அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, August 21, 2008

ஹிந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள்


இன்று பார்வையிட்ட தமிழ் பூங்கா வலைத்தளம் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. நான் இலங்கையிலிருந்து வரும்போது எடுத்துவந்த மதுரை காந்திய இலக்கியச் சங்கம் வெளியிட்ட அண்ணலின் நிர்மாணத் திட்டம் (மகாத்மா காந்தியின் 18 அம்சத் திட்டம்) என்ற நூலை மீண்டும் இன்று ஒரு தடவை வாசித்துவிட்டு அதிலிருந்த சில சில குறிப்புக்களை ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் பதிவிடுகிறேன்.

இந்நூலில் மகாத்மா காந்தி தனது முகவுரையில்

……ஹிம்சை முறையில் முதன்முதலாக அழிவது சத்தியம்தான். அஹிம்சை முறையிலோ என்றும் சத்தியமே வெல்கிறது. மேலும் அரசாங்கத்தில் பதவிபெற்று வேலை செய்பவர்களை விரோதிகள் என்று கருதலாகாது. அப்படிக் கருதுவது அஹிம்சைத் தத்துவத்துக்கே முரணாகும். அவர்களை விட்டு நாம் பிரியத்தான் வேண்டும். நண்பர்களாய்ப் பிரிய வேண்டுமேயொழிய பகைவர்களாய்ப் பிரிய வேண்டியதில்லை.

முகவுரையாகச் சொல்லிய இக்குறிப்புக்களை வாசகர் செவ்வையாய் உணர்தல் வேண்டும். உணர்ந்தால் இந்த நிர்மாணத் திட்டம் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் என்பது நிச்சயம். அரசியல் என்று சொல்லுகிறார்களே அதுவும் மேடைப் பிரசங்கமும் எப்படி உள்ளத்தைக் கவர்கின்றனவோ அப்படியே இத்திட்டமும் உள்ளத்தைக் கவரும். அவற்றைவிட இது மிகவும் முக்கியமானதாயும் உபயோகமுள்ளதாயும் இருக்கும் என்பது உறுதி.

வகுப்பு ஒற்றுமை

…..நான் கூறகிற வகுப்பு ஒற்றுமையானது எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாத இதய ஒற்றுமையாகும். காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தாம் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும் சரி தம்முடைய வாழ்க்கையில் தாமே ஒரு ஹிந்துவாகவும் முஸ்லிமாகவும் கிறிஸ்தவராகவும் பார்ஸியாகவும் யூதராகவும் மற்ற மதத்தினராகவும் இருந்துவர வேண்டும். சுருங்கச் சொன்னால் அவரே ஹிந்துவல்லாத பிற மதத்தினராகவும் இருந்தவரவேண்டும். இப்படி இருப்பது மேற்சொன்ன இதய ஒற்றுமை உண்டாவதற்கு முக்கியமான முதல் விஷயமாகும். காங்கிரஸ்காரர் ஹிந்துஸ்தானத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒவ்வொருவருடைய இதயத்தையும் நேரே உணர்தல் வேண்டும். இவ்விதம் உணரும் பொருட்டு அவர் தம்முடைய மதமல்லாத பிற மதத்தினரோடு நட்புரிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தம்மதத்தில் அவருக்கு எவ்வளவ பக்தி இருக்கிறதோ அவ்வளவு பக்தி மற்ற மதங்களிடத்திலும் இருத்தல் வேண்டும்……..

தீண்டாமை ஒழிப்பு

ஹிந்துமதத்தில் ஏற்பட்ட மாசு என்றும் சாபம் என்றும் சொல்லத்தக்கது. இதை ஒழிப்பது எவ்வளவு அவசியம் என்பதுபற்றி இவ்வளவு காலத்துக்குப் பின் விஸ்தரித்துச் சொல்லத் தேவையில்லை. இது சம்பந்தமாய்க் காங்கிரஸ்காரர் அரிய சேவை செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆயினும் இன்றைய அரசியல் நிலை காரணமாகச் செய்யவேண்டியிருக்கும் வேலைகளுள் ஒன்று என்று தான் காங்கிரஸ்காரர்கள் அனேகர் தீண்டாமையொழிப்பைக் கருதுகிறார்கள். ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட வரையில் ஹிந்து மதமே அழியாமல் நிலைத்து நிற்பதற்கு இன்றியமையாத காரியம் என்று அவர்கள் இதைக் கருதுவதில்லை. இதைச்; சொல்ல எனக்கு மிக்க வருத்தம் உண்டாகிறது. காங்கிரஸில் ஹிந்துக்களாயுள்ளவர் அரசியலைக் காரணமாகக் கொண்டு தீண்டாமையொழிப்பில் ஈடுபடாமல் முக்கியமாய்ச் செய்ய வேண்டிய சேவை என்ற எண்ணத்தோடு இதில் ஈடுபடவேண்டும். அவ்விதம் ஈடுபட்டால் இன்று சனாதனிகள் மனத்தை எவ்வளவு தூரம் மாற்ற முடிந்திருக்;கிறதோ அதைவிடப் பலமடங்கு அதிகமாக மாற்றமுடியும்…….

மது விலக்கு

கதர்

கிராமக் கைத்தொழில்கள்

துப்பரவு

ஆதாரக் கல்வி

வயது வந்தோர் கல்வி

பெண்ணுரிமை

உடல்நலம்

தாய் மொழி

நாட்டுப் பொதுமொழி

பொருளாதார சமத்துவம் விவசாயிகள்

தொழிலாளர்

ஆதிக்குடிகள்

…..நம் நாடு எவ்வளவோ விசாலமானது. இங்குள்ள மக்கள் வௌ;வேறான இனத்தவர்கள். எனவே மக்களனைவரையும் அவர்கள் நிலைமையையும் பற்றிய எல்லாச் செய்திகளையும் நம்முள் எவரும் அறிந்ததாகச் சொல்லமுடியாது. எவ்வளவு சிறந்த மனிதராலும் அறிந்திருக்கமுடியாது. நாம் ஒரே மக்கட் சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளுகிறோமே இந்தச் சொல்லை நிலை நாட்டுவது எவ்வளவோ கஷ்டமானது. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியும் மற்ற ஒவ்வொரு தொகுதியோடும் தான் ஒன்றியிருப்பதாக உண்மையுணர்வு பெற்றால்தான் இது சாத்தியம். நம் மக்களைப்பற்றிய மேற் கூறிய செய்திகளை ஒருவர் தாமே உணரும் போதுதான் இந்தக் கூற்றையும் அவர் நன்றாக உணர முடியும்……

குஷ்ட ரோக நிவாரணம்

…. இந்தியாவின் ஒவ்வோர் அங்கத்திலும் புத்துயிர் எழுந்து பொங்குமானால் சத்தியத்தையும் அகிம்சையையும் கடைப்பிடித்து மிக்க விரைவில் சுதந்திரமடைய வேண்டும் என்ற உணர்ச்சி நம்மிடம் உண்மையாகவே இருக்குமானால் இந்தியாவில் ஒரு குஷ்டரோகியேனும் பிச்சைக்காரரேனும் பராமரிப்பில்லாமலோ எண்ணுவாரற்றோ இருக்க முடியாது.

மாணவர்

கட்சி அரசியலில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது…..

அரசியல்பற்றி மாணவர் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது……

மாணவர்களெல்லோரும் சாஸ்திரோக்தமான முறையில் நூல் வேள்வி
செய்ய வேண்டும்……

எப்போதும் அவர்கள் கதரே உடுத்த வேண்டும்…..

வந்தே மாதரம் பாடும்படியோ தேசியக் கொடியை வணங்கும்படியோ மற்றவர்களை நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது……….

அவர்கள் மூவர்ணக் கொடியின் தத்துவத்தைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்துச் சாதி வேற்றுiமையோ தீண்டாமையுணர்ச்சியோ தங்கள் இதயத்தில் ஒரு சிறிதும் இல்லாதபடி அகற்ற வேண்டும் மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்களையும் ஹரிஜனங்களையும் தங்களுடைய சொந்த உற்றார் உறவினர்போல் எண்ணி அவர்களுடன் நட்பு பூண்டு ஒழுக வேண்டும்.

அயலில் வாழ்பவர்களுக்கு ஏதேனும் நோயோ காயமோ ஏற்பட்டவிடத்து அவர்கள் வேண்டிய முதலுதவி செய்ய வேண்டும். பக்கத்துக் கிராமங்களில் சென்று குப்பை வாரித் துப்பரவு வேலை செய்து கிராமத்துச் சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் சுத்;தமாயிருக்கக் கற்பிக்க வேண்டும்.
தேசிய மொழியாகிய ஹிந்துஸ்தானி மொழி பேச்சிலும் எழுத்திலும் இப்போது இரண்டு உருவமுடையதாயிருக்கிறது. இரண்டையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹிந்தி பேசினாலும் உருது பேசினாலும் அவர்கள் எளிதாய் அறிந்து கொள்ள முடியும். நாகரி எழுத்தோ உருது எழுத்தோ எழுதினாலும் படிக்கவும் முடியும்.

தாங்கள் கற்பதில் புதிதாயுள்ளதெல்லாவற்றையும் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர்த்தெழுத வேண்டும். அயலூர்களுக்கு வாரந்தோறும் போகும்போதெல்லாம் இப்படிக் கற்ற அறிவை அங்கு பரப்ப வேண்டும்.
ரகசியமாக அவர்கள் ஒன்றும்; செய்யலாகாது. எல்லா விவரங்களிலும் சிறிது சந்தேகத்துக்கும் இடம்கொடுத்தலாகாது. புலன்களைக் கட்டுப்படுத்தித் தூய வாழ்க்கை வாழ வேண்டும். அச்சத்தை அடியோடு அகற்ற வேண்டும்.

தங்களோடு படிக்கும் மாணவர் யாரேனும் பலவீனராயிருந்தால் அவரைப் பாதுகாக்க எப்போதும் சித்தமாயிருக்க வேண்டும். …..

தங்களுடன் படிக்கும் பெண்களோடு பழகுவதில் முறை தவறாமலும் பெருந்தன்மையாகவும் நடந்த கொள்வதில் மிக்க கவனத்தோடிருக்க வேண்டும்.

இப்படியான அரிய கருத்துக்களைச் சொல்லிய மகானுடைய நாட்டிலா இத்தனை அக்கிரமங்கள் என மனம் வெதும்புகிறேன். இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமயத் தலைவர்களுக்கும் சமூகத்தில் அக்கறையுடைய அனைவருக்கும் இது சமர்ப்பணமாகிறது.
சுத்தானந்த பாரதி என நினைக்கிறேன். ஏதோ ஒரு பாடலில் தான் தான் திருந்தச் சமூகந் திருந்தும் என்று சொல்லியுள்ளார். எனது வலைப்பதிவில் தொடக்கத்திலிருந்து அனேகமாக அனைத்துக் கட்டுரைகளிலும் பொதுவாக நீதிக் கருத்துக்கள் மற்றும் சமத்துவம் பேணும்தன்மை ஊடுருவியிருப்பதை உணர முடியும்.


இதை நான் ஏற்கனவே தமிழ்ப் பூங்கா வலைப்பதிவின் - எனது சமூகத்தின் ஒரு கோரப் பக்கம் என்ற தலைப்புக்கு பின்னூட்டம் பதித்துள்ளேன்.

No comments: