அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, August 10, 2008

நல்லூர்க் கந்தனின் திருவிழா ஆரம்பமாகி இன்று 5ஆம் திருவிழா

வருடாவருடம் யாழ் மாநகர சபையின் சைவசமய விவகாரக்குழு நல்லைக் குமரன் மலர் என்ற ஒரு நூலை இத்திருவிழாக் காலங்களில் வெளியிடும். இம்முறை மலருக்கு எழுதிய ஒரு ஆக்கத்தை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

----------------------------------------------------------------------

ஓம்

தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை - என்ற வரிகள் நற்சிந்தனையில் ஏத்துக பொன்னடி என்ற தலையங்கத்தின் கீழ் வருகின்ற பாடலில் இருக்கிறது.

அடியேனது மனதில் தவத்திரு சிவயோக சுவாமிகளின் எண்ணத்தை ஊட்டியவர் அளவெட்டி ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் ஆச்சிரமத்தில் அமைச்சராகப் பணிபுரிந்த மறைந்த சிவத்திரு. சோ. சுண்முகசுந்தரம் அவர்களாவார். அடியேனது சொந்த ஊரான மூளாயில் அடியேனது பொறுப்பில் இயங்கிய இந்து சமய மன்றத்தின் மூலம் அவர்களுடன் நாம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டோம். (இந்து சமய மன்றத்தை ஆரம்பிக்க உதவிய மில்க்வைற் தொழிலதிபர் சிவமர்மவள்ளல் அமரர் க. கனகராசா அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது எனக்குரிய கட்டாயமான பணியென நான் மனதார நன்றியுடன் எண்ணுகின்றேன். காரணம் எனது சமய – சமூகப் பணிகளுக்கு மிகவும் ஊக்கம் அளித்தவர்களுள் அவரும் குறிப்பிடத்தக்கவர். அவர் மாத்திரமல்ல எனக்கு சிறுவயதிலிருந்து சமயத்தைப் போதித்த அத்தனை ஆசிரியர்களுக்கும் - வழிகாட்டிய பெரியோர்களுக்கும் எனது மானசீகமான நன்றியுடன் கலந்த வணக்கங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டுவதில் பெரிதும் மனநிறைவடைகின்றேன்.)

பின்னர் எமது மன்றத்தை இந்து இளைஞர் மன்றத்துடன் இணைத்துக்கொண்டபின் அவரது உதவியாளராக நான் அளவெட்டி ஆச்சிரமத்தில் பணியாற்றியபோது குருதேவர் ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளைப் பற்றியும் அவரது சற்குரு - தவத்திரு சிவயோக சுவாமிகளைப்பற்றியும் எனக்கு தெளிவுறவைத்தார். அந்தக் குருபரம்பரையை மானசீகமாக எனது மனம் வழுத்தவும் நாடவும் தொடங்கியது. தவத்திரு சிவயோக சுவாமிகளின் நான்கு மகாவாக்கியங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.

ஒரு பொல்லாப்பும் இல்லை.
எப்பவோ முடிந்த காரியம்.
நாமறியோம்
முழுதும் உண்மை.

இன்றும் அந்த மகா வாக்கியங்கள் எனது உயிருடன் கலந்திருப்பதை நான் சொல்லியே ஆகவேண்டும். அடியேனது வாழ்வில் சமய அறிவை வளர்க்கப் பெரிதும் உதவிய - மிகவும் பெருமைப்படவேண்டிய ஒருவரென்றால் எனது தாத்தா அமரர் மு. வல்லிபுரம் அவர்கள் தான். சிறு குழந்தையாக இருக்கும்போது என்னைக் கைப்பிடித்து மூளாய்ப் பிள்ளையாரிடமும் முருகனிடமும் கூட்டிச் சென்ற பெருமை அவருக்கே உரியது. அவரது வழிகாட்டலும் அறிவுரையும் என்னை இன்றும் நல்வழிப்படுத்துவதை நான் மனதார உணரக் கூடியதாகவிருக்கிறது.

தவத்திரு சிவயோக சுவாமிகளைப்பற்றிய எண்ணம் ஏற்படும் ஒவ்வோர்கணமும் நல்லூர் முருகனுடைய எண்ணமும் தானாகவே தோன்றும். தேரடியில் சென்று சற்றுநேரம் அமரும்போது கிடைக்கும் அனுபவம் தன்னை அறிந்தவர்களுக்கே உணரமுடியும். வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே என்ற பாடலின் அர்த்தம் எனக்கு உண்மை அனுபவமாகிறது.

கடந்து வருடம் தேர்த்திருவிழாவின்போது கடல்கடந்திருக்கின்ற அடியேனுக்கு நல்லூரிலேயே இருக்கின்ற ஓர் அனுபவத்தை தொலைபேசிவழியில் ஏற்படுத்திக்கொடுத்த எனது ஆருயிர்நண்பன் பிரதீப் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருவது எனது கடமையாகும்.

அதிகாலையிலேயே தொடர்பை ஏற்படுத்தி அங்கு நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் இங்கிருந்தபடியே அனுபவிக்கின்ற பெரும்பேறுபெற்றேன். அடுத்தடுத்த நாட்களில் அங்குள்ள திருவுலாக் காட்சிகளைப் புகைப்பட மூலம் பார்க்கக் கூடியதாக இன்னோர் நண்பனான தரணிதரன் உதவினார்.

எனது அனுபவத்தையே நான் இக்கட்டுரையில் வெளிப்படுத்த முனைகின்றேன். சிவபுமி என அழைக்கப்பட்ட எமது நாட்டில் நடைபெறும் அதர்மங்கள் எப்போது முடிவுக்கு வரும் நாம் எப்போது முன்னர்போல சுதந்திரமாக எமது ஊர்களில் உலவமுடியும்என்று இன்றும் ஆதங்கப்படுபவர்களில் நானும் ஒருவனே! அதுவும் நல்லூர் முருகனுடைய திருவிழா என்றால் யாழ்ப்பாண நகர்மட்டுமல்ல குடாநாட்டுக்கு வெளியே இலங்கை பூராவுமிருந்து முருக பக்தர்கள் சண்முகப்பெருமானுடைய அழகுத் திருக்கோலம் காண ஆவலோடு நல்லூரை நாடிவருவதை யாரும் மறுத்துரைக்கமாட்டார்கள். 25 நாட்கள் மிகவும் பக்தி பூர்வமாக வயது வேறுபாடின்றி அதிகாலை முதல் இரவுவரை அடியார்கள் தமிழ்க்குடிக்குக் குலதெய்வமான கார்த்திகேயனை மனமுருகித் துதிக்கும் பாங்கைச் சொல்லால் வடிக்கமுடியாது.

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது என்று கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் கூறியதுபோல படித்தபெரியார் முதல் பாமரமக்கள்வரை அந்த ஞானாகரனை நாடி – அவனருள் தேடி கூடுவது கண்கொள்ளாக்காட்சி.

பாழ்வாழ்வு எனும் இப்படுமாயையிலே வீழ்வாய் என என்னை விழுத்திய - அவனருளைத் தேடிஇ விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் காண அவன் வெளிவீதிவரும் அழகை எப்படி என்று வர்ணிக்க முடியும்.

கங்காநதி பாலனான மயிலேறிய சேவகனை ஞானசக்தி வடிவாகிய வேலின் ரூபத்தில் காணும் கண்கொள்ளாக்காட்சி எப்போது நேரில் எனக்கு நீ அருள்வாய் என ஏங்கிய வண்ணம் மனதால் கடல்கடந்து வாழும் என்போன்ற பல பக்தருக்கு நீ எப்போது கிருபை புரிவாய்.

சாகாது எனையே சரணங்களிலே காத்த வேற்கொடி வீரா என் விண்ணப்பத்தை நீ எப்போது ஏற்றுக் கொள்வாய்.

யோகர் சுவாமிகள் கூறியதுபோல வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே என்ற கூற்று எனக்கு எவ்வளவுதூரம் பொருந்தியது என்பதை நான் சதா நேரமும் நினைந்தவண்ணமிருக்கிறேன்.

எனது திருமணமும் முருகனுடைய எல்லையில் துர்க்கா மணி மண்டபத்தில் மறைந்த அன்னை துர்க்காதுரந்தரி. சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது. இன்று அவரை இழந்து தமிழ்ச் சைவச் சமூகம் பரிதவிக்கிறது. நாவலருக்குப் பின் சைவத்தை வளர்த்த பாரிய பொறுப்பு அன்னைக்கு உண்டு.

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீயுமான முருகா எனது மனக்கவலைகளை நீக்கி அருள்புரிவாயாக என்று மன்றாடி மனதால் பிரார்த்திக்கின்றேன். உமையாள் குமரா மறைநாயகா சற்குருநாதா குலிசாயுதா குஞ்சரவா சிவயோகா – உன் தாழ் பணிந்து வேண்டுகிறேன் எம் மக்களின் இடரை அகற்றி நல்வாழ்வைத் தருவாயாக!!!
மதிகெட்டு அறத்தை மறந்து வீணான ஆசைகளால் மனம் மயங்கி எம் மக்கள் படும் அவலத்தை எவ்வாறு நீ பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கிறாய்?

மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார் கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே – எம் மக்கள் படாதபாடுபட்டுவிட்டார்கள்.

தமிழ் மக்கள் வாழ்ந்த அந்த உயர்ந்த நிலையை தமிழ்த் தெய்வமே வழங்கி அவர்கள் வீணாகக் கெட்டு அழிய விட்டுவிடாதே!

No comments: