இன்று ஈழத் தமிழர்களுக்காக ஏதேதோ பெரியளவில் போராட்டம் நடாத்தும் சில கட்சித் தலைவர்களுக்காக இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர்(நான் குறிப்பிடும் இந்தச் சம்பவம் நடந்தது - இதற்கு முன்னர் அறிஞர் அண்ணாவின் காலத்திலிருந்தே) தனது பேராதரவை வழங்கிய திமுக தலைவர் கலைஞர் மேதகு. மு. கருணாநிதி அவர்கள் எத்தனையோ படிப்பினைகளை ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் அறிந்த ஒரு மாமேதை. சிலர் அவரது பழைய சரித்திரத்தை அறியாமல் வீணே கூப்பாடு போடுவதை சகிக்க முடியாமல் இந்தப் பதிவை மீள இங்கு பதிவிடுகிறேன். இதைப் பார்த்தபிறகு நீங்கள் எதையும் செய்யுங்கள். ஆதாரத்துக்கு இலங்கையின் அன்றைய ஈழநாடு நாளேட்டின் செய்தியை www.thandaichelva.blogspot.com இல் இணைப்பாக இணைத்துள்ளேன். விரும்பினால் பார்க்கவும்.
கடந்த 1984 ஜூலை 25ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் படுகொலை கண்ணீர் நாள் கூட்டத்தில் மேதகு. கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் பேசிய பேச்சு
ஈழத்தமிழினமே! என் உடன் பிறப்பக்களே!
கடந்த ஆண்டு இதே நாளில் வெலிக்கடை சிறைச் சாலையிலே கொல்லப்பட்ட தங்கத்துரையினுடைய தாயார் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அந்த வீரமகனைப் பெற்ற அந்த அன்னையினுடைய திருவடிகளைத் தொட்டு வணங்கி, அந்த தியாகப் புதல்வனை பெற்ற அந்தத் தாயினுடைய பாதங்களுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்கி ஒரு சில கருத்துக்களை உங்கள் முன்னால் எடுத்து வைக்க நின்று கொண்டிருக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நாளில் நமக்குக் கிடைத்த செய்திகள் நம்முடைய செவிகளில் செந்தீயெனப் பாய்ந்தன என்பதையும், அதனைத் தொடர்ந்து தமிழகம் எவ்வாறு கொதித்து, குமுறி, கொந்தளித்து எழுந்தது என்ற நிகழ்ச்சிகளையும் எழுச்சிக் கவிஞராகத் திகழ்கின்ற காசி ஆனந்தன் அவர்கள் அடுக்கடுக்காக இங்கே எடுத்துக் காட்டினார்கள்.
இது கண்ணீர் நாளா? அல்லது செந்நீர் நாளா? என்பதை ஆராய்ந்து-செந்நீர் சிந்தவும் தயாராக இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை வரவேண்டும் என்பதை நண்பர் லத்தீப் அவர்கள் மிக உணர்ச்சியோடு இங்கே குறிப்பிட்டார்கள்.
அகில இந்திய மட்டத்திலே எந்தக் கட்சியிலே இருந்தாலும் கூட, தமிழன் என்கிற உணர்வோடு மொழியோடு கலந்த தேசியம்தான் உண்மையான தேசியம், உருப்படியான தேசியம் என்பதை எடுத்துக்காட்டி, அந்த தமிழனுக்குக் குரல்கொடுக்க – தமிழகத்துக்கு குரல்கொடுக்க என்றென்றும் தயாராக இருப்பேன் என்பதை இன்றைக்கு ஜனதா கட்சியிலே இருந்தாலும் கூட, நீண்ட நெடுங்காலம் அண்ணா அவர்களுடைய அருகிலே இருந்த காரணத்தால் அந்த உணர்வு மங்காமல் இன்றைக்கும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலே என்னுடைய நண்பர் செழியன் அவர்கள் ஆழமான அழுத்தந் திருத்தமான, ஆணித்தரமான கருத்துக்களை இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.
தமிழ் ஈழம் பெறவும், செத்துக்கொண்டிருக்கிற தமிழின மக்களைக் காக்கவும் தாய்த் தமிழகத்தினுடைய கொடி, ஐ.நா மன்றத்தினுடைய வாயிற்புறத்திலே பறந்திட வேண்டும்: அன்றைக்குத்தான் தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று திராவிடர் கழகத்தினுடைய கொள்கை பரப்புச் செயலாளர் செல்வேந்திரன் அவர்கள் இங்கே முரசு கொட்டினார்கள்.
தமிழ் ஈழத்திலே தங்களுடைய இன்னுயிரையும் தருவதற்குத் தயாராகப் போர்க்கொடி உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிற வீராங்கனைகளும், வீரர்களும் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரைகளையும் கேட்டீர்கள். நானும் இந்த மேடையிலே அமர்ந்து அவர்களுடைய உரைகளைக் கேட்டபோது, வௌ;வேறு கோணத்திலே அவர்களுடைய கருத்துக்கள் இங்கே வெளியிடப்பட்டன என்றாலும் கூட, அனைத்து கருத்துக்களும் ஒரே குறிக்கோளோடு தமிழ்ஈழம் காண வேண்டும். விடுதலை பெறவேண்டும் என்ற அந்த அடிப்படையிலே தான் ஒலித்தன என்பதை மறந்து விடக்கூடாது.
கடந்த ஆண்டு இலங்கைச் சிறையிலே விடுதலை வீரர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழ்க்குல மங்கையர் மானமிழந்து, மழலைகள் தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டு, தமிழர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டு, இலங்கை எரிகிறது என்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதே பெரியார் திடலில் இதே மன்றத்தில் வீரர்களாக – தியாகிகளாக மாண்ட தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட விடுதலை வீரர்களுடைய படங்களைத் திறந்து வைத்து நான் உரையாற்றியபொழுது சொன்னதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இலங்கையிலே தமிழ் ஈழம் அமைவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற பணியாற்றிக் கொண்டிருக்கிற, உயிரைத் திரணமாக மதித்து போராடிக் கொண்டிருக்கிற வாலிபர்களே! தமிழ் இளைஞர்களே! உங்களுடைய உறுதியை நான் மெச்சுகிறேன், வாழ்த்துகிறேன், ஆனால் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட எப்போது தொடங்கப் போகிறீர்கள்? அந்த தொடக்கத்தை உடனடியாக செயல்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அன்றைக்குக் கேட்டுக்கொண்ட அந்த வேண்டுகோள் அப்படியே இருக்கிறது.
இதைப் போலவே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப் பார்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே கேட்டுக் கொண்டேன் - நீங்கள் இலங்கையிலே ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையை அகற்ற இராணுவத்தை அனுப்பிட வேண்டும்: ராணுவத்திற்குப் பதிலாக வட்ட மேசை மாநாடு: பேச்சு வார்த்தை என்று நீங்கள் திட்டமிடுவீர்களேயானால், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு காலங்கடத்தி மீண்டும் தொடர்ந்து தமிழின மக்களை இலங்கையிலே கொடுமைப்படுத்த, கொன்று குவிக்க ஜெயவர்த்தனே வலு தேடிக் கொள்வார். எனவே அதற்கு இடந்தராதீர்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
இந்திரா காந்தி காதிலே ஊதிய சங்கும், இளம் தமிழ் விடுதலை வீரர்களுடைய காதிலே ஊதிய சங்கும் ஒன்றாகவே போய்விட்டது என்பதை மிகுந்த மனவேதனையோடு நான் இந்த மன்றத்திலே எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
இங்கே நான் கொஞ்சம் பட்டவர்த்தனமாக பேச விரும்புகிறேன். உரிமையோடு பேச விரும்புகிறேன். மேடையில் இருக்கிற யாரும் தவறாகக் கருதமாட்டார்கள் என்கிற எண்ணத்தோடு பேச விரும்புகிறேன்.
ஒரு குடும்பத்திலே இருக்கிற மூத்தவனோ அல்லது பாசத்திற்குரியவனோ ஒன்றைச் சுட்டிக்காட்டி குற்றத்தை குற்றம் என்று கோடிட்டுக் காட்டினால் உண்மையிலே ரத்தபாசம் உள்ளவர்கள் எப்படி கோபித்துக் கொள்ள மாட்டீர்களோ அதைப் போல நீங்களும் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன்.
இங்கே நண்பர் கோவை மகேசன் பேசும் போது இலங்கையிலே அமைதியான முறையில் அமிர்தலிங்கம் அவர்களும், மற்றவர்களும் இப்போது நடத்துகின்ற போராட்டம் தேவையற்றது: அது பலனளிக்கக் கூடியதல்ல என்ற வகையில், அங்கேயுள்ள விடுதலை வீரர்கள் அல்லது புலிகள் குறுக்கிட்டு அவர்களைத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்று இங்கே சொன்னார்.
அதை நேரடியாக மறுக்காவிட்டாலும் திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் வன்முறை – அமைதியான முறை இவைகளுக்குள்ள வேறுபாடு, முரண்பாடு இவைகளையெல்லாம் விளக்கி – தாங்கள் எடுத்த நிலைக்கு எது காரணம் என்பதை விளக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரையில் திரு. அமிர்தலிங்கம் அவர்களுடைய தலைமையில் இயங்குகிற தமிழர்களுடைய ஐக்கிய கூட்டணியானாலும் அல்லது தீவிர இளைஞர்களுடைய – விடுதலைப் போராளிகளுடைய தலைமையில் இயங்குகிற ஐந்தாறு விடுதலை பேரியக்கங்களானாலும் - அவைகளை நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
உணர்வுபூர்வமாக எல்லோரும் ஒரே குறிக்கோளோடு தான் பாடுபடுகிறார்கள் என்பதில் எனக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஆனால் ஒற்றுமையாகச் செயற்படவில்லையே! தமிழீழம் சுதந்திரம் பெற்ற பிறகு ஒருவருக்கொருவர் யார் ஆட்சிப் பொறுப்பில் அமர்வது என்பதில் வேண்டுமானால் போட்டிபோட்டுக் கொள்ளுங்கள், யார் விடுதலையைப் பெறுவது என்பதில் போட்டி இருந்தால் கூட வரவேற்கலாம். ஆனால் விடுதலை பெறுகிற நேரத்தில் இவன் உயிரோடு இருக்கலாமா என்று எண்ணுகின்ற அளவிற்கு உங்கள் உள்ளத்திலே வெறுப்புக் கோட்டை கட்டப்பட்டு விடுமேயானால் எங்களிடம் நீங்கள் உதவியை எதிர்பார்க்கிற நேரத்திலே நாங்கள் குழப்பத்திற்காளாகி உங்கள் முன்னால் நிற்கிறோம் என்பதை தயவுசெய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அரும்பாடுபட்டு நான் பலமுறை சந்தித்து சந்தித்து இந்த விடுதலை இயக்கங்களின் இளம் தோழர்களிடம் பேசி, பேசி ஒருவேளை என்னுடைய முயற்சியினாலோ அல்லது என்னைப் போல வேறு பலருடைய முயற்சியினாலோ – எனக்குத் தெரியாது: அல்லது அந்த இளைஞர்களே மனப்பக்குவம்பெற்று அந்த முடிவுக்கு வந்தார்களோ தெரியாது: அந்த இயக்கங்களில் ரெலோ(வுநுடுழு) என்கிற ஸ்ரீசபாரத்தினம் தலைமையில் இயங்குகிற இயக்கமும், பாலகுமார் தலைமையிலே இயங்குகிற (நுசுழுளு) என்கிற இயக்கமும், பத்மநாபா தலைமையிலே இயங்குகிற (நுPசுடுகு) இயக்கமும் - இந்த மூன்று இயக்கங்களும் ஓரணியில் திரண்டு – அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கூட்டணியாக உருப்பெற்று – தமிழ் ஈழத்தை முழுமையான சுதந்திர நாடாக ஆக்குவது – உழைக்கும் மக்களைக் கொண்ட அரசை உருவாக்குவது – முதலாளிகளுக்குச் சொந்தமான வங்கிகளை, நிறுவனங்களை, தொழிலாள விவசாய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவது என்கிற ஒரு சமதர்ம சமதத்துவ நோக்கோடு சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும்: ஈன்றெடுக்க வேண்டும் என்ற நிலையிலே இன்றைக்கு ஒன்றுகூடியிருக்கிறார்கள்.
இன்னும் இரண்டு பேரணிகள் இருக்கின்றன. ஒன்று முகுந்தன் அவர்கள் தலைமையிலே இயங்குகிற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (Pடுழுவுநு) இன்னொன்று பிரபாகரன் அவர்கள் தலைமையிலே இயங்குகிற விடுதலைப் புலிகள் இயக்கம் (டுவுவுநு) அந்த இரண்டு இயக்கங்களும் இந்த மூன்று இயக்கங்களோடு இணைந்து – அல்லது அவர்கள் விரும்பினால் அந்த இரண்டோடு இந்த மூன்று இயக்கங்களும் இணைந்து – யார் யாரோடு இணைவது என்று பார்க்காமல் இந்த ஐந்து பெரும் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் பிரச்சினை. அது என்னுடைய கோரிக்கை! ஆசை! அவா! அது நிறைவேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் கேட்கலாம், கருணாநிதி அவர்களே! தமிழகத்திலே உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் போட்டியில்லையா? என்று கேட்கலாம்.
நான் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வை மையமாக வைத்துச் சொல்லுவேன்.அந்தப் போட்டிகூட எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதிலே யார் முந்தி என்ற போட்டி எங்களுக்குள்ளே இருக்கலாமே தவிர இலங்கைத் தமிழர்கள் வீழ்ந்துவிட வேண்டும் என்ற நிலையிலே போட்டி இல்லை என்பதை இன்றைக்கு நான் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்துகிறேன்.
ஒருவேளை இதில் எம்.ஜி.ஆரை முந்த விடுவதா என்று நான் கருதியிருந்தால் இன்று முதல் அந்த எண்ணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
அதைப் போல கருணாநிதி என்னை மிஞ்சி விடுவதா? என்று
எம்.ஜி.ஆர் எண்ணியிருப்பாரேயானால் அவரும் அந்த எண்ணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவரை நான் யாசித்துக் கொள்கிறேன்.
எனவே தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தமிழர்களின் நலத்திலே அக்கறை உள்ள கட்சிகளின் சார்பாக, தமிழ் இளைஞர்களையும், தமிழ் விடுதலை இயக்கத்தை நடத்துகின்ற ஈழத்திலே இருக்கின்ற அமிர்தலிங்கம் போன்ற பெரியவர்களையும் நான் இறைஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் - வணங்கிக் கேட்டுக் கொள்வதெல்லாம் - பணிந்து கேட்டுக்கொள்வதெல்லாம் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! ஓற்றுமையோடு செயல்படுங்கள்! அப்படிச் செயற்படுவீர்களேயானால் ஐந்து கோடித் தமிழ் மக்களும் உங்கள் பின்னால் வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான்!
மங்கையற்கரசி அம்மையார் இங்கே பேசும்போது காலைப் பத்திரிகைகளைப் பார்த்துத் திகைத்துப் போனேன் என்று குறிப்பிட்டார்கள்.
நானும் கூட திகைக்கவில்லை. ஆத்திரப்பட்டேன். ஆத்திரப்பட்டது யாரிடம் என்றால் முரசொலி துணையாசிரியர் மீது!
அவர்களை உடனடியாக அழைத்து இந்தச் செய்தியை இவ்வளவு பெரிய தலைப்பு போட்டு ஏன் போட்டீர்கள்? செய்தியைப் படிக்கும் போது ஆயுதத்தினால்தான் விடுதலை பெறமுடியும் எனத் தலைப்புப் போட்டிருந்தாலும் கூட முழுச் செய்தியைப் படிக்கிற நேரத்தில் இலங்கையிலே விடுதலை கோருகின்ற பெரியவர்களுக்கம் - இளைஞர்களுக்கும் இடையிலே ஒரு பெரிய கலகம் மூண்டுவிட்டதைப் போல அல்லவா செய்தி அமைந்து விட்டது! இதை ஏன் போட்டீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் போட்ட செய்தியாக அதை வெளியிடவில்லையே! யு.என்.ஐ நிறுவனம் கொடுத்த செய்தியை அல்லவா வெளியிட்டிருக்கிறோம் என்று சொன்னார்கள்.
நான் அவர்களிடத்தில் செய்திகளை மாத்திரம் போடுகின்ற பத்திரிகையாக முரசொலி இருந்தால் நீங்கள் அப்படிப் போடலாம். ஆனால் நம்முடைய சிந்தையிலே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் குடிகொண்டிருக்கின்ற காரணத்தினால் நீங்கள் அந்தச் செய்தியை அப்படிப் போட்டிருக்கக் கூடாது என்று சொல்லி வெளியூருக்குப் போகின்ற முரசொலி பதிப்பில் இதை மாற்றி, தலைப்பில் வேண்டுமானால் வேகம் இருக்கலாம். ஆனால் உள்ளே இருக்கின்ற செய்தியில் விடுதலைப் போராளிகளிடையே மனக்கசப்பு இருப்பது போன்ற செய்தியை வெளியிடாதீர்கள் என்று
கூறிவிட்டுத்தான் இங்கே வந்தேன்.
ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடத்திலே பகை தோன்றாதா அவர்களது பாசறையிலே பிளவு ஏற்படாதா? அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நிற்க மாட்டார்களா? என்றெல்லாம் கருதுகின்ற கருநாக எண்ணமுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படிப்பட்ட செய்தி செந்தேனாக இனிக்கின்றது: செங்கரும்பாகச் சுவைக்கின்றது.
எனவேதான் அந்தச் செய்திகளை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள்.
ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அமைதி வழியில் போராட்டத்தை நடத்துகின்றவர்களும் உண்டு. அதே நேரத்தில் தீவிரமான முறையிலே போராட்டத்தை நடத்துகின்றவர்களும் உண்டு.
நீ எந்தப் பக்கம்? என்று கேட்டால், நான் இரண்டு பக்கமும்தான்! இதுதான் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் என்னுடைய நிலை!
அவர்கள் தாங்கள் விடுதலைக்காக மேற்கொண்டிருக்கின்ற அமைதி வழியையும் நான் வரவேற்கின்றேன். அதே நேரத்தில் வன்முறை வழியை தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அதற்கு அவர்கள் காரணமல்ல! வன்முறையைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. ஆகவே தேர்ந்தெடுத்தார்கள். எனவே அதையும் நான் வரவேற்கின்றேன். இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்காக உத்தமர் காந்தியடிகள் அகிம்சா வழியை மேற்கொண்டார். அதே நேரத்திலே பகத்சிங் பலாத்கார வழியை மேற்கொண்டார். நேத்தாஜி, வன்முறைதான் - ஆயுதப் புரட்சிதான் உகந்தமுறை என்று அறைகூவல் விடுத்தார்.
தீவிரவாத இளைஞர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்கள் விடுதலை பெற ஆயுதம் தான் பரிகாரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற – நம்பிக் கொண்டிருக்கின்ற என்னுடைய அன்புக்குரிய தம்பிமார்களுக்கு – உடன்பிறப்புகளுக்கு சொல்லிக் கொள்கிறேன். ஒன்றை மறந்து விடாதீர்கள்! இன்றைக்கு வந்த செய்தி உண்மையாக இருக்குமானால் - கோவை மகேசன் அது உண்மைதான் என்பதைப்போல: அது நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதைப் போல: அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு என்று உத்தமர் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த போதுவன்முறையில் நம்பிக்கை கொண்ட தேசத் தலைவர்கள் யாரும் உண்ணாவிரதத்தால் இந்தியா விடுதலை பெறாது என்று சொல்லியிருப்பார்கள் - ஆனால் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குச் சென்று கலகம் விளைவித்திருக்க மாட்டார்கள். அது இந்திய நாட்டின் சரித்திரம்!
நான் இதைச் சொல்வது சில பேருக்குக் கசப்பாக இருக்கலாம். சிலபேருக்கு விரும்பத்தக்க ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கத் தோன்றுவதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தோன்றுவதெல்லாம் விடுதலைக்காகப் பாடுபடுகிநார்கள் சரி! நாமும் அவர்களுக்காக நம்முடைய நினைவையெல்லாம் தேக்கி வைத்திருக்கிறோம். இல்லையென்று யாரும் கூறமுடியாது. அவர்களுக்காக நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற இன்னல் சாதாரணமானதல்ல. எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருக்கின்றோம். இந்தத் தாய்த் தமிழகத்திலே உள்ள இளைஞர்கள் பலர் தீக்குளித்து மாண்டிருக்கின்றார்கள். இலங்கைத் தீவினிலே தமிழனின் கதி இப்படியாகிவிட்டதே என்று!
இவ்வளவும் தமிழ் நாட்டின் சார்பாக இலங்கையில் வாடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்காக காட்டப்படுகின்ற ஆதரவாக இருக்கின்ற நிலையில், நாங்கள் மனம் வெதும்புகின்ற அளவுக்கு இவ்வளவுதானா? இவர்களிடம் ஈழத் தமிழகத்தை ஒப்படைத்தால் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்கின்ற அவநம்பிக்கையை எங்களுக்கு உருவாக்குவார்களேயானால் நிச்சயமாக அப்படி ஒரு ஈழத்தமிழகம் வேண்டுமா? என்று சலிப்போடு கேட்கின்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டுவிடும்.
எங்கள் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று கவலையில்லை. நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் இங்கு பேசிய காசி ஆனந்தன் குறிப்பிட்டார்.
அப்படிச் சொன்னாலும் கூட யார் நிற்கிறார்கள் என்ற கவலை அவருக்கு இருப்பது எனக்குத் தெரியும். யாரையும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர் யாரை எதிர்பார்க்கிறார் என்பதும் புரியும்.
எனவே எங்களுக்குக் கவலையில்லை – யாரையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் சொன்னது ஒரு போர் வீரன், களத்திலே கையிலே கட்கம் ஏந்தி செல்லுகிற நேரத்தில் தனக்காக வாதாட ஆதரவு தர யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் அவன் அந்தப் போரில் வெற்றியடைய முடியாது.
வேலும் வாளும் உண்டாக்கிய இரத்தக் கடலில் பயங்கர மூச்சு விட்டுக்கொண்டு மிதந்து செல்லும் வீரர்களின் மண்டை ஓடுகளை முத்தமிட்டபடி, பயணம் நடத்தும் முறிந்த எலும்புகளையும், அறுந்த நரம்புத் துகள்களையும் கண்டு முகாரிபாடாமல், முதுகு காட்டாமல், முகம் சுளிக்காமல் முன்னேறு நீ! முன்னேறு நீ! என்று முரசொலித்து, எஞ்சிய வீரர்களை நெஞ்சுரம் கொள்ளச் செய்து, எந்த நேரத்தில், எந்தப் பக்கமிருந்து ஈட்டி பாயுமோ எதிரியின் கணைபாயுமோ என்று சாவு முகட்டிலே வினாடிகளைக் கணக்குப் பார்ப்பது வீரர்களுக்கு அழகில்லை என்ற போர்க்களத்து அரிச்சுவடியைத் தவறியும் மறந்து விடாமல் மரணம், மாவீரனுக்குத் தரப்படும் மலர்ச்செண்டு மங்கையின் இதழைவிடச் சுவையானது என்ற மனோபலத்தோடு படையை நடத்திச் செல்பவனே பராக்கிரமசாலி! பைந்தமிழன்!
எனவே களத்தில் நிற்கும் வீரன் எதற்கும் கவலைப்படக் கூடாது என்ற கருத்திலே சொல்லியிருப்பாரேயானால் கவிஞர் காசி ஆனந்தன் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் தாய்த் தமிழர்கள் ஐந்துகோடி பேருடைய ஆதரவு எங்களுக்குத் தேவையில்லையென அவர் கூறியிருக்க மாட்டார். இந்த ஆதரவைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என நிச்சயமாக அவர் சொல்லியிருக்க மாட்டார்.
இந்த ஆதரவு தேவையென்றால், எங்களது ஆதரவுக்காக நீங்கள் கவலைப்படுவது உண்மையானால் நான் உங்களுக்கு உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லுகிறேன்.
நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், எங்களது அத்தனை பேருடைய ஒத்துழைப்பும் - ஐந்து கோடி தமிழர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் - நிச்சயமாகக் கிடைக்கும் என்று கண்ணீரால் எழுதி கையெழுத்திட்டுத் தருகிறேன்.
Wednesday, October 8, 2008
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவோருக்கு ஒரு பகிரங்க அறிவித்தல்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
கலைஞர் மு. கருணாநிதி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அதாவது வெற்று வாய் மாய்மாலம் தான் பண்ணி இருக்கிறார், சுருங்க சொன்னால் நிறைய Melo Drama போட்டிருக்கிறார். விளக்கியதற்கு நன்றி..
Post a Comment