அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 20, 2008

மனிதத்துவம் - 2

14.08.1990.

அதியுயர் மேன்மைதங்கிய ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் கவனத்திற்கு

கடந்த வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு நிலவரம் தொடர்பாக நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின்போது தங்கள் அரசாங்கத்தின் பெருந்தோட்டத்தொழிற்துறை அமைச்சரும், பாதுகாப்புக்கான இராஐhங்க அமைச்சருமான கௌரவ ரஞ்சன் விNஐரத்ன அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக யாழ் குடா நாட்டு மக்களை வவுனியா முகாம்களில் தங்கவைத்து புலிகளுடன் சண்டையிட யோசனை தெரிவித்தமையையிட்டு நாம் வேதனையும் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் நடத்தை குறித்து வெட்கமும் அடைகின்றோம். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 1981ல் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்ட யாழ் பொது நூலகம் இன்றுவரை எந்தவிதமான திருத்தமும் இன்றி மேன்மேலும் தாக்குதலுக்குள்ளாகி வருவதையும், 1983, 1984, 1985, 1986, 1987 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற
தாக்குதல்களில் அழிவாகிய அரச தனியார் உடமைகளுக்கும் இதுவரை எந்தவித நிவாரணமும் அளிக்க முடியாத அரசிற்கு மேலும் மக்களைத் துயரப்படுத்துமுகமாகவே இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மக்களைக் காப்பாற்ற முடியாத அரச வாழ்க்கையை ஏன் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றீர்களோ எவருக்குமே புரியாமலிருக்கிறது. அகிம்சையைப் போதித்த கௌதம புத்தரின் பெயரைக்கூடச் சொல்லுவதற்கு எந்தவிதமான யோக்கியதையும் எந்த ஒரு பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவருக்கும் இல்லை. பிணி மூப்பு சாக்காடு என்ற காரணிகளால் உலகவாழ்வு நிலையற்றது என்று அரச போகத்தையும் குடும்பத்தையும் விடுத்து துறவறத்தை நாடிய சித்தார்த்தன் அவர்கள் மீது இந்துப் பெருமக்கள் மிக்க மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக இந்து சமயத்தில் யாகங்களில் இடம்பெற்ற உயிர்க்கொலைகளைக் கண்ணுற்று ஏனைய உயிர்களின் மீது இரக்கமும் அன்பும் பேணிய மகான் கௌதம புத்தர் ஆவார். அவருடைய போதனையைப் பின்பற்றுபவர்கள் இன்று நடைபெற்றுக்கொண்டீருக்கும் கொலைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாது, மேலும் நாட்டிற்கும் ஆயுதப் படையினருக்கும் நல்லாசி வேண்டி பிரார்த்தனை நடாத்துவது வேதனையோடு கோபத்தை ஏற:படுத்தவும் காரணமாகிறது.

தங்களால் நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கான விசேட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஏதாவது பயனுள்ள நடவடிக்கைகளை நீங்கள் இன்றுவரை ஏற்படுத்தாமையும் இன்றைய நிலைக்கு உரிய காரணமாகும். கடந்த 5 வருடங்களுக்குமேலாக வடக்கில் பொலிசாரோ அன்றி இராணுவமோ சேவையில் இருந்ததை நான் அறியவில்லை. திடீரென அரசு ஏன் இவற:றை அங்கு அனுப்பிவைக்கின்றதோ தெரியவில்லை. நாட்டு மக்களைக் காக்க இலங்கை அரசாங்கங்கள் யாவும் (சுதந்திரத்தின் பின்பு) தவறியமையைத் தங்கள் விசேட ஆணைக்குழுவே ஒத்துக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்ததையும் நினைவுபடுத்தி மக்களைக் காப்பாற்றவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை அமைத்துக் கொடுப்பதுமே அரசின் கடமையென்பதையும் நினைவுபடுத்தி தமிழ்மக்கள் மீதான இப்படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு உடனடியாக சண்டைகளை நிறுத்தி அகிம்சை வழியில் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென பௌத்தசமய தாபகரான புத்த பெருமானின் நம்பிக்கையின் பேரால் கேட்டு அமைகிறேன்.

கொல்லாமை பெரிது.

என்றும் பணியில்
தங்க. முகுந்தன்

--------

07.05.1992

மாண்பமிகு ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களுக்கு:
வணக்கம்.

இராணுவத்தாக்குதல்களை மக்கள் பகுதிகளில் நிறுத்தல்

இன்றைய வீரகேசரிப் பத்திரிகையின் கடைசிப் பகுதியில் (பக்கத்தில்) ஷெல் அடி என்ற தலைப்புpன் கீழ் வெளியான செய்தியில் பலாலி இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட ஷெல்கள் விழுந்து வெடித்து இருவர் காயமடைந்ததாகவும், நான்கு வீடுகளும் ஒரு கோயிலும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28.04.1992இல் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளை அழித்து சமாதானத்தை நிலைநாட்ட தங்கள் அரசு மேற்கொள்ளும் படைகளின் தாக்குதல்களினால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஏற்படும் அனர்த்தங்களே அதிகமாக உள்ளது. விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களே அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள்.

தயவுசெய்து மக்கள் வாழும் குடிமனைப் பகுதிகளில் இராணுவத் தாக்குதல்கள் நடைபெறாதிருக்க தாங்கள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பளிக்கும் வண்ணம் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை.

என்றும் பணியில்,உண்மையுள்ள பிரஜை
தங்க. முகுந்தன்

பிரதி – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

No comments: