அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, October 8, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? - பகுதி 7

10. இயல்புக்கேற்ற வழியைப் பின்பற்றுங்கள்.

எனது வழிதான் சிறந்ததென்று ஒவ்வொருவனும் நினைக்கிறான். ஆனால் அது உனக்கு மட்டுமே சிறந்தது. பாதை தெரிந்தவர்களும் தங்கள் இயற்கையால் தூண்டப்பட்டுச் செயல்புரிகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய இயல்பின்படியே செயல்புரிகிறார்கள். அவர்கள் அதை மீற முடியாது.(3.33)
ஒவ்வொருவனிடமும் அவனுக்கே உரிய தனி இயல்பு உள்ளது. அதன் அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதன் வழியாகத்தான் முத்திக்கு வழிதேடவேண்டும். குரு உனது இயல்பிற்கேற்ற வழியை உனக்குக் காட்டத் தக்கவராக இருக்கவேண்டும். உன்முகத்தைப் பார்த்தே அதைக் கண்டுபிடித்துக் கூற வல்லவராக இருக்கவேண்டும். மற்றவனின் வழியைப் பின்பற்ற ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் அது அவனது பாதை, உனது பாதையல்ல. பாதையைக் கண்டுபிடித்துவிட்டால் அதன் பிறகு நீ செய்ய வேண்டியது எதுவுமில்லை. கைகளை குவித்துக் கொண்டால் போதும். அலையின் வேகமே உன்னை முக்தியில் சேர்த்துவிடும். எனவே பாதையைக் கண்டுவிட்டால் ஒருபோதும் அதிலிருந்து பிறழாதே. உனது வழி உனக்கு மிகவும் இசைந்தது. ஆனால் அதன் காரணமாக அது மற்றவனுக்கு இசைந்ததாக இருக்கவேண்டும் என்பதில்லை.

11. ஆன்ம சொரூபம் நீங்கள்

நீங்கள் ஆன்மா. உங்களை ஆன்மாவாக உணருங்கள். அதற்கு எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள்.
உள்ளது ஒரு போதும் இல்லாமல் போகாது. இல்லாதது ஒருபோதும் உள்ளதாகாது. எனவே எது இந்த உலகமெல்லாம் பரவி நிற்கிறதோ அது தொடக்கமும் முடிவுமில்லாதது என்பதை அறிந்துகொள். அது மாறுபடாதது. மாறுபாடில்லா ஒன்றை மாற்றக் கூடியது இந்த உலகில் எதுவுமில்லை. இந்த உடலிற்கு ஆரம்பமும் முடிவும் இருந்தாலும் உடலில் உறைபவன் எல்லையற்றவன் முடிவில்லாதவன். (2. 16 – 18)
இதையறிந்து எழுந்துநின்று போர் செய், ஓரடிகூட பின்வாங்கக் கூடாது. அதுதான் கருத்து. எது வந்தாலும் சரி போராடு. நஷ்த்திரங்கள் பெயர்ந்து விழட்டும். உலகம் முழுவதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும். மரணமென்பது உடையை மாற்றிக்கொள்வதுதான். அதனால் என்ன? அதை உணர்ந்து போராடு. கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின்வாங்குவதால் நீங்கள் எந்தத் தீமையையும் கடந்தவிடமுடியாது.
நீங்கள் எல்லையற்றவர்கள். மரணமற்றவர்கள். பிறப்பற்றவர்கள். நீங்கள் எல்லையற்ற ஆன்மா. அடிமையாயிருப்பது உங்களுக்குப் பொருந்தாது. எழுந்திருங்கள். விழித்திருங்கள். எழுந்து நின்று போர்புரியுங்கள். மரணம் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ ஒருவருமில்லை. நீங்களே உலகனைத்துமாக இருக்கும்போது யார் உங்களுக்கு உதவமுடியும்?
சிலர் அதை (ஆன்மாவை) வியப்புடன் பார்க்கின்றனர். சிலர் வியந்து பேசுகின்றனர். பிறர் வியந்து கேட்கின்றனர். சிலர் அதைப் பற்றிக் கேட்டும் புரிந்து கொள்ளவில்லை. (2.29)

No comments: