அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, June 30, 2009

பத்திரிகைகளை அச்சுறுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும் - TULF ஆனந்தசங்கரி

கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டுமே தவிர, கருத்துக்களைக் கருவிகொண்டு அடக்க முற்படக் கூடாது. பத்திரிகைகளைத் தீயிட்டுக் கொளுத்துவதும், அவற்றின் பணியாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுவதும் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். நகரில் வெளியாகும் தினசரி பத்திரிகைகளை தீயிட்டு கொளுத்திய அதே கும்பல் "உதயன்" பத்திரிகைக்கும், அங்கு பணிபுரியும் பணியாளர் களுக்கும் பெரும் மரணஅச்சுறுத் தலை விடுத்துள்ளது.
இதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. வடக்கில் வசந்தத்தை வீசச் செய்வோம்; ஜனநாயகத்தை மலரச் செய்வோம் என்று வெறும் வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேரான பத்திரிகைகளை தீயிட்டுக் கொளுத்துவதும், மரண அச்சுறுத்தல் விடுவதும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். கருத்துகளை கருத்துகளால் வெல்லவேண்டுமே தவிர, கருத்துகளை கருவி கொண்டு அடக்க முற்படக்கூடாது. மக்களை தவறான பாதைகளுக்குத் திருப்பாத கருத்துகளை சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பமுடியும்.
இவ்வாறான வன்முறைச் செயற்பாடுகள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கவேண்டுமாயின், அரசின் அனுமதியைப் பெற்று ஆயுதம் வைத்திருப்பவர்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமாகப் பேசவும் - செயற்படவும் அனுமதிக்க வேண்டும்.

No comments: