு எமது மனம்நிறைந்த நன்றிகள்) தொண்டர் அணியினருக்கும், ஆலய நிர்வாகசபையினருக்கும், தாயாயிருந்து வழிநடத்திய இந்து இளைஞர் சங்கத்தினருக்கும் மற்றும் அம்பிகை அடியார்களுக்கும் எல்லாம்வல்ல ஸ்ரீ துர்க்காதேவியம்பிகை மனதைரியத்தையும், சாந்தியையும் வழங்க மனதாரப் பிரார்த்தித்து ரீச்சரின் ஜீவாத்மா அன்னை துர்க்காதேவியின் பாதாரவிந்தங்களில் நித்தியப் பேரின்பத்தில் ஐக்கியப்பட்டுச் சரணடையப் பிரார்த்தித்து எனது இக்கண்ணீர்க் காணிக்கையைச் சமர்ப்பிக்கின்றேன்.
என்றும் ரீச்சரின் மறவாத நினைவுகளுடன் கலங்கிநிற்கும்
தங்க. முகுந்தன்.
-----------
நான் ரொம்பச் சிறியவனாக இருந்த காலத்திலிருந்து என்னை வழிநடத்தவேண்டும் என்று சிரமப்பட்டவர்களில் முகுந்தன் அண்ணாவும் ஒருவர்। யாழ் மண்ணின் மைந்தராகிலும் மலையக ஆலயங்களுக்கும் அறநெறிப்பாடசாலைகளுக்கும் அவர் ஆற்றிய பங்கு சொல்லில் அடங்காதது।
ஏராளமான சமய,தமிழ் நூல்களை எனக்குத் தந்து சமயப்பணியில் ஈடுபடவைத்தவர் அவர்। நீண்டகாலமாக பிரிந்திருக்கும்போதும் முகுந்தன் அண்ணாவின் உதவிகளையும் அறிவுரைகளையும் என்றும் மறக்கமுடியாதவனா இருக்கிறேன்।( இன்னும் நிறைய கூறலாம்)।ஈழமே மனதால் அழுத நாள் சைவச்செம்மல் தங்கம்மா அப்பாக்குட்டியின் இறப்பு। அவரைப்பற்றி பதிவெழுதாமைக்கு காரணத்தை முகுந்தன் அண்ணா வினவியிருந்தார்। அப்போது எனது மாணவர்களுக்காக அம்மையார் பற்றிய பல தகவல்களை நான் திரட்டிக்கொண்டிருந்தேன்। அம்மையாரைப் பற்றி எழுதவேண்டும் என்று பல நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் தகவல்பல திரட்ட தாமதமானது। இந்நிலையில் முகுந்தன் அண்ணா அம்மாவைப்பற்றி எழுதிய கட்டுரை ஒன்று எனக்குக் கிடைத்தது। அதனை இங்கு தருகிறேன்।
(இவ்வாறு அவர் மேடையில் தொடங்கி எனது பதிவைப் பதித்திருக்கிறார்.)
Tuesday, June 9, 2009
துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச்செல்வி, திருவாசகக் கொண்டல், பண்டிதை, செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள் மறைவின்போது எழுதிய எனது கட்டுரை
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுதாபங்கள்,
வழிகாட்டிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment