தினகரன் வாரமஞ்சரி - 01-04-2007 (8ம் பக்கம்)
மருத்துவர் வரும்வரை மணிக்கணக்கில் காத்திருக்க முடியுமானால்,
ஆலயத்தில் மட்டும் அவசரம் ஏன்?
வர்த்தகப் பொருளாகி வருகிறதா பக்தி என்ற கட்டுரை தொட்ட அம்சங்களோடு சம்பந்தப்பட்டதாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கொழும்பு ஆலயங்களில் பூஜைநடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அமைச்சர் ஒருவர் வருகிறார் என்றால் பூசையனைத்தும் இடைநிறுத்தப்படுகிறது. அவருக்கு மரியாதை செலுத்தவென மேளத்திலிருந்து குடைவரை அவரை வரவேற்க சென்றுவிடுகின்றன. சுவாமியின் நிலை பரிதாபமாகிவிடும்.
கடந்த 4.3.2007 தினகரன் வாரமஞ்சரியின் 9ம் பக்கத்தில் வெளியான வெலியமுனை குருசாமியின் “வர்த்தகப் பொருளாகி வருகிறதா பக்தி?” என்ற கட்டுரையையும், அதற்கடுத்த 11.3.2007 வாரமஞ்சரியில் வனதேவதா (9ம்பக்கத்தில்) தொகுத்த “பக்திபற்றிய கோவில் பூசகர்களின் அபிப்பிராயங்கள்” என்ற கட்டுரையையும் படித்தேன். கடந்த 18.3.2007ல் யாராவது – ஏதாவது எழுதுவார்களோ என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. எவருமே எழுதாதபடியால் எனக்குத் தெரிந்த நான் அனுபவித்த பக்தியைப்பற்றி எழுதவேண்டும் என்ற ஆவலால் இதனை எழுதுகிறேன்.
குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளிலும் ஏதோ ஒரு தேவை இருக்கிறது என்பது புலனாகிறது. ஆலயங்களுக்குச் செல்லும் அடியார்களும் சரி, ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களாயினும் சரி எல்லோருக்கும் ஒரு தேவை – ஆதங்கம் - எதிர்பார்ப்பு இருக்கிறது. இது சரியோ – தவறோ என்று நான் கூறவிரும்பவில்லை. ஆனால் இதைவிட எமது சநாதன தர்மம் கூறும் முக்கிய ஆத்மீக அனுபவம் பற்றிக்குறிப்பிடவும், ஆலயங்களில் ஒரு வழிபடும் முறை இருப்பதையும் தெரியப்படுத்தவே இதனை எழுதுகிறேன்.
“ஒருவருக்கொருவர் குறைகள் கண்டுபிடித்துக்கொண்டும், து}ஷித்துக்கொண்டும் இருந்தகாலம் தீர்ந்துவிட்டது. நம் சமூகத்தைத் திருத்தியமைக்கக்கூடிய நிர்மாண வேலை செய்ய வேண்டிய காலம் இது. சிதறுண்டு கிடக்கும் நம் சக்தியனைத்தையும் ஒன்று சேர்த்து, இப்பணியில் செலுத்தி, நம் தேசத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவேண்டிய தருணம் இது. அதில் நாம் முன்செல்வோமாக!” என ஸ்வாமி விவேகானந்தர் கூறியது போல நாம் எமக்கிடையேயுள்ள குறைகளையும், தவறுகளையும் விடுத்து உண்மையை அறிந்து, எமது சநாதன தருமநெறியின் தத்துவங்களைப் பூரணமாக விளங்கி அதன்படி எமது வாழ்வை அமைக்க வேண்டும்.
எமது சிறுபராயத்தில் நாம் “சைவசமயம்” என்ற கொழும்பு விவேகானந்த சபையின் வெளியீட்டு நு}ல்களையே பாடசாலைகளில் பயின்றோம். இன்று இந்து சமயம் என்ற புதிய பாடநு}ல்களே நடைமுறையிலுள்ளன. தமிழிலும்சரி, சமயத்திலும் சரி முன்னர் கூறப்பட்ட அரிய கருத்துக்கள் இப்போது கிடையாது. நாம் படிக்கும் காலத்தில் முல்லைக்கு தேர் வழங்கிய பாரி, புறாவுக்கு தசையை வழங்கிய சிபிச் சக்கரவர்த்தி, ஒற்றுமையே பலம், பெரியார்களைக் கனம் பண்ணுதல், சுயசரிதைகள், கடிதங்கள் என்ற தமிழ்க் கட்டுரைகளும், நீதி நெறிகளைக் கருத்தாகக் கொண்ட பக்திக் கதைகளும் பாடமாக இருந்தன. ஆறுமுகநாவலரின் முதலாம், இரண்டாம் சைவ வினாவிடை, பாலபாடம் போன்ற புத்தகங்களும் எமக்கு சில அரிய கருத்துக்களை கற்றுணர துணைபுரிந்தன.
ஆலயங்கள் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ஒவ்வொரு அமைப்பு முறைகளும் ஏதோஒரு தத்துவத்தை விளக்குகின்றது. ஆலயத்தில் வழிபடுவதற்கென ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. எம்மில் எத்தனைபேர் இவற்றை அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. நாம் ஒரு நீதிமன்றத்திற்குப் போனால் - எம்மிலுள்ள ஒருவர் படித்துப் பட்டம்பெற்று நீதியதியாகியவர் - வரும்போதும் போகும்போதும் எழுந்து மரியாதை செய்யும் நாம் - அவ்விடத்தில் அமைதியைக் கடைப்பிடிக்கும் நாம்,
இதுபோல ஆலயங்களிலும் சரி, வேறெங்கிலும்சரி நடந்து கொள்கின்றோமா?
பௌத்த சமயத்தவர்கள் - தமது குருமார்களுக்கு வழங்கும்படியான மரியாதையை நாம் எமது சமய குருமார்களுக்கு வழங்குகின்றோமா? இல்லாவிட்டால் வேறு சமய குருமார்களுக்கு வழங்குகின்றோமா? இதை சிலர் தவறாக எண்ணக்கூடும். நாம் ஏன் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர்கள் எமக்கு மரியாதை செலுத்தவில்லையே என்று. இது தவறு. நாம் ஒரு சநாதன தரமத்தின் வழிவந்தவர்கள். எமது சமயநெறி அனைத்து நெறிகளுக்கும் தாயைப்போன்ற தன்மையுடையது. எமது தர்மத்தில் குறிப்பிட்ட அனைத்தும் ஏதோ ஒருவகையில் அவர்களிடமும் இருக்கிறது. அதைவிட குறிப்பிடப்படாத பலவிடயங்கள்கூட நிறைந்து இருக்கின்றது.
குரு என்பவர் தனது கடமைகளுக்கு அப்பால், தான் அறிந்தவற்றை சாதாரண மக்களுக்கு எளிய முறையில் எடுத்துக்கூறும் தகமையுடையவராயும் இருக்கவேண்டும். மதகுரு என்ற சொல் இரண்டாவது கட்டுரையில் இடம்பெற்றிருந்தது. “மதம்” என்ற சொல்லை நான் உபயோகிப்பதை தவிர்க்க விரும்புகிறேன். காரணம். மதம் என்பது யானையின் ஒருவகை மூர்க்கமான குணத்தைக் குறிப்பிடுகிறது. அன்பை அடிப்படையாகக்கொண்ட எமது சமயத்தில் இந்த மூர்க்கமான தன்மை இருக்கக்கூடாது என நான் எண்ணுகின்றேன்.
குரு, லிங்க, சங்கம வழிபாடு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. குரு வழிபாடு செய்பவர்களும், சங்கம வழிபாடு செய்பவர்களும் தாம் இருந்த இடத்திலிருந்தே தமது பக்தியை வெளிப்படுத்தலாம். லிங்க வழிபாட்டுடன் தொடர்புடையதாக ஆலய வழிபாடும் அமைகிறது.
எமது சனாதனதர்மம் கூறும் நால்வகை நெறிகளுள் சரியையும், கிரியையும் ஆலய வழிபாடு என்ற அமைப்பினுள்ளும் அடங்குகிறது. யோகமும் ஞானமும் உடையவர்களுக்கு ஆலய வழிபாடு அவசியமற்றதாகிறது. காரணம் தன்னைத் தான் அறியும் நெறி அறிந்தபின் புறவழிபாடு ஒழிந்து அகத்தில் இறைவனைக் காணும் அரிய சக்தி அனுபவரீதியாகப் பெறப்படுகிறது. இது பலவாறு விரிவாக துவைதம், அத்வைதம் என்று சொல்லிக்கொண்டு போகலாம்.
எங்கும் நிறைந்த பரப்பிரம்மத்தின் சக்தி ஒடுக்கப்பட்டு - இறைவனுடைய திருவுருவங்களில் ஆவாஹனம் செய்யப்படுகிறது.
ஒரு இறைவனுடைய திருவுருவத்தை வழிபாட்டிற்காக அமைத்த பின்னர் ஒரு குழந்தையைப் போல அம்மூர்த்தியை பரிபாலித்து வரவேண்டும். ஆலயத்தை அமைத்த பின்னர் பூஜைகளுக்கு வழியில்லை என்பதும், வருவாயில்லை என்பதும் தவறாகும். இப்படியான கருத்து 2வது கட்டுரையில் தொனிக்கிறது. இன்று ஆகம விதிகளுக்குட்பட்ட ஆலயங்கள் குறைந்து, அவரவர் வசதிப்படியும், எண்ணப்படியும் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்கள்தான் அதிகம். கொழும்பில் காணப்படும் ஆலயங்கள் பல ஆகம விதிக்குட்பட்டுக் கட்டப்பட்டவையல்ல. பெரும்பாலும் மடாலயங்களே. மேலும் 12வருடங்களுக்கு ஒருதடவை ஆலயம் சீர் செய்யப்பட்டு மீளவும் கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டும் என்பது விதி. கும்பாபிஷேகத்திற்காக பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும் மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகளோ, ஹோமங்களோ, உற்சவங்களோ செய்ய விதிமுறையில்லை.
ஆனால் பல மாதங்கள், வருடங்களாகவே தற்காலிக இடங்களில் ஆண்டவன் வதிய வேண்டியிருந்தால் - மக்கள் அவரைவிட சொகுசாக வாழமுடியுமா? குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டிமுடிக்கப்படாத கோவில்கள் உடனடியாக பூர்த்திசெய்யப்பட்டாலேயே நாட்டின் பலபாகங்களிலும் அகதிகளாக வாழுபவர்கள் நிம்மதியாக தமது வீடுகளில்வாழ வேண்டிய நிலை உருவாகும்.
அனைத்து ஆலயங்களிலும் பூஜைக்கென ஒரு குறிப்பிட்ட நேரமுண்டு. சில ஆலயங்களில் ஆறுகாலமும், சிலவற்றில் ஐந்து நேரமும், சிலவற்றில் மூன்று நேரமும், சிலவற்றில் இரண்டு நேரமும், சிலவற்றில் ஒருநேரமுமென குறிப்பிட்டிருப்பார்கள். சில கிராமப் புறங்களில் அர்ச்சகர் தனது வசதிப்படி வந்து பூஜைக்கான ஆயத்த மணியை அடித்தவுடன் - பூசை நடைபெறப்போகிறது என உணர்ந்து கூடும் பக்தர்களும் இருக்கிறார்கள். இந்தவேளைகளில் பக்தர்கள் சென்று வழிபடுவதே சிறப்பு. எனினும் தனது வேலைகளை நிறைவேற்றியபின், தான் நினைத்த நேரத்தில் சென்று தனக்கென சிறப்பு வழிபாடு செய்வது இன்று சாதாரணமாகிவிட்டது.
இதிலும் தான்போகும்வேளையில் இன்னொருவருக்கு அர்ச்சனை புரியும் அர்;ச்சகர் தனக்கு தீபத்தைத் தொட்டுக் கும்பிட விடவில்லை எனக் குறைப்படும் அடியார்களும் இருக்கிறார்கள்.
அர்ச்சனை செய்பவர்கள் - அதாவது பூசகர்கள் பொறுமையாக ஒவ்வொருவராக அர்ச்சனை செய்வது கிடையாது. எல்லோருடைய அர்ச்சனையையும் ஒருமிக்க வாங்கி அர்ச்சித்துவிட்டு மாற்றித் தட்டங்களையும் அர்ச்சனையையும் கொடுப்பதும் உண்டு. மேலும் இறைவனுக்கு குறைந்தபட்சம் சோடசம் எனப்படும் பதினாறு மந்திரங்களையாவது மனப்பூர்வமாகச் செய்வதும் கிடையாது. ஒவ்வொரு மந்திரத்திற்கு குறைந்தது ஒரு பூவாவது சமர்ப்பிப்பதும் கிடையாது. நான் இவற்றைக் குறையாகச் சொல்லவில்லை. இதுதான் நடைமுறை. ஆலயத்திற்கு வரும் பக்தனின் வேண்டுதலை ஏனோதானோ என்று எடுத்துக்கொள்ளும் பூசகர்கள் தாம் பக்தனுக்கும் இறைவனுக்குமிடையிலிருந்து பணிபுரிகிறோம் என்ற சிந்தனையற்றவர்களாகி இருப்பதே கவலைக்குரியது.
இதனால்தான் இன்று பல்வேறுபட்ட புதிய முறைகள் - வழிபாடுகள் - சத்சங்கங்கள் உருவாகி இருக்கிறது.
மேலும் ஒரு தேவையைக் கருதிக் கொண்டு ஆலயத்திற்குச் செல்பவர்(இது தவறு – ஏனெனில் எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த, என்றும் உள்ள, எல்லாம் வல்ல இறைவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நாம் கூறித்தான் தெரிய வெண்டும் என்ற அவசியம் கிடையாது) தனது தேவை நிறைவடையும் வரை காத்திருப்பதே முறை.
இரண்டாவது கட்டுரையில் (பூசகர் ஒருவர் குறிப்பிட்டபடி) டாக்டர் ஒருவரிடம் முதலிலேயே பதிவுசெய்துவிட்டு - அவர்வரும்வரை காத்திருந்து பின்னர் தனது முறைவரும்வரை மேலும் காத்திருப்பவர் ஏன் ஆலய வழிபாட்டில் மாத்திரம் அவசரப்படுகிறார். அப்படிப்பட்டவர் கோவிலுக்குப் போகாமலிருப்பது நல்லது. ஆலயம் செல்பவர்கள் குறைந்ததுஒரு மணிநேரமாவது ஆலய வழிபாட்டில் ஈடுபடவேண்டும்.
இது எல்லோருக்கும் பொதுவான இடம் - இங்கு வரும் அனைவருமே வழிபட வருபவர்கள் அவர்களுக்கு இடையூறாக நாம் இருக்கக்கூடாது என்பதை பக்தன் உணரவேண்டும்..
ஒரு மூர்த்தியின் முன்பாக பூசை செய்பவருக்கான அர்ச்சனை செய்யப்படும்போது இன்னொரு அர்ச்சகர் வேறொருவரது அர்ச்சனையைச் செய்ய முற்படுவதும் தவறு. விசேட தினங்களில் பூசைகள் நிறைவடைந்தபின்னர் திருமுறை ஓதும் நேரத்திலும் சில சிவாச்சாரியார்கள் இடையில் தமது அர்ச்சனையை நடத்துவார்கள்.
இது தேவாரம் கேட்க வேண்டாம் இவரது அர்ச்சனையைப் கேளும் என்பது போல இருக்கும். இறைவனுடைய சக்தியை நாம் குறைகூறவில்லை. எம்மைப் போல அவருக்கு உருவம் அமைத்துக் கொடுத்தபின்னர் ஏன் இவ்வாறு அசட்டையாக இருக்கிறார்கள் என்பதுதான் ஆதங்கம். இவர்கள் இறை மூர்த்தங்களை தெய்வமாக நினைக்கிறார்களா? அல்லது கல்லாக செம்பாக எண்ணுகிறார்களா? கொழும்பில் சிலவேளைகளில் நடைபெறும் பெரிய கவனக்குறைவு என்னவெனில் - ப10ஜை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது யாராவது ஒரு அமைச்சர் வந்துவிட்டால் பூசையனைத்தும் இடைநிறுத்தப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்த மேளத்திலிருந்து குடைவரை அவரை வரவேற்க சென்றுவிடும். இங்கு சுவாமியின் நிலை பரிதாபமாயிருக்கும். (தொடரும்)
தங்க. முகுந்தன்.
தினகரன் வாரமஞ்சரி - 08-04-2007 (8ம் பக்கம்)
பக்தியும் ஆலயங்களும்
குடும்ப நன்மைக்காக பிரார்த்தித்து பலன் அடைவதுதான் பக்தியா?
“மாலை ஐந்து மணிக்கு தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டிய உபவாசக்காரர்கள், உபயகாரர்கள் நேரகாலத்தோடு வராமல் தமது வசதிப்படி வருவதால் சிலசமயம் இரவு 11மணிவரை காத்திருந்து விரதத்தை முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.”
(கடந்த வாரத் தொடர்)
நான் கடந்த மாதம் ஒரே வாரத்தில் இரண்டு தினங்கள் ஒரு சிவாலயத்திற்குச் சென்றேன். மூன்று முறை பிரதட்சணம் செய்தபின்னரும் ஆலமர்கடவுளான தட்சணாமூர்த்தியை தரிசிக்க முடியவில்லை. காரணம் ஸ்வாமிக்கு வழிபடும் எனக்குமிடையில் குறுக்காக ஒரு கம்பியால் அமைக்கப்பட்ட தடுப்பு(கேற்) தடையாக இருந்தது - பூட்டப்பட்டிருந்தது. இரண்டு தினங்களும் நான்காவது தடவையாக பிரதட்சணம் செய்தபோதே அவரைத் தரிசிக்க முடிந்தது. நான்கு தரம் சுற்றிக் கும்பிட வேண்டும் என எண்ணி தரிசனத்தை முடித்தேன். இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் - ஆலயத்தில் களவு போகிறது என்று கூறி பூசை நேரங்களிலும் சுவாமியைத் தரிசிக்கமுடியாதவாறு பூட்டிவைத்திருக்கிறார்கள்.
இன்றைய கோவில்களின் நிலை என்ற கட்டுரையில் -
“ஒரே நேரம் நடைதிறந்து எல்லோரும் கூட்டுவழிபாடு நடாத்தும் நிலை மாறி, எந்த நேரத்தில் யார் வந்தாலும் அர்ச்சனை செய்யவும், வழிபாடு என்ற பெயரால் ஏதோ செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது. பக்தன் பத்துக் காசை தட்டில் போட்டவுடன் பூஜாரி சூடம் காண்பித்துவிடுவதால் வந்தவனுடைய வழிபாடு பத்து நிமிடத்தில் முடிந்துவிடுகிறது. இதனால் கோவிலுக்கு வருகிற பக்தனுக்கு கோவிலைப் பற்றியோ, கோவிலுக்கு வரும் மற்ற பக்தர்களைப் பற்றியோ, இந்து சமுதாயத்தைப் பற்றியோ எந்த சிந்தனையும் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. தன்னுடைய சுயநன்மைக்காக, குடும்ப நன்மைக்காக பிரார்த்தனை செய்து, பலனடைவதே பக்தி என்று நம்புகின்றனர். கோவிலில் ஒன்றாகக் கூடுவதும், சேர்ந்து இருப்பதும் போன்ற சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விட்டன. உண்மை பக்தி என்பதை விளக்குவார் இல்லாமல் ஆனது. தர்மகர்த்தா தரம் கெட்டுப் போனதால் ஊர் வழக்குகள் கோவிலில் தீர்க்கப்படுவதில்லை. இதனால் இளைஞர்கள் பெரியோர் சொல் கேட்பதில்லை. சில பக்தர்கள் அபரிதமான பக்தியால் தங்க நகைகளையும், விலை உயர்ந்த பொருட்களையும் சுவாமிக்கு அலங்காரம் செய்வதற்காக கோயிலுக்குக் கொடுக்கிறார்கள். கொடுத்தது மட்டுமல்ல ஒவ்வொருமுறையும் சுவாமிக்குபோட்டு அலங்காரம் செய்ய வற்புறுத்துகிறார்கள். இப்படி ஆலயங்களில் நகைகளும், பணமும், விலைஉயர்ந்த பொருட்களும் சேரும்போது திருட்டுப் போவதற்கும், இதை கருத்தாகக் கொண்டு நாஸ்த்திகர்களும் கோவில் விவகாரங்களில் தலையிடுகிறார்கள். இவற்றை தர்மப் பணிகளுக்கு செலவிடுவது அவசியம்.” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
உண்மையிலேயே நான் எனது கடந்தகால அனுபவங்களைக் குறிப்பிட வேண்டும். எமது ஊர்களில் பெரும்பாலும் திருவிழாக் காலங்களில் உபயங்கள் செய்வோர் தமது வசதிப்படி தாம் நினைத்தபடி விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் மாறாக நடந்து கொண்ட சமபவங்களால்தான் இன்று அப்படி நடைபெற்ற திருவிழாக்கள் சாதாரணமாக நடைபெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமது வேலைகளை நிறைவேற்றிய பின்னர் திருவிழாவுக்கு வருகைதருபவர்களால் ஊரிலுள்ள அனைவரும் தமது விரதத்தை மிகவும் கடுமையாகவே கைக்கொண்டார்கள். சித்திரைப் ப10ரணையை தீர்த்தமாகக் கொண்ட எமது ஆலய மகோற்சவத்தில் தீர்த்த திருவிழா உபயகாரர்கள் வரும்நேரம் சிலவேளை 11மணியாகிவிடும். இதன்பின் எல்லா நிகழ்வுகளும் நிறைவடையும் வேளையில் மாலை 5மணிக்குமேல் தீர்த்தம் அருந்தி தமது விரதத்தை நிறைவுசெய்பவர்கள் - மன வேதனையடையாவிட்டாலும் தர்மம் என்ற ஒரு நியதி தனது பணியை செய்யுமல்லவா?
தமது வசதிக்கேற்றபடி 3 அல்லது 4 கூட்டம் மேளம் பிடித்து கச்சேரி வைப்பதுடன் மட்டுமல்ல சுவாமியையும் வீதிக்கு வீதி நிறுத்திவைத்து தமது செல்வாக்கைக்காட்டி போட்டிபோட்டு திருவிழாக்கள் நடத்திய பலர் இன்று திருவிழா நடத்தவே மிகச் சிரமப்படுகிறார்கள்.
கடந்த காலங்களில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை நான் குறிப்பிட்டாக வேண்டும். 1982ல் என்று நினைக்கின்றேன். மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமிப் பெருமான் விஜயதசமியன்று தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்திற்கு வருவது வழக்கம். அப்படி வந்து செல்லும்போது மாவிட்டபுரம் கந்தன் தவறுதலாக நிலத்தில் வீழ்ந்தார். அதே வருடம் தெல்லிப்பழை துர்க்காதேவியும், தெல்லிப்பழை காசிவிநாயகப் பெருமான் மாத்தனை வைரவர் கோவிலிலும் நிலத்தில் படும்படி வீழ்ந்தார்கள். சுவாமியை து}க்கும்போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இதன்பின் இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் நாமனைவரும் அறிந்ததே.
ஏற்கனவே குறிப்பிட்டபடி ஆலயத்திலுள்ள விக்கிரகங்களை நாம் கவனமாக சிரத்தையுடன் பாதுகாப்பதில்லை. கடந்த வருடம் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம் - எங்கள் ஊரிலுள்ள முருகனாலயத்தில் நடைபெற்றது. பங்குனி உத்தரத்திற்கு முதனாள் தேர் நிறைவடைந்த பிறகு தமது அர்ச்சனை- வழிபாடுகளை நிறைவேற்றிய பிறகு அடியார்கள் தமது இல்லங்களுக்குப் போய்விட்டார்கள். சுவாமி தேரில் யாருமற்ற அநாதைபோல இருந்தார். யாரோ ஓரிரு தொண்டர்கள் அருகே இருந்தார்கள். மாலையில் தேரிலிருந்து இறங்கி வரும்வேளையில் கூட்டம் அதிகமாயிருக்கவில்லை. சுவாமியைக் காவுவதற்கு ஆளில்லாமல்தான் மிகவும் சிரமத்தின் மத்தியில் து}க்கிவந்து ஆலய முகப்புவாசலில் தேங்காய் உடைக்கின்றபொழுது, சுவாமி தவறுதலாக விழுந்து விட்டார். சுவாமியின் வலதுபுறத்திலிருந்த வள்ளியம்மனுடைய கையிலிருந்து ஏதோ கொட்டுவதை அவதானித்தேன். வீழ்ந்துகிடந்த சுவாமியை உடனடியாக நிறுத்தி பெரியோர்களின் சிவாச்சாரியார்களின் ஆலோசனைப்படி வெளிமண்டபத்தில் வைத்து பிராயச்சித்த அபிடேகத்தை முடித்து பின்னர் திருவிழாவை முடித்தோம். அன்றிலிருந்து ஒரே கவலை – ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று. சுவாமியின் திருவுருவை நாம் மீளவடிவமைத்து வைத்தாலும், இன்று ஒரு வருடமாவதற்கு முன்னரே கடந்த 12-6-2006ல் எனக்கு ஒரு துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றது. ஆனால் உயிராபத்திலிருந்து என்னைத் தப்பவைத்திருக்கிறார். எமது குலதெய்வம் விநாயகரும் முருகனும்தான். இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் எமக்கு நம்பிக்கை முக்கியம். இறை நம்பிக்கை எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவுக்கு நாம் தெய்வத்தின் அபரிமிதமான சக்தியால் காப்பாற்றப்படுவோம்.
இது எனது வாழ்க்கை அனுபவம். மேலும் இது யாரும் கூறியோ அல்லது எடுத்துரைத்தோ ஏற்படுவது கிடையாது - அவரவர் மனப்பக்குவத்திற்கு ஏற்பவே உண்டாகும். சிறுவயதில் எனக்கு ஆலயம் செல்ல வழிகாட்டியவர் எனது தாத்தா. ஒவ்வொருநாளும் மாலை வேளைகளில் அவருடன் கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட நான் இன்றும், தொடர்ந்தும் சென்று வருகின்றேன். மகவும் விசேடமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு ஆலயம்
நாம் ஒவ்வொருவருடமும் சபரிமலை யாத்திரை செய்யும்போது – கன்னியாகுமரியிலுள்ள ஸ்ரீ குகநாதேஸ்வரப் பெருமானைத் தரிசித்தே எமது பெருவழி யாத்திரையை மேற்கொள்வது வழக்கம். மூன்று வருடங்களுக்கு முன்னர் எமது குழுவில் நாம் இருபத்தொரு பக்தர்கள் சென்று அங்கேயே எமது இருமுடிகட்டலை வைத்தோம். ஒவ்வொரு பக்தருடைய பெயர் நடசத்திரம் சொல்லி தனித்தனியாக அஷ்டோத்திர அர்ச்சனை செய்தார். பின்னர் அவரே வந்து எமது கட்டு நிறைக்கும் இடத்திற்கு வந்து பூஜைகளையும் ஆரம்பித்துவைத்து விட்டுச் சென்றார். இருமுடிகட்டி நிறைவடைந்தபோது நேரம் 2மணிக்கு மேலாகிவிட்டது. ஆலயம் பூட்டப்படவில்லை. நாம் பிரதமகுருவிடம் கூறினோம் - மன்னிக்கவேண்டும் எல்லாம் முடிய நேரமாகிவிட்டது. நீங்கள் கோவில் நடை சாத்தாமல் திறந்துவைத்திருந்தீர்கள். எம்மை மன்னிக்கவும் என்று. அதற்கு அவர்கூறிய பதில் - பக்தர்களுக்காகவே பகவான் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிநார் அவர்கள் வேலை முடிந்தபின்னர்தான் கதவு சாத்த வேண்டும் என்று. எனக்கு து}க்கிவாரிப் போட்டது. இப்படி அன்பாக - இனிமையாக ஒவ்வொரு கோவிலிலும் பூசகர்கள் வரும்பக்தர்களுடன் அளவளாவினாலேயே போதும் அவர்களது மனம் அமைதியாகும்.
கொழும்பில் நடைபெறும் ஆடிவேல் விழா பற்றியும் குறிப்பிட வேண்டும்.
சுவாமி எங்கோ வருவார் முன்னால் அமைச்சர்களிலிருந்து, காவடி, மற்றும் அனைத்தும். கடவுளை இரண்டாம்பட்சத்திற்கு தள்ளி விடுகிறார்கள். அடுத்து வீதிவலம் வருவதற்கு ஒரு விதிமுறை இருக்கிறது. நாட்டில் அநியாயமும், அநீதியும் தாண்டவமாட நாமே காரணகர்த்தாவாகிறோம். மக்களை இரட்சிக்க வேண்டிய இறைவனே போக்குவரத்து வசதிக்காக கோவிலுக்கு இடமாகச் சென்று வலமாக வந்தால் - அதை நடைமுறைப்படுத்தும் தர்மகர்த்தாக்கள் இருந்தும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். நாட்டில் துக்ககரமான சம்பவங்களே அதிகமாக நடக்கும். ஏனெனில் ஆலய பூசைகளில் ஏற்படும் தவறுகள் யாவும் உயிர்கள் அனைத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தும். அர்ச்சகர் பொதுவாக மூன்று முறை ஓம் என்ற வடிவில் தீபாராதனை செய்யவேண்டும். இது கிராம நன்மைக்காகவும், நாட்டுநன்மைக்காகவும், உலகனைத்துமுள்ள உயிரகள் நன்மைக்காகவும் செய்யப்படுகிறது. திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களிலும் ஆலயங்களில் பூசைகள் தடைப்பட்டால் அல்லது ஆலயங்கள் சேதமடைந்தால் நடக்கவிருக்கும் தீமைகளைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எமது நாட்டில் ஏற்படும் சகல அழிவுகளுக்கும் இது பொருத்தமானதாகிறது.
ஆறுமுக நாவலரால் விமர்சிக்கப்பட்ட ஆலயம் - நல்லு}ர். எனினும் நல்லு}ர் முருகனை அங்குள்ள அபூர்வமான சக்தியை சிவயோகசுவாமிகள் மிகச்சிறப்பாக பாடியுள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் பூசைகள் - ஆராதனைகள் சொல்லிலடங்கா! அங்கே குறிப்பிட்ட நேரத்திற்கு எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும்.திருவிழாக் காலங்களில் நாம் எமது}ரிலிருந்து புறப்பட்டு இந்த நேரத்தில் சுவாமி இந்த இடத்தில் இருப்பார் என்று எண்ணி வரக்கூடியதாக நேரக்கட்டுப்பாடு ஆலய மகோற்சவ காலங்களில் மாத்திரமல்ல தினமும் கைக்கொள்ளப்படுகிறது. உபயகாரர் வந்தால் என்ன வராவிட்டாலென்ன ஆலய பூசைகள் நேரம் தவறாது நடைபெற்றுவருகிறது. தேர்த்திருவிழா நடைபெற்று ஓரிருமணிநேரத்திலேயே தேர்க்கொட்டகை மூடப்பட்டுவிடும். மாலையில் வரும் ஒருவர் தேர் இந்தக் கோவிலில் நடந்ததா என எண்ணிப் பிரமிப்பார்.
இங்கு அர்ச்சனை செய்ய ஒரு ரூபா மாத்திரமே அறவிடப் படுகிறது.
அடுத்த ஆலயம் “சிவத்தமிழ்ச் செல்வி”, “துர்க்கா துரந்தரி” செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையில் இயங்கும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம். அங்கும் நேரக்கட்டுப்பாடு மிகவும் கவனமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அடுத்தது ஆலயத்தின் கருவறையில் மின்விளக்கு எரியவிடுவதும் தவறாகும். பலவிதமான கலவைகளாலான மருந்தினால் விக்கிரகம் பீடத்துடன் வைத்துப் பொருத்தப்பட்டிருக்கும். அந்த கலவையை மின்விளக்கின் கதிர்கள் பாதிக்கும். இதைவிட ஆலய மூல விக்கிரகத்திற்கும், விமானத்திலுள்ள கலசத்திற்கும் இடையிலான அதிர்வுகள் மற்றும் விக்கிரகத்திலிருந்து வெளிப்படும் சக்தி என்பவை பாதிக்கும்.
எமது இந்திய யாத்திரையின்போது ஒரு தடவை திருவானைக்காவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புநாதேஸ்வரப் பெருமானுக்கு மகோற்ஸவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுவாமியை வீதியுலாக் கொண்டுவர பக்தர்கள் இருக்கவில்லை. நாமும் எம்முடன் வந்தவர்களும், ஆலயத்தினுள் நுழைந்தபோது விநாயகப் பெருமானை மாத்திரம் சுற்றிவந்துவைத்துவிட்டு ஏனைய மூர்த்திகளை வீதிவலம் கொண்டுவர முயற்சித்துக் கொண்டு இருந்தார்கள். பஞ்ச மூர்த்திகள் வீதிவலம் வருவதற்கு முன்னரேயே விநாயகர் சுற்றிவிட்டபடியால், ஏனைய நான்கு மூர்த்திகளையும் நாம் து}க்கி வீதியுலாக் கொண்டுவந்தோம். பூசை நிறைவடைந்தபின்னர் நடைபெற்ற அர்த்தசாமப் பூசையில் சுவாமிக்கு நிவேதித்த பாலப்பம் அனைத்தும் எமக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதேபோல ஒரு தடவை திருச்சி உச்சிப்பிள்ளையார் வீற்றிருக்கும் தாயுமான சுவாமி திருக்கோவிலில் அர்த்த சாமப் பூசை நிறைவடையும் வேளையில் சர்க்கரைப்புட்டும், தஞ்சைப் பெரியகோவிலில் மதிய பூசைக்குப் பின்னர் பல்வேறுபட்ட சாதங்களும் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டமைகூட புண்ணிய பலனே. இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் இறைவனுக்கு நிவேதிக்கும் நைவேத்யத்தின் அளவுபற்றிக் குறிப்பிடவே. இதில்கூட இத்தனை பங்கு வைக்கவேண்டும் என்ற நியதியுண்டு.
ஏனைய சமயங்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம், நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.
கடந்த 29-10-2006 திகதி கொழும்பு மருதானை எல்பின்ஸ்ரன் அரங்கில் நடைபெற்ற அறநெறிப் பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் பணியாற்றியவர்களுக்கு பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அறநிதியத்தினர் கௌரவம் வழங்கியபோது,
1. சுமார் 40 வருடங்களுக்க மேல் சமயப்பணிபுரிந்த பெரியார்களை (சமய குருமார்களுட்பட) கௌரவித்த போது, பௌத்த சமய குருமாருக்கு – பௌத்த சமயத்தவர்கள் எல்லோரும் எழுந்தபோது சபையிலிருந்த ஏனையோரும், எழுந்து நின்று தமது மரியாதையை வழங்கினார்கள்.
2. அடுத்து ஏனைய சமயப் பெரியோர்கள் அழைக்கப்பட்டபோது பெரும்பான்மையான பௌத்த சமய அறநெறி ஆசிரியர்கள் அமர்ந்திருந்தபோதும் ஒருசில ஏனைய சமய அறநெறி ஆசிரியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
3. இந்த வேளையில் எமது இந்து சமய அறநெறி ஆசிரியர்கள் சிலர் அமர்ந்திருந்த போதும், ஒரு சிலர் குதர்க்கமான கருத்துக்களைத் தெரிவித்தமைதான் மிகவும் வேதனையை அளித்தது.
பின்வரிசையில் அமர்ந்திருந்த நான் எனக்கு முன்பாக அமர்ந்திருந்த 2 இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் நடந்து கொண்டவிதம்பற்றி குறிப்பிட்டேயாகவேண்டும். திருமதி. பூமணி விஜயகுமாரன் அவர்கள்(வாணி வித்தியா அறநெறிப் பாடசாலை), செல்வி. ந. புஷ்பவேணி அவர்கள் (ஸ்ரீ செந்தில் குமரன் அறநெறிப் பாடசாலை) இவர்களிருவருடன் நானும் சகல ஆசிரியர்களையும் கௌரவித்தபோது எழுந்து நின்றேன். இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் சமயம் என்பது மனிதனை நல்வழிப்படுத்துவது. ஏனையவர்களையும் நல்வழிப்படுத்துவதுடன் - அனைவர் மீதும் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தவும் உதவுகிறது.
ஏறக்குறைய கால்நு}ற்றாண்டுகாலம் சமயப்பணி புரிந்த என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். வேதம் கூறும் ஒரு தெய்வம் பலபெயர்களால் துதிக்கப்படுகிறது என்பதை அறியாமல் இருப்பேனாகில் எனது சமயத்தை நாம் கைக்கொள்வது அர்த்தமற்றதாகிவிடும்.
கடந்த ஜனவரியில் நாம் சபரிமலை யாத்திரையை மேற்கொண்டபோது திருத்தணிக்குச் சென்றபோது மூலஸ்தானத்தில் குருக்கள் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நாம் சென்றதும் பேசாமலேயே இருந்தார். அர்ச்சனை செய்வதற்கு பொருட்கள் இருந்தபோதும் தட்டில் பணம் போடவில்லை என்பதற்காக வீப10தியே தரவில்லை. நாம் “ஐயா வீபூதி கொடுங்கள்” என்று கேட்டதற்கு “தட்டில் பணம் போட்டாலேயே வீபூதி வழங்கப்படும்” என்று சற்று உரத்த குரலிலேயே கூறினார். இது என்னடா சோதனை! திருத்தணி வந்து மன அமைதியடைய பிரார்த்திப்போமென்றால் சண்டைபோட வேண்டியிருக்கிறது என மனவேதனையுடன் வெளியேறியபோது தெற்கு நோக்கியிருந்த ஸ்ரீ சண்முகப் பெருமானுக்கு முன்பாக ஒரு இளவயதுடைய அர்ச்சகர் எம்மைக் கண்டவுடனேயே எமது அர்ச்சனையை வாங்கி உள்ளே சென்று அர்ச்சித்து தீபாராதனை செய்து – எமக்கு வீபூதியும் வழங்கினார்.
குறிப்பிட்ட அந்த அர்ச்சகரிடம் நீங்கள் தயவுசெய்து உங்கள் குணத்தை உள்ளே இருப்பவர்கள் போல மாற்றிக்கொள்ள வேண்டாம்.
ஆலயமொன்றில் நீங்கள் தான் பக்தர்களுடைய வேண்டுதல்களை இறைவனிடத்தில் சென்று நேரடியாகவே கூறி அவர்களுக்குரிய வேண்டுதல்களை நிறைவேற்ற அனுசரணையாக இருக்க வேண்டும் என்று சொல்லி வெளியேறினோம். இந்த நடைமுறை இந்தியாவில் பல ஆலயங்களிலும் இருக்கிறது.
இதேபோல ஒருதடவை கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள சுசீந்திரம் ஸ்ரீதாணுமாலயன் ஆலயத்திற்குச் சென்றபோது ஆஞ்ச நேயரைத் தரிசிக்க உள்ளே செல்லமுடிந்தது, ஆனால் மூலவரைத் தரிசிக்க முடியவில்லை. பூட்டப்பட்ட ஆலயத்தில் எப்படி வணங்குவது என்று அங்குள்ள ஆலய உதவியாளர்களுடன் விவாதிக்க நேர்ந்தது.
இங்கு எழுந்தருளியிருக்கும் 18 அடி உயரமுடைய ஆஞ்சநேயப் பெருமான் மிகப் பிரசித்தியுடையவராக விளங்குகிறார். இப்படியாக இன்று ஆலயம் ஒரு பேரம் பேசும் நிலையமாக மாறிவருகிறது. திருச்சியில் உள்ள பிரசித்திபெற்ற ஐயப்பன் ஆலயத்தில் உண்டியலும் இல்லை. அர்ச்சகர்களுக்கு தட்டில் பணம்போடும் நடைமுறையும் இல்லை. கடந்த ஜனவரி 8ம் திகதி அந்த ஆலயத்தில் நடைபெற்ற இரவு இரதஉற்சவத்தில் நாமும் கலந்து கொண்டு இரதத்தை இழுக்கும் பெரும்பெறும் பெற்றோம்.
இக்கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும்போது கிடைத்த இன்னொரு வேதனைக்குரிய சம்பவம் கடந்த 30.03.2007 வெள்ளிக்கிழமை பண்ணாகம் விசுவத்தனை முருகப்பெருமான் வேட்டைத் திருவிழாவுக்கு வழக்கம்பரை அம்பாள் ஆலயத்திற்கு எழுந்தருளுயபோது சுவாமி சரிந்ததாகவும், இதனால் ஒருவர் காயமடைந்ததாகவும் செய்தி கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும் ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்படுவதற்கான அறிகுறியே!
தங்க. முகுந்தன்.
Sunday, August 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
UNNMAYAGAVE MANAM THELIYAVAITHU, NEGIZHAVAIKIRADU UMADU BAKTHI SAMMANDAMANA KATTURAI. BAKTHANUKKUM BAGAVANUKKUM PALAMAAGA SEYAL PADA VENDIYAVARGALE POOSAGARGAL ENDRU AVARGALAI PERUMAI PADUTHI IRUKIREERGAL ADEVELAYIL BAKTHI ENBADU AND MEDIATOR GALIDAMUM IRUNDAAL MATERIALISTIC WORLDLY PLEASURE OF MAKING MONEY IS THE POOJA ENDRUM THE IDOL IS JUST A STONE ONLY ENDRUM NININAIKAMAATAARGAR MOOLAMOORTHATHIN SHAKTHIYAI NAMAKKU EDUTHUKOORAVENDIYAVARGAL AVARGALIDAME ITHNAI KOLARUGAL. POOJAGARGAL THANGALAYUM NIRAYA AANMEEGA VIZHAYANGALIL MUNNETRIKONDU EMAKKUM EDUTHURAIPAVARGALAGA THAGUDHI YERPADUTHIKOLAVENDUM, THANGALIN KATTURAI MUZHUMAIYAANA VILAKKAM. THANGALIN BAKTHIYIN THIRAM KANDU VIYAKIREN, VEDANGALAL KAATTAPATTA ORE DEIVAME PALA PEYARGALAL AZAIKAPPADUGIRADU.
Post a Comment