மனிதருள் மாணிக்கங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அரசியல்வானிலும் இப்படியான மாணிக்கங்கள் பளிச்சிடுவதுண்டா? உன்னிப்பாக நோக்கின் சிற்சில இடங்களில் கண்களில் படும்…
ஆழி நனைந்து மூழ்கி முத்துக்களைத் தோண்டி எடுப்பது போல் ஒரு சிலர் தாரகையாய் அரசியல் வானில் மின்னி ஒளிர்வதை நாம் பார்க்கின்றோம். அந்த வரிசையில் புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்த தலைவர்களுள் ஒரு தனிப்பெரும் இடம் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களுக்குண்டு.
ஆங்கிலேய ஆட்சியாளர் காலம் தொடங்கி பாராளுமன்ற சுயாட்சி முறை வரை ஏற்பட்ட அரசியல் அரசியலமைப்புச் சீர்திருத்தக் களத்தில் தங்கமாகத் தடம் பதித்த அப்பழுக்கற்ற தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்றால் அது மிகையாகாது.
அமிர்தலிங்கம் ஒரு ஜனநாயகவாதி. ஜனநாயகத்தோடு ஒத்துப்போகும் கருத்துக்கள் அவரது சிந்தனையில் இழையோடின.
யாழ்ப்பாணக் குடா நாட்டில், தென் பண்ணாகத்தில் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி பிறந்த அமிர்தலிங்கம், தான் பிறந்த மண்ணின் மீது அசையாத காதல் கொண்டிருந்தார். அவர் நல்ல நாட்டுப் பற்றுடையவர்; தேசப்பற்றாளர்.
இந்தப் பற்றுதல்களை அடிநாதமாகக் கொண்டு அவர் தன் இனத்தின் விடிவுக்காகவும் - விமோசனத்துக்காகவும் - தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். அஹிம்சா தர்மத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தார். அதனால்தான் தந்தை செல்வநாயகத்தோடு இணைந்து அவர் வழியில் நின்று அரசியல் நடைபயின்றார்.
இந்த ஆளுமைமிகு தமிழ்த் தலைவரை நான் முதன்முதலாக எனது மிகவும் நெருங்கிய நண்பர் செனட்டர் மஷ_ர் மௌலானா அவர்களோடுதான் சந்தித்தேன்.
நேர்த்தியான நெற்றி, படர்ந்த புருவம், சற்று வழுக்கலான முன் தலை, கூர்மையான பார்வை, அதற்கு மேலும் கூர்மையைப் பாய்ச்சும் மூக்குக் கண்ணாடி, செயலில் வேகம், நடையில் விறுவிறுப்பு, அஞ்சா நெஞ்சம், எதிரியையும் அரவணைக்கும் பண்பு, கொண்ட கொள்கை மீது அசையாத பற்று, ஆழமான சிந்தனை, நல்ல மொழி வளம், தேனிலும் இனிய தமிழோடு ஆங்கிலத்திலும் சொல்லாடல், வாதத்திறமை - இத்தியாதி அணிகலன்களின் ஒட்டுமொத்த உருவம்தான் அண்ணன் அமிர்தலிங்கம்!
அவரோடிணைந்து மேடையேறி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உரையாற்றும் பாக்கியம் பெற்றவன் நான். 1967ம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற உப – தேர்தலில், அன்று பதவி வகித்த டட்லி சேனநாயக்காவின் தேசிய அரசாங்கத்தின் தோழமைக் கட்சியாகவிருந்த இலங்கைத் தமிரசுக் கட்சி அதன் வேட்பாளராக அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம்.மஷ_ர் மௌலானா அவர்களை நிறுத்தியது.
இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்கள் விவகாரத்தில் தெளிவான போக்கைக் கடைப்பிடித்தவர் அமிர்தலிங்கம் என்பதை நாம் அன்று தெளிவாக உணர முடிந்தது. உண்மையில் சொல்லப்போனால், அவர் ஒரு முஸ்லிம் நேசன். எனவேதான், கல்முனை முஸ்லிம்கள் மத்தியில் அவருடைய பேச்சு எளிதாக – எழிலாக – எடுபட்டது. அவர் வான் அதிரப் பேசினார். அவரது மேடைப் பேச்சில் ஆக்ரோஷம் அரசோச்சும். மேடைப் பேச்சுக்குரிய இலட்சணங்களோடு பேசினார். அவர் சொல் பட்ட உள்ளங்கள் புண்படவில்லை; புன்னகைத்தன. மேடைகள்தோறும் அமிர்தலிங்கம் ஐயா பேசுவார்; அவர்தம் அருமை மனைவி மங்கையர்க்கரசி பாடுவார். தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தாகம் அவர் பாட்டில் ஓங்காரமாக ஒலிக்கும்!
அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி தம்பதிகள் மேடையை அலங்கரித்தபோது பின்னாலிருந்து அமைதியோடு கேட்டுக்கொண்டிருப்பார் தந்தை செல்வநாயகம். தந்தையோடு பல தனயன்கள் - பட்டிருப்பு ராசமாணிக்கம், மட்டு நகர் நாவலர் இராசதுரை, வடமாநிலம் ஈன்ற தர்மலிங்கம், துரைரட்ணம், யோகேஸ்வரன், திருகோணமலை ரீ. ஏகாம்பரம், மு.சிவசிதம்பரம், டாக்டர் ஈ.எம்.வீ. நாகநாதன், ஸ்தலஸ்தாபன அமைச்சர் எம்.திருச்செல்வம், மன்னார் வீ. அழகக்கோன், சாவகச்சேரி வீ.என்.நவரத்தினம், ஊர்காவற்றுறை வீ. நவரத்தினம் போன்ற தமிழ்த் தலைவர்களோடு முஸ்லிம் தலைமையும் ஒன்றிணைந்திருந்த - இன ஒற்றுமையின் இங்கித ஓசையெழுப்பிய - அருமையான ஒரு காட்சியை அன்று கல்முனை உப - தேர்தல் உலகுக்குச் சிருஷ்டித்துக் காட்டியது.
முஸ்லிம்களின் தானைத் தலைவர் டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல், அமைச்சர் எம்.எச்.முஹம்மத், ஏ.ஸீ.எஸ்.ஹமீட், எம்.ஏ.பாக்கீர் மாக்கார், இளைப்பாறிய சட்டமா அதிபர் ஏ.ஸீ.எம். அமீர், இராணி வழக்குரைஞர் இஸ்ஸதீன் முஹம்மத், கொழும்பு மா நகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.நஸீர், எம்.அமீர் ஷரீப், பண்டாரவளை நகர சபை உறுப்பினர் கே.ஐ.ஜமால்தீன், கல்பிட்டி சிம்மக் குரலோன் எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார், லயன்ஸ் கழக முக்கியஸ்தர் நஸீர் ஹம்து}ன் (இவர் அண்மையில்தான் அமெரிக்காவில் காலமானார்), கொழும்பு – கிராண்டபாஸ் ஸ்டேஸ் ரோட் ஏ.ரீ.எம்.உவைஸ் (ழுழளைண)இ கதீப் எம்.ஜஸ_லி ஸலாஹ{த்தீன் போன்றவர்களும் அன்று கல்முனை மண்ணைச் சிறப்பித்தனர். அங்கே பேதம் இருக்கவில்லை - விபரீதம் நடக்கவில்லை. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையின் ரீங்கார ஓசை ஒன்றுதான் அன்று கூட்டங்களில் ஒலித்தது.
அமைதிக் கடல் போல் நிலவிய இன ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணம் பல வேண்டாத அலைகள் மேலெழுந்தபோது அமிர்தலிங்கம் அவர்களும் பல போராட்டங்களுக்குள் அமிழ நேர்ந்தது. இதனால் அன்று சமஷ்டி ஆட்சிகோரி ஆர்;பாட்டம் நடாத்தியபோது பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்ட சமஷ்டிக் கட்சித் தலைவர்களோடு அமிர்லிங்கமும் சிறைப்பிடிக்கப்பட்டார்.
காலப்போக்கில் சிங்கள – தமிழ் உறவில் விரிசல் ஏற்பட்டு அது ஒரு போராட்டமாக வெடித்தபோது தமிழ் நாட்டில் அடைக்கலம் புக அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி தம்பதியினருக்கும் விதியாச்சு. இவர்கள் இருவரும் சென்னையில் அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது அங்கும் சென்று நான் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னைக் கண்டதும் அமிர்தலிங்கம் தம்பதிகளுக்கு ஏற்பட்ட மனமகிழ்ச்சியை நான் இன்றும் பூரிப்போடு எண்ணிப்பார்க்கின்றேன். என்னை என்றும் ஒரு நல்ல தம்பியாகவே அவர்கள் மதித்தனர். இவ்விடத்தில் ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்ல நினைக்கின்றேன் -
அன்று சபாநாயகராகவிருந்த தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாக்கார் அவர்களின் பாரியார் ஜெஸீலா, அவர்களின் மகள் ஹஸீபா இவர்களோடு ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொள்ள சென்னை சென்றிருந்தேன். சென்னைக்குப் பெண்கள் சென்றால் சாரி வாங்காமல் வருவரோ? சாரி செலக்ஷனுக்கு உதவி செய்ய மங்கையர்க்கரசி அக்கா உவப்போடு எம்முடன் தியாகராஜர் நகருக்கு வந்தார். அங்கே பலவண்ணச் சாரிகளை ஜெஸீலா அம்மையார் தேர்ந்தெடுக்கும்போது, “அந்தச் சாரியைத்தான் நான் செலக்ட் பன்னினேன்” என அருகிலிருந்த ஒரு பெண்மணி கடைக்காரரிடம் சொன்னார். திரும்பிப் பார்த்தேன். அழகான உருவம், வட்ட முகம். எங்கோ பார்த்த மாதிரி எனக்குப்பட்டது. ‘செம்மீன்’ படத்தில் ஷீலா மாதிரி இவ இருக்கிறா” என்று ஜெஸீலா அம்மையாரிடம் நான் சொன்னேன். முகம் மலர என்னை நோக்கிப் பார்வையைச் செலுத்திய அந்த அம்மணி, “ஓ! அந்த ஷீலா நானேதான்” என்றார், பாருங்கோ. அருகே நின்ற அக்கா மங்கையர்க்கரசி புன்னகைத்தார். அரச விடுதிக்குத் திரும்பியதும் திரும்பாததுமாக இந்த சம்பவத்தை அண்ணன் அமிர்தலிங்கத்திடம் சுட்டித்தனமாகச் சொன்னார் திருமதி அமிர்தலிங்கம். மூக்கின் மேலிருந்த கனத்த கண்ணாடி ஊடாக என்மீது ஒரு மாதிரியாக பார்வை செலுத்திய அண்ணன் அமிர்தலிங்கம் “என்ன.. என்ன... ஆச்சரியம். எப்போதோ ஒரு படத்தில் பார்த்த ஷீலா இவர்தான் என்று சரியாகச் சொல்ல உங்களுக்கு அவ்வளவு து}ரம் ஞாபகமா! நல்ல வேளை உங்கள் மனைவி அருகில் இருக்கவில்லை… இருந்திருந்தால் விபரீதமல்லவோ நடந்திருக்கும்” என்று மிகவும் குறும்புத் தனமாகக் கூறிவிட்டு, அவருக்கே உரிய இயற்கையான சுபாவத்தில் வாய்விட்டுச் சிரித்தார். “அண்ணனுக்கு ஜோக் அடிக்கவும் தெரியும், போங்கள்…” எனக்கோ சற்றுக் கூச்சமாகத்தான் இருந்தது.
முஸ்லிம்களை நேசித்தவர்
அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த பாசத்தை வெளிப்படையாகக் காட்டுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டது.
அன்று மூதவையில் தமிழரசுக் கட்சியில் உறுப்பினராகவிருந்த நடராஜா இராஜினாமாச் செய்தபோது, அவ்விடத்தை ஒரு முஸ்லிமுக்கே கொடுக்க வேண்டும் என்று தந்தையிடமும், தனயர்களிடமும் ஒரே முச்சாக வாதாடியவர் அமிர்தலிங்கம். அதிலும், சமஷ்டிக் கட்சி வரலாற்றில் தன்னை முனைப்போடு இணைத்துக்கொண்ட மஷ_ர் மௌலானாவுக்கே அவ்விடம் வழங்கப்பட வேண்டுமென்றும் அடித்துச் சொன்னார்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரமல்ல, யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் தமிழரசுக் கட்சியின் கொள்கைப் பிரச்சாரகராக மஷ_ர் மௌலானா அன்று ஆற்றிய சேவைகளுக்குத் தமிழினம் அளிக்கக்கூடிய ஒரு சிறு கைமாறு இது ஒன்றேதான் என அப்போது அமிர்தலிங்கம் செய்த முடிவை இன்றும் முஸ்லிம் சமூகம் எளிதில் மறந்துவிடாது.
இந்தியாவிலிருந்து பலமுறை இலங்கை வந்தபோது இந்த அற்புதத் தலைவர் அமிர்தலிங்கம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து என் காரில் ஏற்றிக்கொண்டு சபாநாயகரின் ‘மும்தாஜ் மஹாலுக்கும்’, முஸ்லிம் சமூகத்தின் தலைவர் டாக்டர் கலீல் அவர்களின் ‘நு}ராணியா விலாவுக்கும் நான் பலமுறை காரில் சென்றிருக்கின்றேன் என்பதும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும்.
உலகம் அபூர்வமானதுதான்! நாம் வாழும் இவ்வுலகின் கண் பிறந்த அமிர்தலிங்கமும் ஓர் அபூர்வமானவர்தான். நீதி, நியாயம் என்று வரும்போது அமிர்தலிங்கம் யாரையும் விட்டுவைக்கவில்லை.
தேசமான்ய எம்.ஏ.பாக்கீர் மாக்காருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் அவர். முன்னவர் பாராளுமன்ற சபாநாயகர். அடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர். அந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்கு மெருகூட்டி, தமிழினத்துக்குப் பெருமை சேர்த்து, தமிழர் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தைத் தோற்றுவித்தவர் அமிர்தலிங்கம்.
அமீர் – பாக்கீர் மோதல்ஒருமுறை –பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்றும் தமிழர்களின் உரிமை காக்கும் காவலனாக விளங்கிய அமிர்தலிங்கம் தமிழர்கள் சம்பந்தமான ஒரு சட்டப் பிரமாணத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். “சபாநாயகரே! நீங்கள் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது” அமிர்தலிங்கம் சபாநாயகர் மீது சீறிப்பாய்ந்தார். விட்டாரா...? அரேபியர் வழிவந்தவரல்லவா பாக்கீர் மாக்கார்: “நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? அதனையும் பார்ப்போமே!” என்று ஆக்ரோஷத் தொனியில் பதில் கொடுத்தார் சபாநாயகர். “பார்;ப்போமா? உங்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவேன்” என கனல் தெறிக்கும் தொனியில் அமிர்தலிங்கம் கர்ச்சித்தார். “சரிதான் அதையும் பார்த்திடுவோமே” என்றார் பதிலுக்கு சபாநாயகர். அங்கு பிரசன்னமாகியிருந்த ஏனைய தலைவர்கள் ஒரு கணம் பிரமித்தேபோயினர்.
அடுத்த நாள் சபாநாயகர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரின் அந்தரங்கச் செயலாளராகிய நானும் அவரோடு சென்றிருந்தேன்.
நாடு திரும்பிய பிறகு சபாநாயகர் பாராளுமன்றத்துக்குச் சென்று உள்வாசலில் நுழையும்போது என்ன ஆச்சரியம்! அங்கே அவரை வரவேற்க விரிந்த கையோடு நின்றிருந்தார் அமிர்தலிங்கம். “பாக்கீர், லுழர யசந அல பழழன கசநைனெ...! உங்களுக்கெதிராகத் தனிப்பட்ட முறையில் நான் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர நினைக்கவில்லை. தமிழினத்தின் உரிமைகளைப் பெரும்பான்மை இனத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே அவ்விதம் சற்றுக் கோபமாக உங்களிடம் பேசினேன்” என்றார் அமிர்தலிங்கம்.
“அது உங்கள் உரிமை; அதற்குத் தடையாக நான் நிற்கமாட்டேன். ஆகவேதான், நான் நாட்டில் இல்லாதபோதும் அப்பிரேரணையைச் சமர்ப்பிக்க உங்களுக்கு அனுமதியளித்துவிட்டு வெளிநாடு சென்றேன்” என்றார் சபாநாயகர்.
பழைய நண்பர்கள் இருவரினதும் பழுதுபடா இணக்கத்தையும், அவர்கள் வாய்விட்டுச் சிரித்து வறாந்தையில் நடந்ததையும் கண்டு பாராளுமன்ற ஊழியர்கள் ஆச்சரியமாக உற்றுப் பார்த்தனர். இதுதான் நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிசயிக்கத்தக்க குணங்கள்! என்ன.
வாதிடலாம் - மோதிடலாம். எனினும் வாக்கின் இனிமை இழையோட பாராளுமன்றத்திலும் ஒழுகிடலாம். இந்த உண்மையை இவ்விரு தமிழ் – முஸ்லிம் தலைவர்களும் அன்றே எடுத்துக் காட்டியவர்கள்.
அண்ணன் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தம் இன மக்களின் பிரச்சினைகளை எடுத்தாண்டு உரைநிகழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆவேசம் பீறிட்டுப் பாயும். ஆனால், வாதப் பிரதிவாதங்களின்போது உயர்ந்த வாதப் பண்புகள் சிதைந்துவிடாமல் அடக்கத்தைப் பேணுவார். இன்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவரின் இந்தப் பேச்சு முறையும் - பேச்சுக் கலையும் - நல்ல உதாரணங்களாகும். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமிர்தலிங்கத்தின் பேச்சுக் கலையை – விவாதத் திறமையைப் - பின்பற்ற முடியுமென்றால் - பாராளுமன்ற விவாதங்களை உயிரோட்டமுள்ளதாக ஆக்க முடியும் - மாற்ற முடியும். அப்படிச் செய்யின் பாராளுமன்றத்துக்கும் நன்று - நாட்டுக்கும் நன்றே. இல்லையா?
மஷ_ர் நல விரும்பி
அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் இறுதியாகத் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்து அமர்ந்தபோது, நான் அன்று முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக எதிரணி வரிசைக்குச் சென்று, அவர் கையைப் பிடித்து முத்தமிட்டு வாழ்த்துக் கூறினேன். அவரும்; என் உச்சி மோர்ந்து, ஆரத் தழுவி, நிமிர்ந்து என்னை ஊன்றிப்பார்த்துச் சொன்னார்: “தம்பி அஸ்வர்! எனக்கு ஒரு கவலை... நீங்கள் இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் நான் மிகவும் மதிப்புவைத்திருக்கின்ற உங்கள் அன்பர் மஷ_ர் இல்லையே!” அவர் வெளிப்படுத்திய ஆதங்கத்தில் தம்பி மஷ_ர் மௌலானாவை அவர் எவ்வளவு து}ரம் மதித்தார் என்பது மட்டுமல்ல, அதன் மூலம் முஸ்லிம் சமூகததின் மீது எவ்வளவு நேசம் வைத்திருந்தார் என்பதையும் உணர்ந்தேன்.
பிரேமதாஸ அதிர்ந்தார்
அன்று 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி –அம்பாரை மின்சார சபை சுற்றுலா விடுதியில் இராப்போசனம். மேசையின் தலைமை ஆசனத்தில் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ. இருமருங்கிலும் மஷ_ர் மௌலானாவும், நானும். இரண்டு கவளம் சோறு உண்டிருக்கமாட்டார் ஜனாதிபதி, வேகமாக மேசையருகே வந்த பாதுகாப்பு மேலதிகாரி அவரிடம் தொலைபேசியைக் கொடுத்தார். “ஹலோ!” என்ற ஜனாதிபதி அதிர்ந்துபோனார்.
மொனவத? அமிர்தலிங்கம் மஹத்மயாட்ட வெடி திப்பாத? என்றவர், தனது வேஷ்டியைச் சரி செய்துகொண்டு குதித்தெழுந்தார். மஷ_ர் மௌலானா வாயில் போட்ட சோறு பீங்கானில் நழுவி விழுவதைக் கண்டேன். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சடைத்தது.
மறுநாள் ஜனாதிபதி பிரேமதாஸ எம்மிருவரையும் அழைத்துக்கொண்டு ஹெலிகொப்டர் மூலம் நேராக திருகோணமலை பறந்து சென்று, அங்கு மாநகர சபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அமரர் அமிர்தலிங்கத்தின் பூடலுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
“உயிரோடிருக்கும்போதும் ஜீவ பலம்பொருந்தியவராகக் காணப்பட்டவர் அமிர்தலிங்கம். அமரத்துவம் பெற்றுத் துயிலுறும்போதும் அதே அமீரைத்தான் பார்க்கிறேன்…” என்று கூறி மிக்க மனம் வருந்தினார் ஜனாதிபதி பிரேமதாஸ.
அமிர்தத்தை விட இனிமையானவர் அமிர்தலிங்கம் என்றால், பிரேமைக்கு (அன்புக்கு) அடிமையானவர் (தாஸர்) பிரேமதாஸ. இரு வேறு இனங்கள் - மொழிகள் - மதங்கள் - அரசியல் வேறுபாடுகள் - இவை அத்தனையும் இருவருக்கிடையிலும் இடைவெளியாக இடம்பெற்றிருந்தாலும், இவர்கள் இருவரும் கொண்டிருந்த இலட்சியங்கள் ஒன்றே என்பதை அருகிலிருந்த என்னால் உணர முடிந்தது.
தளபதி அமிர்தலிங்கத்தின் சொல்லிலும், செயலிலும் வீர,தீரமும் விவேகமுமிருந்தது. தம்மினத்தின் விமோசனத்துக்காகப் பாராளுமன்றத்தின் உள்ளும், வெளியிலும் அவர் மிகவும் தீவிரமாகப் போராடினார். ஆனால், தீவிரவாதத்துக்கோ, அழிவிற்கோ அவர் கிஞ்சித்தும் இடங்கொடுக்கவில்லை. அவர் ஆயுதத்தின்மீது நம்பிக்கை வைத்தவரல்லர்; ஆன்மீகத்தின்மீது பற்றுறுதி கொண்டவர்.
எனினும், இக்காலகட்டத்தில் அஹிம்சைத் தத்துவத்தின்மீது பற்றுதலோடு தமது சாத்வீக வழிகளை ஆயுதமாகக் கொண்டு, தம்மினத்தின் விமோசனத்துக்காகப் போராடிய தமிழ்த் தலைவர்களின் வேகம் தளர்ந்து வலுவிழந்து போவதாக வடபகுதி வாலிபர்கள் உணரத் தலைப்பட்டனர். இந்த சிந்தனை தீவிரவாதமாக உருமாறி ஆயுதத்தைக் கையிலேந்த தமிழ் வாலிபர்கள் பல பின்னணிச் சக்திகளினால் உந்தப்பட்டனர். இதற்கு எதிராக சிங்கள வாலிபர்கள் மத்தியிலும் புரட்சிகரமான சிந்தனைகள் தோன்றி, அவர்கள் அரசுக்கெதிராக ஆயுதமேந்தத் து}ண்டப்பட்டனர். இதன் பெறுபேறே தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் தோற்றமாகும்.
ஆகவே, வடக்கிலும், தெற்கிலும் ஏக காலத்தில் தீவிரவாதம் முற்றி வெடித்தது. இதனால், அரசாங்கம் திடுக்கிட்டது – நடுநடுங்கியது - ஆட்டங் கண்டது. ஜே.வி.பியின் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அரசாங்கம் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டது. இரு பக்கங்களிலும் ஆயுதம் ஆயுதத்தோடு மோதியபோது உயிர்ப்பலி முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்குப் பெருகியது. நாடு இரத்த வெள்ளத்தில் தத்தளித்தது.
ஆயுதப்போராட்டம்தான் தமிழினத்தின் விமோசனத்துக்கு ஒரே வழி என வடபுலத்திலும் வன்செயல்களுக்கான சமிக்ஞை காட்டப்பட்டது. “ஆயுதம் ஏந்தித் தமது இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள இனி நீங்கள் எமக்கு வழிவிட வேண்டும்” எனுமாப்போல் தமிழ் வாலிபர்கள் தம் அரசியல் தலைவர்களை வலியுறுத்தலாயினர். இதனால் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். அழுத்தங்களுக்கு மேல் அழுத்தங்கள் எழுந்ததன் காரணமாக ஒருவாறு தம்மைச் சுதாகரித்துக்கொண்டு அன்றைய தமிழ் தலைமைகள், தம்மினத்தின் விடுதலைக்கு தமிழ் ஈழம் அமைப்பதுதான் ஒரே வழி என்ற கருத்துக்களை அவர்களும் வெளிப்படுத்தலாயினர்.
இத்தொனியின் சாயல்பட இந்தியாவின் பிரபல முன்னணிப் பத்திரிகையான ஐனெயைn நுஒpசநளள இற்கு 1981.01.05ம் திகதி அமிர்தலிங்கம் ஒரு செவ்வி வழங்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்களத் தலைமைகள் அமிர்தலிங்கத்தின் கருத்துக்கள் தேசத் துரோகமானவை எனச் சொல்லலாயினர். எனவே, “காங்கேசந்துறை பாராளுமன்ற உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவேன்” என அப்போதைய பாணந்துறை பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ சூளுரைத்தார். அதன்பிரகாரம் 1981.07.23ம் திகதி சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டது. பிரேரணை வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது பிரேரணைக்கு ஆதரவாக 121 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இரு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். எவரும் எதிராக வாக்களிக்கவில்லை. ஏனெனில், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்கள் ஏலவே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துவிட்டனர்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஒரு புது வரலாறு உருவானது. அரசாங்கத்துக்கோ அல்லது பிரதம அமைச்சருக்கோ அல்லது ஏனைய அமைச்சர் ஒருவருக்கோ எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதே இதுகாலவரையும் இருந்த நடைமுறையாகும். ஆனால், ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது இதுவே முதற் தடவையாகும்! இந்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இதுவே முதற் தடவையாகும்.
இவ்விரு நிகழ்வுகளுக்குமுரிய வரலாற்று நாயகராக விளங்குபவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்பதை இந்நாட்டு வரலாற்று ஏடுகள் என்றும் பறைசாற்றிக்கொண்டிருக்கும்!
ஆம்! 19-வருடங்கள், 09-மாதங்களும், 27-நாட்களும் பாராளுமன்றத்தில் அங்கம்வகித்த இத்தனிப்பெரும் தலைவனின் - அந்த தானைத் தளபதியின் - உயிர் 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி, கொழும்பு பௌத்தாலோக மாவத்தை இல்லத்தில் வைத்து யாரும் எதிர்பார்த்திராத வகையில் - மிகவும் துக்ககரமாகன முறையில் - நல்லதை விரும்பாத தீயோர் சிலரின் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி தம் இன்னுயிரை நீத்தார். தமிழ் இனம் கண்ணீர் சாகரத்தில் மூழ்கியது. நாடு ஒரு அதீத தலைவனை இழந்தது…!
இலங்கை அரசியல் வரலாற்று வானில் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்த அற்புதத் தாரகை மறைந்தது.
அமரர் அமிர்தலிங்கம் அனைவர் மனதிலும் என்றும் வாழ்வார்!
அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்
ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர்
ஊடக ஆலாட்சி அதிகாரி
(முன்னாள் முஸ்லிம் சமய - பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்.)