அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, October 1, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா?

நவராத்திரியை முன்னிட்டு நாம் எமது சநாதன தர்மம் எனப்படும் வைதீக நெறியில் கூறப்பட்ட சில நற்கருமங்களைப்பற்றி ஆராயலாம் என்றிருக்கிறோம். இதில்
1. பற்றற்று வேலைசெய்யுங்கள்.
2. இயற்கையே செயல்புரிகிறது.
3. சுயநலம் கூடாது.
4. உலகியல் போகாததுவரை ஆன்மீகம் கிடையாது.
5. எது சமயம்?
6. இறைவன் அவதரித்து நம்மை வழிநடத்துகிறார்.
7. உனக்கு நீயே நண்பனும் பகைவனும்.
8. பலவீனமே பாவம்.
9. யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள்.
10. இயல்புக்கேற்ற வழியைப் பின்பற்றுங்கள்.
11. ஆன்மசொரூபம் நீங்கள்.

என்ற 11 விடயங்களைப் பற்றிக் கூறலாம் என்பதே எமது ஆதங்கம்.
அதற்கு முன்னதாக எமது சநாதன மார்க்கம் மனித வாழ்க்கைக்கு வகுத்துள்ள நெறிமுறைகளை இன்று உலகமே வியந்து பாராட்டுகிறது. இந்த நெறிமுறைகள் மனிதனை வாழ்வாங்கு வாழச் செய்கிறது. அவனைப் பண்படுத்தகிறது. இறையை அறியும் உயர்நிலைக்கு அவனைக் கொண்டு செல்கிறது.
புருஷார்த்தங்கள் ( உறுதிப் பொருட்கள் )
அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்), இன்பம்(காமம்), வீடு(மோட்சம்) என்பவை நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படும்.
1. அறம் - தனது கடமைகளை ஒவ்வொருவரும் சரிவரச் செய்ய வேண்டும். அறநெறிகளைக் காத்து வாழ்க்கை நடத்த வேண்டும்.
2. பொருள் - நல்ல வழியில் பொருள் சேர்க்க வேண்டும். மாறாக தீய வழிகளில் பொருள் சேர்க்க முனைபவன் பாவத்தையே சேர்க்கிறான். பணம் சம்பாதிக்கும்பொழுது அதில் பாவம் கலக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும். எவ்வழியிலேனும் பணம் சேர்க்க வேண்டும் என்ற தவறான ஆசை இன்றைய மனிதனை ஆட்கொண்டு உள்ளது. இவர்கள் பாவத்தையே சேர்க்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை.
3. இன்பம் - மனிதனை இவ்வுலகில் வாழ்ந்திடச் செய்வதற்காக பல்வேறு இன்பங்களை இறைவன் இவ்வுலகில் படைத்துள்ளான். இன்பத்தைத் தேடாத மனிதன் இல்லை. எந்த இன்பத்தை மனிதன் அனுபவிக்கலாம் என்பதை எமது சநாதன நெறி மிகவும் செம்மையாகச் சுட்டிக்காட்டுகிறது. பிறருக்குத் துன்பம் ஏற்படாதவாறு நீதி நெறியைப் பின்பற்றி உலக இன்பங்களை மனிதன் அனுபவிக்கலாம். அதுவே இன்பம்(காமம்).
4. வீடு – மேற்கூறியவாறு அறம் காத்து, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்த பின் இறைவனையே எண்ணி இம்மூன்றையும் விட்டு, வீடு பேற்றை அடைவது வீடுபேறு அல்லது முக்தி ஆகும். இம்முயற்சியை மேற்கொண்டு உய்வு பெறவேண்டும் என்று எமது நெறி போதிக்கிறது.

புருஷார்த்தங்களின் பெருமை

ஞானிகள் வகுத்துள்ள மேற்கூறிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களும் மனிதனை இவ்வுலகில் வாழ்வாங்கு வாழவும், பாவம் கலவாத இன்பங்களை அனுபவிக்கவும், அதே நேரத்தில் அவனைப் பண்படுத்தி அவ்வுலக வாழ்வின் உயர்வைப் பெறுவதற்கும் வழிவகுக்கின்றன.

No comments: