அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 13, 2008

பத்திரிகைச் செய்திகள் (இன்றுவரை எவரும் பிரசுரிக்காதவை)

04.09.2006

பத்திரிகை செய்தி

கடந்த 01.09.2006 தினக்குரல் பத்திரிகையில் முதற்பக்கத்தில் நோர்வே அத்துமீறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு என்ற ஒரு தலைப்பிலும், ஏழாம் பக்கத்தில் கண்காணிப்புக்குழுவின் குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் நிராகரிக்கின்றனர் என்ற தலைப்பிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே முன்னைய ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சியிலும் நவாலி தேவாலய படுகொலைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம் தெரிவித்தபோது அதற்கு அன்றைய வெளிவிவகார அமைச்சர் மறைந்த திரு. லக்ஸ்மன் கதிர்காமர் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் நியூயோர்க்கில் கருத்துத் தெரிவித்த சமயத்தில் இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா சபையாகினும்சரி, வேறெந்த நபர்களாயினும்சரி தலையிடுவதைத் தவிர்க்கவேண்டும் எனக் கூறியிருந்தார். அதனடிப்படையில்தான் தற்போதும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் நோர்வேயின் செயற்பாடுகளுக்கும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று, ஏன் மேதகு ஜனாதிபதியும் கூட (முன்னைய ஆட்சிக்காலங்களிலும்சரி, இப்போதும்சரி) விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும் என கோரிக்கைவிடுவதுபோலவே, இந்நாட்டில் பல மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா சபையின் அகதிகளுக்கான புனரவாழ்வுக் கழகம், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்கள் இந்நாட்டில் நடைபெறும் படுகொலைகளை – அம்பலப்படுத்தி மனிதாபிமான முறையில் வெளிக்காட்டுகிறார்கள். மக்கள்மத்தியில் பிரிவினையை எற்படுத்தி ஒருதலைப்பட்சமாக சிங்கள் மக்களுக்கு கூடிய சலுகைகளை வழங்கும் அரசின் நடவடிக்கை நியாயமற்ற செயல் என்பதையே மனிதாபிமான அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதைப் புரிந்துகொள்ளாத அரசு ஒருபோதும் நியாயமான ஆட்சியை வழங்காது.

இதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீதும் கண்காணிப்புக்குழு குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ள வேளையில் அதற்கும் விடுதலைப்புலிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

மாவிலாறு அணைக்கட்டு சம்பந்தமான பிரச்சனை ஏன் ஏற்பட்டதென இன்றுவரை தெரியாத நிலையில், அரசு பொறுமை காக்காது விமான, எறிகணைத் தாக்குதல்களை ஆரம்பித்ததும், அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதும், பின்னர் அப்பாவி முஸ்லீம்கள் அதிகமாகவாழும் மூது}ர் பிரதேசத்தின்மீதும், வடக்கு இராணுவ நிலைகள்மீதும் தேவையற்ற முறையில் தாக்குதல்களை ஆரம்பித்தமையும், தற்போது இதனால் பல இன்னல்கள் ஏற்பட்டதும் - அவை தொடர்ந்த வண்ணம் இருப்பதுவும் மிகவும் வேதனைதரும் விடயங்களே. சம்பந்தப்பட்டவர்கள் இதில் ஆராய்ந்து முடிவெடுக்கத் தவறியமையே பிரதான காரணமாகும்.

பலகாலமாக தமிழ்மக்களை ஏமாற்றிவந்த அரசின்மீதிருந்த நம்பிக்கையற்றதன்மை -தற்போது விடுதலைப் புலிகளின்மீதும் - கடந்த மாவிலாறு சம்பந்தமான பிரச்சனையின்பின் ஏற்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் மட்டுமன்றி, போக்குவரத்து, மற்றும் முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டிய தேவை மிகமிக முக்கியமான தேவையாயிருக்கிறது. இதனை கருத்தில் வைத்து மனிதாபிமான அடிப்படையில் அப்பாவி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியது இலங்கை அரசினதும், அதே நேரத்தில் ஏகப் பிரதிநிதிகள் என தெரிவாகிய தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தாற்பரிய கடமையாகும்.

தங்க. முகுந்தன்.

------------------

18.08.2007.

செய்தி

எப்போது புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய அரசியல்நெறிதெரிந்தவர்கள் வருகின்றார்களோ அன்றுதான் எமது நாட்டில் அமைதி தோன்றும்
மனிதாபிமானப் பணிகளைப் பார்வையிடச் சென்று கருத்துத் தெரிவித்த ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்களைப் பற்றி இலங்கை அரச அமைச்சர் ஐெயராஐ; பெர்னாண்டோபிள்ளே தெரிவித்த கருத்து முட்டாள் தனமானதுடன் அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் தலைகுனியச் செய்யும் செயலாகிறது.
இவர் மாத்திரமல்ல இதற்கு முன்னர் நானறிந்தவரையில் இரு சந்தர்ப்பங்களில் முன்னைய வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களும் இப்படியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். மரணமடைந்த பின்னர் ஒருவரைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடாது என்ற ஒரு தர்மம் இருப்பினும் உண்மையின் தேவை கருதி இதை நான் குறிப்பிட விரும்புகின்றேன் (நான் முன்னர் எழுதிய கடிதங்களின் பிரதிகளை இணைத்துள்ளேன்)

09.07.1995 நவாலி தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதலைக் கண்டித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை விடுத்தபோது அதைக் கண்டித்தவர்: இதேபோல 1999 செப்ரெம்பரில் நியூயோர்க்கில் இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. சபையாகினும் சரி வேறெந்த நபர்களாயினும் சரி தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

எமது நாட்டில் ஐனநாயகம் மீது மதிப்பு வைத்திருப்பவர்களுக்குத் தெரியும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்களில் எத்தனைபேருக்கு அரசியல் அறிவு இருக்கிறது என்பது? இவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கருத்து வெளியிடுவதும் எழுதிய ஒப்பந்தங்களை முறிப்பதும் சர்வசாதாரணமாகிய விடயங்களே! இப்படியான அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் அகன்று எப்போது புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய அரசியல் நெறி தெரிந்தவர்கள் வருகின்றார்களோ அன்றுதான் எமது நாட்டில் அமைதி ஏற்படும்.

தங்க. முகுந்தன்
முன்னாள் மாநகர சபை உறுப்பினர்.
தங்க. முகுந்தன்

No comments: