அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, October 10, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 8

மந்திரங்கள் ஏவாமல் மயங்க வைத்தான்
மாயங்கள் புரியாமல் மலைக்கச் செய்தான்
தந்திரங்கள் இல்லாமல் தலைவன் ஆனான்
தண்டனைகள் பேசாமல் தணியச் செய்தான்
அந்தரங்க ஒற்றரில்லா அரசனானான்
அண்ணலெங்கள் காந்தி செய்த அற்புதங்கள்
எந்த ஒரு சக்தியினால் இயன்றதென்று
எல்லோரும் கூர்ந்தறிய எண்ணவேண்டும்.

போன இடம் எங்கெங்கும் புதுமை கொள்ளும்
புகுந்தமனை ஒவ்வொன்றும் பூரிப்பாகும்
கானகமும் கடிமனைபோல் களிப்புச் செய்யும்
கல்லணையும் மெல்லணையாய்க் கனிவுகாட்டும்
ஈனர்களும் தரிசித்தால் எழுச்சி கொள்வர்
இமையவரும் அதிசயித்து இமைத்து நிற்பர்
தீனரெல்லாம் பயமொழிவர் தீரன் காந்தி
திருக்கதையே தெருக்களெல்லாம் திகழவேண்டும்.

No comments: