அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, October 3, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 2

குற்றமொன்று நாம்செயினும் காந்தியைப்போல்
கூசாமல் மன்னிப்புக் கோர வேண்டும்
மற்றவர்கள் பெருந்தவறு செய்திட்டாலும்
மன்னித்துக் காந்தியைப்போல் மறக்கவேண்டும்
உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்திடாமல்
ஓரமின்றிக் காந்தியைப்போல் உண்மைகாட்டி
சற்றுமவர் துன்பமுறாச் சலுகைபேசி
சரிப்படுத்தும் காந்தியைப்போல் சகிப்புவேண்டும்.

எத்தனைதான் கடிதங்கள் வந்திட்டாலும்
காந்தியைப்போல் சலிப்பின்றி எல்லோருக்கும்
நித்த நித்தம் தவறாத கடமையாக
நிச்சயமாய்ப் பதிலெழுதும் நியமம்வேண்டும்
புத்திகெட்ட கேள்விசிலர் கேட்டிட்டாலும்
பொறுத்துவிடை காந்தியைப்போல் புகலவேண்டும்
பத்தியம்போல் பதட்டமுள்ள பாஷை நீக்கி
பரிவாகப் பணிமொழிகள் பதிக்கவேண்டும்.

No comments: