அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, August 10, 2008

இராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்களைப் பற்றி……

இராமகிருஷ்ண மிஷன் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்கள் இலங்கையிலிருந்து புறப்படப்போகிறார் என்ற செய்தி கேள்விப்பட்ட பொழுது (2007 சித்திரை மாதத்தில்) அவரைப்பற்றி எழுதவேண்டும் என நினைத்தவர்களில் நானும் ஒருவன். இதற்காக அன்று பத்திரிகை எழுத்துப்பணிபுரிந்த இறக்குவானை நிர்ஷனையும் (மேடை – புதிய மலையகம் வலைப்பதிவாளர் )அவருடன் வீரகேசரியில் பணிபுரியும் புகைப்படக் கலைஞரான அதிரனையும் ஸ்வாமியினுடைய விபரங்களைத் தந்திடுமாறு வேண்டியிருந்தேன். அன்றிருந்த சூழ்நிலையில் நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்ததுடன் கட்டுரையை எழுத நேரமும் இல்லாதிருந்தது. தற்போது 16 மாதங்களின்பின்னர் நான் எழுதிய குறிப்புக்களைத் தொகுத்து உடனேயே வெளியிடவேண்டும் என்ற ஆதங்கத்தால் இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.

“அறம் செய விரும்பு” என்பதும்,
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பதும்,
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதும்
“காதற்ற ஊசியும் வாராது காணுன் கடைவழிக்கே!” என்ற வாக்கும்,
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே” என்ற பாடல்வரிகளும் சிறுவயதில் கல்விகற்கும்போது எனக்கு ஊட்டப்பட்ட மகாவாக்கியங்கள் என்றே கூறலாம்.

இதேபோல நான் கல்விகற்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லு}ரியின் “உனை நீ அறி” என்ற (know your self) கல்லு}ரி இலட்சணையிலுள்ள குறிப்பும் என்னை நல்வழிப்படுத்த உதவின என்றால் மிகையாகாது. மேலும் அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ம் தரத்திலிருந்து 8ந் தரம்வரை(1975-1977) கல்விகற்ற அந்த வளரும் பராய நாட்களில் ஏற்பட்ட பசுமையான மற்றும் கடுமையான நினைவுகளும், வாழ்க்கையில் அகிம்சையை கடைப்பிடிக்கவும், பல பெரியார்களைச் சந்திக்கவும் எனக்கு உதவின.

சிறுவயதில் எனக்கு சமயத்தையும், தமிழையும் அதிகமாக கற்க துணைபுரிந்தவர் எனது தாத்தா. ஒவ்வொருநாளும் மாலை வேளைகளில் பல புத்தகங்களை உரத்து வாசித்துப் பழகியதால் பேச்சிலும், அவருக்கு கடிதங்கள் எழுதியதால் உறுப்பாக எழுதக்கூடிய ஆற்றலும் கிடைத்தது. அவருடன் தினமும் கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட நான் இன்றும், தொடர்ந்தும் ஏதோ ஒரு ஆலயத்திற்கோ, அன்றி இறைவனது பெருமைகளைக் கூறிடும் - துதித்திடும் மஹான்களின் இடங்களுக்கோ சென்று வருகின்றேன். (நான் தற்போதிருக்கும் சுவிற்சலாந்து நாட்டிலும் இது தொடர்கிறது.)

நான் அனுராதபுரத்திலிருந்த காலத்தில் எனது 11வது வயதில் சமய தீட்சை பெற்றேன். யாழ்ப்பாணத்திலிருந்து சனி, ஞாயிறு தினங்களில் பண்ணிசை வேந்தர் சிவத்திரு. திருஞானசம்பந்தர் அவர்கள் வருகைதந்து எமக்கு பண்ணிசை பயிற்றுவிப்பார். 1976, 1977ம் ஆணடுகளில் அவரிடம் நாம் முறையாகப் பண்ணிசை பயின்றோம். ஜெயந்தி மாவத்தையிலும், முப்பது கடையடியிலும் இருந்தபோது ஏனைய சமயத்தவர்களுடன்(இனத்தவர்கள்) பழகும் வாய்ப்பும் கிடைத்தது. 1977ம் ஆண்டுவரை அமைதியான காலம் இனக்கலவரத்தால் சிதைந்தது. அகதிகளாக 3 தினங்கள் அனுராதபுரம் கச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பொலிசாரின் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டோம். அனுராதபுரம் ஸ்ரீ கதிரேசன் கோவில் ஐயா காயமடைந்ததையும், அவரது மரணத்தின்பின் அவரது குடும்பத்தவரை இருபாலையில் சென்று சந்தித்ததையும் குறிப்பிடுவது பொருத்தமானது.

ஸ்வாமி விவேகானந்தரால் ஆரம்பிக்கப்பட்டு பல நாடுகளில் இயங்கிவரும் இராமகிருஷ்ண மிஷனின் பணிகளை இந்துக்கள் மாத்திரமன்றி சகல சமயத்தவரும் நன்கு அறிவர். ஸ்வாமி விவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்திலும் தன்திருவடிகளைப் பதித்தார் என்பது முக்கியமானது. இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் இயங்கிவருகின்றன. யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சாரதா சேவா சமித்தி என்ற ஒரு அமைப்பு இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. கதிர்காமத்தில் இயங்கிய மடத்தை பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு அடாத்தாக கைப்பற்றி பௌத்த நூதனசாலை அமைத்திருப்பது வேதனைக்குரிய செயல். இதை மீண்டும் மடத்தினுடைய பொறுப்புக்கு கொண்டுவரவேண்டும் என்ற ஆதங்கம் எனக்குமுண்டு. கொழும்பு மடத்தின் தலைவர் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்கள் கடந்த 16 வருடங்கள் எமது நாட்டில் ஆற்றிய பணிகளை நிறைவு செய்து கொண்டு தலைமை மடத்தின் கட்டளைக்கமைய சென்னையிலுள்ள விவேகானந்த கல்லூரிக்குச் செல்ல இருக்கும் செய்தி எம்போன்றவர்களுக்கு ஒருபுறத்தில் வேதனையை அளித்தாலும், வேறொரு இடத்தில் ஸ்வாமிகள் எம்போன்றவர்களுக்கு உறுதுணையாகவும், நல்வழிப்படுத்தவும் தனது பணியைச் செய்யவுள்ளார் என்கிறபோது சந்தோசத்தையும் அளிக்கிறது.

சிறுவயதில் கொழும்பு விவேகானந்த சபையின் சைவ சமய பாடப் பரீட்சையில் தோற்றியதாலும், அன்றைய சமய பாடத்திட்டம் விவேகானந்த சபையின் சைவ போதினியை அடிப்படையாகக் கொண்டதாலும், சில காலம் அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றதாலும், சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியக்கூடியதாயிருந்தாலும், எந்தவிதமான நெருக்கமான தொடர்புகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. 1984ல் கொழும்பு வந்த சமயத்தில் தினசரி தியானம் என்ற நு}லைப் பெறுவதற்காக முதன்முதல் கொழும்பு மிஷனுக்குச் சென்றிருந்தேன். அன்று மடத்திற்குப் பொறுப்பாயிருந்த ஸ்ரீ சம்பிரக்தானந்த மகராஜ் என நினைக்கின்றேன். நான் இளவயதுடையவன் என்பதாலோ அல்லது தெரியாதவன் எனபதாலோ அவ்வளவாக என்னுடன் சம்பாஷிக்கவில்லை. கேட்டவற்றிற்கு மாத்திரம் சட்டெனப் பதில்கூறிச் சென்றார். ஏதேனும் வேலை இருந்திருக்கலாம். மஹான்கள் பெரியவர்களைசச் சந்தித்து அளவளாவ வேண்டும் என்ற ஆதங்கமுடைய என்மனம் இதனால் வேதனையடைந்தது.

அதன்பின் நான் 1987ல் வடபகுதியில் ஏற்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளால் (இதன் விபரங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.)கொழும்பிலும், மலைநாட்டிலும் தங்கியிருந்தபோது மிஷனுக்குச் சென்று சில புத்தகங்களைப் பெற்றுச் செல்வது வழக்கம்.

1988ல் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது பல இடங்களையும் தமிழ்நாட்டில் சுற்றிப்பார்வையிட முடிந்தது. அப்போது கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறைக்கும் விவேகானந்த கேந்திரத்துக்கும் சென்றேன். விவேகானந்தர் பாறையில் அமைந்திருக்கும் தியான மண்டபத்தில் தியானம் செய்த அனுபவமும் கேந்திரத்திலிருந்தும் கன்னியாகுமரிக் கரையிலிருந்தும் காலையும் மாலையும் கதிரவனைக் கண்டகாட்சியை அனுபவித்ததும் என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்கள். இந்த அனுபவம் ஸ்வாமி விவேகானந்தரிடம் என்னைக் கவர்ந்ததோடு அவரது பேச்சுக்கள் - உபதேசங்கள்மீது ஒரு பிடிப்பும் ஏற்பட்டது. இன்றும் சபரிமலை யாத்திரை செய்யும்போது கன்னியாகுமரி வழியாகவே யாத்திரை ஆரம்பித்து முடிவதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தும். எமது குழுவினர் அனைவரும் யாத்திரையின்போது கன்னியாகுமரியில் குறைந்தது 2 நாட்கள் அங்கிருக்கும் ஸ்ரீ குகநாதேஸ்வரர் ஆலயத்தில் தங்கி அவரைத் தரிசித்து அங்கேயே இருமுடிகட்டிச் செல்வதும் திரும்பும் வழியிலும் அங்குவந்து மீண்டும் அவரைத் தரிசித்துவருவதும் வழக்கம். எனக்கு மறுபிறவி கிடைத்ததுக்காக நான் 2007 தைமாதம் ஸ்ரீ குகநாதேஸ்வரப் பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் செய்ததையும் இவ்விடத்தில் குறிப்பிடவிரும்புகின்றேன். இவ்வருடம் நான் யாத்திரைசெய்யமுடியாத நிலையிலும் எமது குழுவினர் அங்கு சென்று இம்முறையும் 108 கலச அபிஷேகம் செய்தது மனதுக்கு மகிழ்ச்சியே. காரணம் இந்த ஆலயம் எனக்குப் பார்த்தவுடன் பிடித்த ஓர் ஆலயம். (இதுபற்றி விரிவாக விரைவில் எழுத இருக்கிறேன்.)


கொழும்பில் ஸ்ரீ சம்பிரக்தானந்த மகராஜ் சமாதியடைந்த பின் ஸ்ரீ ஜீவானந்த மகாராஜ் அவர்கள் காலத்தில் சுவாமி ஸ்ரீ அஜராத்மானந்தா அவர்களையும், சுவாமி ஸ்ரீ ராஜேஸ்வரானந்தா மகராஜ் அவர்களையும் சுவாமி ரித்மயானந்தா மகராஜ் அவர்களையும், அடிக்கடி சென்று சந்தித்து வருவதுண்டு. 1990ம் ஆண்டில் நாம் நடத்திய இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ற கருத்தரங்கினை ஸ்வாமி ஸ்ரீ அஜராத்மானந்த மகராஜ் ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார்.

1991ல் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகராஜ் அவர்கள் மே மாதமளவில் கொழும்பு மடத்திற்கு வருகைதந்த நாள் முதல் இன்று வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்வாமிகளிடம் போய் - அவரைத் தரிசித்து முடிந்த வேளைகளில் அவருடன் சம்பாஷித்து – அவரது அருளுரைகளைக் கேட்டு வருவதுண்டு. தற்போதும் சென்னைக்கு அடிக்கடி அவருடன் தொiலைபேசியில் தொhடர்பு கொண்டவண்ணம்தான் இருக்கிறேன். குழந்தைகளுடன் ஸ்வாமி அளவளாவுவதையே நான் அருகிலிருந்து மிகவும் கவனமாக நோட்டமிடுவேன். மிகவும் அன்பாக அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப ஸ்வாமி கதைத்துப் பின் அவர்களுக்கு இனிப்போ ஏதோ ஒன்றைக் கொடுத்து முதுகில் தட்டி ஊக்கம் அளிப்பார். மடத்தின் விளையாட்டுத்திடலுக்கு விளையாடவரும் ஏனைய(சமூகத்தைச் சேர்ந்த) குழந்தைகளும் விறுவிறுவென வந்து விழுந்து கும்பிட்டுக் கையைநீட்டும்போது ஸ்வாமி குறிப்பறிந்து அவர்களுக்கு இனிப்போ பிஸ்கட்டோ ரொபியோ கொடுத்து - இதுக்குத்தான் வருவாங்க - இவங்களுக்காகவே கொஞ்சம் வாங்கி வைச்சிருக்கவேணும் என்பார். 1993ல் கொழும்பில் இந்து இளைஞர் மன்றம் அமைக்கப்பட்டபோது சுவாமியவர்கள் வாழ்த்தி தமது ஆசிகளையும் வழங்கினார். 1983 கலவரத்தின்பின் நடைபெற்ற ஆடிவேல் வைபவத்திற்கு அன்றைய அமைச்சர் பி.பி.தேவராஜ் மற்றும் மாநகர முதல்வர் கணேசலிங்கம் போன்றோர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் ஸ்வாமியும் அன்றைய அரசில் அமைச்சராக இருந்த எம் எஸ் செல்லச்சாமி அவர்கள் தனது துணைவியாருடன் எமது இளைஞர் மன்றப் பந்தல் போட்டஇடத்திற்கு வருகைதந்தமை குறிபபிடத்தக்கது. பக்திப் பெருவிழா நடைபெற்றபோது திருமுருக. கிருபானந்தவாரியார் வருகைதந்தமையும் அதிலும் ஸ்வாமிகள் கலந்து கொண்டமையும் சிறப்புரை வழங்கியதும் மறக்கமுடியாதவை.

மாத்தளையில் புதியதேர் செய்துகொண்டிருக்கும்போது பவளக்கால் வைக்கும் வைபவத்திற்கு ஸ்வாமிகளுடன் இந்து இளைஞர் சங்கத்தினரும் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு. மாரிமுத்துச் செட்டியார் ஐயா அவர்களுடைய அழைப்பில் சென்றோம். அறநெறிப் பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து அன்றைய மதியபோசனத்திலும் பங்குபற்றி நாம் திரும்பினோம்.

1996ல் சபரிமலைக்கு முதன்முதல் யாத்ததிரை சென்றபோது மடத்தின் புத்தகவிற்பனைப் பகுதியில் இருந்த இந்து சமயம் என்ற பாடதத்திட்ட நூல்களைக் கண்ணுற்று அவற்றை வெளியிட்ட கன்னியாகுமரி வெள்ளிமைல ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகரும் நூலின் தொகுப்பாசிரியருமான ஸ்வாமி மதுரானந்தர் மகராஜ் அவர்களையும் அவரது சீடரும் இன்றைய ஆச்சிரமத்தின் தலைவருமான ஸ்ரீ சைதன்யானந்த மகராஜ் அவர்களையும் ஏனைய சீடர்களையும் தரிசிக்கும் பெரும்பேற்றையும் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்கள் எனக்கு வழங்கினார். அவரால் ஏற்பட்ட கன்னியாகுமரித் தொடர்பினைத் தொடர்ந்து நான் இலங்கை திரும்பியதும் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு இந்த 5 இந்துசமய பாடப்புத்தகங்களை பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசனிடத்தில் ஒப்படைத்து இன்று இலங்கையில் பல இடங்களிலும் கன்னியாகுமரி விவேகானந்த ஆச்சிரமத்தினர் தமது பணிகளை வழங்கிவருகின்றனர். நான் சுவிற்சலாந்து புறப்பட இருந்த சமயத்தில்தான் ஆச்சிரமத்தின் பிரமச்சாரி ராம் கொழும்புக்கு விஜயம் செய்ததும் புதிய மிஷன் ஸ்வாமி வருகைதந்ததுமான சம்பவங்கள் இடம்பெற்றன.

ஸ்வாமிகளுடன் 3, 4 தடவைகள் கூடவே சென்ற அனுபவமும் மறக்கமுடியாதவை. குறிப்பாக இரத்தினபுரி காவத்தையில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஆரம்பித்ததும் தோட்டத்திலுள்ள வீடுகள் சிலவற்றைப் புதுப்பித்த பணியும் குறிப்பிடவேண்டும்.

பழம்பண்டிதர் கம்பவாருதி ஜெயராஜ் அவர்களின் கட்டுரையைப் படித்த பின்னர் ஸ்வாமி யாழ்ப்பாணம் விஜயம் செய்தாரோ தெரியாது அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த நான் அவர் தங்கியிருந்த சிவதொண்டன் நிலையத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று சந்தித்தேன்.

கொழும்பிலிருந்த புறப்பட முன்னர் அவருடைய அலுவலகம் ஒதுக்கப்பட்டபோது நான் எழுதிய கடிதத்தை திரும்ப எனக்கே தந்ததையும் மறந்தவிட முடியாது.

ஸ்வாமியுடன் பழகிய அந்தக்காலம் என்றும் மறக்கமுடியாதது. இன்றும் ஸ்வாமிகளுடன் நேரமுள்ளபோது அடிக்கடி தொடர்பு கொண்ட வண்ணமா யிருக்கின்றேன்.

ஒரேயொரு எண்ணம் மாத்திரம் இன்றுவரை! ஸ்வாமிக்கு நாம் ஒரு வைபவம் நடாத்தவேண்டும் அவருக்குப் பாதபூஜை செய்யவேண்டும் என்று. அந்நாள் எந்நாளோ என ஆண்டவனைப் பணிகின்றேன்.

(இத்துடன் ஸ்வாமிக்கு நான் எழுதிய 2 கடிதங்களின் பிரதிகளையும் இணைத்துள்ளேன்.)

--------------------------------------
ஓம்
என் கடன் பணி செய்து கிடப்பதே

மங்களகிரி
மூளாய்
சுழிபுரம்.
27.09.2002.

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

வணக்கத்திற்கும் பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய இராமகிருஷ்;ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த 21.09.2002 சனிக்கிழமை கஹவத்தை - தலுகல்லை ஞானவாணி அறநெறிப் பாடசாலையின் 13வது வருடாந்தப் பரிசளிப்புக்கு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வந்து சிறப்பித்துச் சென்றமைக்கு முதலில் இதய பூர்வமான நன்றிகளை மனப்பூர்வமாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நீண்டநாட்கள் நாம் எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வு – நிறைவு பெற்ற மகிழ்ச்சி – அது நாம் இறைவனை நேரில் கண்டது போன்ற நிறைவை அளித்தது. நீங்களே அதை நேரில் கண்டிருப்பீர்கள். பாதையில் மக்கள் பொறுமையாக கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நின்று தங்களின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். தாங்கள் வந்ததும் ஒவ்வொருவரும் தனித்தனியாக பாதங்களில் மலர்தூவி வணங்கியது உண்மையிலே என்னை நெகிழ வைத்தது. தாங்கள் வந்த நேரம் தொடக்கம் என்னுடனேயே பேசியவண்ணம் வந்தீர்கள். நான் அன்றைய தினம் இறைவனுடனேயே இருந்த பேறைப் பெற்றதாக உணர்ந்தேன். தங்களுடைய பேச்சை வழமையாகக் கேட்க வேண்டும் என்ற ஆவலிருந்தும் நான் அன்றையதினம் கூடுதலான நேரம் மேடையிலே பேசி விட்டேன். மன்னிக்கவும். நான் பேசவேண்டிய கட்டாயம் அன்றைக்கு எனக்கு இருந்தது. நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக கஹவத்தை இந்து மகா சபையினர் பேச அழைக்கப்பட்டதன் காரணம் தங்களை இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு கூட்டிக்கொண்டு வர ஒத்துக் கொண்ட பின்னர் வாகனத்தைத் தராமல் ஏற்பாடுகளை இடைநிறுத்தியதும் தாங்கள் கடுகதி வண்டியில் வந்து இந்து மகா சபையினருடைய ஏற்பாட்டில் வந்த ஒரேயொரு காரணத்தால் - திருமதி. சாந்தி நாவுக்கரசன், திரு. தெய்வநாயகம் அவர்கள் சமூகமளிக்காத இடத்திற்கு அவர்கள் பேச அழைக்கப்பட்டிருப்பார்கள் என நம்புகிறேன். இருப்பினும் இது காலஅளவை மேலும் தாமதப்படுத்தியது என்பதை நானும் ஒத்துக்கொள்கின்றேன். நிகழ்வில் பேச இருந்த திரு. பத்மராஜ் நீங்கள் பேருரை செய்யும்போது தானெதற்கு என்று ஒதுங்கியது – சீடனுக்குரிய ஒரு கடமை என்றே நான் கருதுகின்றேன்.

பரிசளிப்பின்போது ஏற்கனவே இருந்த ஏற்பாட்டை மாற்றி எல்லாப் பரிசில்களையும் தங்களின் கரங்களாலேயே மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ததன் காரணம் - எந்த ஒரு குழந்தையும் தங்களிடமிருந்து பரிசுபெறுவதைத் தடுக்கக் கூடாது என்பதற்காகவே. பலர் பலதடவை பரிசுகள் பெற்றிருக்கலாம். சிலர் ஒருதடவை பெறுவது முக்கியமாக எங்களால் கணிக்கப்பட்டது. இதில் தவறிருந்தால் எம்மை மன்னிக்கவும்.

ஆரம்பத்தில் படிகளில் ஏறியவுடன் தாங்கள் சற்று நேரம் நின்று காவடி, கரகம், கோலாட்டம், பஜனை என்பவற்றைப் பார்த்து ரசித்ததும், விநாயகரை உற்று நோக்கியதும் மறக்கமுடியாத நிகழ்வுகள். வந்த நேரம் முதல் தாங்கள் கேட்ட கேள்வி – எப்படி இவருக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது? என்று. நான் அந்த நேரம் ஒழுங்கான பதிலைக் கூறவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. அடுத்த நிகழ்வுகளை எப்படி நடத்துவது என்ற ஆதங்கத்தில் இருந்தபடியால் சரியான பதிலை நான் தெரிவிக்கவில்லை. இதனாhலேயே நான் கொழும்பில் 22.09.2002 ஞாயிறு இரவு சில ஆவணங்களைக் கையளித்தேன். அதில் பாஸ்கரராவே தான் எப்படி இந்தப் பணியில் ஈடுபட்டார் என்பதை தனது கைப்படத் தெரிவித்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் பேசும்போது குறிப்பிட்ட ஒரேயொரு விடயத்தை நான் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். அங்கு காணப்பட்ட அலங்காரங்களில் ஒரு தனித்துவம் இருப்பதை நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஓவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அடங்குவர். அன்றையதினம் அரைநாள் வேலையை அந்தப்பகுதி மக்கள் அனைவருமே ஒதுக்கிவைத்துவிட்டு தங்கள் வருகைக்காக ஏதோ ஒருவகையில் தம்மை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டிருந்தது பாராட்டாமல் இருக்க முடியாத ஒரு விடயம். நிகழ்ச்சி முடிந்து தாங்கள் ஆலயத்திற்கு வந்து அந்தப் பகுதியை பார்வையிட்டதும் - கற்கள் நிறைந்த பகுதியில் தங்கள் பாதங்கள் பட்டு அப்பகுதி புனிதமடைந்ததும் நாம் செய்த பெருந்தவமே. ஆனால் தங்கள் பாதங்களுக்கு இதனால் ஏற்பட்ட வருத்தத்திற்கு நாம் எந்த வகையிலும் மாற்றீடு செய்ய முடியாது. தங்களை வருத்தியமைக்கு மன்றாட்டமாக நாம் மன்னிப்பைக் கோருகின்றோம்.

திரும்பும் வழியில் திருவானைக்கெட்டிக் கோவிலிலும் தாங்கள் தரிசித்து – ஆலயப் பிரச்சனைகளைக் கேட்டு அளவளாவியமையும்; ஆறுதலைத் தந்தது.

தங்களுடன் 8 மணி நேரத்திற்கு கூடுதலாக அருகிருந்து தங்களுடன் உரையாடி – தங்களின் பேச்சை செவிமடுத்து – தங்களையே பார்த்து எனது பிறவிப்பேற்றை ஓரளவுக்காவது அடைந்தேன் என்று பெருமை கொள்கின்றேன். ஏன்ன புண்ணியம் செய்தேனோ? என்று ஏங்கி புளகாங்கிதமடைகின்றேன்.

அடியேன் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கும்படி வேண்டி – எனது நன்றியறிதலை தலுகல்லை வாழ் மக்கள் சார்பாக – அவர்களோடு கடந்த 11 வருடங்களாக தொடர்புபட்டவன் என்ற உரிமையுடன் தெரிவித்து வணங்குகின்றேன்.

நன்றி.

ஏன்றும் பணியிலுள்ள
தொண்டனன்
தங்க. முகுந்தன்.

(மன்னிக்கவும் இன்னொரு பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.)

நிகழ்ச்சியின் நிறைவில் மங்களம் பாடியது - இறைவனாலேயே பூரணப்படுத்திய நிலையை எனக்கு அளித்தது.

இவ்விடம் எங்கள் ஊரில் 2 அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றிற்கு என்னால் முடிந்த பணிகளைச் செய்ய உத்தேசித்திருக்கின்றேன்.

ஏதிர்வரும் 17, 18, 19 ஆகிய தினங்களில் தங்களை மீண்டும் சந்திக்க இறைவனருள் கூடி நிற்கிறது. அப்போது தங்களைத் தரிசித்து மேலும் அருளைப் பெறலாம் என்று கூறி இந்தக் கடிதத்தை நிறைவு செய்கின்றேன்.

வணக்கம்.

குருதேவர் திருவடிகளுக்கு நமஸ்காரம்.

என்றும் உண்மையுள்ள
தங்க. முகுந்தன்.


------------------------------------------------------------

கொழும்பு – 3.
22.10.2006.

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரிய இராமகிருஷ்;ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களை நேற்றைய தீபாவளி தினத்;தில் ஆசிபெறவந்த சமயத்தில் தாங்கள் என்னுடன் அளவளாவிய சம்பவங்களையும் கருத்துக்களையும் இப்போதும் எண்ணியபடி தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன். ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். யாருக்காவது எனது மனதில் எழும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதனைத் தங்களின் கவனத்திற்கு எழுதுகின்;றேன்.

எனது இன்றைய வாழ்க்கைக்கு தர்மமும் இறை நம்பிக்கையும் தங்களைப்போன்ற பெரிய மஹான்களுடைய ஆசீர்வாதங்களுமே காரணம் என பரிபூரணமாக நம்புகின்றேன். நடமாடும் திருக்கோயில்களாகத் திகழும் தங்களைப் போன்ற மஹான்களாலேயே நமது நாட்டின் பிரச்சனைக்குத் தீர்வு கிட்டும் என பல்லாண்டுகாலமாக நம்பியிருக்கின்றேன். எமது சமயங்கள் கூறும் தத்துவங்களை நாம் திரிகரண சுத்தியோடு ஏற்றுக்கொண்டாலே எமக்கு எந்தவிதமான இடரும் இருக்காது. தாங்கள் நேற்று அளவளாவிய – தாங்கள் அதிக அக்கறை கொண்ட எமது மக்களுக்கான அன்றாட வாழ்க்கைக்கு அவசியமாhன உணவு சம்பந்தமான விடயத்தில் நேரடியாக ஒரு கடிதத்தை முக்கியமானவர்களுக்கு எழுதினால் நல்லது என அடியேன் அபிப்பிராயப்படுகின்றேன். தாங்கள் நிராசையுடையவர்கள். ஏனைய உயிர்களின்மீது அன்பு கொண்டவர்கள். ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பல விதங்களிலும் எமது மக்களுக்கு அபயமளித்தவர்கள். தங்கள் அமைப்பின்மூலம் பலபகுதிகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பியிருக்கிறீர்கள். இன்றைய தினக்குரல் பத்திரிகையில் முற்பக்கச்செய்தியிலும் குடாநாட்டில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு. 1கிலோ சீனி 400 ரூபாவுக்கும் வாங்கமுடியாத அவலம். அரிசி 120ரூபா – 160 ரூபா. வெளிச்சந்தையில் பால்மா இல்லை கோதுமை மா கறுப்புச் சந்தையில் ரூபா 150 என்றுள்ளது. தயவுசெய்து இன்றைய இக்கட்டான நிலையில் ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கள் உதவவேண்டும். இதை நான் கூறத் தேவையில்லை. தாங்களாகவே என்னுடன் பேசினீர்கள். தங்களின் கருத்துக்கு ஒரு அர்த்தம் உண்டு. தயவுசெய்து தாங்கள் பொதுப்படையில் ஒரு கடிதத்தைத் தயாரித்து – அதனை நாட்டின் தலைவருக்கும் ஏனைய பொது அமைப்புக்களுக்கும் (உள்நாடு வெளிநாடு) தெரிவித்தால் ஏதேனும் நடைபெறும்; என திடமாக நம்புகிறேன்.

அடியேன் சிலவேளைகளில் ஏதேனும் நல்ல விடயங்களை நினைத்தால் ஏதோ ஒரு விதமாக அது நடைபெறுவது இயல்பாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பதுபோல் அடியேன் தற்போதைய வாழ்க்கையில் நித்திரையைத் தவிர்த்தே வந்து கொண்டிருக்கின்றேன். .உறக்கத்திற்குப் போனால் நாட்டில் நிலவும் பிரச்சனைகளே வந்து மனதை வேதனைப்படுத்துகின்றது. தயவுசெய்து இவ்விடயத்தில் உங்களுக்கு எதுவும் கூறவேண்டிய அவசியமில்லை. நேற்று நீங்கள் தெரிவித்த பின்னர் எழுதவேண்டும் என எண்ணினேன். தயவுசெய்து அடியேனது கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து எமது மக்களுக்கு அருளுமாறு அன்புடன் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்.

-------------------------------------------------

2 comments:

Anonymous said...

Daer Mugunthan

Swami Saranam !
I am Shankar. I think we had Sabri malai pooja at Rathmalanai Hendu College Temple.
I also with Swami "Athmaganaadha Maharaaj" for some time. When I read your letter I have recollected old memories in the mission activites.

If I can get your email Address I am happy to keep in tuch with you please.

My email Address is: shankaratybm@yahoo.com

Kind regards
Shankar

தங்க முகுந்தன் said...

வணக்கம் திரு சங்கர் ஐயா அவர்களே!

பார்த்தீர்களா திருவருளின் திருவிளையாடலை!
உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது நீங்களாகவே வருகைதந்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசமடைகிறேன்
நானும் இல்லப் பிள்ளைகளை விட்டுவிட்டு தூர வந்து விட்டேனோ என்று ஆதங்கப் படுகிறேன். அண்மையில் வீரகேசரிப் பத்திரிகையில் ஒரு செய்தி இல்லத்தில் நடந்ததைப் பற்றிப் பார்த்ததும் தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். யாராவது எமது பழைய சபரிமலை அடியார்கள் அந்தப் பக்கம் வருவதுண்டா? கொள்ளுப்பிட்டிக் கருமாரியம்மன் ஐயப்ப சுவாமி கோவிலுக்குப் போவதுண்டா? எனது சகோதனை அல்லது அம்மாவைக் கண்டீர்களா?
தயவுசெய்து பதில் எழுதுங்கள்.

என்றும் மறவாத நினைவுகளுடன்
தங்க. முகுந்தன்.