அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, October 2, 2008

இன்று காந்தி ஜயந்தி – 02.10.2008


இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் மகாத்மா காந்தி காட்டிய வாழ்க்கை முறையை நாம் முன்னெடுத்துச் செல்வோமாயின், புரிந்துணர்வும், அமைதியும் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த முடியும். அவரது குறிப்புக்களிலிருந்து சிலவற்றை மீட்டுப்பார்ப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

1. அன்பை அடிப்படையாகக்கொண்ட அகிம்சையே என் தெய்வம். சத்தியமே என் தெய்வம். அகிம்சையை நாடிச்செல்லும்போது – சத்தியம் எனக்குச் சொல்கிறது – என்வழியாகத்தான் அதைக்காண்பாய்என்று. சத்தியத்தை நாடித்தேடும்போது – அகிம்சை எனக்குச் சொல்கிறது – என்வழியாகச்செல் - நீநாடும் சத்தியத்தைக் காண்பாய்என்று. இரண்டும் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்து நிற்கின்றன. ஒன்றின்றி மற்றொன்றில்லை.
2. எல்லா ஜீவராசிகளுடனும் நான் ஒன்றிநிற்கும்நிலையை அடைய ஆசைப்படுகிறேன். சகல ஜீவன்களும், நானும் ஒன்று என உணர முயல்கிறேன். மனிதப்பிறப்பு மட்டுமல்ல, ஊர்ந்துசெல்லும் புழுவின் உயிருடனும் ஒன்றுபட ஆசைப்படுகிறேன். ஊர்ந்து செல்லும் புழுக்களும், நானும் ஒரே பரம்பொருளினின்று உண்டானோம். உயிரானது எந்தவடிவம் கொண்டுநின்றாலும் ஒன்றுதானே!
3. அன்பு என்னும் வேகம் மனிதகுலத்தை நடத்தியிராவிட்டால், மனிதஜாதி அழிந்தே போயிருக்கும். மிருகத்துக்கும் - மனிதனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் - மனிதன் தன்வாழ்க்கையில் பரஸ்பர அன்புக்குப் பிரதானம் கொடுத்து வருவதேதான். நம்முடைய உள்ளங்களுக்குள் இன்னும் மறைந்துநிற்கும் மிருக தத்துவம் அவ்வப்போது தலைது}க்கி வருகிறது. ஆயினும் அது அன்பின் ஆட்சியைப் பொய்யாக்கிவிடாது. தருமம் உண்மையாயினும், அதை நடத்துவது கடினம். அனைவரும் அன்பின் ஆட்சியை ஒப்புக்கொண்டு அனைத்திலும் அதைச் செலுத்திவிட்டார்களாகில் பூவுலகமே ஆண்டவனுடைய தேவலோகம் ஆகிவிடும்.
4. கிறீஸ்து சமயம், பௌத்த சமயம், இந்து சமயம் - இவற்றைப்போலவே இஸ்லாம் மார்க்கமும் சாந்தி மார்க்கமாகும். பேதங்கள் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், இச்சமயங்கள் அனைத்துக்கும் நோக்கம் ஒன்றே! ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினரை வெறுக்காமல் - பொறுத்துக்கொண்டும், கௌரவித்தும் வரவேண்டும்.
5. ஆண்டவனை நாம் வணங்குவது உண்மையானால், உலகத்திலுள்ள எல்லாமக்களும் நம்முடைய சகோதரர்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எல்லாச் சமயங்களும் சமம் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
6. அன்பு எதையும் கேட்பதில்லை – கொடுக்கிறது.

ஒழுக்கம் அல்லாத அறிவாற்றல்(கல்வி),
மனிதாபிமானம் இல்லாத அறிவியல்,
உழைப்பில்லாத செல்வம்,
நேர்மையில்லாத வணிகம்,
கொள்கை இல்லாத அரசியல்,
மனச்சாட்சி இல்லாத இன்பம்,
தியாகம் இல்லாத வழிபாடு – என்ற மகாத்மா காந்தி சுட்டிக்காட்டிய 7 சமூக கேடுகளை களைய இன்றைய இந்நாளில் நாம் உறுதி பூணுவோமாக!

வாழ்க காந்திமகான்! வளர்க அவர்காட்டிய கொள்கை!!

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி!

காந்தியைப் போல் அதிகாலை விழிக்க வேண்டும்
கடவுளென்ற கருணையை நாம் கருத வேண்டும்
காந்தியைப் போல் காற்றாட உலவ வேண்டும்
களைதீரக் குளிர் நீரில் முழுக வேண்டும்
காந்தியைப் போல் அளவாகப் புசிக்க வேண்டும்
கண்டதெல்லாம் தின்னாமை காக்க வேண்டும்
காந்தியைப் போல் ஒழுங்காகத் திட்டம்போட்டு
காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.

சொன்ன சொல்லைக் காந்தியைப் போல் காக்க வேண்டும்
சோம்பலதைக் காந்தியைப் போல் துறக்க வேண்டும்
மன்னவனோ பின்னெவனோ காந்தியைப் போல்
மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும்
சின்னவரோ கிழவர்களோ எவரையேனும்
சிறுமையின்றிக் காந்தியைப் போற் சிறப்புத் தந்து
என்ன குறை எங்கு வந்தீர் எனக் கேட்டு
இன்முகமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.

(மொத்தம் இதில் 22 பாடல்கள் இருக்கின்றன. இன்றுமுதல் இரண்டு இரண்டாக ஒவ்வொருநாளும் பாடலைப் பார்ப்போமா?)

மகாத்மா காந்தியடிகளின் கருத்துரைகள்.

1. மிதமாகப் பேசு.
2. எவர் எது சொன்னாலும் கேட்டுக்கொள். உனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்.
3. ஒவ்வொரு நிமிடத்தையும் முக்கியமாகக் கருதிக் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்.
4. ஏழை போல் வாழ். செல்வத்தில் பெருமை கொள்ளாதே.
5. நீ செய்யும் செலவிற்குக் கணக்கெழுது.
6. மனம் ஒன்றிக் கல்வி கற்றுக்கொள்.
7. நாள் தோறும் உடற்பயிற்சி செய்.
8. அளவோடு சாப்பிடு.
9. நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுது.

நாமக்கல் கவிஞரின் கவிதை மில்க்வைற் தொழிலக அதிபர் சிவதர்மவள்ளல் அமரர் க. கனகராசா அவர்களால் வெளியிடப்பட்ட படிப்பினை என்ற நூலில் இருந்து பதிவிடப் படுகிறது.

No comments: