4. உலகியல் போகாதது வரை ஆன்மீகம் கிடையாது.
அர்ஜூனா! ஒருமைப்பட்ட மனமே வெற்றிபெறும். இரண்டாயிரம் பொருட்களில் சிதறிப்போன மனம் தனது ஆற்றலை இழந்துவிடுகிறது. வேதங்களுக்கு மேல் எதுவுமில்லை என்று சிலர் இதமாகப் பேசலாம். அவர்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறார்கள். வேதங்களின் சக்தியால் எலகிலுள்ள இன்பப் பொருட்களை அடைய விரும்புகிறார்கள். அதற்காக வேள்விகளைச் செய்கிறார்கள். (2. 41 - 43)
அப்படிப்பட்டவர்கள் இந்த சுகபோக எண்ணங்களைக் கைவிடாதவரையில் ஆன்மீக வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள். ( 2.44)
இது இன்னொரு முக்கியமான பாடம். உலகியல் ஆசைகளை விடாதவரை ஆன்மீகம் கிடையாது. புலன்களில் என்ன இருக்கிறது? இவை வெறும் மன மயக்கம். இறந்த பின்னும் சொர்க்கத்தில் கூட அவற்றை ஜோடிக் கண்களை மூக்கை விடாமல் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் அங்கே தங்களுக்கு இங்குள்ளதைவிட அதிகப் புலன்களிருக்கும் என்று எண்ணுகின்றனர். அரியாசனத்தில் வீற்றிருப்பவனாக இறைவனை இறைவனுடைய பௌதீக உடலை என்றென்றும் கண்டுகொண்டிருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய மனிதர்களின் ஆசைகளெல்லாம் உடலைப்பற்றியவை. உணவு, நீர், இன்பம் பற்றியவை. இந்த உலகியல் வாழ்வின் தொடர்ச்சியே அது. வாழ்விற்கு அப்பால் எதையும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. இந்த வாழ்க்கையெல்லாம் உடலுக்குத்தான். முக்திக்கு காரணமான மன ஒருமைப்பாட்டை இத்தகைய மனிதன் ஒருபோதும் அடைய மாட்டான். (2.44)
5. எது சமயம்?
சமயமென்பது கோட்பாடுகளே என்ற கருத்தை அகற்றிவிட்டால் உண்மையை இன்னும் தெளிவாக நாம் புரிந்து கொள்ளமுடியும். பாரதத்தில் சமயமென்பது அனுபூதியே தவிர வேறல்ல. போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு ஒருவன் எப்படிப் போகிறான்? நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியிலா, மின்சார வண்டியிலா, தரையில் உருண்டு கொண்டா என்பது முக்கியமல்ல.
சமயமென்பது ஆன்மாவை ஆன்மாக உணர்வது. நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நேர்மாறாக, ஆன்மாவை ஜடப்பொருளாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். அழிவற்ற கடவுளிலிருந்து மரணத்தையும், ஜடப்பொருளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அழிகி;ன்ற, அறிவற்ற ஜடப்பொருளிலிருந்து ஆன்மாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
சமயமென்பது வளர்ச்சிபற்றியது என்பதை உணரவேண்டும். அது வெறும் பொருளற்ற பிதற்றல்களல்ல. 2000 ஆண்டுகளுக்குமுன் ஒரு மனிதன் கடவுளைக் கண்டான். ஒருவன் கடவுளைக் கண்டது, உங்களையும் உற்சாகப்படுத்தி அவ்வாறு செய்யும்படி தூண்டலாம். அதற்கு மேலாகச் சிறிதளவுகூட அது உங்களுக்கு உதவிசெய்யாது. முன்னோர்களின் உதாரணங்களுடைய முழுப்பயனும் அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றுமில்லை. செல்லும் வழியிலுள்ள கைகாட்டிக் கம்பங்களே அவை. ஒருவன் உண்டால் இன்னொருவனின் பசி தீராது. ஒருவன் கடவுளைக் காண்பது மற்றொரு மனிதனைக் காப்பாற்றாது. உங்களுக்கு நீங்களே கடவுளைக் காணவேண்டும்.
கடவுளென்ற ஒருவர் உண்டானால் அவர் உங்கள் கடவுளாகவும் என் கடவுளாகவும் இருக்க வேண்டும் என்பது பாரதத்தில் தொன்றுதொட்டு வரும் கருத்து. கடவுளென்று ஒருவர் உண்டென்றால் நீங்கள் அவரைப் பார்க்க முடியவேண்டும்.
6. இறைவன் அவதரித்து நம்மை வழிநடத்துகிறார்.
நீங்கள் எண்ணுவதுபோல் அவ்வளவு கொடியதல்ல உலகம். முட்டாள்களாகிய நாமே அதைக் கொடியதாகச் செய்துள்ளோம். நாமே பேய் பிசாசுகளைப் படைக்கிறோம். பிறகு அவற்றை ஓட்ட நம்மால் முடிவதில்லை. கையால் கண்களை மூடிக்கொண்டு யாராவது ஒளி தாருங்கள் என்று கதறுகிறோம். கண்களிலிருந்து கைகளை எடுங்கள். செய்ய வேண்டியது அவ்வளவுதான். நாம் நம்மைக் காப்பாற்றுவதற்காக தெய்வங்களையெல்லாம் கூப்பிடுகிறோம். ஒருவனும் தன்மீது பழி சொல்வதில்லை. அதுதான் இரக்கத்திற்குரியது. சமுதாயத்தில் ஏன் இவ்வளவு தீமை இருக்கிறது? என்ன காரணம்? சுகபோக நாட்டமும், சாத்தானும், பெண்ணும் என்கிறீர்கள்! ஏன் இவற்றை உருவாக்குகிறீர்கள்? அவற்றை உருவாக்குமாறு யாரும் உங்களிடம் சொல்லவில்லையே!
அர்ஜூனா! நீயும் நானும் பிறப்பு, இறப்புச் சக்கரத்தில் பலமுறை சுழன்றுவந்திருக்கிறோம். உனக்கு அவையெல்லாம் நினைவில்லை. நான் ஆதியில்லாதவன். பிறப்பில்லாதவன். படைப்பு அனைத்திற்கும் தலைவன். எனது இயற்கையை வசப்படுத்திக்கொண்டு நான் உருவெடுக்கிறேன். அறம் தாழ்ந்து மறம் தலையெடுக்கும்போதெல்லாம் மனித குலத்திற்கு உதவ நான் வருகிறேன். நல்லவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கம் ஆத்மீகத்தை நிலைநாட்டுவதற்கும் நான் அவ்வப்போது வருகிறேன். எவரெவர் எந்தெந்த வழியில் என்னை அடைய விரும்பினாலும், அவரவரை நான் அந்தந்த வழியில் அடைகிறேன். ஆனால் அர்ஜூனா, என் வழியை விட்டு யாரும் விலகிச் செல்ல முடியாது என்பதை அறிந்துகொள்( 4 . 5 - 8, 11)
யாரும் எப்போதும் விலகிச் சென்றதில்லை. எப்படிச் செல்லமுடியும்? எவரும் அவர் வழியிலிருந்து தவறமுடியாது.
Sunday, October 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment