இன்று இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் தமிழர்கள் அனைவரும் உணர்வுரீதியாக தமிழ்நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் கோரிக்கைகளை ஒன்றுபட்டும் தனித்தும் முன்வைத்து பேதமையற்ற நிலையில் தம்மன எழுச்சியை வெளிப்படுத்தும் அதேவேளை நாம் இலங்கைத் தமிழர்கள் என்ன மனோ ரீதியில் இருக்கிறோம் என்பதையும் சற்று விளக்கமாக பகுத்தறிந்து பார்க்கவும் விளக்கங்கள் சிலவற்றை தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன். இதே நேரம் பழைய சம்பவங்களையும் வரலாறுகளையும் மீட்டுப்பார்த்தல் அவசியம் எனவும் நான் எண்ணுகின்றேன். சில மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் சொல்லவேண்டிய அவசியமிருப்பதையும் நான் இச்சந்தர்ப்பத்தில் வெளியிடவும் விரும்புகின்றேன்.
ஏனெனில் பாரதம் ஒரு தடவை அனுபவப்பட்டதை தமிழ்நாட்டிலுள்ள பாரதக் குடிமக்கள் மறந்தாலும் எம்மால் மறக்க முடியவில்லை என்பதே உண்மை என்பதால் அதை எமது தமிழக உடன்பிறப்புக்களுக்கு தெளிவுபடுத்தவும் மீட்டுப்பார்க்கவும் இந்த இடத்தில் குறிப்பிட்டவர்களிடம் ஒரு தெளிவான நிலைப்பாட்டைப் பெற்றுக் கொள்ளவும் அவசியம் ஏற்படுகிறது.
பிராந்தியத்தில் வல்லரசாகியதோ இல்லையோ – தன் அண்டைநாட்டு விவகாரங்களில் பரோபகாரப் பணி புரிந்த இந்திய எமது இலங்கைப் பிரச்சனையில் ஒரு வரலாற்றுப் பதிவைப் பதித்ததை எவரும் மறுக்கமுடியாது. அது மறைந்த பாரதப் பிரதமர்கள் திருமதி இந்திரா காந்தி அவர்களினதும் அவருடைய புதல்வர் திரு. ராஜீவ் காந்தி அவர்களினதும் இலங்கைமீது காட்டிய அக்கறை ஆதீதமான மனிதாபிமானச் செயற்பாடு என்பதை இங்கு நான் தெட்டத்தெளிவாகத் தெரிவிக்க வேண்டியவனாக இருக்கின்றேன்.
1. 1983-08-16 இல் இந்திய மாநிலங்களவையில் பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரையில் - தனிப்பட்ட முறையில் நானும் எனது அரசாங்கமும் எனது கட்சியும் இந்தச் சபையில் அவர்கள் துன்பங்கள் பற்றிப் பேசியவர்களும் மிகவும் ஆழ்ந்தகவலைக்கு ஆளாகி இருக்கிறோம். நாங்கள் அச்செயல்களைக் கண்டித்துள்ளோம். நாங்கள் இன அழிப்பைக் கண்டிக்கிறோம். இலங்கைத்தமிழருக்கு இழைக்கப்படும் அநியாயங்களையும் அட்டுழியங்களையும் நாங்கள் கவலையோடு உணருகின்றோம். எனினும் கௌரவ அங்கத்தவர்களுக்கத் தெரியும் எவ்வளவுக்கு எங்களது உணர்ச்சிகள் பொங்கி எழுந்தாலும் அரசாங்கம் மிகவும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது. அதன் அர்த்தம் நாங்கள் தயக்கம் காட்டுகிறோம் பின்வாங்குகிறோம் என்பதல்ல. எங்களுடைய ஒவ்வொரு காலடியையும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு செயலையும் வெகு நிதானமாக செய்ய வேண்டும். ஏனெனில் அது இலங்கையில் வாழுகின்ற தமிழருக்குப் பாதகம் விளைவிக்கச் சாட்டாகிவிடும். இப்படிப் பேசிய அன்னை இந்திரா காந்தி 1984.10.31இல் சுட்டக்கொல்லப்பட்டார்.
2. திரு. ராஜீவ் காந்தி பின்னர் தனது தாயார் காட்டிய அதே அக்கறையுடன் தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டார். இலங்கையில் பொருளாதாரத் தடை ஏற்படுத்திய அன்றைய ஜே ஆர் அரசு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் சென்ற இந்திய அரசின் உணவுப் படகுகளை திருப்பி அனுப்பிவிட்டு வெற்றி கொண்டாடியது. ஜூன் 4, 1987 இல் இந்திய போர் விமானங்களின் உதவியோடு இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து உணவு பொட்டலங்களை துன்பப்பட்ட தமிழ் மக்களின் பசிதீர்க்கப் போட்டன. சரித்திரத்தை மாற்றிய இந்திய அரசின் மகத்தான பணிபற்றி எவருமே இப்போது அறியாமல் வீணாக இந்திய அரசின்மீது பழி சுமத்துவது வேதனைதருகிறது. 1987.7.29 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. தன் உயிரையே பணயம் வைத்து இந்தியப் பிரதமர் செய்த தன்னலமற்ற பணிகளுக்கும் இந்திய அரசுக்கும் இதற்கு தூண்டுகோலாக இருந்த அன்றைய தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் கட்சிகள் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக எம்மைக் காக்கும் கேடயமாக அன்போடு பாதுகாத்த தமிழக மக்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிப்பதாக அமரர் அ. அமிர்தலிங்கம் குறிப்பிட்டள்ளார். செல்வா ஈட்டிய செல்வம் -இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் நூலில் மிகவும் அருமையாக எழுதப்பட்டிருப்பதை பலரும் அறிந்திருப்பார்கள்.
3. பாரதப் பிரதமர் 02.08.1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எழுதிய பின்னர் சென்னை மரீனாக் கடற்கரையில் ஆற்றிய உரையில் - ….ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் இலங்கைக்குப் போகும் முன்னர் எல்லாத் தமிழ்ப் போராளிகளிடமும், அதிகளவு மிதவாத உணர்வு கொண்ட இலங்கைத் தமிழர்களிடமும் நான் பேசினேன். நீதி, மற்றும் சமத்துவத்தைப் பெற போராடும் இவர்களிடம் நான் ஆலோசனை மேற்கொண்டேன். நாங்கள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை தமிழ் போராளிகள் அனைவரும் புரிந்து கொண்டனர். இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்காமல் இலங்கைத் தமிழர்கள் கோரிய அனைத்தையும் தர இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
………..இலங்கையில் மூன்றில் ஒருபகுதி தனி மாகாணமாக்கப்பட்டு தமிழர்கள் அதில் பெரும்பான்மையினராக வசிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய அரசின்கீழ் இருக்கும் மாநிலங்கள் போன்றே மாநில சுயாட்சி உரிமையும் அவர்களுக்கு உண்டு.
…….நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப் பட்டுள்ளன. கருத்து வேறுபாட்டையும் வன்முறையையும் போரையும் நிறுத்தவேண்டிய நேரம் இது. இது புனரமைக்க வேண்டிய நேரம். தேசிய இணக்க உணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டம் உருவாகி இருக்கிறது. மறு இணக்கத்தையும் மறு சீரமைப்பையும் மேற் கொள்ள வேண்டிய இந்தக் கடமையில் நம்மால் இயன்ற எல்லா வகையிலும் நாம் உதவ வேண்டும். மேலும் அதிக வன்முறையாலும் மேலும் அதிக உயிரிழப்புகளாலும் நாம் அடைய வேண்டியது எதுவுமில்லை. அமைதியைக் கொண்டுவருவோம். உயிர் உடமை எதுவும் அழிவதைத் தடுப்போம். இந்த ஒப்பந்தத்திற்கு எதிரானோர் மீது நாம் இரக்கம் காட்டத் தேவையில்லை. ஏனென்றால் இந்த ஒப்பந்தத்திற்கு எதிரானோர் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் ஆவார்கள். சில போராளிக்குழுக்கள் ஓரளவு தயக்கம் காட்டுகிறார்கள். அது சொந்த பாதுகாப்பைக் கருதி ஏற்பட்டிருக்கக் கூடும் அல்லது இலங்கையின் எதிர்கால வாழ்வில் தங்களுக்குரிய இடம் என்ன என்பதைக் குறித்த கலக்கமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நான் உறுதி கூறியிருக்கிறேன். இந்த ஒப்பந்தம் அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடபகுதியில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் சீரமைப்புப் பணியில் பங்கும் பாதுகாப்பும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவோம்.
……..இது வன்முறைக்கு முடிவுகாணும் நேரம். பூசல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் இது நேரமல்ல. இலங்கையில் உள்ள பல்வேறு வகுப்பினருக்குமிடையே புதிய நட்புறவையும் இணைப்பையும் உருவாக்கி நாட்டை சீரமைப்பதற்கான அமைதியைக் கொண்டுவர வேண்டியநேரம். நுல்லெண்ணத்தையும் இணக்க உணர்வையும் ஏற்படுத்த நம்பிக்கையும் பற்றையும் ஏற்படுத்தவேண்டிய நேரம். இழப்புத்துயரில் வாடுவோரைத் தேற்ற வேண்டிய நேரம். புனரமைக்கவும் புத்துயிர் ஊட்டவும் உழைக்க வேண்டிய நேரம்.
…..வேதனையும் துயரமும் நிறைந்த ஒரு கட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் ஒரு முடிவு காண்கிறது. வேதனைகளையும் இன்னல்களையும் முடித்துவைத்து அமைதியுகம் மலர வகை செய்கிறது. இலங்கை வரலாற்றின் திருப்புமுனையாக அமையும் இந்த நேரத்தில் இறந்தோரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். வுpதவைகள் அனாதையாக்கப்பட்டோர் ஆகியோருக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம். புதல்வர்களை இழந்த தாய்மார்களுக்கும் தந்தையரை இழந்த புதல்வியருக்கும் நமது இரங்கல்களைத் தெரிவிக்கிறோம். ஆனால் இவற்றை நினைவு கூறும்போது மேலும் இரத்தம் சிந்துதல் தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் அமைதியோடும் கௌரவத்தோடும் கண்ணியத்தோடும் தமிழர்கள் தொடர்ந்து வாழும்போது இந்த நினைவுக்கு சிறப்பான அஞ்சலி செலுத்தியவர்களாவோம். இந்த ஒப்பந்தத்தின்மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது.
இப்படிக் குறிப்பிட்ட பாரதப் பிரதமருக்கு நாம் காட்டிய நன்றி எத்தகையது என்பதை யாராவது இப்போது சிந்திக்கின்றார்களா? இல்லையே!
எமது சிந்தனை எங்கெல்லாமோ எப்படியெல்லாமோ ஓடுகிறதே!
இன்றைக்கு இந்தியா பாராமுகமாக இருப்பதை எப்படிச் சொல்லமுடிகிறது இவர்களால்? உதவினாலும் ஏதோ எதிர்பார்த்து உதவுவதாக குற்றம்! ஏதாவது உதவி செய்யாவிட்டாலும் குற்றம்! இது தேவையா பாரதத்திற்கு!!! தமிழ் நாட்டின் குடிமக்கள் சில வேளை பாரதத்தை வெறுக்கலாம் - அவர்களும் தனி நாடு என்று கோரலாம்! நாம் இலங்கைத் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள். வரலாற்றாற்றை மாற்றி எழுத முற்படுபவர்கள். எமக்கு ஏன் இன்னொரு நாட்டின் உதவி – நாம் தானே ஏகப் பிரதிநிதிகள். எமக்கு எவரது உதவியும் தேவையில்லை என்கிற இறுமாப்புடன் கருத்துத் தெரிவிக்கும் நடைமுறை பல நாட்களாகவே எம்மிடம் இருக்கிறது. இதற்காகத்தான் இந்தக் கிருத்தியத்தில் சில பழைய வரலாறுகளை பதிவிட விரும்பினேன்.
மீதி பின்னர்.
Monday, October 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தங்கமுகுந்தன்,
மிகவும் விரிவாக கடந்தகால விடயத்தை பதிவு செய்துள்ளீர்கள்.இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது ஏற்கபடாமல் போனது கவலைக்கு உரிய விடயம் தான்,தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று இனி வரும் காலங்களில் கிடைக்குமானால் அது அந்த ஒப்பந்தத்தினை விட கூடுதலான உரிமைகளை வழ்ங்குமா என்பதும் கேள்விகுரியதே?பல ஆண்டுகள் கடந்துவிட்டோம்.அன்றைய உலக சூழல் இன்று இல்லை.அதே போல அன்றைய இந்தியாவும் அல்ல இது.ஆனால் இப்போதைய இலங்கை இலங்கை அரசின் போக்கினை ஏற்றுக் கொள்ள முடியாதே.அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை என்ற உண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது.அரசின் இந்த போக்கை தட்டி கேட்க இந்தியா ஒன்றால் தான் முடியும்.இந்தியா தயங்குவதற்கு வெறுமனே அமரர் ராஜிவ் காந்தி அவர்களுடைய மரணம்மும்,புலிகள் உடனான மோதலும் தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஒரு சந்தேகம் முடிந்தால் தீர்த்து வைக்கவும்.நீங்கள் டி யூ ல் எவ் முகுந்தனா?
அன்புடன்
அப்புச்சி
அன்புள்ள நண்பரே தங்கள் வலைப்பூ காந்தி மகானால் கண்டேன், காந்தியும் சில விஷயங்களும் என்கிற தலைப்பிற்குள் சென்ற போது அதில் தங்கள் கருத்து பகுதியில் காந்தி என்கிற பெயர்கண்டதால் வந்தேன் என்று ஒரூ குறிப்பு எழுதி இருந்தீர்கள், மன ஒற்றுமை கண்டு உங்கள் வலைப்ப்பூவை பிடித்தேன், மிக்க மகிழ்ச்சி மகாத்மாவின் மீது பற்றுள்ளவர்களை காணும்போது ஒரு நம்பிக்கை வருகிறது, மிக்க மகிழிச்சி எனது முகவரி sdhavaneri@gmail.com
எனது வலை dhavaneri.blogspot.com
முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
Post a Comment