அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, August 18, 2008

நற்சிந்தனை – குருநாதன் அருள்வாசகம் - பகுதி 1


சிவமயம்
நீ உடம்பன்று. மனமன்று. புத்தியன்று. சித்தமன்று. நீ ஆத்மா. ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்களுடைய அனுபவ சித்தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்றாய்ப் பதியக்கடவது. ஆனால் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறமும் உள்ளவர்.

இப்படிக்கு
அவனே நான்.

குறிப்பு - (தவத்திரு சிவயோக சுவாமிகளின் கைப்பட எழுதிய மகா வாக்கியம்.)

ஒரு குறைவுமில்லை

நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே.
ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை.
நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே.
நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிறோம்.
எல்லா மறிவோம்.

இப்படியே நாம் இடையறாது சிந்தித்துச் சிந்தித்துக் கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக.

சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத்
தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே.
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப் போதிய சான்று.

-------------

சிவதொண்டு

1


நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவுமில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற்காகவே நாங்கள் பூமியில் வாழுகிறோம்.

சந்திரன் சிவதொண்டு செய்கிறது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர்களும் அசுரர்களும் கின்னரர் கிம்புருடர் வித்தியாதரர்களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.

அனைத்துஞ் சிவன் செயல். அவனன்றி அணுவும் அசையாது. நாம் இழந்து போவதுமொன்று மில்லை ஆதாயமாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக்கின்றோம்.

நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணாதி ஆசையில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்றோம்.

ஓம் தத் சத் ஓம்.

2

நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவுமில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற்காகவே நாம் உயிரோடிருக்கிறோம். உண்பதும் உறங்குவதும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிறோம். நமக்கு ஆதியுமில்லை. அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்புமில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செயலென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர் செய்யும் நிட்டுரத்தையாவது கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழுதும் உண்மை.

ஓம் தத் சத் ஓம்.

3.

நாங்கள் சிவனடியார். நாங்கள் சிவனடியார். நாங்கள் சிவனடியார். நாங்கள் சிவனடியார். இது சரியை. இது கிரியை. இது யோகம். இது ஞானம். இது மந்திரம். இது தந்திரம். இது மருந்து.

இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை. இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை. தவமில்லை. விரதமில்லை. ஆச்சிரமச் செயலில்லை.

இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந்தார்கள். வாழுகிறார்கள். வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார். கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிபவர்க்கே தெரியும்.

ஒரு பொல்லாப்பு மில்லை.

எப்பவோ முடிந்த காரியம்.

நாமறியோம்.

முழுதும் உண்மை.

-------

ஒழுக்கமுடைமை


ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை கள்ளாமை பிறர் வசை உரையாமை பிறர் பொருள் கவராமை தாழ்மை பொய்யுரையாமை முதலியனவாம்.


எக்கருமத்தைச் செய்யும்பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்துபழகிவந்தால் மனஉறுதி உண்டாகும். அதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்த மாத்திரத்தில் உண்டாகும். இவர் பகைவர், உறவினர் என்ற பாகுபாடு சித்தத்திற் புகுந்து கவலையை உண்டாக்காது.

எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன. எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடையவராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவுமில்லை. என்னிடத்தில் எல்லோரும் அன்பாய் இருக்கிறார்கள். நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறேன் என்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற்கைவரும்.

ஓம் தத் சத் ஓம்.

----------

சன்மார்க்கம்


குரங்குபோல் மனங் கூத்தாடுகின்றதே.

இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில்லையே.
நன்று சொன்னாய். இதற்கு நல்ல மருந்துன்னிடமுண்டு. நீ அதை மறந்து போனாய். சொல்லுகிறேன் கேள்.

சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டு வா. மனக்குரங்கின் பிணி மாறும்.

அதைச் சாப்பிடும்போது அனுபானத்தை கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.

அது என்ன வென்றால் நாவடக்கம் இச்சையடக்கமென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.

இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற்றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.

அது என்னவென்றால் மிதமான ஊண் மிதிமான நித்திரை மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம லாபத்தின் பொருட்டிதைச் செய்.

மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழுமனத்தோடு விரும்புவானானால் சிவத்தியானத்;தைத் தினந்தோறும் செய்து வரக் கடவன்.

படிப்படியாhக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.

சாந்தம் பொறுமை அடக்கம் முதலிய நற்குணங்கள் அவனிடத்துதிக்கும்.

அவன் மனமெந்தநேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினாலும் இழிவடையான். அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுகமென்ற எண்ணம் பெருகும்.

கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானால் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவானா? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானானால் மாயவிருள் அவனை அடையுமா? அடையா.

போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.

ஆன்ம இலாபமே பொருளெனக் கண்ட அறிஞர் அநித்தியமான இந்த உலக இன்ப துன்பத்தில் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினாற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு நன்மை தீமையை வென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங்களைக் களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப்; பேரின்பத்துடன்; வாழ்வார்.

அது அறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக்; காளாவார்.

வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறியாது கிடப்பதுபோல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனையுண்டு ஒன்று இரண்டு நன்று ததீதென்றறியாமற் தேக்கிக் கிடக்கிறான்.

ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தையிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறான்.

அதுபோல பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தியென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிறான்.

பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக் கண்டு மகிழ்கிறான்.

பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண்களைப் படைக்கிறான்.

சிவனாகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பல பணிகளையுமாக்குகிறான்.

வைத்தியன் பல மூலிகைகளையுமெடுத்து ஒன்றாக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிறான்.

பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங்களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிறான்.

தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்து மகிழ்விக்கிறாள்.

சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிறான்.

பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங்கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள் ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.

அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ்கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங்கரையும்.

அனைத்தினும் வெற்றி யுண்டு.

No comments: