02 – 11 – 2006.
பேராசிரியர். கௌரவ. ஜி. எல். பீரிஸ் அவர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர் - கொழும்பு மாவட்டம்.
திருவருளும் குருவருளும் முன்னிற்க!
பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய ஆசான் - பேராசிரியர். கௌரவ. ஜி. எல். பீரிஸ் அவர்களுக்கு,
வணக்கம். தங்களுக்கு முதலில் எனது கீழ்ப்படிவான வணக்கத்தைத் தெரிவிக்க விரும்புகின்றேன். காரணம் - “குரு” என்ற சொல்லுக்குரிய அர்த்தத்தை அறிந்திருப்பதாலும், குருபக்தியில் எமது சநாதன தர்மமாகிய இந்து சமயம் கூறும் உண்மையை அறிந்திருப்பதாலும் தான்.
தாங்களும் பல்கலைக் கழக குருவாக, பீடாதிபதியாக இருந்து பின் பொதுப் பணிகளில் ஈடுபட்ட பொழுதும், உங்களை மதிப்புடன் மானசீகமாக இன்றும் நினைத்துக் கொண்டிருப்பவன்.
நான் முன்பு பணிபுரிந்த மறைந்த திரு. மு. சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோருடன் இணைந்து பல சீரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்ததும், தொடர்ந்து தற்போதும் உங்களால் இயன்ற வகையில் முயற்சித்துக்கொண்டு இருப்பதும் நானறிந்த விடயங்கள். கலாநிதி. நீலன் அவர்களுடைய மரணச் சடங்கில் தாங்கள் முழுவதுமாக கலந்து கொண்டதை - அவரிடமிருந்த தங்களின் அன்பு – தொடர்பை நான் உணரமுடிந்தது.
கடந்த 29.10.2006 தங்கள் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டு பல சிறப்பான பணிகளை ஆற்றிவரும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அற நிதியத்தினரால் நடாத்தப்பட்ட சமய அறநெறி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பில் நானும் பங்குகொண்டு தங்களின் திருக்கரங்களால் அந்த கௌரவத்தைப் பெற எண்ணியிருந்தேன். ஆனால் தங்களின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் எமக்கு வழங்கினார். கௌரவத்தைப் பெற்ற பின்னர் தங்களிடம் நேரடியாக நான் மேடையிலிருந்த விளம்பரத்தில் தமிழையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டேன். தாங்கள் இதைத் தவறாக எண்ணிவிட வேண்டாம். தாங்கள் எமது நாட்டில் நிலவும் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்தே பீடாதிபதி பதவியை துறந்து அரசியலில் ஈடுபட்டீர்கள்! ஆனால் உங்களைப் போன்று அரசியலில் நியாயமாக நடக்கக்கூடியவர்கள் எவரும் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். வேறுபாடுகளை நீக்க உதவிய தங்களின் பெயரில் இயங்கும் நிறுவனம் மும்மொழிகளுக்கும் சமத்துவம் அளிக்கும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு. தங்கள் நிதியத்தினரின் கடிதத்தலைப்பிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இதனையும் சரிசெய்ய வேண்டும். சகல சமயத்தினருக்கும் கொளரவம் வழங்கிய தங்கள் நிதியம் மொழியிலும் சமத்துவம் வழங்க வேண்டும்.
தங்களின் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என மனதாரப் பிரார்த்தித்து இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி.
தங்களுண்மையுள்ள,
என்றும் பணியிலுள்ள,
தங்க. முகுந்தன்.
--------------------------------------------
அல்ஹாஜ். இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் அவர்கள்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய அல்ஹாஜ். இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் அவர்களுக்கு,
வணக்கம். கடந்த 29-10-2006 அன்று பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அற நிதியத்தினரால் நடாத்தப்பட்ட சமய அறநெறி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும், தங்களின் கருத்துரைக்கும் எனது முதற்கண் நன்றிகள்.
தாங்கள் பேசும்போது மிகவும் ஒரு புதிய விடயத்தைக் குறிப்பிட்டீர்கள். தங்கள் தந்தையார் மறைந்த அல்ஹாஜ். பாக்கீர் மார்க்கார் அவர்கள் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தமையைத் தங்கள் பேச்சு நினைவுபடுத்தியது. சகலரையும் சமமாக நோக்கும் தன்மை – குறிப்பாக சகல சமயத்தவர்களும் எல்லா அறநெறிப் பாடசாலைகளிலும் பயிலக்கூடிய அமைப்பு நிறுவப்பட்டால் அது இன்றைய நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவந்துவிடும். இதற்கு முன்னர் மும்மொழிகளையும் கட்டாய பாடமாக்குவது முக்கியம். அப்போதே தங்கள் கருத்து அர்த்தமுடையதாகும்.
மிகவும் சாதுர்யமான கருத்து – நடைமுறைப்படுத்தப்பட்டால் ஐக்கிய இலங்கை சுபிட்சமானதாயிருக்கும். நடைமுறைப்படுத்துவது நாட்டின் தலைவர்களின் கைகளில் இருக்கிறது. காலத்தின் கடமையும் அதுவே. முயற்சி திருவினையாக்க எல்லாம்வல்ல இறையருளை மனதாரவேண்டி தங்களின் பணிகள் சிறக்கவும் வேண்டி இக்கடிதத்தை நிறைவுசெய்கின்றேன்.
நன்றி.
---------------------------
அல்ஹாஜ். மொஹமட் அக்ரம் அவர்கள்,
பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அற நிதியம்,
இல. 83, மாளிகாகந்த வீதி,
மருதானை,
கொழும்பு – 10.
திருவருளும் குருவருளும் முன்னிற்க,
பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய அல்ஹாஜ். மொஹமட் அக்ரம் அவர்களுக்கு,
வணக்கம். கடந்த 29.10.2006 அன்று பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அற நிதியத்தினரால் நடாத்தப்பட்ட சமய அறநெறி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பில் நானும் பங்குகொண்டு கௌரவத்தைப் பெற்றவன் என்ற வகையில் முதலில் தங்கள் நிதியத்திற்கும், தங்களுக்கும், ஏனைய நிதியத்தின் அங்கத்தவர்களுக்கும் முதலில் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்க சடமைப்பட்டுள்ளேன்.
பேராசிரியரின் பெயரைக் கொண்டு இயங்கும் இந்நிதியம் மேன்மேலும் பல தர்மப்பணிகளை முன்னெடுத்துச்சென்று கல்வியில் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இறைவனைப் பிரார்த்தித்து இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன்.
--------------------------
செல்வி. சறோஜினி சுகுமாரன் அவர்கள்,
ஸ்ரீ சித்தி விநாயகர் அற நெறிப் பாடசாலை,
மாளிகாவத்தை.
திருவருளும் குருவருளும் முன்னிற்க!
பேரன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசிரியை செல்வி. சறோ அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் கடந்த 29-10-2006 அன்று பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அற நிதியத்தினரால் நடாத்தப்பட்ட சமய அறநெறி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பில் எனக்கும் ஒரு கௌரவத்தைப் பெற்றுத்தர உதவியமைக்கு முதலில் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடந்த 6.10.2006ல் தங்களின் அறநெறிப் பாடசாலை எமக்களித்த கௌரவத்திற்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புவதுடன், பல வருடங்களுக்க முன்னர் நான் எதிர்பார்த்த ஒரு சமுதாயம் உருவாகி வருவதையும் எண்ணி மகிழ்வடைகிறேன். பற்றற்றுக் கருமம் செய்யும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் மூலம் புதியதொரு சமுதாயம் மிளிரும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
தங்களின் பலனை எதிர்பாராத பணிகளுக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய மனதாரப் பிரார்த்தித்து இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன்.
-------------------------------
திருமதி. பூமணி விஜயகுமாரன் அவர்கள்,
வாணி வித்தியா அறநெறிப் பாடசாலை.
செல்வி. ந. புஷ்பவேணி அவர்கள்,
ஸ்ரீ செந்தில் குமரன் அறநெறிப் பாடசாலை.
திருவருளும் குருவருளும் முன்னிற்க!
பேரன்புக்கும், மதிப்புக்குமுரிய ஆசிரியைகளுக்கு,
வணக்கம். தாங்கள் கடந்த 29-10-2006 அன்று நடைபெற்ற அறநெறி ஆசிரியர் கௌரவிப்பில் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டமைக்கு முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
வைதீக சமயம், சனாதன தர்மம் எனப் போற்றப்படும் எமது இந்து சமய அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் என்ற வகையில் தாங்கள் இருவரும் அன்று நடந்துகொண்ட விதம் பெருமையையும், எமது சமயத்தின் சகிப்புத் தன்மையையும் எடுத்துக் காட்டியது. கடந்த 40 வருடங்களுக்க மேல் சமயப்பணிபுரிந்த பெரியார்களை, சமய குருமார்களுட்பட கௌரவித்த போது,
1. பௌத்த சமய குருமாருக்கு – பௌத்த சமயத்தவர்கள் எல்லோரும் எழுந்தபோது சபையிலிருந்த ஏனையோரும், எழுந்து நின்று தமது மரியாதையை வழங்கினார்கள்.
2. அடுத்து அழைக்கப்பட்ட ஏனைய சமயப் பெரியோர்களுக்கு பெரும்பான்மையான பௌத்த சமய அறநெறி ஆசிரியர்கள் அமர்ந்திருந்தபோதும் ஒருசில ஏனைய சமய அறநெறி ஆசிரியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
3. இந்த வேளையில் எமது சமய அறநெறி ஆசிரியர்கள் சிலர் அமர்ந்திருந்த போதும், ஒரு சிலர் குதர்க்கமான கருத்துக்களைத் தெரிவித்தமைதான் மிகவும் வேதனையை அளித்தது.
உங்கள் இருவருக்கும் பின்னால் இருந்த எனக்கு – நீங்களிருவரும் எழுந்து நின்றிருந்தது மிகுந்த மனத் திருப்தியை அளித்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்கள் பேசிய பேச்சின் அடிப்படையில் - எமது சமயம் கூறும் உண்மைகளின்வழியில் - நீங்கள் இருவரும் ஏனைய சமயத்தவர்களுக்கு வழங்கிய மதிப்பை - நான் பெரிதும் பாராட்ட வேண்டும். வயதில் இளையவர்களான நீங்கள் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் கூறியதுபோல – தன்னைப் போல சகலமும் ஓம்பி – விண்ணைப்போல வியாபகமாகிய காட்சி – என்னை விழா நிறைவில் உங்களுக்க நேரடியாக நன்றியைத் தெரிவிக்க வைத்தது. இருப்பினும் எனது மனநிறைவுக்காக இக்கடிதத்தின் மூலம் தங்களின் உணர்வுபூர்வமான செயலுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்து முடிக்கின்றேன். ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.
------------------------
திரு. பிரஷாந்தன் அவர்கள்,
விபுலானந்தா அற நெறிப் பாடசாலை,
தெமட்டகொடை.
திருவருளும் குருவருளும் முன்னிற்க!
பேரன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசிரியர் திரு. பிரஷாந்தன் அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் கடந்த 29-10-2006 அன்று பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அற நிதியத்தினரால் நடாத்தப்பட்ட சமய அறநெறி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பில் எனக்கும் ஒரு கௌரவத்தைப் பெற்றுத்தர மிகவும் கடினமாக செல்வி. சறோஜினியின் வேண்டுகோளுக்கிணங்கி உதவியமைக்கு முதலில் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். நீங்களும் அந்த நிதியத்தில் உறுப்பினராக இருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். சகல சமயத்தவர்களுக்கும் மதிப்புக்கொடுத்த பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அற நிதியத்தினருக்கும், பேராசிரியர் அவர்களுக்கும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளேன். பேராசிரியர் அவர்களுடைய தொடர்புக்காகவே தங்களிடம் அவரது முகவரியை வேண்டினேன். முடிந்தால் அவரது முகவரி, மற்றும் தொலைபேசி இலக்கங்கள், ஈமெயில் முகவரியைத் தந்துதவவும்.
பற்றற்றுக் கருமம் செய்யும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் மூலம் புதியதொரு சமுதாயம் மிளிரும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
தங்களின் பலனை எதிர்பாராத பணிகளுக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய மனதாரப் பிரார்த்தித்து இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன்.
Wednesday, August 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment