அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, October 6, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? - பகுதி 5

7. உனக்கு நீயே நண்பனும் பகைவனும்.

உதவியில்லையே என்று ஏங்குவது மிகப் பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாதீர்கள். நாமே நமக்கு உதவி. நமக்கு நாமே உதவ முடியாவிட்டால் வேறு யாரும் உதவ முடியாது. உனக்கு ஒரே நண்பனும் நீயே! ஒரே பகைவனும் நீயே! உனக்கு உன்னைத் தவிர வேறு பகைவனுமில்லை. நண்பனுமில்லை. (6.5) இதுதான் முடிவான சிறந்த பாடம். அந்தோ! இதைக் கற்றுக் கொள்ளத் தான் எவ்வளவு காலமாகிறது. இதோ கைக்கு கிட்டிவிட்டது போல தோன்றுகிறது. அடுத்த நொடியில் பழைய அலை மோதுகிறது. முதுகெலும்பு உடைகிறது. நாம் பலமிழந்து மறுபடியும் மூடநம்பிக்கைக்கும் உதவிக்கும் கை நீட்டுகிறோம். அந்தப் பெருந்துன்பக் குவியலைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லாம் உதவியைத் தேடிய தவறான என்னத்தின் விளைவு!

8. பலவீனமே பாவம்

ஒரே ஒரு பாவந்தான் உண்டு. அதுவே பலவீனம். பலவீனமின்றி எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாவதற்கும் ஆயத்தமாயிருப்பவன் மட்டுமே மகான்.
எழுந்து தைரியமாகப் போராடுங்கள். பைத்தியக் காரத்தனத்திற்கு மேல் பைத்தியக் காரத்தனமாகச் சேர்த்துக்கொண்டே போகாதீர்கள். எந்தத் தீமை வரக் காத்துக் கொண்டிருக்கிறதோ அதனுடன் உங்கள் பலவீனத்தையும் சேர்க்காதீர்கள். உலகிற்கு நான் சொல்ல வேண்டுவதெல்லாம் அவ்வளவுதான். வீரர்களாக இருங்கள். ஆவிகளைப் பற்றியும் பேய்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். நாமே உயிருடன் உலவும் பேய்கள். பலவீனமான எல்லாவற்றிலிருந்தும் விலகிவிடுங்கள். அது சாவு. வலிமையானதென்றால் அதைப் பெற நரகத்திற்குச் செல்ல நேர்ந்தாலும் சென்று அதைப் பற்றிக் கொள்ளுங்கள். வீரர்களுக்கு மட்டுமே முக்தியுண்டு. அழகிற் சிறந்ததை அடைய வீரர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. தைரியத்தின் உச்சியை அடையாத யாருக்கம் முத்திபெறத் தகுதியில்லை.
பலவீனம் தளைகள் எல்லாம் கற்பனை. அவற்றைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னால் அவை மறைந்து ஒழிய வேண்டும். பலவீனமடையாதீர்கள். வேறு வழியில்லை. வீரர்களாக எழுந்து நில்லுங்கள். அச்சம் வேண்டாம். மூடநம்பிக்கை வேண்டாம். உண்மையை உள்ளபடியே எதிர்கொள்ளுங்கள். நமது துன்பங்களுள் மிகக் கொடிய துன்பமான மரணம் வந்தாலும் வரட்டும். நாம் உயிரை விடவும் துணிந்துள்ளோம். எனக்கு தெரிந்த சமயம் எல்லாம் அவ்வளவுதான்.
பலவீனம் மரணத்தின் அடையாளம். வாழ்க்கையின் அடையாளம் வலிமை.

1 comment:

KARMA said...

மிக அழகான, மற்றும் ஆழமான கருத்துக்களை கொண்ட பதிவுகள்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள். சேவைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.