1. பற்றற்று வேலை செய்யுங்கள்.
பற்றற்று இருங்கள். அதுதான் முழு இரகசியம். புற்று வைத்தீர்களானால் துன்பப்படுவீர்கள். தற்காலத்தில் இதனை எத்தனையோவிதங்களில் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். பற்றின்மை என்றால் குறிக்கோள் இன்மை என்று சிலர் கருதுகின்றார்கள். இதுதான் அதன் பொருளானால் இதயமற்ற விலங்குகளும், சுவர்களுந்தான் நிஷ்காமகர்மத்தின் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழும். உண்மையான நிஷ்காமகர்மம் செய்பவன் விலங்கைப்போலவோ, ஜடத்தைப்போலவோ உள்ளத்தில் ஈரம் இல்லாமலோ திகழமாட்டான். உலகனைத்தையும் தழுவும் அன்பும் கருணையும் அவனது இதயத்தில் நிரம்பியுள்ளது.
பற்றற்ற அன்பு உங்களுக்கு வேதனை தராது. எது வேண்டுமானாலும் செய்யுங்கள். எதுவும் உங்களைத் துன்புறுத்தாது. என்னுடையது என்ற எண்ணத்துடன் எதையும் செய்யாதீர்கள். கடமைக்காக கடமை, வேலைக்காக வேலை.நாம் சிறிது வேலை செய்கிறோம். உடனே அயர்ந்து விடுகிறோம். ஏன்? நாம் அந்த வேலையில் பற்று வைக்கிறோம். நாம் பற்று வைக்காவிட்டால் நமக்கும் வேலையுடன் கூடவே அளவற்ற ஓய்வும் கிடைக்கும்.இத்தகைய பற்றின்மையை அடைவது எவ்வளவு கடினமானது! அதனால் கிருணர் அதை அடைவதற்கான சாதாரண வழிகளையும் முறைகளையும் காண்பிக்கிறார். மிகவும் எளிய வழி வேலையைச் செய்துவிட்டு பலனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது.
நமது ஆசையே நம்மைப் பிணைக்கிறது. நமது வேலையின் பலனை ஏற்றுக்கொள்வதனால் அவை நல்லதானாலும் சரி கெட்டதானாலும் சரி அவற்றை சகித்தேயாகவேண்டும். ஆனால் நமக்காக வேலை செய்யாமல் இறைவனின் மகிமைக்காக நாம் வேலை செய்வோமானால் பலன்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும். செயல்புரியவே உனக்கு அதிகாரம். ஒருபோதும் பலனில் இல்லை.(2.47)
நீங்கள் வலிமையுடையவர்களாக இருந்தால் வேதாந்தத் தத்துவத்தைப் பின்பற்றுங்கள். சுதந்திரமாக இருங்கள். அது உங்களால் இயலாதென்றால் கடவுளை வழிபடுங்கள். இல்லாவிடில் ஏதாவது ஓர் உருவத்தை வணங்குங்கள். அதற்கான வலிமையும் உங்களிடம் இல்லாவிட்டால் இலாபத்தைக் கருதாமல் ஏதாவது நற்பணிகளைச் செய்யுங்கள். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் இறைபணியில் அர்ப்பணியுங்கள். தொடர்ந்து போராடுங்கள்.
Friday, October 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment