அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 19, 2008

இந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக்கான அறிவித்தல்.

செய்தி இதழ் 1

ஓம்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

இந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக்கான அறிவித்தல்.

மேற்படி பேரவையால் அடுத்தமாதம் தொடக்கம் ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட எண்ணியுள்ளமையால் தங்களின் கருத்துக்களையும், தங்கள் அமைப்பின் செய்திகள் - பணிகள் என்பவற்றை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்கும்வண்ணம் தயவாக வேண்டிக் கொள்வதோடு, எமது பணிகளில் தங்களுடைய ஒத்துழைப்பு எத்தகையது என்பதையும் வினவ விரும்புகின்றோம். ஏனெனில் நாம் கடந்த மாதம் அனுப்பிய இரு கடிதங்கள் காரணமாக - பூனாகலை இந்து கலாசாரப் பேரவை, தலவாக்கொல்லை இந்து சமய கலை கலாச்சாரப் பேரவை, களுத்துறை இந்து இளைஞர் மன்றம், கேகாலை குருப்பிரவேச ஸ்தாபனம் என்பன மாத்திரம் எமக்கு இதுபற்றிய தகவல் அளித்துள்ளன. “பிற உயிர்களின்மீது இரக்கம்கொண்ட உண்மையான இந்து தத்துவத்தின் மீது பணிபுரிய பூனாகலை இந்து கலாசாரப் பேரவையின் 13 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் மாத்திரம் கிடைத்தமை பற்றியும் குறிப்பிட வேண்டும். பொகவந்தலாவ இந்து மா மன்றமும் அகதிகளுக்கான பணிகளுக்கு உதவுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

தனித்துப் பணிபுரிவதைக் காட்டிலும் சங்கம், சபை, மன்றம் அமைத்துப் பணிபுரிவது சிறப்பு என்ற ரீதியில் நாங்கள் அமைத்துச் செயற்படுகின்ற கொழும்பில் ஏற்கனவே (கொழும்பில் மாத்திரம் சுமார் 30 அமைப்புக்கள் இருந்தும்) எம்முடன் தொண்டு மனப்பாங்கில் பணிபுரிய ஒரு இளைஞர்கூட முன்வராதமையையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றோம். சென்ற 31.08.90 அகதிகளுக்காக ஒழுங்கு செய்திருந்த நிவாரணப் பொருட்களை ஏற்றி அதனை ஒழுங்கு செய்துகொள்ள நாம் பணம்கொடுத்து வேலையாட்களை அமர்த்த வேண்டியிருந்ததனைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. தனித்து இயங்கும் அமைப்புக்களை நாம் எந்தவிதமான குற்றம் கூற விரும்பவில்லை. அதற்கு எமக்கு அதிகாரமோ - உரிமையோ இல்லை. ஆனால் இந்து சமயத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து இப்பணிகளில் எம்முடன் மட்டுமல்ல எந்தவொரு அமைப்பினது பொதுப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோளாகும். குறிப்பாக இளைஞர்களுக்கு இது ஒரு கடமையாக அமைய வேண்டும்.

இவ்வறிவித்தல் மூலமாகத் தங்களை வேண்டுவது யாதெனில் தயவுசெய்து எமக்கு தங்கள் கருத்தை அறிவியுங்கள். நாம் மாத்திரம் கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு இவை சேரும் நிலை தெரியாமலுள்ளது. பேரவை பதிவுசெய்யப்படும் பொழுது அங்கத்துவ அமைப்புக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டியுள்ளமையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


தற்போது கொழும்பில் தங்கியுள்ள விஸ்வ ஹிந்து பரிசித்தின் ஆரம்பகால உறுப்பினரும், ஸ்தாபகருமாகிய சிவத்திரு. குருபரன் அவர்கள் எதிர்வரும் ஐப்பசி மாதமளவில் இந்து அமைப்புக்களுக்கான செயற்திட்டங்கள் மற்றும் இதர பணிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றினை ஏற்படுத்த இருப்பதால் இவைபற்றியும் எமது தொடர்கள் வலுப்படுத்தப்பட்டு அவருடைய முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்பு கொள்ளவும் வழியமைக்க ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். சிவத்திரு. குருபரன் அவர்கள் கனடாவில் இருந்துவந்து தங்கியுள்ளார். அவருடன் சென்ற 2.9.90 ஞாயிற்றுக்கிழமை இது குறித்து கலந்து ஆலோசிக்க எமக்குத் திருவருள் கிட்டியது. அன்னாரது பணிகளை நாம் ஊக்குவிப்பதன்மூலமாக எமது சமூகத்தில் இந்து சமய வளர்ச்சியை நாம் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். தங்களின் சிறப்புமிக்க ஒத்துழைப்பினை நாடி, தங்கள் பதிலை எதிர்பார்த்து அமைகின்றேன்.

‘ஒற்றுமை இந்த ஊரிடை ஓங்குக’


என்றும் பணியில் உண்மையுள்ள
த. முகுந்தன்.அமைப்பாளர்,இந்து சமய ஒற்றுமைப் பேரவை.
146/19, Havelock Road, Colombo - 5. 4/9/90
----

ஓம்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”


சமயநெறி


உயிர்கள் உய்திபெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் கலையே வாழ்க்கை. உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. அந்த நெறியில் தலைப்படின் சிந்தையிவே தெளிவு - அறிவிலே ஆக்கம் - ஆற்றலின் கொள்கலம் - அயரா அன்பு - எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய நெறி வழிப்பட்ட சமுதாயம். களவு - காவல், உயர்வு - தாழ்வு, உடையார் - இல்லாதார், என்ற அமைப்பு சமய நெறி சாராதார் அமைப்பு. ஆனால் இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி, நிறுவனங்களாகி அதுவே களவுக்கும் - காவலுக்கும் ஆளாகி, உயர்வு - தாழ்வு என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும் இல்லாரை எள்ளி நகையாடி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம் பிரானாட்டம் ஆகமுடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமயநெறி.


ஆலயங்கள் சமய - சமுதாயப்பணி மன்றங்களே!


ஆலயங்கள் நமது சமுதாயத்தின் பொது இடங்களாக விளங்கி மக்கட்பணி செய்தன என்பதை தமிழகத் திருக்கோயில்களில், கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கூடியதாக இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்கள் இருந்து தமிழாராய்ந்தனர். கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைபயில் கழுகங்கள், நாடக அரங்குகள், மருத்துவமனைகள், ஏன் பிணக்ககளைத் தீர்த்து வைக்கும் முறை மன்றங்களும் இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழிநடத்தும் கிராம சபைகள் - ஊர்ச்சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன. இன்று நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. இவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகிவிட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமயநெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாதி, குல, இன, அரசியல் வேறுபாடுகளை அறவே களைந்து, அவற்றிற்கு அப்பாற்பட்டதாக அமைதல் வேண்டும். ‘தெரிதல் முறை’ அவசியம். சமய நிறுவனங்களுடைய தலைவர்கள், ஆலய மதகுருமார்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருக்க வேண்டும். (இன்னும் வளரும்)


கேகாலை - குருப்பிரவேச ஸ்தாபனம்

கேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குருவும், குருப்பிரவேச ஸ்தாபனத்தின் ஆசிரியரும், தலைவரும், ஸ்தாபகருமாகிய சிவஸ்ரீ மணி ஸ்ரீ நிவாஸ ஸர்மா ஐயா அவர்கள் மலையகப் பகுதிகளில் மிகச்சிறப்பான முறையுடன், பல இலவச வெளியீடுகளையும் வெளியிட்டு இந்து சமய மறுமலர்ச்சியில் பணிபுரிவதையிட்டு பேரவை மகிழ்ச்சி மெரிவித்துள்ளது. கடந்த 26.08.90 ஞாயிற்றுக்கிழமை தெரணியாகலை இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மேற்படி ஸ்தாபனத்தின் தலைவருடைய அழைப்பின்பேரில் பேரவையின் சார்பாக அமைப்பாளராகிய அடியேனும் கலந்து அப்பகுதி இளைஞர்களின் ஆர்வத்தையும், செயற்பாடுகளையும் தெரிந்து கொண்டமையையும் இவ்வறிவித்தலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.


த.முகுந்தன்,
அமைப்பாளர், இந்து சமய ஒற்றுமைப் பேரவை, 146/19,ஹவ்லொக் வீதி, கொழும்பு - 5. தொலைபேசி இல. 503831.
T.Mukunthan, The Organizer, Hindu Religious United Federation, 146/19, Havelock Road, Colombo -5. Telephone No. 503831.

-----

செய்தி இதழ் 2

ஓம்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”


இந்து சமய ஒற்றுமைப் பேரவை

விசேட செய்திக் குறிப்பு

1. ஒற்றுமையின் அவசியம்

எம்மிடத்தில் ஒற்றமையின்மையால் நாம்படும் வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. சகல வழிகளிலும் நம்மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் ஒற்றுமையைப் பேணி வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும். ‘மானிட வாழ்வு’ - அரியது. எம் உயிர் உடலைவிட்டு நீங்கு முன்னர் ஒவ்வொருவரும் தம்மை அறிந்து, “தன்னைப் போலச் சகலமம் ஓம்புக” என்ற யோகர் சுவாமிகளின் வாக்கிற்கு ஒப்ப - பணிபுரியவும் - அன்பு செலுத்தவும் எமது பேரவையின் பணிகளில் இணையும் வண்ணம் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

எமது நாட்டில் தனித்தனியாக இயங்கும் சமய ரீதியான அமைப்புக்கள் அனைத்தையும் வெளிக்கொண்டுவந்த எம்முடன் தொடர்புபடுத்தி ஓர் உறுதியான - ஒற்றுமையான அமைப்பாகி செயற்பட நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும்வண்ணம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆலயங்களில் நடைபெறும் நிர்வாகக் குறைபாடுகளினாலும், அதிகாரப் போக்கின் காரணமாகவும் ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தி அமைதிகாக்க வழிபடச் செல்பவர்களுக்கு - மனதில் வேதனையும் குழப்பமும் ஏற்படுகிறது. இதனால் எமது மக்கள் மத்தியில் சமயம் ஆலய வழிபாடு கேள்விக் குறியாக்கப்படுகிறது. மேலும் பஞ்சாங்கங்கள் ஏற்படுத்தும் முரணான தகவல்களும், கணிப்புக்களும் ஒருபுறம் தாக்கத்தையும் ஏளனத்தையும் ஏற்படுத்துகிறது.

“நாம் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும்” என்ற முறையில் சமய நெறிப்படி வாழ உறுதிபூண்டு எமது பேரவை மேற்கொள்ளும்பணிகளில் உங்களைத் தொடர்புபடுத்தி சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாகுபாடின்றி ஒன்றுபட்டுப் பணிபுரிய ஆவலோடு உங்களனைவரையும் வரவேற்கின்றோம்.

2. இந்து சமய போதனைகளைத் தபால்மூலம் நடாத்துதல்

பல இளவயதுடையவர்களின் ஆர்வத்தைக் கண்டு தபால்மூலமான போதனைகளை நடாத்தவுள்ளோம். வினா விடை போன்றதாகவுள்ள இக்குறிப்புக்களைப் பெற விரும்புவோர் மன்றப் பிரதிநிதிகள் எமது பேரவையின் செயலாளருடன் தொடர்பு கொள்க. மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இக்குறிப்புக்களிலிருந்து பொதுப் பரீட்சை நடாத்தவும் ஏற்பாடாகியுள்ளது.

3. புதிய நிர்வாக சபை

பதினொருபேர் கொண்ட நிர்வாகம் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டு பணிகள் பரவலாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு தொடர்பாளர்களை நியமிக்கவும் முடிவுசெய்யப்பட்டு இதற்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைவரும் பிரதான அமைப்பாளரும் த. முகுந்தன்உப தலைவர் செ. ராஜமோகன்கௌரவ செயலாளர் செ. ஆனந்தராஜாதுணைச் செயலாளர் சு. தேவராஜ் பொருளாளர் சு. இரா. சபாபதிகணக்குப் பரிசோதகர் ப. தங்கராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் சு. யோகேஸ்வரன் க. நடராஜ் சி. மோகன் சி. யோகராஜ் செ. ராதாகிருஸ்ணன்

4. சர்வதேச இந்து இளைஞர் சங்கம் நடாத்திய கரத்தரங்கில் பேரவையின் நிலைப்பாடு

கருத்தரங்கை நடத்தவேண்டிய பணிகளை மாத்திரமே நாம் பொறுப்பேற்றோம். கருத்தரங்கில் இறுதிவரை கலந்துகொண்டவர்களில் திரு. குமரகுருபரனின் உரையைக் கேட்டவர்களுக்கு எமது பங்கு என்ன என்பது தெரியும். இதற்குப்பின்னர் அவர் தமிழர் இயக்கம் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் அதனால் கனடாவுக்க திடீரெனத் திரும்பிய விடயங்கள் தெரியாதிருக்கலாம். எம்மால் முடிந்தளவு அவருக்கு வேண்டிய உதவிகளை அளித்தோம். அவரிடமிருந்த தகவல்வரும்வரை எமக்கு அக்கருத்தரங்குத் தீர்மானங்கள் - செயற்பாடுகள் குறித்து எதுவும் சொல்ல முடியாது. எனினும் பங்குபற்றிய சகலரிடத்திலும் தொடர்புகொண்டு எம்மால் முடிந்தளவு பணிகளை உங்களுடன் இணைந்து ஆற்ற ஆவலாக உள்ளோம். இதற்காக எம்முடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

5. சகல அமைப்புக்களுடைய கவனத்திற்கு

தங்கள் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் இக்குறிப்பைத் தெரிவிக்கும் வகையில் இதனை அல்லது இதன் பிரதியைத் தங்கள் விளம்பரப் பலகையில் பார்வைக்கு வைக்கவும். சமயப் பிரச்சாரங்கள், அறநெறி வகுப்புக்கள் நடாத்த எம்மால் முடிந்தளவு ஊக்கமளிக்கவும் ஆவன செய்வோம்.

தங்களமைப்பில் மொத்தமாகவுள்ள உறுப்பினர்கள் நிர்வாக சபை விபரங்கள் என்பவற்றை எமக்குத் தெரியப்படுத்தவும்.


“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கிற்கமைய ஒன்றுபட்டுப் பணிபுரிவோமாக.


அமைப்புக்கள் பணத்தின்மீது கவனம் செலுத்தாது பணிசெய்ய வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோள்.



“தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை”

த. முகுந்தன். தலைவரும் பிரதம அமைப்பாளரும்,
No. 146/19, Havelock Road, Colombo - 5.

சு. இரா. சபாபதி பொருளாளர்.

செ. ஆனந்தராஜா, செயலாளர்
No. 76/6B, Third Cross Street, Colombo - 11.

3 comments:

SurveySan said...

இந்து மதம்னா என்னங்க?

இங்கு நடக்கும் கருத்துரையாடலுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

நன்றி.

http://tamilgarden.blogspot.com/2008/08/blog-post_17.html

தங்க முகுந்தன் said...

இதற்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பர் சர்வேசா!

இந்து தர்மம் தோன்றிய பெருமையுடைய நாட்டில் இப்படியான கொடுமையா?

ஏற்கனவே அறிந்திருந்தாலும் இது மிகவும் வேதனையைத் தருகிறது.

இதற்காக நான் எனது சமயத்தைக் குறை சொல்லவில்லை.

இதற்கு கண்டிப்பாக ஒரு முடிவு காண நாம் முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரச்சனை எமது நாட்டில் பெரிதாக இல்லாவிட்டாலும் சாதிப் பிரச்சனை இருக்கிறது. இனப் பிரச்சனைதான் எமக்கு முக்கிய தலையிடி. இதுபற்றி நான் விரிவாக உங்கள் பதிவில் நான் எனது கருத்தைத் தெரிவிப்பேன்.

வருகைக்கும் கேள்விக்கும் நன்றி.

தங்க முகுந்தன் said...

இந்து சமயம் என்றால் என்ன ? என்று என்னை வினவியிருக்கிறீர்.

மதம் என்ற சொல்லை நான் தவிர்த்தே வருகின்றேன். காரணம் அது யானைக்குரிய மூர்க்க குணம். அது எம்மை செம்மைப்படுத்தும் நெறியில் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால் சமயம் வழி முறை தர்மம் நெறி என்ற பதங்களைப் பாவித்து வருகின்றேன்.

உ மது பதிவில் இது பதியப் பட்டுள்ளது.


என்னைப் பொறுத்தவரை இந்து என்பதன் சரியான அர்த்தம் இம்சையைக் கண்டு துக்கிக்கின்றவன் எவனோ அவனே உண்மையான இந்து என்பேன்.

அதாவது அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய் இருப்பவன் எவனோ அவனே உண்மையான இந்து.

தன்னைப் போல சகலதையும் எவன் நோக்கி ஏனையவர் அனைவரையும் தன்னைப் போலக் கருதுபவன் எவனோ அவனே நான் விரும்பும் இந்து.

திருவிளையாடற் புராணத்தில் இறைவன் மனிதனால் வெறுத்து ஒதுக்கத் தக்கதாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த வரலாறை நாம் சற்று ஆறஅமர இருந்து சிந்தித்துப் பார்ப்பது சிறந்ததெனக் கருதுகிறேன்.

நாம் முதலில் மனிதராக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு கலைச்சுடர் ஜப்பார் அவர்களால்(ஈழத்து எழுத்தாளர்) மனிதன் மாமனிதனாக…என்ற மணிமேகலைப் பிரசுர நூலை வாசித்தல் மிகவும் அவசியம். தேவையேற்பட்டால் அந்நூலில் மனிதன் என்ற முதல் கட்டுரையை மட்டுமல்ல முழுக் கட்டுரைகளையுமே விரும்பினால் வாசகர்களுக்காக பதிவிடலாம். அக்கட்டுரையின் இறுதியில் உள்ள பந்தி இவ்வாறு இருக்கிறது.

இதயம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு என்னவோ இருக்கிறது. மூளை இருக்க வேண்டிய இடம் காலியாகி விட்டதா? இல்லை. ஆனால் மூளை வேறு விதமாக வேலைசெய்கிறது. என்ன செய்யலாம் இவனை என்று இறைவனை சிந்திக்க வைத்துவிட்டான். அதனால் மனிதன் எங்கே என்று இறைவன் கேட்கிறான்.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் குறிப்பாக கீழைத்தேய ஆசிய நாடுகளில் அரசாட்சி முறையை நாம் மாற்றியமைப்பது அவசியமாகிறது. இந்தியா சுதந்திரமடைந்தபோது தேசபிதா மகாத்மாவுக்கு அன்றைய நிலையில் முழுமன நிறைவு ஏற்படவில்லை. அவர் எதிர்பார்த்திருந்த ஒன்றுபட்ட இந்தியா பிளவுபட்டிருந்தது. பாகிஸ்தான் இந்தியா என ஒரு பெரிய ராஜ்யம் பிளவுபட்டது இனங்களின் அடிப்படையில். ஆனால் இன்று என்ன நடக்கிறது?

நான் காந்தி திரைப்படத்தை சுமார் 25 தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். அதில் இந்தியா சுதந்திரமடைந்த வேளையில் அவரது ஆச்சிரமத்தில் கொடி எதுவுமற்ற கம்பத்தைக் காணலாம். இதன் அர்த்தம் என்ன? நினைத்தது நடக்கவில்லை என்ற ஆதங்கம். அவர்மீது குறைசொல்வோர் பலரும் இருக்கிறார்கள். ஆங்கிலேயேருடன் அவர் எவ்வளவு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் செய்துள்ளார். ஆவர் தனி ஒரு மனிதனாக இருக்கவில்லை. பல தொண்டர்கள் மக்கள் இனமத வேறுபாடின்றி அவரைத் தம் தலைவராக ஏற்றுத்தானே நடந்தார்கள். அவரை எப்போது ஒரு இந்து சுட்டுக் கொலை செய்தானோ அன்றே எமக்கெல்லாம் ஒரு பழியும் பாவமும்; ஏற்பட்டது. நான் மானசீகமாக என் குருவாகக் கொள்ளப்பட்டவர்களில் அவரும் மகாகவி பாரதியும் சுவாமி விவேகானந்தரும் அன்னை திரேசாவும் அடங்குவர்.(மேலதிக தகவல் தேவையாயின் எனது கிருத்தியம் வலைப்பதிவை நோக்கவும்)

தற்போதைய நிலையில் இன்னொரு மகாத்மா பாரதி விவேகானந்தர் அன்னை திரேசா போன்றோர் தோன்றினாலேயே சமத்துவமுடைய சமுதாயத்iதை ஏற்படுத்த முடியும் என்பது எனது அறிவுக்கு எட்டிய கருத்து.

மீண்டும் கருத்துத் தெரிவிக்கவருவதுடன் இதுகுறித்து ஒரு செயற்திட்டத்தை தீட்டி நடைமுறைப்படுத்த அனைவரையும் நான் முழுமனதுடன் வேண்டுவதுடன் இதற்கு என்னாலான பங்களிப்பையும் செய்ய சித்தமாயிருக்கிறேன் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். சும்மா தேவையற்ற விடயங்களில் வீணாகப் பொழுதைப் போக்காமல் ஆக்கபூர்வமான விடயங்களில் ஈடுபட்டு நம் சமூகத்தை திருத்தியமைக்க சுவாமி விவேகானந்தர் அறைகூவியதையும் நினைவு படுத்தி இப்போதைக்கு இதனை நிறைவு செய்கின்றேன்.